Published:Updated:

கிரேஸி மோகன் : கண்ணீர் வர சிரிக்கவைத்த கலைஞன்... இப்போதிருந்தால் மாஸ்க் கிழிய சிரித்திரிப்போம்!

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

“மேகி?” “மரகதவல்லியோட ஷார்ட் ஃபார்ம்''...” ”அப்போ மைதிலி?” ”மீடியம் ஃபார்ம்.”

கிரேஸியை நினைவு கூர்ந்து எழுதுவது எல்லாம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? “அந்த இடத்திலே அது நகைச்சுவையாக இருந்தது… இந்த இடத்திலே இது நகைச்சுவையாக இருந்தது” என்று விரல் தொட்டுக் காட்டும் அளவுக்கா மனுஷன் எழுதி வைத்திருக்கிறார்? அடிதூள், பட்டாசு, சரவெடி என்றெல்லாம் சொல்லுவார்களே... அது யார் எழுத்துக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கிரேஸி மோகனின் நகைச்சுவை எழுத்துக்குப் பக்காவாகப் பொருந்தும்.

எவ்வளவு ஆச்சரியம்… கிரேஸி மோகன் எத்தனையோ படங்களுக்கும் நாடகங்களுக்கும் வசனம் எழுதியிருந்தும் கூட, இன்றும் ஒவ்வொன்றும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது! எத்தனை முறை படித்தாலும், பார்த்தாலும் ஏதோ ஒரு காமெடி அதில் புதிதாக இருக்கும்.

ஒரு இடத்தில் பயன்படுத்திய ஒரு ஜோக்கையோ, வார்த்தை விளையாட்டையோ அவர் இன்னொரு இடத்தில் பயன்படுத்தியதாக நினைவில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருக்கும். ஆனாலும் அத்தனையும் ஸ்பெஷலாக இருக்கும். ஒரு படத்தை, எந்த இடத்திலிருந்து போட்டாலும், எந்த வசனத்தை எந்தக் குரலில் பேசினாலும், அந்தப் படத்துக்கு வசனம் கிரேஸியா இல்லையா என்று எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்... அதுதான் கிரேஸி.

கமல் - கிரேஸி மோகன்
கமல் - கிரேஸி மோகன்

முன்பெல்லாம் தமிழ் சினிமாவின் நகைச்சுவைப் படங்களில் ஒரு குறை இருந்தது. கலகல காமெடிப் படம் என்று வெடிச் சிரிப்போடு ஆரம்பித்தாலும், கதை நகர நகர, சீரியசாக கதைக்குள் போய்விடுவார்கள். என்னதான் நகைச்சுவைப் படமாக இருந்தாலும், ஆழமான கதை இல்லாவிட்டால் மக்கள் வரவேற்க மாட்டார்கள் என்ற அச்சம். அதை தகர்த்து, நகைச்சுவையை மட்டுமே நம்பி, படத்தின் கடைசி நொடிவரை சிரிப்புக்கு உத்தரவாதம் தந்தது, ‘வசனம்: கிரேஸி மோகன்’ என்றான பிறகுதான். அந்த வகையில், கிரேஸி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய மாற்றம்.

“மேகி?” “மரகதவல்லியோட ஷார்ட் ஃபார்ம்..” ”அப்போ மைதிலி?” ”மீடியம் ஃபார்ம்”

ஆரம்பத்திலேயே ஆனந்த விகடனுடன் கிரேஸிக்கு தொடர்பு உருவாகிவிட்டது. தனது நகைச்சுவை நாடகங்களை அமெரிக்காவில் மேடையேற்றப் போன இடத்தில் நடந்த கலாட்டாக்களை விகடனில் எழுதியிருந்தார். பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு. நாடகம் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த கிரேஸியை தொடர்கதை எழுத வைத்ததும் விகடன்தான். ‘கேபிடி சிரிப்புராஜ சோழன்’ என்ற அந்த வரலாற்றுக் காவியம் வந்தபிறகுதான், சரித்திரக் கதையிலும் காமெடி எழுதலாம் என்ற எண்ணமே பலருக்கும் வந்திருக்கும். ஒரு நாவலை (சரி, தொடர்கதையை) படுத்திருந்து வாசித்திருப்பீர்கள். உட்கார்ந்திருந்து வாசித்திருப்பீர்கள். உருண்டு புரண்டுகொண்டே வாசித்ததுண்டா? கேபிடி அப்படித்தான் வாசிக்க முடியும். நகைச்சுவைக் கும்பமேளா அது.

”பீச்சானூர் பகுதிவாழ் பரதவ மகள் கடைக்கண் வீச்சாலே, வந்திருந்த வெளிநாட்டு வர்த்தகர்தம் பாச்சாவும் பலிக்காது பொருள் குவிந்த புனல் நாடு” என்று ஆரம்பித்து, பந்தயக் குதிரை போல, தடதட வேகத்தில் ஓடும் கதை. வரிக்கு வரி சிரிப்பு.
சுஜாதாவுடன் கிரேஸி மோகன்
சுஜாதாவுடன் கிரேஸி மோகன்

கிரேஸி நாடகத்திலேயே பிரபலம் என்றாலும், அவருக்கு சினிமாப் பிரவேசம் வேறு முகத்தைத் தந்தது. அவர் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வசனகர்த்தாவாக திரைத்துறைக்குள் நுழைந்ததாகத்தான் பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னரே அவரது ‘மேரேஜ் மேட் இன் சலூன்’ நாடகம், ‘பொய்க்கால் குதிரை’ என்ற படமாக, திரைத்துறைக்குள் நுழைந்து விட்டது.

”என்ன சொல்றே கிருஷ்ணா... என் பொண்டாட்டிக்கு குழந்தை பிறக்கப் போகுதா? எல்லாம் உன் அருள்... ரொம்ப நன்றி கிருஷ்ணா.. உன் நண்பன் குசேலனுக்குக் கூட இந்த ஹெல்ப் நீ பண்ணதில்ல!” ”குசேலனுக்கு இந்த ஹெல்ப் நான் பண்ணவே வேணாம்…”

’கமலுடன் கிரேஸி’ என்று சொன்னாலே அப்புறம் மீதியெல்லாம் உங்களுக்கே தெரியும். ‘அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ஆரம்பித்து, ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ வரை இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவில் நிகழ்த்திக் காட்டியது, நிஜமான அற்புதம். சொல்லப் போனால், சில படங்களின் நகைச்சுவை, காலாவதியாகும் அல்லவா, அப்படி இல்லாமல் ஆயிரம் தடவை திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் புதிதாகப் பார்த்ததுபோலச் சிரிக்கவைக்கும் அதிரடி நகைச்சுவையுடன் படங்களைத் தொடர்ந்து தரும் கூட்டணியாக கிரேஸி - கமல் கூட்டணி இருந்தது.

''பஞ்ச தந்திரம் படம் பார்த்தியா?” என்று யாரும் கேட்பதில்லை. “பஞ்ச தந்திரம் எத்தனை தடவை பார்த்திருக்க?” என்றுதானே கேட்பார்கள். சினிமா பார்க்கும் வழக்கம் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் ‘பஞ்ச தந்திரம்’ வசனம் மனப்பாடம். ‘காதலா காதலா’, ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘அவ்வை சண்முகி’ படத்தையெல்லாம், வேறு ஒருவர் வசனகர்த்தாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஒருதடவை கற்பனை பண்ணிப்பார்த்தால், கிரேஸி மோகனின் முக்கியத்துவம் புரியும்.

“அய்யர்னு சொன்னது பொய்தாங்க.. ஆனா நான் சத்தியமா ஊமைங்க”
மனைவியுடன் கிரேஸி
மனைவியுடன் கிரேஸி

காமெடி மன்னன் கவுண்டமணிக்கு கிரேஸி மோகன் வசனம்.. கேட்கவே கலகல என்று இருக்கிறதல்லவா? ‘தேடினேன் வந்தது’, ‘வியட்னாம் காலனி’ என்று கொழுகொழு பிரபுவுடன் கவுண்டமணி கலக்கிய சில படங்களுக்கு கிரேஸிதான் வசனம். அதுவும் ‘சின்ன வாத்தியார்’ படத்தில் காது டாக்டராக கிரேஸியும், புரோக்கராக கவுண்டமணியும் வந்து கோவை சரளாவை செந்தில் தலையில் கட்டுவதற்குப் பண்ணுகிற அட்டூழியங்களை மறக்க முடியுமா? “எம்ஏ... எம்ஏ... பிலாசபி... பிலாசபி…”

கிரேஸியின் தனித்துவம், அவரது வசனங்களில் எல்லை கடந்த விரசம், வன்மம் எதுவுமே இருக்காது. நகைச்சுவையின் வழமையான டேம்ப்ளேட்டுகளான உருவ கேலி, இரட்டை அர்த்தம், திருநங்கையர் கேலி, தொழில்சார் கேலி, சாதிமத சீண்டல் இதெல்லாம் இல்லாமல் எப்படி இத்தனை ஆயிரக்கணக்கான படங்கள் - நாடகங்கள் - தொடர்கள் எழுதினர் என்பது நிஜமாகவே ஆச்சரியம்தான்.

நகைச்சுவை எழுத்து என்ற கடினமான துறையில் இத்தனை பெரிய புகழ் உச்சத்தை தொட்ட இந்த உன்னதமான எழுத்தாளனை, அவன் தரத்துக்கு நாம் அங்கீகரிக்கவில்லையோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. நகைச்சுவை, வார்த்தை விளையாட்டு, கடி என்று கும்மாளமாக எழுதிய கிரேஸி, தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்பட வேண்டியவர்.

அருணாச்சலம் படத்தின் போது ரஜினி, சுந்தர்.சி-யுடன் கிரேஸி மோகன்
அருணாச்சலம் படத்தின் போது ரஜினி, சுந்தர்.சி-யுடன் கிரேஸி மோகன்

கிரேஸியை பார்த்து வியந்து எத்தனையோ பேர் வாசிக்கவும் எழுதவும் நுழைந்திருப்பார்கள். ஆனால் என்ன, நமக்குத்தான் மக்களுக்குப் புரியும்படியோ, சிரிக்கும்படியோ எழுதினால் எழுத்தாளனாக ஒத்துக்கொள்ள மனம் வராதே! தன் வாழ்நாளெல்லாம் கண்ணீர் வரச் சிரிக்கவைத்த கலைஞன் நம்மைக் கண்கலங்க விட்டுப் பிரிந்து இன்றோடு சரியாக இரண்டு வருடம்.

இப்போது நம்முடன் அவர் இருந்திருந்தால் ஒரு ‘கொரோனா கிருஷ்ணா’வோ, ‘வூஹானில் கிச்சா’வோ, ‘கிரேஸி தீவ்ஸ் இன் கொரோனா வார்டு’ என பல நகைச்சுவை திருவிழாக்கள் கிடைத்திருக்கும். மாஸ்க் கிழியச் சிரித்திருக்கலாம்!

அடுத்த கட்டுரைக்கு