Published:Updated:

வெற்றி விழா: "ஹிட்டடிக்கும்ன்னு கமலே நினைக்கலை" - பிரதாப் போத்தன்; வில்லன் ஜிந்தாவை மறக்க முடியுமா?

வெற்றி விழா

‘வெற்றி விழா’ திரைப்படத்தின் வில்லன் ‘ஜிந்தா’வை இன்றும்கூட பரவசத்துடன் நினைவுகூரும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஜிந்தாவாக நடித்து அசத்தியிருந்தவர் சலீம் கவுஸ்.

Published:Updated:

வெற்றி விழா: "ஹிட்டடிக்கும்ன்னு கமலே நினைக்கலை" - பிரதாப் போத்தன்; வில்லன் ஜிந்தாவை மறக்க முடியுமா?

‘வெற்றி விழா’ திரைப்படத்தின் வில்லன் ‘ஜிந்தா’வை இன்றும்கூட பரவசத்துடன் நினைவுகூரும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஜிந்தாவாக நடித்து அசத்தியிருந்தவர் சலீம் கவுஸ்.

வெற்றி விழா
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘வெற்றி விழா’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

கமல் நடிப்பில் வெளிவந்த ‘சூப்பர் ஹிட்’ திரைப்படமான ‘வெற்றி விழா’ பற்றி இந்த வாரம் பார்க்கலாம். ஆனால், ஏன் இந்தப் படத்தைப் பற்றி? உங்களில் பெரும்பாலோனோர் இந்நேரம் சட்டென்று யூகித்திருப்பீர்கள். ஆம், இந்தத் திரைப்படத்தை இயக்கியவர், சமீபத்தில் மறைந்த பிரதாப் போத்தன் என்பதால் அவரை நினைவுகூர்வதற்கான ஒரு சந்தர்ப்பம்.

‘கிளாஸான படங்கள் மட்டுமில்லை, மாஸான படங்களையும் இயக்க முடியும்!’

ஆங்கில மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பிரதாப் போத்தனின் திறமையை உணர்ந்த இயக்குநர் பரதன், ஒரு மலையாளத் திரைப்படத்தில் அவரை அறிமுகம் செய்தார். இதற்குப் பிறகு பாலுமகேந்திரா, பாலசந்தர், மகேந்திரன் என்று பல முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களில் பிரதாப் நடித்துவிட்டாலும், அவரது ஆதாரமான விருப்பம் ‘டைரக்ட்’ செய்வதில்தான் இருந்தது. 1985-ல் பிரதாப் இயக்கிய ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற முதல் திரைப்படத்திற்கே அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. இதைப் போல மலையாளத்தில் அவர் இயக்கிய திரைப்படங்களுக்கும் விருதுகள் கிடைத்தன.

பிரதாப் போத்தன்
பிரதாப் போத்தன்

பிரதாப்பின் ‘எலைட் லுக்’ காரணமாக, அவரால் ‘அவார்டு படங்களை’ மட்டுமே எடுக்க முடியும் போல என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘கிளாஸான’ படங்கள் மட்டுமில்லை, ‘மாஸான’ படங்களையும் தன்னால் இயக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார் பிரதாப் போத்தன். அந்த வெற்றித் திரைப்படங்களில் ஒன்றுதான் ‘வெற்றி விழா’. 175 நாள்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படத்தின் மூலம் தமிழகத்திற்கு முதன்முதலில் பிளாட்டினம் டிஸ்க் கிடைத்தது.

கமலை வைத்து ஒரு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வந்த போது ‘கதைக்காக என்ன செய்வது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தார் பிரதாப். அப்போது அவர் வாசித்துக் கொண்டிருந்தது, ‘The Bourne Identity’ என்கிற ஆங்கில நாவல். ராபர்ட் லுட்லம் எழுதி, 1980-ல் வெளியான இந்த ‘ஸ்பை திரில்லர்’ நாவல், பிறகு முத்தொடர் வரிசையாக விரிவடைந்தது. இதன் முதல் பகுதியை வைத்து 1988-ல் ஒரு டெலிவிஷன் மூவி அமெரிக்காவில் வெளிவந்தது. ஆனால் இதை ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனங்கள் மோப்பம் பிடித்து சினிமாவாக ஆக்குவதற்கு முன்னாலேயே தமிழிற்குச் சத்தமில்லாமல் கொண்டு வந்துவிட்டார் பிரதாப் போத்தன். மேட் டாமன் ஹீரோவாக நடிக்க, 2002-ல்தான் இது ஹாலிவுட் சினிமாவாக மாறியது.

‘நான் யாரு.. எனக்கேதும் தொியலையே?’ – வெற்றி விழாவின் ஒன்லைன் இதுதான்

ஒருவன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு கண்விழிக்கும் போது "நான் எங்க இருக்கேன்?” என்று கேட்பது மிக இயல்பானது. சில நிமிடங்களில் அவன் தன்னுணர்விற்கு வந்து விடுவான். ஆனால் பல நாள்களுக்குப் பிறகும், "நான் எங்க இருக்கேன்?” என்பதையே அவன் தொடர்ந்து கேட்டால் என்னவாகும்? அதுதான் ‘வெற்றி விழா’ திரைப்படத்தின் அடிப்படையான சுவாரஸ்யம்.

கே.ராஜேஷ்வர் மற்றும் சண்முகப்பிரியன் எழுதிய கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருந்தார் பிரதாப். நாவலில் அல்லாத, பிரபு தொடர்பான பகுதிகள் கூடுதலாக படத்தில் இணைக்கப்பட்டன. படத்தின் துவக்கத்தில் ‘ஜிந்தா’ என்கிற பயங்கரவாதி செய்த கொள்ளைகள் மற்றும் கொலைகள் பற்றிய பத்திரிகைச் செய்திகள் காட்டப்படும். யார் அந்த ஜிந்தா? அவன் எப்படியிருப்பான், எங்கேயிருப்பான் என்று யாருக்கும் தெரியாது. முகமும் தடயமும் அற்ற அந்த மர்ம ஆசாமியை போலீஸார் வழக்கம் போல் வலைவீசி தேடிக் கொண்டிருப்பார்கள்.

வெற்றி விழா
வெற்றி விழா

டைட்டிலுக்குப் பிறகு படம் ஆரம்பிக்கும். சிலர் துப்பாக்கியுடன் துரத்த உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பதற்றத்தோடு கமல் ஓடி வந்து கொண்டிருப்பார். ஒரு பரபரப்பான சேஸிங் காட்சிக்குப் பிறகு, துரத்தியவர்களைத் தாக்கிவிட்டு ஒரு ஹெலிகாப்டர் வந்து கமலைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல முயலும். ஆனால் நடுக்கடலில் விழுந்துவிடுவார் கமல். தோட்டா காயத்துடன் கரையோரம் ஒதுங்கும் அவரை சௌகார் ஜானகியும், சசிகலாவும் காப்பாற்றுவார்கள். சிகிச்சைக்குப் பிறகு கண் விழித்துப் பார்க்கும் கமலுக்கு ‘அவர் யார்?’ என்கிற விவரங்கள் சுத்தமாக நினைவில் இருக்காது. ஒருபக்கம், “நீ இன்னுமா உயிரோடு இருக்க?” என்று ஒரு கும்பல் அவரை கொலைவெறியோடு துரத்தும். இன்னொரு பக்கம் போலீஸ் இவரைத் தேடிக் கொண்டிருக்கும். எனில் யார் இவர்? கமல்தான் அந்தக் கொள்ளைக்காரன் ஜிந்தாவா?

இப்படியாக பார்வையாளனுக்கு பல்வேறு கேள்விகளையும் குழப்பங்களையும் ஆவலையும் கிளறியபடி படம் நகரும். இதற்கிடையில் கமலின் பெயர் ‘ஸ்டீபன்ராஜ்’ என்பது தெரியவரும். அவரைச் சாகடிப்பதற்காக பலர் முயன்று கொண்டேயிருப்பார்கள். தான் யார், எதற்காக இவர்கள் கொல்ல முயல்கிறார்கள் என்கிற குழப்பத்துடன் இருப்பார் கமல். மெல்ல மெல்ல இதற்கான விடைகள் தெரிய ஆரம்பிக்கும்.

‘அமலாவிடம் இருந்த கெமிஸ்ட்ரி, சசிகலாவிடம் இல்லை!’

“இந்தப் படம் வெற்றியடையும்–ன்னு கமலுக்கே நம்பிக்கையில்ல. ஆனா படம் சூப்பர் ஹிட் ஆச்சு” என்று ஒரு நோ்காணலில் சொல்லிச் சிரிக்கிறார் பிரதாப் போத்தன். “கதை அவருக்குப் பிடிக்கலைன்னாலும் கேமரா முன்னாடி வந்துட்டா அர்ப்பணிப்பு உணர்வோட தன் பங்களிப்பைத் தந்துடுவாரு” என்று பிரதாப் சொல்வது உணமைதான். ஸ்டீபன்ராஜ் கம் வெற்றிவேல் என்கிற பாத்திரத்தில் கமலின் ‘ஜேம்ஸ்பாண்ட்’ டைப் நடிப்பு சிறப்பாகவே இருக்கும்.

வில்லனின் ஆட்கள் தாக்க வரும் போது தன்னிச்சையாக கராத்தே பாணியில் திருப்பித் தாக்குவார் கமல். முன்னர் எப்போதே கராத்தே வகுப்பில் இருந்தது அவருக்கு மெலிதாக நினைவிற்கு வரும். இதைப் போலவே சர்ச் உருவங்கள், சுவர் ஓவியங்களின் மூலம் தலையை உலுக்கிக் கொண்டு பழைய நினைவுகளை மீட்டெடுக்க கமல் முயலும் காட்சிகள் சிறப்பு. இன்னொரு சேஸிங் காட்சியில் வண்டியை ஓட்டச் சொல்லி பிரபுவை கமல் வற்புறுத்த, “ஏன், நீங்களே ஓட்டுங்களேன்” என்று பிரபு சொல்ல “யோவ். எனக்கு வண்டி ஓட்டத் தெரியுமா, தெரியாதான்னே எனக்குத் தெரியாது” என்று கமல் மல்லுக்கட்டுவது சுவாரஸ்யமான காட்சி.

வெற்றி விழா
வெற்றி விழா

இந்தத் திரைப்படத்தில் கமலின் தோற்றமும் சரி, ஆடைகளும் சரி அத்தனை நோ்த்தியாக இருக்கும். (ஆடை வடிவமைப்பு: சரிகா). பிளாஷ்பேக் காட்சியில் சிறிது நேரமே வந்து போவார் அமலா. கோயிலுக்குக் கிளம்பும் ஒப்பனையில் பார்க்க மிக வசீகரமாக இருப்பார். ஆனால் குறைந்த காட்சியில் நடித்த அமலாவிடம் காட்டிய கெமிஸ்ட்ரியைக் கூட பல காட்சிகளில் வந்த சசிகலாவிடம் காட்டியிருக்க மாட்டார் கமல். படத்தின் பாத்திரத்தைப் போலவே வேண்டாவெறுப்பாக நடித்திருப்பார். பொதுவாக தன்னுடைய ஜோடி யாராக இருந்தாலும் வசீகரமான ரொமான்ஸை கமல் கொண்டு வந்துவிடுவார். இதில் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

இதன் தயாரிப்பு சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்பதால் பிரபு இரண்டாம் ஹீரோவாக நடித்திருந்தார். கமல் விட்டு வைத்த கெமிஸ்ட்ரியையெல்லாம் பிரபுவின் மீது கொட்டி நடித்திருந்தார் குஷ்பு. குஷ்புவின் அண்ணன்களாக எஸ்.எஸ்.சந்திரன், சின்னி ஜெயந்த், மயில்சாமி, குள்ளமணி ஆகியோர் நடித்திருந்தார்கள். இது தொடர்பான அசட்டுத்தனமான காமெடிக் காட்சிகள் சிலது நடுவில் இருக்கும்.

மறக்க முடியாத ‘ஜிந்தா’வாக சலீம் கவுஸ்

ஒரு திரைப்படத்தில் ஹீரோவிற்கு நிகரான வல்லமையுடன் வில்லன் பாத்திரம் எழுதப்பட்டிருந்தால், அதன் சுவாரஸ்யத்திற்கும் வெற்றிக்கும் குறைந்தபட்ச உத்தரவாதம் கிடைத்து விடும். அந்த வகையில் ‘வெற்றி விழா’ திரைப்படத்தின் வில்லன் ‘ஜிந்தா’வை இன்றும்கூட பரவசத்துடன் நினைவுகூரும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஜிந்தாவாக நடித்து அசத்தியிருந்தவர் சலீம் கவுஸ். ‘மெட்ராஸ் பிளேயர்ஸ்’ என்ற நாடகக்குழுவின் ஆங்கில மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ளவர் சலீம். பிரதாப் போத்தனும் இதே குழுவில் இருந்தவர் என்பதால் சலீம் கவுஸை ஒரு திரைப்படத்தில் சரியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். வெற்றி விழாவின் மூலம் அது சாத்தியமாயிற்று.

‘ஜிந்தா’வாக சலீம் கவுஸ்
‘ஜிந்தா’வாக சலீம் கவுஸ்

கரகரவென்று ஒலிக்கும் வித்தியாசமான குரல், சுவாரஸ்யமான மாடுலேஷன், வசீகரமான கண்கள், மிரட்டலான உடல்மொழி போன்றவற்றுடன் அறிமுகமாவார் சலீம். “யார் அந்த ஸ்டீபன்ராஜ்?” என்கிற வசனத்துடன் தன்னுடைய அறிமுகக் காட்சியில் நுழையும் இவர், தனது அடியாட்களுக்கு அது பற்றிய விவரம் தெரியாததைக் கண்டு “என்னோட சீட்டுக்கட்டில் ரெண்டு ஜோக்கர்ஸ்” என்று பகபகவென்று சிரித்து விட்டு அவர்களைச் சுட்டுக் கொன்றுவிடுவார். "எனக்கு தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது; மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை" என்கிற பின்குறிப்பு வேறு.

இன்னொரு காட்சியில் கமலுடன் உரையாடும் போது ‘ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்கணும்” என்று வசனம் பேசிவிட்டு ‘சிட் டவுன் ஸ்டீபன் ராஜ்... சிட்... டவுன்’ என்று கமலை அதட்டுவது போல பேசி அந்தக் காட்சியை சுவாரஸ்யப்படுத்தியிருப்பார். ‘வெற்றி விழா’வின் வெற்றிக்கு சலீம் கவுஸ் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இப்படியொரு அற்புதமான நடிகரை தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியதின் மூலம் ஒரு சிறந்த காரியத்தைச் செய்தார் பிரதாப் போத்தன். இத்தனைக்கும் பாதிப் படத்திற்கு மேல்தான் ‘ஜிந்தா’ பாத்திரமே பார்வையாளர்களுக்கு அறிமுகமாகும். என்றாலும் இன்றளவும் மறக்க முடியாத பாத்திரம்.

இந்தப் படத்தின் சிறப்பிற்கு இதன் ஆக்ஷன் காட்சிகளும் ஒரு முக்கிய காரணம். இதன் ஸ்டன்ட் மாஸ்டர் ‘விக்ரம் தர்மா’. தர்மசீலன் என்கிற இயற்பெயர் கொண்ட இவர், (பழைய) விக்ரம் திரைப்படத்தில் பணியாற்றிய காரணத்தினால் அந்தப் பெயர் இவருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது. கமல் நடித்த பல ‘ரிஸ்க்’ ஆன சண்டைக்காட்சிகளுக்கு இவர்தான் நகலாக இருந்தார். கமலின் ஆதரவுடன் ஸ்டன்ட் மாஸ்டராக ஆனார். ‘வெற்றி விழா’ திரைப்படத்தில் ஒரு லிஃப்ட்டின் உள்ளே கமலுடன் விக்ரம் தர்மா சண்டையிடும் ஒரு ‘சோலோ ஃபைட்’ காட்சி நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தது. படத்தின் துவக்கத்தில் வரும் துரத்தல் காட்சி, ஹெலிகாப்டர் காட்சி, இன்னொரு சேஸிங் காட்சியில் சாலையில் தகர்க்கப்படும் பொருள்கள், க்ளைமாக்ஸ் ஃபைட் என்று விக்ரம் தர்மாவின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.

வெற்றி விழா லிஃப்ட் சண்டைக் காட்சி
வெற்றி விழா லிஃப்ட் சண்டைக் காட்சி
பிரதாப்புடன் நீண்ட காலமாக பயணிக்கும் அசோக்குமார்தான் இந்தத் திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு. கோவாவில் படமாக்கப்பட்ட காட்சிகள், பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் முதற்கொண்டு அசோக்குமாரின் பிரத்யேகமான அழகியல் பாணியானது படம் முழுவதும் வெளிப்பட்டிருக்கும்.

இளையராஜாவின் futuristic இசைப்பாடல்கள்

‘வெற்றி விழா’ திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்கு இன்னொரு முக்கியமான நபர் இருக்கிறார். யெஸ்... வழக்கம் போல் அது இளையராஜாதான். இந்தத் திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. அனைத்துமே அட்டகாசமான இசையில் உருவாக்கப்பட்டிருக்கும். இன்றைக்குக் கேட்டாலும் புத்துணர்ச்சியாக உணரக்கூடிய அளவிற்கு futuristic தன்மையுடன் இசையமைத்திருப்பார் ராஜா. உதாரணத்திற்கு ‘தத்தோம் தளாங்கு தத்தோம்’ என்ற பாடலின் துவக்க இசையைக் கேட்டுப் பாருங்கள். இதைப் போலவே முதல் சரணத்திற்கு முன்னால் வரும் இடையிசையும் அத்தனை வசீகரமாக இருக்கும். எஸ்.பி.பியும் ஜானகியும் இணைந்து பாடி அசத்தியிருப்பார்கள்.

‘சீவி சிணுக்கெடுத்து’ என்ற பாடலின் முன்னிசையை மட்டுமே ஒரு துண்டாக எடுத்து வைத்துக் கொண்டு நூறு முறை தொடர்ந்து கேட்டாலும் கூட சலிப்பு ஏற்படாது. அத்தனை ரகளையான இசைக்கோர்ப்பு. கங்கை அமரன் எழுதிய இந்தப் பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள். மற்ற பாடல்களை எல்லாம் வாலி எழுதியிருந்தார். ‘பூங்காற்று என் போ் சொல்ல’ என்கிற பாடலை ஜேசுதாஸ் பாடினாரா என்பது போலவே ஒரு நிரந்தரக் குழப்பம் என்னுள் படிந்திருக்கிறது. அத்தனை குழைவை தன் குரலில் அள்ளியெடுத்து இந்த மெலடியைப் பாடியிருப்பார் எஸ்.பி.பி. இணைந்து பாடி அசத்தியவர் சித்ரா.

வெற்றி விழா
வெற்றி விழா

‘மாருகோ... மாருகோ’ என்பது இன்னொரு துள்ளலிசைப் பாடல். இதன் முன்னிசையும் அற்புதமாக இருக்கும். ஹீரோ ஒரு கிறிஸ்துவப் பெண்ணை மோதிரம் மாட்டி திருமணம் செய்யும் போது அவருடைய மங்கலான நினைவில் இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டும் காட்சி வரும். எனவே இரு மதங்கள் தொடர்பான முன்னிசையை கலவையாக வழங்கியிருப்பார் ராஜா. வழக்கம் போல் எஸ்.பி.பி. அதி உற்சாகத்துடன் பாட, அவருக்கு ஈடு கொடுத்திருப்பார் சித்ரா.

பிரதாப் போத்தன் இயக்கிய ‘வெற்றி விழா’ ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பாக இருக்கும். ‘யார் இந்த ஸ்டீபன்ராஜ்?’ என்று தன்னைத்தானே கமல் அறிந்து கொள்ளும் ஆர்வமும் பதற்றமும் பார்வையாளர்களுக்கும் கடத்தப்பட்டிருக்கும். ஆனால் மாடர்ன் சாமியராக ஜனகராஜ் நடுவில் வரும் காட்சிகள், இந்தத் திரைக்கதையின் விறுவிறுப்பை சற்று குறைத்து விடும். ‘வானம் என்ன’ என்கிற பாடலும் கமல் – பிரபு நடனத்திற்காக அநாவசியமாக திணித்ததைப் போன்ற எண்ணம் தோன்றும்.

இது போன்ற சிறிய குறைகளைத் தவிர இன்று பார்த்தாலும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தரக்கூடிய ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம்தான் `வெற்றி விழா’.