Published:Updated:

பாரதிராஜாவின் அழகியல் புரட்சி; மணிவண்ணனின் சமூகக் கோபம்... `நிழல்கள்' ஏன் இன்றும் ஒரு நிஜமான சினிமா?

நிழல்கள்

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம், ‘நிழல்கள்’.

Published:Updated:

பாரதிராஜாவின் அழகியல் புரட்சி; மணிவண்ணனின் சமூகக் கோபம்... `நிழல்கள்' ஏன் இன்றும் ஒரு நிஜமான சினிமா?

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம், ‘நிழல்கள்’.

நிழல்கள்
எண்பதுகளின் தமிழ் சினிமாக்களைப் பற்றிப் பேசும்போது, ‘நிழல்கள்’ திரைப்படத்தை தவிர்க்கவே முடியாது. இது வணிகரீதியாக தோல்விப்படமாக அமைந்தாலும் அந்தக் காலகட்டத்தின் பின்னணியில் உருவான ஒரு முக்கியமான திரைப்படம் என்கிற அளவில் கணக்கில் எடுத்துக்கொண்டேயாக வேண்டும்.

தன்னுடைய முதல் ஐந்து திரைப்படங்களையும் தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் ஆக்கி சாதனை படைத்துக்கொண்டிருந்த பாரதிராஜா, முதன் முதலில் தோல்வியின் ருசியை சுவைத்தது ‘நிழல்கள்’ திரைப்படத்தின் மூலம்தான். இதைப் போலவே பின்னர் ‘காதல் ஓவியம்’ என்கிற மகத்தான காவியத் திரைப்படத்தைத் தந்த பாரதிராஜா, அது மக்களிடையே வரவேற்பைப் பெறாமல் போன வெறுப்பினால், "இதானே உங்களுக்கு வேணும்” என்கிற மனக்கசப்பில் உருவாக்கிய அப்பட்டமான வெகுசன திரைப்படம் ‘வாலிபமே வா வா’.

இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா

‘நிழல்கள்’ திரைப்படத்தின் தோல்விக்கு பல காரணங்களை யூகிக்க முடியும். அதைப் பின்னால் பார்ப்போம். ஆனால், அழகியல் ரீதியாகவும், உள்ளடக்கத்தின் நோக்கத்திலும் இந்தத் திரைப்படத்தில் பல கவனிக்கத்தக்க அம்சங்கள் இருக்கின்றன.

எண்பதுகளின் காலகட்டத்தில் வெளிவந்த திரைப்படங்களை நோக்கினால், அதில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு அடிப்படையான விஷயமாகப் பதிவானதைப் பார்க்கலாம். இளைஞர்களின் சமூகக் கோபம், ஏக்கம், நிராசை, கசப்பு என்று பல விஷயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவாகின. ‘பாலைவனச் சோலை’, இந்தப் பிரச்னையை கசப்பு நகைச்சுவையுடன் ஓர் ஓரமாகப் பேசியது என்றால், ‘வறுமையின் நிறம் சிவப்பு’ அதன் மையத்தில் மிக உக்கிரமாகப் பேசியது. இப்படி பல உதாரண திரைப்படங்களைச் சொல்ல முடியும்.

இந்தியாவின் சோஷியலிஸக் கனவுகள் மெல்லச் சரிந்து கொண்டிருந்த காலக்கட்டம். அரசியலில் மலிந்துவிட்டிருந்த ஊழல், நகர்மயமாதல், மக்கள்தொகை பெருக்கம் போன்ற பல காரணங்கள் வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியது. ‘No Vacancy’ போர்டுகள் ஏறத்தாழ அனைத்து நிறுவனங்களின் வாசலிலும் தொங்கி, படித்த இளைஞர்களை நோக்கி ஏளனமாக பார்த்துக்கொண்டிருந்தன.

நிழல்கள்
நிழல்கள்
தமிழ் சினிமா மட்டுமல்லாமல், ஏறத்தாழ இந்தியச் சினிமாக்கள் அனைத்திலும் இந்தப் பிரச்னையின் சாயல் வெளிப்பட்டது. சத்யஜித்ரே, ரித்வித் கட்டக் போன்ற கலை சார்ந்த சினிமாவை உருவாக்கியவர்கள், மிக நேரடியாகவே இந்தப் பிரச்னையைப் பதிவுசெய்தார்கள். ‘நிழல்கள்’ திரைப்படத்திலும் இந்தப் பிரச்னை பதிவாகியது.

ஆங்கில இலக்கியம் படித்து சரியான வேலை கிடைக்காமல், நேர்காணல்களில் அபத்தமான கேள்விகளை எதிர்கொள்வதால் கோபமடையும் ஓர் இளைஞன் (நிழல்கள் ரவி), என்றாவது ஒரு நாள் தமிழகமே தான் இசையமைத்த பாடல்களைக் கேட்கும் என்கிற சங்கீதக் கனவுகளுடன் மிதக்கும் அவனுடைய நண்பன் (சந்திரசேகர்), ஒரு சராசரி இளைஞனாக வாழப் பிடிக்காமல் தன்னுடைய பகற்கனவுகளைத் துரத்தியபடி போதையில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு கல்லூரி மாணவன் (ராஜசேகர்), இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு பெண் (ரேணுகா) ஆகியோர்தான் இந்தத் திரைப்படத்தின் பிரதான பாத்திரங்கள்.

அதுவரையான திரைப்படங்களில் பி.எஸ்.நிவாஸ் என்கிற ஒளிப்பதிவாளரைப் பயன்படுத்திக்கொண்டிருந்த பாரதிராஜா, B. கண்ணன் என்கிற ஒளிப்பதிவாளருடன் கூட்டணி சேர்ந்த முதல் திரைப்படம் ‘நிழல்கள்’. பிறகு, பாரதிராஜாவின் ‘கண்களாகவே’ மாறிப் போகுமளவிற்கு இந்த வெற்றிக் கூட்டணி பல திரைப்படங்களில் தொடர்ந்தது. ஏறத்தாழ 40 வருடங்கள் பாரதிராஜாவுடன் இணைந்து பயணித்த B.கண்ணன் சமீபத்தில்தான் மறைந்தார் என்பது ஒரு சோகமான விஷயம்.

ஒளிப்பதிவாளர் கண்ணன்
ஒளிப்பதிவாளர் கண்ணன்

இந்த இடத்தில் பாரதிராஜாவின் ‘திரைமொழி’யைப் பற்றி சற்று பேசியாக வேண்டும். ஒரு தனியான முழு கட்டுரையாகப் பேச வேண்டிய அளவிற்கான விஷயம் அது. தொடர்பில்லாத வெவ்வேறு துண்டு துண்டான காட்சிகளை இணைத்து, அவற்றுக்கு ஒரு புதிய அர்த்தத்தை ஏற்றிக் காண்பிப்பதை ‘மாண்டேஜ்’ உத்தி என்பார்கள். இவ்வகையான மாண்டேஜ் ஷாட்டுகளை அழகியல் ரீதியில் திறம்பட பயன்படுத்திய முன்னோடி என்று இயக்குநர் என்று பாரதிராஜாவைச் சொல்லலாம்.

காற்றில் ஆடும் ஒரு பூவின் க்ளோசப் ஷாட், பாய்ந்து வரும் கடல் அலை, ஆகாயத்தை நோக்கி தூக்கிப் போடப்பட்ட ஒரு புல்லாங்குழல், ஒரு வசீகரமான பெண்ணின் பாதி முகத்தின் க்ளோசப்... போன்றவற்றின் ஷாட்டுகளை அடுத்தடுத்து அடுக்கி, பார்வையாளர்களின் மனங்களில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி விடுவார். சினிமாவே ஒரு மிகையான கற்பனை என்னும்போது இதன் ரொமாண்டிஸிஸத்தைக் கூடுதல் வசீகரமாக்கியவர் பாரதிராஜா.

படப்பிடிப்பிற்கு பாரதிராஜா எந்தவொரு பேப்பரையும் எடுத்துச் செல்ல மாட்டார் என்று சொல்கிறார்கள். திரைக்கதையின் அவுட்லைன் மட்டும் அவருடைய மனதில் இருக்கும். ஆனால், அன்றைய நாளில் எடுக்கப்போகும் விஷயங்கள் அனைத்தும் அவருடைய மனதில் காட்சிகளாகப் பொங்கிவரும். இந்தக் கற்பனையின் வேகத்திற்கு ஈடுகொடுப்பவராகவும் இயக்குநரின் சிந்தனையுடன் ஒத்திசைவுடன் இயங்குபவராகவும் ஓர் ஒளிப்பதிவாளர் அமைவது வரம். B.கண்ணன், இப்படியொரு கேமராமேனாக இருந்ததால்தான், பாரதிராஜாவுடன் தொடர்ந்து இயங்க முடிந்தது.

‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்கிற அற்புதமான பாடல் படமாக்கப்பட்ட விதம் மட்டுமே B. கண்ணனின் பெருமையைச் சொல்வதற்கு ஒரு நல்ல உதாரணம். சாயங்கால நேரத்தின் வெளிச்சமும் அந்தச் சமயத்திலான மனிதர்களின் உணர்வுகளும் முகங்களும் மிகக் கச்சிதமாகப் பதிவாக்கப்பட்ட பாடல் என்று இதைச் சொல்லலாம்.

‘நிழல்கள்’ படம் துவங்கும்போது, பிரதான பாத்திரங்களின் பாதி முகங்கள் மிக நெருக்கமான அண்மைக் கோணத்தில் காட்டப்படும். இப்படியான extreme close up ஷாட்டுகளை சரியாகப் பதிவு செய்வதற்கும் பயன்படுத்துவற்கும் ஓர் அழகியல் உணர்வும் ரசனையும் வேண்டும். இல்லையெனில் அது விகாரமாகிவிடும். இதுபோன்று பல நுட்பமான அழகியல் விஷயங்களை ஏறத்தாழ படம் முழுவதும் இயக்குநர் + ஒளிப்பதிவாளர் + எடிட்டர் கூட்டணி பின்பற்றியது.

இதைப் போலவே ‘மடை திறந்து’ பாடலும் ஐரோப்பிய சினிமாக்களின் பாணியில் மிக ஸ்டைலிஷாக உருவாக்கப்பட்டிருக்கும். கடற்கரை மணலில் ஒரு வாத்தியக் கோஷ்டி நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டிருக்க, சுற்றிலும் மஞ்சள் உடை அணிந்த பெண்கள் ஆடி வர (வெள்ளுடை தேவதைகள் மிஸ்ஸிங்!) அவர்களின் இடையே ஓர் இசைக்கலைஞன் தன் கனவுகள் நிஜமாகி வருவதை மிகையான உற்சாகத்துடன் பாடிவருவதைப் பார்க்கும்போது, அந்த உற்சாகம் பார்வையாளர்களுக்கும் கடத்தப்பட்டுவிடும். தனது அசாதாரணமான திறமையின் மூலம் ஒவ்வொரு ஃபிரேமையும் அலங்கரித்திருப்பார் B.கண்ணன்.

B. கண்ணன் என்னும் ஒளிப்பதிவு மேதையுடன் பாரதிராஜாவிற்கான கூட்டணி இந்தத் திரைப்படத்தில் தொடங்கியதைப் போல இன்னொரு சகாப்தத்தின் ஆரம்பமும் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் உருவானது.

`இளையராஜா+வைரமுத்து'
ஆம். காலத்தால் அழிக்க முடியாத, சாகாவரம் பெற்ற பாடல்களை ‘இளையராஜா+வைரமுத்து' என்னும் கூட்டணி பிற்பாடு உருவாக்கியது. அது, ‘நிழல்களில்’தான் தொடங்கியது.

பாரதிராஜாவின் மூலம் அழைத்து வரப்பட்ட வைரமுத்து என்னும் இளைஞனை முதலில் அசுவாரசியமாக அணுகிய இளையராஜா, ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது... வானமகள் நாணுகிறாள்... வேறு உடை பூணுகிறாள். வானம் எனக்கொரு போதி மரம்’ ஆகிய அபாரமான வரிகளைப் பார்த்தவுடன் அசந்து போய் ‘இவரோட போன் நம்பரை வாங்கி வெச்சுக்கங்க” என்றிருக்கிறார்.

இசை, கவிதையை அடையாளம் கண்டுகொண்ட தருணம் அது எனலாம்.
பாரதிராஜா, கண்ணன்
பாரதிராஜா, கண்ணன்

“என்னப்பா... இந்தப் பய எந்தவொரு பாடலாசிரியரையும் பற்றி இப்படி பாராட்டிச் சொன்னதில்லையே?” என்று வைரமுத்துவிடம் பிறகு பாரதிராஜா உரிமையுடன் வியந்து சொன்னாராம்.

ஆனால், பல சாதனைகளை நிகழ்த்திய இந்தக் கூட்டணி, பிறகு பிரிந்து போனது தமிழ் சமூகத்தின் பெரிய இழப்பு எனலாம். கலைஞர்களுக்குள் எழுகிற தனிப்பட்ட பிரச்னைகள், அதன் பின்னுள்ள அற்பமான காரணங்களால் அவர்கள் பிரியும்போது, சரித்திரத்தின் பல பக்கங்கள் எழுதப்படாமல் வெற்றிடமாக மாறிப் போகின்றன. அது, கலைச் சமூகத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது. கலைஞர்கள் இந்த விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒரு தற்காலிகப் பிரிவிற்குப் பின் இணையலாம் என்று தோன்றுகிறது.

ஓர் அன்னை, தன் பிள்ளைகளுக்கு எவ்வாறு பாரபட்சமில்லாமல் உணவையும் அன்பையும் வழங்குகிறாரோ... அப்படியே, ‘தனக்குப் பிடிக்காத படமென்றால்கூட அது சார்ந்த எவ்வித முன்தீர்மானத்தையும் வளர்த்துக்கொள்ளாமல், இசை என்னும் அமுதத்தை அள்ளி அள்ளி வழங்குவதில் வஞ்சகம் செய்யாதவர் இளையராஜா. நெருக்கமான தோழன் என்றாலும்கூட, பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ திரைப்படத்தை இளையராஜா அவ்வளவாக ரசிக்கவில்லையாம். என்றாலும், அதற்கு அவர் தந்த பாடல்களும், பின்னணி இசையும் இன்றைக்கும் போற்றப்பட வைப்பதாக இருக்கிறது.

‘நிழல்கள்’ திரைப்படத்திலும் ராஜாவின் இசை ராஜாங்கம் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பாடலுமே ஓர் அற்புதம் எனலாம். ஆயிரம் முறை கேட்டாலும் கூட சலிக்காத தேன் குடங்கள்.

இன்றைக்கும் கூட பல கைப்பேசிகளில் ரிங்டோனாக இருக்கிற ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது’ பாடல் ஒரு சரித்திரத்தை உருவாக்கிய பாடல் என்றால் 'பூங்கதவே தாழ்திறவாய்’ பாடலை ‘அழகியல் புரட்சி’ எனலாம். இந்தப் பாடல் இசைக்கப்பட்ட விதமும் படமாக்கப்பட்ட விதமும் அற்புதமானது. தீபன் சக்கரவர்த்தி மற்றும் உமா ரமணனின் பிரத்யேகமான குரல்கள் இந்தப் பாடலின் வசீகரத்தைக் கூட்டியிருக்கும்.

நிழல்கள் ஆல்பத்தின் இன்னொரு அட்டகாசமான பாடல், ‘மடை திறந்து. ’ உற்சாக வெள்ளம் என்று இந்தப் பாடலைச் சொல்லலாம்.. ‘தனனனனா.. தானனனனா..’ என்று மெல்லிய ஹம்மிங்கில் ஆரம்பிக்கும் பாடல், பிறகு அருவிபோல கொட்ட ஆரம்பிக்கும். சந்திரசேகரின் பாத்திரத்தை தனது நண்பன் இளையராஜாவிற்கான tribute-ஆக பாரதிராஜா உருவாக்கினாரோ... என்று எண்ண வைக்கும் அளவில் அந்தப் பாத்திரம் இருக்கும்.

தனது ஹார்மோனியத்தின் மூலம் தமிழ் திரைத்துறையை ஒரு நாள் கலக்கிவிட முடியும் என்று தன்னம்பிக்கையுடன் இருக்கும் சந்திரசேகர், தன்னை கிண்டல் செய்யும் நண்பனிடம் “பார்த்துட்டே இரு... தமிழ்நாட்ல இருக்கற ஆறு கோடி ஜனங்களுக்கு என் பாட்டை விட்டா வேற பாட்டே கிடையாது” என்று சொல்வார். இளையராஜா விஷயத்தில் ஏறத்தாழ அது உண்மையாக ஆனது.

இந்தப் பாடலில், ‘புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே’… என்கிற வரி வரும்போது ஓர் அறையில் இருக்கும் vanishing blinds சட்டென்று திறக்க, இளையராஜா உற்சாகமாக பாடிக் கொண்டிருக்கும் காட்சி வரும்.

‘சாமியார்’தனமில்லாத இளமையான இளையராஜாவை இளைய தலைமுறையினர் பார்ப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இந்தக் காட்சி அமைந்திருக்கும். இளையராஜாவின் ஆஸ்தான இசைக் கலைஞர்களான டிரம்மர் புருஷோத்தமன் முதற்கொண்டு பலரை இந்தப் பாடல் காட்சியில் பார்க்க முடியும். ஒரு பாடலை அட்டகாசமான எக்ஸ்பிரஷனோடு பாடுவதில் எஸ்.பி.பி ஒரு கில்லி. இந்தப் பாடலையும் அத்தனை உற்சாகமாகப் பாடியிருப்பார்.

இந்த ஆல்பத்தின் இன்னொரு அட்டகாசமான பாடல், ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம்...’ உயிரை உருக்கும் உணர்வோடு எஸ்.ஜானகி மிகச்சிறந்த முறையில் பாடியிருப்பார். ஆனால், இந்தப் பாடல் படத்தில் இடம் பெறாதது மிக துரதிர்ஷ்டமானது. இந்த ஆல்பத்தின் மிகச் சிறந்த பாடல் என்று இதைத்தான் நான் சொல்வேன். மலை உச்சியில் எதிரொலிப்பது போல மெல்லிய ஆலாபனையுடன் தொடங்கும் ஜானகியின் குரலைத் தொடர்ந்து அருவி வழிந்தோடுவது போல வீணையின் மீட்டல் கேட்கும். பாடலின் இடையிசை, இரண்டாவது சரணத்தின் கடைசிப் பகுதி, பல்லவியுடன் இணையும் லாகவம் என்று பல அற்புதமான விஷயங்கள் உள்ள பாடல் இது.

'நிழல்கள்' ரவி
'நிழல்கள்' ரவி

‘இரண்டே வருடங்களில் நடிகராகிவிடுவேன். அல்லாவிடில் திரும்புகிறேன்’ என்று தந்தையிடம் வாக்குறுதி தந்துவிட்டு கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்குத் கிளம்பிய ரவி என்னும் இளைஞன், பாலசந்தர் போன்ற இயக்குநர்களிடம் முயன்று தோல்வியடைந்து, கடைசியாக பாரதிராஜாவை சென்று பார்க்கிறார். ‘நிறம் மாறாத பூக்கள்’ திரைப்படத்தின் டப்பிங் பணி நடந்துகொண்டிருந்த சமயம் அது. அதன் ஹீரோவான விஜயனின் பாத்திரத்திற்கு ரவியின் குரல் கச்சிதமாகப் பொருந்திவிடுகிறது. பாரதிராஜாவிற்கும் பரம திருப்தி.

ஆனால் என்ன காரணத்தினாலோ, இயக்குநரே அந்த டப்பிங்கை பேசி முடித்துவிட, ரவிக்கு ஏமாற்றம். ஆனால், இவரை நினைவில் வைத்திருந்த பாரதிராஜா, ‘நிழல்கள்’ திரைப்படத்தின்போது அழைத்து ஹீரோ வேடத்தை அளித்தார். ரவி ‘நிழல்கள் ரவியாக’ உருமாறியதற்குப் பின்னால் உள்ள கதை இது.

கதாநாயகியான ரேணுகாவின் (பாரதிராஜாவின் ‘R’ ராசிப்படியான பெயர்) அசல் பெயர் ‘ராது’. (அதுவும் ‘ஆர்’தான்). இவர் நடித்தது தமிழில் இரண்டு, மலையாளத்தில் இரண்டு என்று மொத்தமே நான்கு படங்கள்தான். ‘நிழல்கள்’தான் அறிமுகப்படம். குடும்பப் பாங்கான முகமுடைய இவர், நடிப்புத் துறையில் தொடர்ந்திருந்தால் சுஹாசினி, ரேவதி போல ஒரு முன்னணி நட்சத்திரமாக வந்திருக்கலாம். ‘பூங்கதவே’ பாடலில் தேவதை போலவே இருப்பார். சினிமாத்துறையில் இருந்து எப்போதோ விலகிய இவர், இப்போது பரதநாட்டிய ஆசிரியையாக இருப்பதாக கேள்வி.

நிழல்கள்
நிழல்கள்

ஒளிப்பதிவாளரான ராஜசேகர் இதில் ஒரு பிரதான பாத்திரத்தில் நடித்தது இனிய விபத்தாகத்தான் இருக்க வேண்டும். எண்பதுகளில் வெளியான சிறு பத்திரிகையின் படைப்புகளில் வரும் நாயகனைப் போலவே இவரது பாத்திரம் இருக்கும். சராசரியான வாழ்க்கையை வெறுத்து, தனக்கான பகற்கனவுகள் நிரம்பிய உலகில் வாழ்வார். ‘தன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே’ என்பது இவரது ஏக்கமாக இருக்கும். (படம் முடிந்ததும் பாரதிராஜாவிற்கும் இதே ஏக்கம் வந்திருக்கலாம்). நடிகர் முரளியை நினைவுப்படுத்துவது போன்ற இவரது தோற்றமும் முகமும் சிகையலங்காரமும் சில கோணங்களில் அட்டகாசமாக இருக்கும்.

பணத்தாசை பிடித்த அடகுக்கடை ஆசாமியாக ஜனகராஜும், “இந்த அப்பனோட சாவுக்கு வர்றதுக்குக்கூட பணமில்லாம நீ அவஸ்தைப்படப் போறடா” என்று உருக்கமாகப் பேசி ஒரு காட்சியிலேயே கவர்ந்துவிடும் கே.கே.செளந்தரும், ரிக்ஷா ஓட்டுபவராக மணிவண்ணணும் என்று பலர் நடித்திருக்கிறார்கள்.

அந்தக் காலகட்டத்தின் பிரச்னையை சமூகக் கோபத்துடன் வெகுசன மொழியில் சுவாரஸ்யமாக பேசினாலும் இந்தத் திரைப்படம் ஏன் தோல்வியுற்றது? சில காரணங்களை யூகிப்போம்.

இது சமூகப் பிரச்னையைப் பற்றி பேசும் திரைப்படமா… அல்லது காதல் திரைப்படமா என்கிற குழப்பம் பார்வையாளர்களுக்கு வந்திருக்கலாம். இந்தக் கலவை படத்தில் சரியாக அமையவில்லை. ‘நிழல்கள்’ வெளியான அதே நாளில்தான் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படம் வெளியானது. அதுவும் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றித்தான் பேசியது. ஆனால், பாலசந்தரின் திறமையான திரைக்கதை, கமல், ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இருந்த காரணத்தினால் அது வெற்றிபெற்றது.

நிழல்கள்
நிழல்கள்

இறுதிக்காட்சியில் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து, ‘சுபம்’ என்று போடப்பட்ட டைட்டில் கார்டை மகிழ்ச்சியுடன் பார்த்துப் பழகின சமூகம் நம்முடையது. ஆனால், ‘நிழல்கள்’ திரைப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் இறுதியில் தோற்றுப்போகின்றன.

வாழ்க்கையில் இணையவேண்டிய காதல் ஜோடி, கைவிலங்குடன் ஒன்றாக சிறைக்குச் செல்கிறது. பகற்கனவுகளில் மிதந்து கொண்டிருந்த இளைஞன், தனக்குப் பிடித்தவளின் கையினாலேயே குத்துப்பட்டு சாகிறான். இசையுலகில் ஜெயிக்கும் கற்பனையுடன் இருந்த இளைஞன், அந்தக் கனவு சிதைந்து சாலையில் பித்துப் பிடித்து பரிதாபமாகத் திரிகிறான்.

வெற்றி பெற்றவர்களின் வரலாற்றை மகிழ்ச்சியுடன் கவனிக்கும் நாம், தோல்வியுற்றவர்களின் கதைகளை திரும்பிப் பார்க்க விரும்புவதில்லை. உண்மையில், தோல்வியடைந்தவர்களின் சதவிகிதம்தான் இங்கு அதிகம். ஆனால், அந்த யதார்த்தத்தை நேருக்கு நேர் சந்திக்க விரும்பாததால் படம் தோல்வியுற்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மணிவண்ணனை, பொதுவாக நகைச்சுவை நடிகராகவும் நையாண்டியான வசனங்களை உதிர்ப்பவராகவும் மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அவருக்குள்ளும் தீவிரமான அரசியல் கருத்துகளும் சமூகக் கோபங்களும் இருந்திருக்கின்றன. ‘நிழல்கள்’ திரைப்படத்தின் கதை – வசனம் மணிவண்ணனுடையதுதான்.

அதுவரை பாரதிராஜாவின் படங்களுக்கு பிரதான பங்களிப்பைத் தந்துகொண்டிருந்த பாக்கியராஜ், ஹீரோ கம் இயக்குநராக நடிக்கப் போய்விட்டதால், அந்த வெற்றிடம்தான் பாரதிராஜாவின் சில படங்களின் தோல்விக்குக் காரணமாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. இதில் ஒரு பகுதி உண்மை இருக்கலாம். வெகுசன மக்களின் ரசனையைத் துல்லியமாக அறிந்தவர், பாக்யராஜ். ஆனால், மணிவண்ணனின் கதையில் அடுத்து உருவான ‘அலைகள் ஒய்வதில்லை’ பெரும் வெற்றியைப் பெற்றது என்பதையும் கவனிக்க வேண்டும்.

மணிவண்ணன்
மணிவண்ணன்

வேலையில்லாத் திண்டாட்ட பிரச்னையைப் பற்றி இந்தப் படம் பேசினாலும், அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் போகிற போக்கில் சொன்னதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.

‘வொயிட் காலர்’ பணியை மட்டுமே மோகிக்கும் மனோபாவம் அந்தக் காலத்தில் இளைஞர்களிடம் பரவலாக இருந்தது. இன்று அது ஐடி துறையில் இடம்பிடிக்கும் கனவாகப் பெருகிவிட்டது. நகர்மயமாதலுக்கு இதுவும் ஒரு காரணம்.

‘நிழல்கள்’ திரைப்படத்தின் ஹீரோவான ரவி, ஊரில் விவசாயம் செய்யும் வசதி இருந்தாலும் பட்டணத்தில் வந்து அவதிப்படுவான். “இல்லாத மரி்யாதையைக் காப்பாத்தறதுக்கு இருக்கற வாயை பூட்டு போட்டுக்கிட்டு வாழற பட்டணத்து பொழப்பு தேவைதானா?” என்று அவனது தந்தை கேட்பார். விவசாயம் உள்ளிட்ட பல ஆதாரமான பணிகளை கெளவரக் குறைச்சலாகக் கருதி ‘வொயிட் காலர்’ பணியை இளைஞர்கள் தேடித் திரிவதும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஒரு காரணம்.

ரிக்ஷாக்காரர் மணியின் பையனாக நடித்திருக்கும் ஹாஜா ஷெரீஃப் “இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடலை... பொழக்கிறதுக்கு ஆயிரம் வேலை இருக்கு” என்று தன்னம்பிக்கையுடன் பேசுவான். அந்தச் சிறுவனிடம் இருந்த நம்பிக்கைகூட இளைஞர்களிடம் இல்லாததுதான் அவர்களின் சோகமான முடிவிற்கு ஒருவகையில் காரணமாக இருக்கலாம்.

‘நிழல்கள்’ திரைப்படத்தின் சில குறியீட்டுக் காட்சிகளும் அருமையாக அமைந்துள்ளன. டீக்கடைக்காரப் பையனை கைதட்டி அடிக்கடி அழைப்பார் ரவி. எதிர் வீட்டில் இருக்கும் ரோகிணி, அதைத் தவறாகப் புரிந்துகொண்டு ரவியுடன் வேண்டா வெறுப்பாகப் பேசுவார். உண்மையைப் பிறகு ரோகிணி அறிந்து கொள்ளும் காட்சியில், அவர் காய்கறி வாங்கிக்கொண்டிருப்பார். அவர் முகத்தின் முன்னால் தராசு இருக்கும் காட்சி தெரியும். ஒரு நல்லவரை தவறாக மதிப்பிட்டுவிட்டோமே என்கிற சங்கடம் அவரது முகத்தில் தெரியும்.

பல அபத்தமான கேள்விகளை இன்டர்வியூவில் சந்திக்கும் இளைஞன், ஓரிடத்தில் கையெழுத்திற்குப் பதிலாக கை ரேகையைப் பதித்துவிட்டு கோபத்துடன் வெளியேறும் காட்சி அற்புதமானது மட்டுமில்லை, அரசியல் பொதிந்ததும்கூட. பூவின் மேல் சிகரெட்டால் சுட்டுக்கொண்டே பேசும் பேராசிரியரின் கொடூரத்தை சகிக்க முடியாமல், தன்னிச்சையாக அவரின் முகத்தில் அறைந்துவிடும் இளைஞனின் நுண்ணுணர்வை இந்தச் சமூகம் புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல.

நிழல்கள்
நிழல்கள்
`நம் தேசத்தின் தெருக்களில் உருவங்களைத் தொலைத்த நிழல்கள் ஒரு கோடி. இந்த நிழல்கள் உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல... தீர்வுக்கும்!'
என்கிற டைட்டில் கார்டோடும் இயக்குநரின் குரலோடும் படம் முடியும்.

வணிக ரீதியான தோல்வியை அடைந்திருந்தாலும் படம் பேசுகிற உள்ளடக்கத்திற்காகவும் பரிசோதனை முயற்சிக்காகவும் அழகியல் சார்ந்த காட்சிகளுக்காகவும் ‘நிழல்கள்’ ஒரு முக்கியமான திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நீங்கள் இந்தப் படத்தை முதலில் பார்த்த அனுபவத்தை இங்கே கமென்ட் செய்யுங்கள்.