Published:Updated:

மோகன் ஹீரோவான கதை; சுஹாசினி நடிகையான கதை; மகேந்திரனின் `நெஞ்சத்தைக் கிள்ளாதே' சுவாரஸ்யங்கள்!

நெஞ்சத்தைக் கிள்ளாதே

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’.

Published:Updated:

மோகன் ஹீரோவான கதை; சுஹாசினி நடிகையான கதை; மகேந்திரனின் `நெஞ்சத்தைக் கிள்ளாதே' சுவாரஸ்யங்கள்!

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
எண்பதுகளின் தமிழ் சினிமாவில் யதார்த்த அலை துவங்கியதற்கு பிரதானமான காரணமாக இருந்தவர்களில் ஒருவர் மகேந்திரன். அப்பட்டமான வெகுசன சினிமாவிற்கும் தூய கலை சார்ந்த சினிமாவிற்கும் இடையில் இருந்த இடைவெளியை (Parallel cinema) கைப்பற்ற முயன்ற படைப்பாளி அவர். அதுவரை மிகையுணர்ச்சியுடன் அலறிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை மட்டுப்படுத்தி அதில் கலையமைதியை ஏற்படுத்த முயன்றவர்.

‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் அது அடிப்படையில் வெகுசன திரைப்படம்தான். ஆனால் அதிலிருந்த பல காட்சிக் கோர்வைகள் கதாபாத்திரங்களின் ஆழமான உணர்ச்சிகளை நுட்பமாகவும் அழகியல் உணர்வுடனும் வெளிப்படுத்தின.

மகேந்திரன், ரஜினி
மகேந்திரன், ரஜினி

வேறு வழியின்றி ரஜினிகாந்த்தை பணியிலிருந்து நீக்க வேண்டிய கட்டாயம் சரத்பாபுவிற்கு ஏற்படும். “ரெண்டு கையும் காலும் இல்லைன்னா கூட இந்த காளின்றவன் பொழச்சுக்குவான் சார்” என்று ரஜினி சொல்லும் காட்சியைப் பாருங்கள். அதே சமயத்தில் ‘அண்ணாமலை’ திரைப்படத்தில், "அசோக்.. இந்த நாளை உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ” என்று பஞ்ச் டயலாக்குடன் ரஜினி முழங்கும் காட்சியையும் பாருங்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தின் மூலம் மகேந்திரனின் மேதமையை உணர முடியும்.

தன்னைப் பணியிலிருந்து நீக்கிய அதிகாரியிடம் சவடால் விடுவது போல் பேசினாலும் ‘செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றோமே’ என்கிற சுயபச்சாதாபமும் பணியை இழந்த கழிவிரக்கமும் காளியிடம் கூடவே பெருகி வழியும். இதுதான் ஒரு கதாபாத்திரத்தை இயல்பாக சித்தரிக்கும் முறை.

மகேந்திரனின் ‘உதிரிப்பூக்களை’ எடுத்துக் கொண்டால் ‘முள்ளும் மலரும்’-ஐ விடவும் ஒருபடி உயர்ந்து நிற்கும். அதில் வணிக அம்சங்கள் ஏராளமாக தவிர்க்கப்பட்டிருக்கும். நுண்ணுணர்வும் கலை ரசனையும் உள்ள பார்வையாளனுக்கு இதெல்லாம் புரியும் என்கிற எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்டிருந்த சினிமா அது.
Director Mahendran
Director Mahendran

தன் மாமாவின் வழிகாட்டுதலுடன் பல நல்ல தரமான ஆங்கில சினிமாக்களைப் பார்க்கும் வாய்ப்பு மகேந்திரனுக்கு இளம் வயதில் கிடைத்தது. ஆங்கில சினிமாக்களுக்கும் மிகையுணர்ச்சியுடன் இயங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கும் இருந்த அகண்ட இடைவெளி மகேந்திரனுக்குள் பல கேள்விகளை எழுப்பின. தமிழ் சினிமாவில் இருந்த அபத்தங்கள் பற்றிய விமர்சனங்களும் கசப்புணர்ச்சியும் மகேந்திரனுக்குள் பெருகின. கல்லூரி மாணவனாக இருந்த போது, ஒரு மேடையில் எம்.ஜி.ஆரின் முன்னிலையிலேயே தமிழ் சினிமாவின் மோசமான அம்சங்களைப் பட்டியலிட்டு அவற்றை தம் அபாரமான பேச்சினால் கிழித்து தோரணம் கட்டினார் மகேந்திரன்.

ஆனால் சூழல் காரணமாக பிற்பாடு இதே வெகுசன தமிழ் சினிமாவில் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் மகேந்திரன் இயங்க வேண்டியிருந்தது. ‘ஒரு காலத்தில் தாம் கடுமையாக விமர்சித்த இதே சூழலில் பணியாற்றிய வேண்டியிருக்கிறதே’ என்கிற மனவருத்தத்துடன் அங்கிருந்து பல முறை விலகிப் போகவும் துணிந்தார். ஆனால் காலம் அவரை இயக்குநர் திசையை நோக்கி நகர்த்திச் சென்ற போது தம் ரசனைக்கேற்ப சில நல்ல படைப்புகளை அவரால் உருவாக்க முடிந்தது.

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ மகேந்திரன் இயக்கிய ஐந்தாவது திரைப்படம். இதர அனைத்து திரைப்படங்களையும், சிறுகதை, நாவல்... என்று ஏதாவது ஒரு எழுத்தாளரின் படைப்பை அடிப்படையாக வைத்து இயக்கிய மகேந்திரன், தானே சொந்தமாக கதையை உருவாக்கியது ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படத்திற்கு மட்டும்தான்.

இதன் கதை மகேந்திரனுக்குள் உருவாகியதே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான். தேவி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு கதையைச் சொல்லி ஒப்புதல் வாங்கியிருந்தார் மகேந்திரன். கதையின் படி அதில் புதுமுக நடிகர்கள் அவசியம் என்பதால் அதற்கான தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்த சமயம். எதிலும் திருப்திப்படாமல் மும்பைக்குச் சென்றார் மகேந்திரன். அங்கும் எதுவும் சரிப்படவில்லை.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே

ஹோட்டல் ரூமில் தங்கியிருந்த போது அதிகாலை நேரத்தில் அறையின் ஜன்னலைத் திறந்த பார்த்த போது, ஓர் இளம் பெண் டிராக் சூட் அணிந்து ஓடிக் கொண்டிருக்கும் காட்சி மகேந்திரனின் கண்ணில் பட்டது. அந்தக் காட்சி மகேந்திரனுக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. ‘இன்று உடல் ஆரோக்கியத்திற்காக மனமகிழ்ச்சியுடன் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் பெண், நாளை தன் வாழ்க்கையில் எதற்கெல்லாம் ஓட வேண்டியிருக்குமோ’ என்று சிந்திக்கத் துவங்கினார்.

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படத்தின் கரு, மகேந்திரனுக்குள் உருவாகத் துவங்கிய விதம் இதுதான். தான் இயக்க நினைத்திருந்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டு விட்டு, இந்தக் கதையை விரித்து திரைக்கதையாக்கி தயாரிப்பாளர்களிடம் ஒப்புதல் வாங்கினார் மகேந்திரன்.

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படத்தில்தான் சுஹாசினி அறிமுகப்படுத்தப்பட்டார். பெரிய ஒளிப்பதிவாளர் ஆகும் கனவுடன் சினிமாவில் பணியாற்றிக் கொண்டிருந்த சுஹாசினி ஒரு பிரபலமான நடிகையாக மாறியதை இனிய விபத்து என்றே சொல்லலாம். அது மகேந்திரனின் வழியாக நடந்தேறியது.

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படத்திற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்த போதே ‘ஜானி’ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் மகேந்திரன். அதன் ஒளிப்பதிவாளர் அசோக்குமார். அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்தான் சுஹாசினி.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே

படப்பிடிப்பில் துறுதுறுவென ஓடிக் கொண்டிருந்த சுஹாசினியை பார்த்துக் கொண்டிருந்த மகேந்திரனின் மூளையில் ‘பளிச்’சென்று ஒரு பல்ப் எரிந்தது. ஆம். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தின் நாயகி அவருக்கு கிடைத்து விட்டார். அசோக்குமாரின் மூலமாக சுஹாசினியை நாயகியாக்கும் ஐடியாவை எடுத்துச் சென்றார் மகேந்திரன். ‘முடியவே முடியாது. பெரிய ஒளிப்பதிவாளராக ஆவதுதான் என் லட்சியம். கேமிராவிற்கு முன் நடிகையாக வரவே மாட்டேன்’ என்று இந்த வாய்ப்பை முற்றாக மறுத்தார் சுஹாசினி.

சுஹாசினியின் தந்தையான சாருஹாசன், மகேந்திரனின் குடும்ப நண்பர் என்பதால் அவரின் மூலம் பேசினார் மகேந்திரன். மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின் ‘ஓகே.. இந்த ஒரேயொரு படம் மட்டுமே நடிப்பேன். இடையில் பிடிக்கவில்லையென்றால் விலகி விடுவேன்’ என்கிற நிபந்தனையுடன் வந்த சுஹாசினி, பிறகு பல தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபல நடிகையானதை காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சுஹாசினியின் வெளிப்படையான பேச்சு, துறுதுறுவென இயங்கும் தன்மை, சுதந்திர மனோபாவம் ஆகியவற்றை அவரின் சிறுவயது முதலே கவனித்திருந்த மகேந்திரனுக்கு நெஞ்சத்தைக் கிள்ளாதேயின் ‘விஜி’ பாத்திரத்திற்கு இவர்தான் பொருத்தமானவர் என்று தோன்றியிருக்க வேண்டும். சுஹாசினியின் இயல்புகளை அப்படியே படத்திலும் பொருத்தி விட்டார் மகேந்திரன். முதல் படம் என்கிற தடயமே இல்லாமல் மிக இயல்பாக நடித்த சுஹாசினியின் திறமையைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. ‘நடிப்புத் திறமை’ என்பது அவரின் குடும்ப ரத்தத்தில் ஊறியது போல.

இயல்பான தோற்றமுள்ள ஓர் இளம் ஆண்தான் இந்தப் படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று யோசித்து வைத்திருந்தார் மகேந்திரன். பல நபர்களை முயன்று சரிப்பட்டு வராத நிலையில் 'கோகிலா’ திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு நண்பராக நடித்திருந்தவரின் இயல்பான தோற்றம் மகேந்திரனின் நினைவில் வந்தது. தயாரிப்பு நிர்வாகியின் மூலம் பெங்களூரில் இருந்து அவரை அழைத்து வந்தார். அவர்தான் பின்னாளில் பிரபல நடிகராக விளங்கிய ‘மோகன்’. இதே ஆண்டில் வெளிவந்த ‘மூடுபனி’ திரைப்படத்தில் இவர் ஏற்கெனவே தமிழில் அறிமுகமாகி விட்டாலும், கதாநாயகன் அந்தஸ்திற்கு அறிமுகம் ஆன படம் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே

ஒரு கதாநாயகனுக்குரிய தோற்றம், நடிப்புத் திறமை போன்றவற்றைக் கொண்டிருந்தாலும் பெரும்பான்மையான திரைப்படங்களில் இரண்டாம் நிலையிலேயே நடித்து முடித்தது சரத்பாபுவின் துரதிர்ஷ்டம் எனலாம். இந்தத் திரைப்படத்தில் சுஹாசினியின் பாசமிகு அண்ணனாகவும் கொடுமைக்கார மனைவியால் அவதிப்படும் கணவனாகவும் அற்புதமாக நடித்திருந்தார் சரத்பாபு. இந்தத் திரைப்படத்திற்காக, ‘சிறந்த துணை நடிகருக்கான’ தேசிய விருதை மயிரிழையில் தவற விட்டிருக்கிறார். இந்தத் தகவலை அப்போது அவார்ட் கமிட்டியின் சேர்மனாக இருந்த ஹிர்ஷிகேஷ் முகர்ஜி, சரத்பாபுவிடம் தெரிவித்திருக்கிறார். ‘இதுவே தனக்குப் பெருமையளிக்கும் விஷயம்’ என்று அப்போது மகிழ்ந்தார் சரத்பாபு.

இந்தக் காலக்கட்டத்தில் நடிகர் பிரதாப் போத்தனை சைக்கோ சாயல் உள்ளவராகவும் எக்ஸெண்ட்ரிக்காகவும் நிறையப் படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படத்தில் ஒரு கண்ணியமான கணவனாக மிகவும் அற்புதமானதொரு பாத்திரத்தில் நடித்திருந்தார் பிரதாப். தன்னை நிராகரிக்கும் சுஹாசினியின் மனதை கடைசி வரை புரிந்து கொள்ள முயற்சிக்கும் விதத்தில் ‘மெளனராகம்’ மோகனுக்கு நிகரான பொறுமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வசனங்களையும் உடல்மொழியையும் கொனஷ்டையாக மாற்றுவதில் வெண்ணிற ஆடை மூர்த்தி பிரத்யேகமானவர். சமயங்களில் அவரது இரட்டை அர்த்த நகைச்சுவை எல்லையை மீறியும் செல்வதுண்டு. “தம்ப்ரிரீ..” என்று இதில் அவர் மோகனை விளிக்கும் ஸ்டைலே ‘குபீர்’ என்று சிரிப்பை வரவழைக்கும். இந்தப் படத்திலிருந்துதான் வசனங்களை விசேஷமாக உச்சரிக்கும் அவரது பிரத்யேக பாணி மேலதிகமாக தொடர்ந்தது. ‘உங்களைத் தேடி வரும் ஒரு பணக்கார பெண்மணியின் மூலம் பயங்கர யோகம் அடிக்கப் போகிறது’ என்று சுஹாசினி இவரிடம் அடித்து விடும் ‘டுபாக்கூர்’ ஜோசியத்தை நம்பி இவர் தெருத் தெருவாக அலைந்து மூக்கு உடைபடுவது காமெடியாக இருக்கும்.

நகைச்சுவை நடிகர்களை குணச்சித்திர வேடத்திலும் பயன்படுத்துவது மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்களின் ஸ்டைல். இந்தத் திரைப்படத்தில், தன்னிடம் வேலை செய்யும் சிறுவனுக்கு கேன்சர் வந்திருப்பதை அறிந்து இவர் நெகிழ்ந்து போகும் காட்சிகளில் இன்னொரு ‘வெ.ஆ.மூர்த்தி’ இருப்பதைக் காண முடியும்.
நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே

சரத்பாபுவின் ‘தோழி’யாக வருபவரின் நிதானமான நடிப்பும் அருமையாக அமைந்திருந்தது. சரத்பாபுவிற்கும் இவருக்குள்ளும் இடையேயிருந்த உறவு, மிகவும் கண்ணியமாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

வெ.ஆ.மூர்த்தியின் கேரேஜில் பணிபுரியும் சிறுவனாக நடித்திருக்கும் மனோகர், அவருடைய வெள்ளந்தியான மற்றும் புஷ்டியான தோற்றத்திற்காக அப்போது மிகவும் பாப்புலராக இருந்தார். இதில் குமரிமுத்துவுடன் சேர்ந்து கொண்டு இவர் முதலாளியை கிண்டலடிக்கும் காட்சிகளில் மிகவும் கவர்வார். அதிலும் சுஹாசினியைப் பார்த்து மெலிதாக வெட்கப்படும் காட்சிகள் ரசிக்க வைக்கும் அளவில் இருந்தன. இறுதியில் நம்மைக் கலங்க வைத்து விடுவார்.

சாந்தி வில்லியம்ஸின் அபாரமான நடிப்பை ‘மெட்டி ஒலி’ தொலைக்காட்சித் தொடரில் கண்டு பிரமித்திருக்கிறேன். ஒரு கீழ் நடுத்தரக் குடும்பத்தின் அம்மாவின் குணாதிசயங்களை அப்படியே கண் முன் கொண்டு வந்து விடுவார். இந்தத் திரைப்படத்தில் அவருக்கு வில்லி வேடம். தன் கணவரான சரத்பாபுவை தொடர்ந்து சந்தேகப்பட்டு ‘டார்ச்சர்’ தருவார். தன்னை மதிக்காமல் கிண்டலடிக்கும் சுஹாசினியை இவர் பழிவாங்கும் விதம் மிகக் கொடுமையானது.

ராமாயணத்தில் மந்தரை என்றொரு பாத்திரம் உண்டு. கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தி. ராமர் சிறுவயதில் இவர் மீது விளையாட்டாக மண் உருண்டையை எறிந்து விளையாட, அந்தக் கோபத்தை அப்படியே மனதில் வைத்திருந்த மந்தரை, பல வருடங்கள் கழித்து சமயம் பார்த்து கையேயிடம் சொல்லி ராமனை அரசன் ஆக விடாமல் காட்டுக்கு அனுப்பச் செய்தவர் என்றொரு கதை உண்டு. இதிலும் அப்படியே. தான் குளிக்கும் நீரில் மிளகாய்ப் பொடியை போட்டு குறும்பு செய்த சுஹாசினியின் காதல் வாழ்க்கையை சூழ்ச்சி செய்து பாழடித்து குரூரமாக மகிழ்வார் சாந்தி வில்லியம்ஸ்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே

மனதில் காதலனை சுமந்து கொண்டு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் சிக்கித் தவிக்கும் பெண்கள் தொடர்பாக நிறைய சினிமாக்கள் வந்திருந்தாலும் மகேந்திரனின் இயல்பும் நுட்பமும் கலந்த திரைக்கதைதான் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’வின் ஸ்பெஷல்.

இரண்டு ஓட்டங்கள்!
டிராக் சூட் அணிந்து மகிழ்ச்சியுடன் ஓடும் ஒரு இளம் பெண், சில காலத்திற்குப் பிறகு சேலை அணிந்த படி, கணவனைத் தேடி தவிப்புடன் ஓடுகிறாள். இந்த இரண்டு ஓட்டங்களுக்கு இடையேயுள்ள கதைதான் இந்தத் திரைப்படம்.

படத்தின் ஆரம்பக் காட்சியே அத்தனை இயல்பாக இருக்கும். நிசப்தமாக இருக்கும் அதிகாலையில் சுஹாசினி விழித்தெழுந்து ‘ஜாக்கிங்’ செல்ல தயாராவார். அந்த அமைதியை கலைத்துக் கொண்டு அவரது அண்ணனும் அண்ணியும் போடும் சண்டை இவரது மனநிம்மதியைக் கெடுக்கும். வீட்டில் நிகழும் கொடுமையிலிருந்து தப்பிக்கத்தான் இவர் வெளியே ஓடுகிறார் என்பது சொல்லாமலேயே பார்வையாளர்களுக்கு விளங்கி விடும்.

துடுக்கும் சுதந்திர மனோபாவமும் உள்ள சுஹாசினி, திருமணத்திற்குப் பிறகு பழைய காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் வேறொரு நபராக மாறி விடுவார். தன் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பொய்யை நம்பும் சந்தேகப் பிராணியான மோகனின் மீது இவருக்கு பயங்கர வெறுப்பு இருக்கும். ஆனால் மோகனை முழுமையாக இவரால் வெறுக்கவும் முடியாது. அதுவே பிரதாப்பிடம் இணைவதற்கு தடையாகவும் இருக்கும். இந்த மனத்தத்தளிப்பை பல காட்சிகளில் அருமையாக வெளிப்படுத்தியிருந்தார் சுஹாசினி.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே

போலவே மோகனின் கதாபாத்திரத்தின் டிசைனும் அருமையானது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், தாழ்வு மனப்பான்மையுடன் எப்போதும் புலம்பிக் கொண்டேயிருப்பார். பணக்காரப் பெண்ணான சுஹாசினி, தனக்கு கிடைப்பாரா என்ற தயக்கம் இவருக்குள் இருக்கும். அது காதலாக மாறிய பின்னர், பிரதாப்புடன் சுஹாசினி பழகுவது குறித்த சந்தேகமும் பொஸஸிவ்னஸூம் பெருகி வழியும். தன் வருங்கால மனைவி மீது சொல்லப்பட்ட மோசமான அவதூறை நம்பியும் நம்பாமலும் தத்தளிக்கும் இடங்களில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார் மோகன்.

தான் செய்த பாவத்தைக் கழுவுவதற்காக, பிரதாப் – சுஹாசினி ஜோடியை இணைத்து வைக்க இவர் பிறகு செய்யும் முயற்சிகள் இவரை கண்ணியமானதொரு மனிதராகக் காட்டும். 'மனிதர்கள் எவரும் ஒட்டுமொத்தமாக நல்லவர்களோ, கெட்டவர்களோ.. இல்லை. அவர்கள் சூழ்நிலையின் கைதிகள்’ என்பதை பல காட்சிகளின் வழியாக உணர்த்திச் செல்வதில் இயக்குநர் மகேந்திரனின் அபாரமான திறமை தெரியும்.

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் அசோக்குமார். தனது முதல் படமான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தில், ஒளிப்பதிவு பணிக்காக, கமல்ஹாசனின் பரிந்துரையின் பேரில் பாலுமகேந்திராவுடன் இணைந்தார் மகேந்திரன். ஆனால் அந்தத் திரைப்படத்தின் வெற்றியில் பாலுமகேந்திராவின் பங்களிப்பும் இருந்தது என்பது மாதிரியான பேச்சுக்கள் வெளியில் கிளம்ப இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இந்தக் கூட்டணி ஒரே திரைப்படத்தில் முறிந்தது.

அடுத்த படமான ‘உதிரிப்பூக்களில்’ அசோக்குமாரை கண்டுபிடித்தார் மகேந்திரன். அதன் பிறகு பெரும்பான்மையான மகேந்திரனின் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு அசோக்குமார்தான். இவருக்கும் மகேந்திரனுக்குமான புரிந்துணர்வும் ஒத்திசைவும் தன்னியல்பாக அமைந்தது. பாலுமகேந்திராவைப் போலவே அசோக்குமாரும் இயற்கையின் காதலன். அலங்கரிக்கப்பட்ட ஒளியில் படம் பிடிக்க அவர் பெரும்பாலும் விரும்பியதில்லை. ஒப்பனையில்லாத நடிகர்களின் முகங்களை இயற்கையான ஒளியின் பின்னணியில் பதிவு செய்வதில் விருப்பமுடையவர் அசோக்குமார். இதன் சாட்சியங்கள் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் ஏராளமாக நிறைந்திருக்கும்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே

இந்தத் திரைப்படத்தின் பாடல் வரிசையில் மிகவும் புகழ்பெற்றது. ‘பருவமே.. புதிய பாடல் பாடு’. சுஹாசினியும் மோகனும் டிராக் சூட்டில் அதிகாலைப் பனியின் பின்னணியில் ஓடும் காட்சி உடனே நம் நினைவிற்கு வந்துவிடும். இதன் படப்பிடிப்பு சம்பவங்கள் மிக சுவாரசியமானவை.

அதிகாலை நான்கு மணிக்கு, கடுமையான பனி சூழ்ந்திருக்க பக்கத்தில் இருப்பவரின் முகம் கூட சரியாக தெரியாத சூழல். ‘இப்படியொரு பின்னணியில் ஒளிப்பதிவு செய்தால் சரியாக வருமா?” என்கிற தயக்கம் மகேந்திரனுக்குள் எழ, ‘சரியாக வரும்.. நான் முயற்சிக்கிறேன்’ என்றிருக்கிறார் அசோக்குமார். பதிவு செய்த பிறகு அவற்றை பிரிண்ட் போட்டுப் பார்த்த போது அற்புதமான காட்சிகளாக அவை பதிவாகியிருந்தன. தம் திறமையின் மீது அசாதாரண நம்பிக்கையுள்ள கலைஞர்கள், பரிசோதனை முயற்சிகளுக்கு எப்போதும் தயங்குவதில்லை. அந்த வருடத்தின் ‘சிறந்த ஒளிப்பதிவாளருக்கான’ தேசிய விருதைப் பெற்றார் அசோக்குமார்.

பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம் போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் சமயங்களில் மட்டும் இளையராஜாவின் ஹார்மோனியத்திற்கு பிரத்யேகமான ‘மூட்’ வந்து விடுமோ. என்னமோ.. இது போன்ற இயக்குநர்களின் வித்தியாசமான கதைகளும் விவரிப்பும் அவற்றின் சூழலும் ராஜாவிற்கு நிறைய உத்வேகத்தைத் தந்திருக்கலாம்.

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ ஆல்பத்தின் நான்கு பாடல்களுமே சூப்பர் ஹிட். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த படி முதலில் நினைவிற்கு வரும், ‘பருவமே புதிய பாடல் பாடு’ பாடல் அந்தச் சமயத்தில் மிகவும் ஹிட் ஆகியிருந்தது. பாடலின் இனிமையும், காலடிச் சத்தத்தைக் கூட பின்னணியில் உபயோகித்த புதுமையும், படமாக்கப்பட்ட விதமும் அருமையாக அமைந்திருந்தன. பாடலின் துவக்கத்தில் ‘பாடகர்’ அல்லாத பாலு மற்றும் ஜானகியின் குரல்களைக் கேட்க முடியும்.

இதற்கு அடுத்தபடியாக ‘உறவெனும்’ பாடலை கிளாசிக் தன்மையுள்ள படைப்பு எனலாம். கேட்கும் ஒவ்வொரு முறையும் மனதில் புத்துணர்ச்சியையும் இனிமையான நினைவுகளையும் எழுப்பிச் செல்லும் பாடல் இது. ஜானகி அருமையாகப் பாடியுள்ளார்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே

‘ஏ.. தென்றலே’ என்னும் சோகப்பாடலை பி.சுசிலா உருக்கத்துடன் பாடியிருந்தார். புதுமண உறவில் இடையே நிலவும் விலகலும் கசப்பும் ‘மாண்டேஜ் ஷாட்களாக” இதன் பின்னணியில் விரிந்தன.

‘மம்மி பேரு மாமி’ என்கிற குத்துப்பாடலும் உண்டு. இதைப் பாடியிருந்தவர் ஜானகி என்று ஆல்பத்தின் கவரில் தெளிவாகப் போட்டிருந்தும் என்னால் நம்பவே முடியவில்லை. நண்பர்களிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டேன். குழந்தை, கிழவி போன்ற குரல்களில் ஜானகி பாடியிருப்பதை அறிவேன். ஆனால் இப்படியொரு ரகளையான ஆண் குரலில் ஜானகி பாடியிருப்பது வியக்கத்தக்க அம்சமாக இருந்தது.

டைட்டில் கார்டு போடப்படும் போதே ராஜாவின் இசை ராஜாங்கம் அட்டகாசமாகத் துவங்கி விடுகிறது. சில முக்கியமான காட்சிகளில் அர்த்தபூர்வமான மெளனத்தையும் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் பின்னணி இசையையும் பயன்படுத்தியுள்ளார் இளையராஜா.

ஒரு வரிக்கதை!
‘மனதில் பழைய காதலைச் சுமந்துள்ள புது மணப்பெண்.. பிறகு மனம் மாறி கணவனுடன் இணைகிறாள்’ என்கிற இந்த ஒரு வரிக்கதையை மிக நுட்பமான திரைக்கதையாக வளர்த்தெடுத்துள்ளார் மகேந்திரன்.

மேற்பார்வைக்கு தொடர்பில்லாதது போல் தோன்றினாலும் இதில் வரும் காட்சிக் கோர்வைகளுக்குள் விளக்கப்படாத இணைப்புகள் மிக ஆழமாக இருந்தன.

சந்தேகப் பிராணியாக அமைந்த மனைவி வாய்த்ததால், அண்ணன் அவதிப்படுவதைக் கண்டு வளர்ந்த சுஹாசினி, தன் காதலனும் அதே போல் இருப்பதைக் கண்டு வெறுப்புற்று விலகுகிறாள். ஆனால் பழைய காதலை மறக்க முடியாத காரணத்தால் புது வாழ்க்கையில் நுழைய முடியாமல் தத்தளிக்கிறாள். ‘கீச்’ என்னும் மெக்கானிக் ஷெட் சிறுவனின் மரணம் அவளைப் பாதிக்கிறது. வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துகிறது. பழைய காதலனும் தன் பங்கிற்கு தன் வாழ்க்கையை மேற்கோள் காட்டி அவளின் பிழையை இடித்துரைக்கிறான். இந்த இணைப்புகளை வைத்து அழகான கோலமாக்கியுள்ளார் மகேந்திரன்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே

சிறந்த தமிழ் படம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த ஆடியோகிராபி ஆகிய மூன்று பிரிவுகளில் இந்தத் திரைப்படம் தேசிய அளவிலான விருதைப் பெற்றது. தமிழ்நாடு அரசு வழங்கிய விருதுப்பட்டியலில் ‘சிறந்த நடிகை’ பிரிவில் சுஹாசினி விருது பெற்றார்.

மகேந்திரன் இயக்கிய சிறந்த திரைப்படங்களின் வரிசையில் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ ஒரு முக்கியமான படைப்பு. 12, டிசம்பர் 1980 அன்று வெளியான இந்தத் திரைப்படம் மகத்தான வெற்றியைப் பெற்றது. சென்னை நகரின் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சாதனையைப் படைத்தது.

நல்ல திரைப்பட முயற்சிகளை தமிழக மக்கள் பெரும்பான்மையான சமயங்களில் கைவிட மாட்டார்கள் என்பதற்கான சாட்சியம் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’. ஆண் – பெண் உறவுச்சிக்கல்களை மிக நுட்பமாகவும் ஆழமாகவும் பதிவு செய்யும் படைப்புகளுக்கு காலம் தாண்டியும் வரவேற்பு இருக்கும் என்பதை நிரூபிக்கிறது, இந்தத் திரைப்படம். இன்று பார்த்தாலும் இந்தத் திரைப்படத்தின் முக்கியத்துவம் விளங்குமளவிற்கு அற்புதமாக இயக்கியுள்ளார் மகேந்திரன்.

இந்தத் தொடரில் அடுத்து எந்தப் படத்தைப் பற்றி பார்க்கலாம்? கமென்ட்ஸ் ப்ளீஸ்!