சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தின் அதிகாரியை சந்திக்கச் சென்றேன். அதுவொரு மழைக்காலம். கையில் இருந்த குடை சற்று ஈரத்துடன் இருந்ததால், அறையின் வெளியே வைத்து விட்டுச் செல்லலாமா வேண்டாமா என்று தோன்றியது. ‘யாராவது லவட்டிக்கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது’ என்கிற மிடில் கிளாஸ் மனோபாவ குழப்பமும், அப்படி முன்னர் தொலைத்த சங்கடமான அனுபவங்களும் நினைவுக்கு வர, குடையைக் கையிலேயே ஒரு மாதிரி மறைத்து எடுத்துச் சென்றேன்.
சந்திக்கச் சென்றவருக்கு ‘வணக்கம்’ சொல்லும்போது, கையிலிருந்த குடை அவர் கண்ணில் பட்டுவிட “என்னங்க இது... பாக்யராஜ் படத்துல வர்றா மாதிரி வந்திருக்கீங்க” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அப்போதைக்கு அதை நான் மறந்து விட்டாலும், அவர் எதனால் அப்படி கேட்டிருக்கக்கூடும் என்பதற்குக் காரணம், ‘அந்த 7 நாட்கள்’ படத்தைப் பிறகு பார்க்கும் போது கிடைத்தது.

அதில் தூக்கிப் பிடித்த வேட்டியும் இன்னொரு கையில் பெட்டியும், கையிடுக்கில் குடையுமாக நமக்கு அறிமுகமாவார், பாக்யராஜ். இந்தப் படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், ‘கையில் குடையை இடுக்கிக்கொண்டு வருகிற ஒரு சராசரி நபரின் சித்திரம், பாக்யராஜின் வழியாக அந்த அதிகாரியின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டிருக்கிறது. இது, ஒருவகையில் பாக்யராஜின் வெற்றி எனலாம்.
சினிமா ஹீரோ என்றாலே, அவர் தரையிலிருந்து இரண்டடி மேலே மிதக்க வேண்டும் என்கிற மரபு நீண்ட காலமாக உண்டு. பெண்களை உடனே கவரும் அழகு, எதிரிகளை அதிரடியாக வீழ்த்தும் வீரம், ஆபத்திலிருந்து ஏழைகளைக் காக்கும் அவதார சாகசம், தாயின் காலைத் தொழும் பாசம், காதலில் காட்டும் கண்ணியம் என்று பல கல்யாண குணங்கள் உண்டு. ஒருவகையில் இவையெல்லாம் ஹீரோவுக்கு இருக்கவேண்டிய அடிப்படையான இலக்கணங்கள்தான் என்றாலும், நம் யதார்த்த வாழ்விலிருந்து முற்றிலும் விலகிப்போனவர்களாகவே இவர்கள் எப்போதும் இருந்தார்கள். ‘நம்மைக் காப்பாற்ற எவராவது வர மாட்டாரா’ என்று ஒவ்வொரு சராசரி நபருக்குள்ளும் எழும் ஏக்கத்தை இவர்கள் நிழல் வடிவத்தில் தீர்த்துவைத்தார்கள். எனவே, மகத்தான ஆதரவைப் பெற்றார்கள்.
ஆனால், நம்மைப் போன்ற ஒரு சராசரியான தோற்றமுள்ள ஓர் ஆசாமி, அவனுடைய வாழ்வியல், அற்பமான பிரச்னைகள், சுகதுக்கங்கள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் மனிதர்கள், தமிழ் சினிமாவில் பதிவாவதற்கு நெடுந்தூரம் கடந்து வர வேண்டியிருந்தது. அப்படி, சாமான்யர்களின் நாயகனாகத் திரையில் தோன்றியவர்களில் முக்கியமானவர், பாக்யராஜ்.
தான் இயக்கும் 'புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தில் பாக்யராஜை கதாநாயகனாகப் போட பாரதிராஜா முடிவுசெய்தபோது, பாக்யராஜுக்கே அது அதிர்ச்சிதான். இன்னொருவருக்கும் அது பேரதிர்ச்சியாக இருந்தது. அது, பாரதிராஜாவின் நண்பர் இளையராஜா. பாக்யராஜை தொடக்க காலத்திலிருந்தே பார்த்து வந்ததால், “இப்படியொரு சாதாரண தோற்றமுள்ளவரை ஹீரோவாகப் போட்டால் படம் ஓடாது" என்கிற முன்அபிப்ராயம் இளையராஜாவுக்கு இருந்தது.
ஆனால், படம் வெளியாகி வெற்றிபெற்ற பிறகு, பாக்யராஜ் பிரபலமான இயக்குநராகவும் நடிகராகவும் வளர்ந்த பிறகு, "ஒருவரின் எளிமையான தோற்றத்தைவைத்து மதிப்பிடும் தவற்றைச் செய்துவிடக்கூடாது. அதை நான் செய்தேன்” என்று பாக்யராஜை முன்னிட்டு தன் தவறான அபிப்ராயத்தை பொதுமேடையிலேயே பெருந்தன்மையுடன் வாக்குமூலம் தந்தார் இளையராஜா.

‘பார்ப்பதற்கு எளிமையான, வெள்ளந்தியான தோற்றம், இதில் கண்ணாடி வேறு, திடகாத்திரமான உடம்பும் கிடையாது, நடனமும் ஆட வராது. அசத்தலாக சண்டையும் போட வராது...' இப்படி, தமிழ் சினிமாவின் ஹீரோவிற்கான எந்தவொரு இலக்கணமும் இல்லாதவராக இருந்தாலும், அபாரமான கதை ஞானம், அதை சுவாரஸ்யமான திரைக்கதையாக உருமாற்றுவது, துளியும் சலிப்பு ஏற்படாத காட்சிகளாக வளர்த்தெடுப்பது என்று ‘ஸ்கிரிப்ட் ரைட்டிங்’ ஏரியாவில் கில்லியாக இருந்ததால் பாக்யராஜின் வெற்றி சாத்தியமாயிற்று.
படம் முழுவதும் தொடர்ந்துவரும் இயல்பான நகைச்சுவை, அதில் பொருத்தமான இடங்களில் கச்சிதமாக இணைக்கப்பட்ட சென்டிமென்ட், நகைச்சுவையில் உறுத்தாமல் கலக்கப்பட்ட பாலியல் நெடி, (சமயங்களில் இது ஓவர் டோஸாகவும் ஆகி விடுவதுண்டு) போன்றவற்றை பாக்யராஜின் பொதுவான திரைக்கதை பாணி எனலாம். இந்தக் கலவைதான் அவரது பல வெற்றிப்படங்களின் சூத்திரம்.
பாக்யராஜின் கிராஃப் உச்சத்தில் இருந்தபோது, அவருக்கு ரசிகர்களின் கூட்டத்தைவிடவும் ரசிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம். அவருடைய திரைப்படங்களுக்கு, பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.
ஹீரோத்தனம் உள்ள ஆண்களைத்தான் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும் என்பது ஒருவகையில் கற்பனை. பெண்கள் எப்போதுமே யதார்த்தத்தை மட்டுமே பிரதானமாக நோக்குபவர்கள். அந்த வகையில், பாக்யராஜின் இயல்பான தோற்றமும் நகைச்சுவையும், கிளுகிளுப்பான விஷயங்களை உறுத்தாமல் சாமர்த்தியமாகச் சொல்லும் திறமையும், பெண்களுக்கு பிடித்துப்போனதில் ஆச்சர்யமில்லை.

நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு விநோதமான சம்பவம்தான், இதன் திரைக்கதைக்கு அடிப்படை என்று சொல்லப்படுகிறது. ‘தான் விரும்பி திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணுக்கு, முன்னாள் காதல் இருப்பதை அறியும் சந்திரபாபு, மிகவும் துயரத்துடன் மனதைத் தேற்றிக்கொண்டு, தன் மனைவியை அவரது காதலரிடமே சேர்த்துவைத்தார்’ என்பதே அந்தச் சம்பவம். இது தொடர்பான விவரங்களைப் பார்ப்போம்.
குடும்ப நண்பர்களின் சந்திப்பு ஒன்றில் ஷீலா என்கிற இளம்பெண்ணைப் பார்க்கிறார் சந்திரபாபு. பார்த்தவுடனேயே மிகவும் பிடித்துவிடுகிறது. ஷீலாவின் தாய், ஓர் ஆங்கிலோ – இந்தியர். ஷீலாவின் தாத்தா, சாமிக்கண்ணு வின்சென்ட், தமிழ் சினிமாவின் முன்னோடி. வெளிநாட்டிலிருந்து படச்சுருள்களை வரவழைத்து ஊர் ஊராகச் சென்று திரையிட்டவர்.
சந்திரபாபு திரையுலகில் புகழ்பெற்றவர் என்பதால், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் இந்தத் திருமணம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் முக்கியப் பிரபலங்கள் வருகிறார்கள். தேனிலவிற்குச் சென்று திரும்பியும்கூட, தன் மனைவி தன்னிடம் பிரியமாக இல்லாததைக் கண்டு குழப்பமடைகிறார் சந்திரபாபு. மெல்ல விசாரிக்கும்போது, அந்த ரகசியத்தைச் சொல்கிறார், ஷீலா.
சந்திரபாபுவின் கண்ணியமும் நல்லியல்பும் ஷீலாவிற்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், ஷீலாவின் தற்கொலை முயற்சியும் நடந்து அவர் காப்பாற்றப்படுகிறார். இதனால் தன் மனதைத் தேற்றிக்கொண்டு ஒரு முடிவுக்கு வரும் சந்திரபாபு, திருமணத்தில் வந்த அத்தனை அன்பளிப்புகளையும் ஷீலாவிடம் அளித்து, இங்கிலாந்திற்கு அனுப்பிவைக்கிறார். பிறகு, நண்பரின் மூலம் நடந்த கடிதப்பரிமாற்றங்களின் மூலம், ‘எனக்கான ஆண் துணையைத் தேடிக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன், பாபு…” என்று ஷீலா எழுதிய கடிதத்தினால் ஆறுதல் அடைகிறார். என்றாலும் ஷீலாவை அவரால் இறுதிவரை மறக்க முடியவில்லை.
இதுதான் சந்திரபாபுவின் திருமண வாழ்க்கை சில நாட்களிலேயே உடைந்து போனதின் பின்னணி.

‘அந்த ஏழு நாட்கள்’ கதைப் பின்னணியும் இதுதான். பணக்காரராக இருக்கும் ஒரு மருத்துவரின் மனைவி பிரசவத்தில் இறந்து விடுகிறார். அவருக்கு ஒரு மகள் உண்டு. படுத்த படுக்கையாக இருக்கும் தாயின் வற்புறுத்தல் காரணமாக இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், முதலிரவின்போது மணமகள் விஷமருந்தி மயங்கியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
மெல்ல விசாரிக்கும்போது, மனைவிக்கு இருக்கும் முன்னாள் காதல் பற்றிய விவரம் தெரியவருகிறது. குடும்பத்தினரின் கட்டாய வற்புறுத்தல் காரணமாக இந்தத் திருமணம் நடந்திருப்பதை அறிய முடிகிறது.
“மரணப்படுக்கையில் இருக்கும் என் தாயின் நிம்மதிக்காகத்தான் நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். அவர் அதிகபட்சம் ஒரு வாரம்தான் உயிரோடு இருப்பார். அதுவரைக்கும் இந்த வீட்டில் நீ ‘மனைவி’யாக நடி. அதற்குள் உன் காதலனைத் தேடி அவருடன் உன்னை சேர்த்துவைக்கிறேன்!”என்று கண்ணியத்தோடு வாக்குறுதி தருகிறார் மருத்துவர்.
இறுதியில், காதலர்கள் சேர்ந்தார்களா என்பதே கிளைமாக்ஸ். ஒரு வாரத்தில் நிகழும் சம்பவங்கள் என்பதால், படத்தின் தலைப்பு ‘அந்த ஏழு நாட்கள்’.

‘திருமணத்திற்குப் பிறகு மனைவிக்கு இருக்கும் முன்னாள் காதலைப் பற்றி கணவன் அறிந்துகொள்வது, அதற்காக ஆத்திரப்படாமல் கண்ணியத்துடன் காதலர்களை இணைத்து வைக்க கணவன் முடிவெடுப்பது, ஆனால் நிச்சயிக்கப்பட்ட திருமணமே பிறகு வெல்வது’ என்பதின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைக்கதை, தமிழ் சினிமாவிற்குப் புதிதான விஷயமல்ல.
எண்பதுகளின் காலக்கட்டத்தையொட்டி பார்த்தால், 1980-ல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’வை இதன் முன்னோடி திரைப்படம் எனலாம். மணிரத்னத்தின் ‘மெளனராக'மும் இதே சாயலைக் கொண்டதுதான். அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் கதையும் ஏறத்தாழ இதுவே. இதில், கணவனுக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் இருந்தால் அது எப்படியிருக்கும் என்று கூடுதல் பரிமாணத்தை இணைத்தார் அட்லி.
ஒரே மாவு, வெவ்வேறு டைப் தோசைகள் போல ஒரே மாதிரியான கதையின் சாயலைக் கொண்டிருந்தாலும், அவரவர்களின் தனிப்பட்ட கையாளுதல் பாணியின் காரணமாக அவை வெற்றி பெற்றன. இந்த வரிசையில், ‘அந்த ஏழு நாட்களின்’ திரைக்கதையும் பிரத்யேகமானது.
ஒரு திருமணக் காட்சியோடுதான் ‘அந்த ஏழு நாட்கள்’ படம் துவங்குகிறது. நாயகியான அம்பிகாவிற்கு மணமகளுக்கான அலங்காரம் செய்யப்படும் காட்சி. ஆனால், எந்தவொரு பின்னணி இசையும் இல்லாமல் மெளனமாக அது நிகழும். அந்தத் திருமணத்தில் மணமகளுக்கு துளியும் விருப்பமில்லை, அவளைப் பொறுத்தவரை அதுவொரு துன்பியல் சம்பவம் என்பதை படத்தின் தொடக்கத்திலேயே பார்வையாளர்களுக்கு நுட்பமாக உணர்த்தி விடுவார், இயக்குநர் பாக்யராஜ்.
விருப்பமில்லாத திருமணம், தற்கொலை முயற்சி, மருத்துவரின் தாய் மரணப்படுக்கையில் உள்ள காட்சி என்று படம் ஒருமாதிரி சோகத்துடன் தொடங்கினாலும், அம்பிகா விவரிக்கும் ஃப்ளாஷ்பேக் வழியாக ‘பாக்யராஜும் காஜா ஷெரீப்பும்’ திரைக்கதைக்குள் வந்த பிறகு, காமெடி அமர்க்களங்களுக்கு குறைவே இருக்காது. பிறகு, அட்டகாசமான நகைச்சுவைகளோடு ராக்கெட் வேகத்தில் படம் பயணிக்கும்.

படத்தின் திரைக்கதையை மிகவும் ஆய்ந்து உருவாக்குவதைப் போலவே கதாபாத்திரங்களின் தன்மையையும் மிக கச்சிதமாக சிருஷ்டிப்பதில் பாக்யராஜ் வல்லவர். படம் முழுவதும் கதாபாத்திரத்தின் தன்மை உடையாமல் பார்த்துக்கொள்ளுமாறு திரைக்கதை எழுதப்பட்டிருக்கும்.
அந்த வகையில் ‘அந்த ஏழு நாட்களின்’ பாத்திரங்கள் அனைத்துமே தனித்தன்மை உடையவை. ‘ஒரு வல்லிய மியூசிக் டைக்ரடாகும்’ கனவுடன் மதராஸ் பட்டினத்திற்குள் நுழையும் ‘பாலக்காட்டு மாதவன்’ அடிப்படையில் நேர்மையானவனாகவும் சுயமரியாதையுள்ளவனாகவும் இருப்பான். அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாத சூழலிலும்கூட தன் கெளரவத்தை விட்டுத்தர மாட்டான்.
மலையாளத் திரைப்படங்களில், ‘தமிழ்’ கதாபாத்திரங்கள் மோசமாகவும் மலினமாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள் என்கிற புகார் தமிழர்களின் தரப்பில் உண்டு. ஆனால், தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கில்லை. மலையாளப் பெண் பாத்திரங்களை அரைகுறையான ஆடையோடு நிற்கவைத்து மலினமான நகைச்சுவைகளை உருவாக்குவதும், அவர்களை எளிதில் சோரம் போகிறவர்களாக சித்திரிக்கும் அதே தவற்றை தமிழ் இயக்குநர்களும் செய்திருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், ஒரு கண்ணியமான மலையாளியின் சித்திரத்தை முன்பே உருவாக்கிவைத்த பாக்யராஜை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு கட்டத்தில், “ஏன் ஆசானே... அண்ணியோட காதலை நீங்க புரிஞ்சுக்கவே மாட்றீங்க. அவங்களை இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணிக்கலாம்ல?" என்பது போல் சீடன் கோபி கேட்கும்போது, ‘எடோ கோபி... நான் ஒரு மலையாளி. இப்படி வந்த இடத்துல லவ் பண்ணி திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அது அத்தனை மலையாளிகளையும் பாதிக்கும்” என்று கண்ணியமானதொரு விளக்கம் சொல்வார் ‘பாலக்காட்டு மாதவன்’.

பாலக்காட்டு மாதவன் ஒரு நேர்மையான பேர்வழி என்றால், அதன் எதிர்முனையில் அவனது சீடனாக வரும் கோபி என்கிற சிறுவன், சூழலுக்குத் தகுந்தபடி உடனே மாறும் குணம் கொண்டவன். அவனைக் குறை சொல்லியும் உபயோகமில்லை. பசிக்கொடுமையில் சில தவறுகளைச் செய்துவிடுவான். பாலக்காட்டு மாதவனின் நேர்மைக்கும் கோபியின் தில்லுமுல்லுகளுக்கும் இடையில் நிகழும் போராட்டக் காட்சிகள் நகைச்சுவைத் தன்மையோடு படைக்கப்பட்டிருக்கும்.
இருவரிடையேயும் முரண்கள் இருந்தாலும், குரு – சீடன் என்கிற உறவு இந்தத் திரைப்படத்தில் நெகிழ்ச்சியாகக் காண்பிக்கப்பட்டிருக்கும். "ஆசான் பசியோட இருந்தாலும் எனக்கு சாப்பாடு வாங்கித்தர்றதுல குறை வைக்க மாட்டாரு” என்று ஓரிடத்தில் சொல்வான் கோபி. இதுபோலவே இன்னொரு இடத்தில் ஆசானை விட்டுட்டு சாப்பிட மறுப்பான்.
சந்தனக் கலர் ஜிப்பா, நெற்றியில் சந்தனம், கையில் தொங்கும் ஹார்மோனியம், இன்னொரு கையிடுக்கில் குடை என்று வேட்டியை தூக்கிப்பிடித்தபடி ரசிக்கும்படியான தோரணையில் இருப்பார் பாக்யராஜ். இவரும் சீடன் கோபியும் அறிமுகமாகும் காட்சியின் பின்னணியில், ஒருவர் எருமை மாட்டை பிடித்து இழுத்துச் செல்கிறபடியான காட்சி பதிவாகியிருப்பது காமெடியாக இருக்கும்.
இவர்கள் வாடகைக்கு வீடு தேடிச் செல்வார்கள். ஆனால், இவர்களின் தோற்றத்தைப் பார்த்து தவறாக நினைத்துக்கொள்ளும் அம்பிகா, ‘பிச்சைக்காரர்கள்’ என்று நினைத்து சாப்பாடு எடுத்து வர, அதை கோபி அள்ளி வாயில் போட்டுக்கொள்வதும் அதற்காக பாக்யராஜ் சங்கடப்பட்டு, பிறகு அவனை ‘சவட்டிக் களைவதும்’ விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் காட்சி. இவர்களின் காமெடி கலாட்டா படம் முழுவதும் ரசிக்கவைப்பது போல் அமைந்திருக்கும். ஒரு பிச்சைக்காரனைப் போல ‘ஹீரோ என்ட்ரி’ நடப்பதெல்லாம் தமிழ் சினிமாவில் மிக அபூர்வம்.

அம்பிகாவிற்கு பாக்யராஜின் மீது காதல் உருவாவதே, அவரது அப்பாவித்தனத்தைப் பார்த்துதான். கூடவே, அவர் வறுமையிலும் நேர்மையுடன், தன்மானத்துடன் இருப்பதையும் உள்ளூற ரசிப்பார். அம்பிகா, தன் காதலை பாக்யராஜிடம் தெரிவிக்க முயலும் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போவதும் ‘மியூசிக் ஆர்வம்’ தவிர வேறெதிலும் ஆர்வம் இல்லாமல் ‘வாத்து’தனமாக இந்தக் காதலை பாக்யராஜ் எதிர்கொள்வதும் ரசிக்கவைக்கும் காட்சிகள்.
ஒரேயொரு உதாரணம். மேலே கூரை இல்லாத ஒரு பாத்ரூமில் குளிக்கத் தயாராவார் அம்பிகா. மேலே மாடியில் பாக்யராஜ் சூர்ய நமஸ்காரம் செய்துகொண்டிருப்பார். ‘தான் குளிக்கும் அழகை’ பார்த்தாவது இந்தாளுக்கு நம் மீது காதல் வருகிறதா என்று பார்க்கலாம்’ என்று... 'ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலை ஹம் செய்வார் அம்பிகா.
அம்பிகாவையே பாக்யராஜ் உற்றுப் பார்க்கும்போது, ‘ஆள் மாட்டினான்’ என்பது போல் முதலில் தோன்றும். ஆனால் பாக்யராஜோ, அம்பிகா செய்த ஹம்மிங்கை கவனமாகக் கேட்டு "அப்படி பாடக்கூடாது” என்று அதில் திருத்தம் சொல்வதைக் கேட்டு தலையில் அடித்துக்கொள்வார் அம்பிகா. இப்படி ரகளையான காமெடிகள் படம் முழுவதிலும் நிறைந்திருக்கும்.
“எடோ கோபி, பாத்ரூமுக்கு தாழ்ப்பாள் இல்லா. நான் குளிக்கப் போறேன்... யாரும் வராம பார்த்துக்கோ” என்று கோபியை எச்சரித்துவிட்டு குளிக்கப் போவார் ஆசான். ஆனால், சாலையில் கேட்கும் சாவு மேளச் சத்தத்தைக் கேட்டு தன்னிச்சையாகக் குதூகலமடைந்து ஆடப் போய்விடுவான் கோபி. இந்த அசந்தர்ப்பமான சூழலில், ஆசானை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்துவிடுவார் அம்பிகா. அதிர்ச்சியடையும் பாக்யராஜ், கோபியை தேடிச்சென்று நையப் புடைப்பார்.

இந்த இடத்தில் ஒரு சின்ன லாஜிக் பொருத்தத்தை கவனிக்கலாம். கோபி ஆசானிடம் ‘டோலக்’ வாசிக்கும் பையன். எனவே, அவனுக்கு இயல்பாகவே தாளத்தின்மீது அடக்க முடியாத ஆர்வம் எழுந்து ஆடச்சென்றான் என்றுகூட புரிந்துகொள்ளலாம்.
பாக்யராஜ், ‘பாலக்காட்டு ஆசாமி’யாக மலையாளத்தைப் படம் முழுக்க பேசி நடிக்க மிகவும் மெனக்கெட்டிருப்பார். என்றாலும் வசனங்களின் இடையில் தமிழ் வார்த்தைகளும் வந்து இயல்பாக விழுந்துவிடும்.
பாக்யராஜ் மற்றும் காஜா ஷெரீப்பின் என்ட்ரந்தொடங்கி, படத்தின் கிளைமாக்ஸ் வரை துளிகூட சலிப்பின்றி இருக்க, பாக்யராஜின் அசாதாரணமான திரைக்கதை ஞானம்தான் காரணம். படத்தில் நிறைய இடத்தில் நிறைய நகாசு வேலைகளைச் செய்திருப்பார். சில உதாரணக் காட்சிகளைப் பார்ப்போம்.
பாக்யராஜ் வறுமையில் சிரமப்படுவதைப் பார்த்து, தன் வளையலை அடமானம்வைத்து மணியார்டர் அனுப்புவார் அம்பிகா. அதைக் கண்டுபிடித்துவிடும் பாக்யராஜ் சீடனிடம் விசாரிக்க, அவன் மழுப்புவான். அவனை ஓங்கி கன்னத்தில் அறைவார். கட் செய்தால், வட்டிக்கடையின் வாசலில் சென்று அவன் விழுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் படம் கூர்மையான மற்றும் நகைச்சுவையான வசனங்களால் நிறைந்திருந்தாலும், சில இடங்களில் வசனம் இல்லாமலேயே காட்சிகளின் தன்மை வலிமையாக வெளிப்பட்டிருக்கும். மரணப்படுக்கையில் இருக்கும் தாய்க்காகத்தான் ராஜேஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் என்பது ஆரம்பத்தில் வசனம் இல்லாமலேயே பார்வையாளனுக்கு உணர்த்தப்பட்டுவிடும்.
அதுபோலவே, அம்பிகாவிடம் பாக்யராஜ் தன் காதலை உறுதிப்படுத்தும் காட்சியில், வசனமே இருக்காது. வளையலை அம்பிகாவின் கையில் மாட்டிவிடுவதன் மூலம், இது அழுத்தமாக உணர்த்தப்பட்டுவிடும்.
இன்னும் ஒரேயொரு உதாரணக் காட்சியை மட்டும் சொல்லிவிடுகிறேன்.
ராஜேஷ் வீட்டுக்கு முதன்முறையாக வருகிறார், பாக்யராஜ். காத்திருக்கும் நேரத்தில் வரவேற்பறை மேஜையின்மீது ஒரு நிர்வாணமான பெண்ணின் பளிங்குச் சிலை இருப்பதை சிறிய திடுக்கிடலுடன் பார்க்கிறார்.

இயல்பிலேயே கூச்ச சுபாவமுள்ள பாக்யராஜ், அக்கம் பக்கம் பார்த்துவிட்டு சிலையைத் திருப்பிவைக்கிறார். ஆனால், அதன் பின்பக்கம் தெரிகிறது. இன்னமும் ஜெர்க் ஆகும் பாக்யராஜ், சிலையை எடுத்து மேஜையின் அடியில் ஒளித்துவைத்து விடுகிறார்.
நன்றாகக் கவனியுங்கள்... அடுத்து ஒரு உணர்ச்சிகரமான, படத்தின் போக்கைத் தீர்மானிக்கப்போகும் கிளைமாக்ஸ் வரப்போகிறது. பார்வையாளர்கள் நகத்தைக் கடித்துக்கொண்டு பரபரப்புடன் முடிவை அறிய ஆவலாக இருப்பார்கள்.
ஆனால், ராஜேஷுக்காகக் காத்திருக்கும் அந்த சில நொடிகளில் கூட ஒரு அபாரமான நகைச்சுவை பிட்டை இணைத்துவிடுகிறார். பாக்யராஜின் திரைக்கதை மேதைமைக்கு இவற்றை சான்றாகச் சொல்ல முடியும்.
‘கண்ணியம்’ என்பதற்கு உதாரணப் பாத்திரமாக ராஜேஷின் பாத்திரம் அமைந்திருக்கும். இதை மிகச் சிறப்பாகக் கையாண்டிருப்பார் ராஜேஷ். இந்தப் படத்தின் வெற்றிக்கு ராஜேஷின் சிறந்த நடிப்பும் ஒரு காரணம் எனலாம். டைட்டில் கார்டில்கூட பாக்யராஜ் மற்றும் ராஜேஷின் பெயர்கள் ஒன்றாக வரும்.
இந்தப் படத்தின் கூடுதல் சுவாரஸ்யம் என்று கல்லாப்பெட்டி சிங்காரத்தைச் சொல்ல வேண்டும். வீட்டு உரிமையாளராக, பாக்யராஜிடம் இவர் ஜபர்தஸ்து செய்யும் காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யம். பணக்கார வீட்டுச் சம்பந்தம் தொடர்பாக ஒருவர் வந்து விவரங்களைச் சொல்லும்போது அந்தச் சமயத்தில் இவரது உடல்மொழி மிக இயல்பாக இருக்கும்.
இந்தப் படத்தில் உதவி இயக்குநர்களில் ஒருவராக இருந்த ஆர்.பாண்டியன், பூக்கடைக்காரராக ஒரு காட்சியில் தலையைக் காட்டி விட்டுப் போவார். அவர்தான் பின்னாளில் ‘ஆர்.பாண்டியராஜன்’ என்கிற புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகராக ஆனார். கெச்சலான தோற்றத்தில் அப்போதைய பாண்டியராஜனைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

அம்பிகாவும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார். பாக்யராஜிடம் தன் காதலைத் தெரிவிக்க இவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் அவை தோற்றுப்போகும் பரிதாபங்களும் அப்போது இவர் தரும் முகபாவங்களும் சிரிப்பை அள்ளும். அதுபோலவே, ராஜேஷிடம் தன் கதையைச் சொல்லும் காட்சியிலும் நன்றாகவே நடித்திருப்பார்.
அம்பிகாவின் நடிப்பு தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான தகவலும் உண்டு. கிளைமாக்ஸ் காட்சியின்போது அம்பிகாவுக்கு சரியாக அழுது நடிக்க வரவில்லையாம். பாக்யராஜுக்கு அந்தக் காட்சியை தன்னால் சரியாக இயக்க முடியுமா என்கிற சந்தேகம் வந்திருக்கிறது. குருநாதரைப் போல நடிகையின் கன்னத்தில் சட்டென்று அறைந்து நடிப்பை வாங்கும் தைரியமோ அதற்கான இயல்போ பாக்யராஜிடம் கிடையாது.
எனவே, கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் நீங்கள் இயக்கித் தாருங்கள் என்று குருநாதரிடம் கேட்டிருக்கிறார் பாக்யராஜ். அதற்கு பாரதிராஜா தந்த பதில் மிகவும் கண்ணியமானது. “என்னய்யா... இத்தனை அருமையா ஸ்கீரின்ப்ளே பண்ணியிருக்கே... இத்தனை சீன் எடுத்திருக்கே... இதையா உன்னால செய்ய முடியாது. இப்ப நான் வந்தா, ‘ஏதோ பாரதிராஜா உள்ளே வந்ததால்தான் இந்தப் படம் வெற்றியடைந்தது’ மாதிரி சிலர் பேச ஆரம்பிச்சுடுவாங்க. இதற்கான முழு கிரெடிட்டும் உனக்குத்தான் வரணும். உன்னால முடியும். போய் எடு" என்று மறுத்து, தைரியம்கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
படத்தில் வருவதைப்போன்ற அற்புதமான குரு – சீடன் உறவு இது.
‘பாலக்காட்டு மாதவனுக்கு’ அவருடைய சங்கீதத்தை விட்டால் உலக நடப்புகள் எதுவுமே அவ்வளவாகத் தெரியாது. அத்தனை வெள்ளந்தியானவர். இந்தப் படத்தின் இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனையும் இன்னொரு ‘பாலக்காட்டு மாதவன்’ எனலாம். இசையைத் தவிர வேறெதுவும் தெரிந்துவைத்திருக்காத விஸ்வநாதனை, கண்ணதாசன் பல முறை கிண்டலடித்திருக்கும் ரகளையான சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

எண்பதுகளில், இளையராஜா தவிர்க்கவே முடியாத பிரமாண்டமாக உருவாகிவந்தாலும், ஓர் இயக்குநராக பாக்யராஜ் இளையராஜாவோடு வேறு பல இசையமைப்பாளர்களையும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். பாக்யராஜின் நெருங்கிய தோழர் கங்கை அமரன், சங்கர் கணேஷ் ஆகியோரும் இவரின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். ‘முந்தானை முடிச்சு’ படத்தின் பாடல் உருவாக்கத்தின்போது, இளையராஜாவோடு ஏற்பட்ட சிறு மனஸ்தாபம், பிறகு தானே இசையமைப்பாளர் ஆக பாக்யராஜ் முடிவுசெய்த விநோதங்களும் நடந்தேறின.
‘அந்த ஏழு நாட்களில்’ உள்ள ஐந்து பாடல்களுமே இனிமையானவை. கதைப்படி நாயகன் மலையாளி என்பதால், அந்த வாசனையோடு கூடிய ‘சப்த ஸ்வரதேவி உணரு’ என்று மலையாள வரிகளில் தொடங்கும் பாடல், பிறகு ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்று தமிழ் வரிகளுக்கு மாறுவது அழகு.
‘எண்ணி இருந்தது ஈடேற’ என்கிற பாடலை மலேசியா வாசுதேவன் + வாணி ஜெயராம் கூட்டணி அருமையாகப் பாடியிருக்க, இதர பாடல்களை ஜெயச்சந்திரன் + ஜானகி கூட்டணி பாடியிருந்தது. ஜேசுதாஸை நினைவுபடுத்தும் ஜெயச்சந்திரனின் அருமையான குரல், மலையாள வாசனையோடு படத்தின் சூழலுக்குப் பொருத்தமாக இருந்தது.
படத்தின் இறுதியில், அம்பிகாவும் பாக்யராஜும் ஒன்று சேர்வார்களா இல்லையா என்கிற பதைபதைப்பு பார்வையாளர்களுக்கு ஏற்படும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ‘தாலி’ சென்டிமென்ட்டை வைத்து தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றிவிடுவார் பாக்யராஜ். ஒருவகையில் இது ‘பிற்போக்குத்தனமான’ கிளைமாக்ஸ்தான் என்றாலும் வெகுஜன நோக்கில் புத்திசாலித்தனமானது; பாதுகாப்பானது. வெகுஜன ரசனையைத் துல்லியமாக அறிந்திருக்கும் பாக்யராஜ் இந்த முடிவை நோக்கி நடந்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை.

26 அக்டோபர் 1981 அன்று ‘அந்த ஏழு நாட்கள்’ வெளியாகியது. இதே நாளன்று குருநாதர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடிக்க ‘டிக்டிக்டிக்’, ரஜினியின் ‘ராணுவவீரன்’ போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானாலும் அவற்றோடு போட்டியிட்டு பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது இந்தத் திரைப்படம்.
இன்று பார்த்தாலும் துளிகூட சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறையாமல் இந்தத் திரைப்படம் அமைந்திருப்பதற்கு பிரதான காரணமாக பாக்யராஜின் அபாரமான திரைக்கதை ஞானத்தைத்தான் சொல்ல முடியும்.
இந்தப் படம் குறித்த உங்களின் `நச்' விமர்சனம் ப்ளீஸ்!