Published:Updated:

மண்ணில் இந்த `பாலு'வின்றி... `கேளடி கண்மணி'யில் எஸ்.பி.பி எனும் நடிகன் ஜொலித்த கதை தெரியுமா?

கேளடி கண்மணி

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘கேளடி கண்மணி’.

Published:Updated:

மண்ணில் இந்த `பாலு'வின்றி... `கேளடி கண்மணி'யில் எஸ்.பி.பி எனும் நடிகன் ஜொலித்த கதை தெரியுமா?

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘கேளடி கண்மணி’.

கேளடி கண்மணி
இந்தத் தொடரில், எண்பதுகளின் வெளியான திரைப்படங்களின் வரிசை போய்க் கொண்டிருக்கும் போது ‘தடக்’கென்று தாவி, தொன்னூறில் வெளியான ஒன்றின் கட்டுரை வருகிறதே என்று வாசகர்கள் யோசிக்கக்கூடும்.
சமீபத்தில் மறைந்த மகத்தான இசைக்கலைஞனான எஸ்.பி.பியை நினைவுகூரும் வகையில் அவரது நடிப்பில் வெளியான முக்கிய திரைப்படங்களில் ஒன்றைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.
எனவே இந்தக் கட்டுரை. இனி ‘கேளடி கண்மணி’.

வயதான பாத்திரங்களை பிரதானமாக வைத்து எத்தனை தமிழ் சினிமாக்கள் வந்திருக்கின்றன? சற்று யோசித்துப் பார்ப்போம். நோ.. நோ.. வயதாகியும் அடம்பிடித்து பிடிவாதமாக ‘ஹீரோ’ பாத்திரத்தில் நடித்தவர்களை, நடித்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றி நான் சொல்லவில்லை.

எஸ்.பி.பி
எஸ்.பி.பி
முதிய ஹீரோ?!
கதையின் படி ஒரு முதியவரை ஹீரோவாக வைத்து எத்தனை தமிழ்ப்படங்கள் வந்திருக்கின்றன?

இமேஜ் பற்றி பெரிதும் கவலைப்படாமல், தன் வயதுக்கும் மீறிய பாத்திரங்களில் சிவாஜி முன்பே நடித்து விட்டார். ‘வியட்நாம் வீடு’ ஒரு நல்ல உதாரணம். பாலுமகேந்திரா இயக்கிய ‘வீடு’ திரைப்படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதரைத்தான் ஒருவகையில் அந்தப் படத்தின் ‘ஹீரோ’ எனலாம். மணிவண்ணன் இயக்கிய ‘இனி ஒரு சுதந்திரம்’ திரைப்படத்தில் வயதான கிழவராக நடித்த சிவகுமார்தான் ஹீரோ. பார்த்திபனின் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்த ‘ஹவுஸ்புல்’ திரைப்படமும் கிழவர் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.

இப்படி சில உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் இவையெல்லாம் அரிய உதாரணங்கள் மட்டுமே. வயதானவர்களை மையப் பாத்திரமாக வைத்து உருவான திரைப்படங்கள் மிக சொற்பமே.

இதன் உள்வரிசையில் நடுத்தர வயதுக்காதல், முதியவர்களுக்கு இடையேயான காதல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உருவான திரைப்படங்கள் எவை என்று பார்த்தால் அவை இன்னமும் குறைவு. மறுபடியும் சிவாஜிதான் இதற்கு உதாரணமாக வருகிறார். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘முதல் மரியாதை’ நடுத்தர வயதுக் காதலர்களைப் பற்றி கண்ணியத்துடன் பேசியது. அதே பாரதிராஜாதான் ‘அந்தி மந்தாரை’ திரைப்படத்தில் முதியவர்களின் காதலைப் பற்றியும் பேசினார்.

இது போன்ற அரிய படைப்புகளின் வரிசையில் ‘கேளடி கண்மணி’யைச் ஒரு முக்கியமான உதாரணமாகச் சொல்ல முடியும்.

எஸ்.பி.பிக்கு பிரபலமான பாடகர் என்கிற இமேஜ் உள்ளதுதான். ஆனால் அவரை ஒரு ஹீரோவாக வைத்து திரைக்கதை எழுத எவருக்கேனும் துணிச்சல் இருக்குமா? இயக்குநர் வசந்திற்கு அந்த துணிச்சல் இருந்தது. நடுத்தர வயதைத் தாண்டிய, மெகா சைஸ் தொப்பையுள்ள, குண்டான உடல் அமைப்பு உள்ள ஒருவரை ஹீரோவாக சிந்திப்பதற்கே அபாரமான துணிச்சல் வேண்டும்.
கேளடி கண்மணி
கேளடி கண்மணி

வசந்தின் உறவினர்கள், உதவி இயக்குநர்கள், படப்பிடிப்புக்குழுவினர் ஆகியோருக்குமே இந்த சந்தேகமும் தயக்கமும் இருந்தது. ‘பாலு சார்.. நல்லா பாடுவாரு.. தெரியும்.. ஆனா ஹீரோவா…? அது சரிப்பட்டு வராதே’ என்று கேள்விகளை எழுப்பினார்கள்.

‘ஒரு ரவுடி பாடகர் ஆகலாம்.. ஆனால் ஒரு பாடகர் ரவுடியாகக் கூடாது’ என்கிற வடிவேலுவின் காமெடி மாதிரி ஆகிப் போனது இந்த விஷயம். ஆனால் தான் எழுதிய திரைக்கதைக்கு முன்னணி நாயகர்கள் எவரும் சரிப்பட்டு வர மாட்டார்கள். அவர்களின் பிம்பம் தடையாக இருக்கும். ஏ.ஆர்.ஆர் என்கிற கேரக்டர், திரையில் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் வசந்த். அந்த உறுதியும் எதிர்பார்ப்பும் பிறகு மெய்யாகியது. தனது திரைக்கதையின் மீது வசந்திற்கு இருந்த அபாரமான நம்பிக்கையின் விளைச்சல் இது.

எஸ்.பி.பி நடிகரானதே ஒரு தற்செயல்தான். நண்பர்களுடன் இணைந்திருந்த மேடையில் ஒரு மைம் நிகழ்ச்சியை பாலு நிகழ்த்த, அதைப் பார்த்த இயக்குநர் கே.பாலசந்தர்... "உனக்குள்ள நடிக்கற திறமையும் இருக்கு” என்று சொல்லி ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தில் ஒரு டாக்டர் வேடத்தில் அறிமுகப்படுத்தினார். அவ்வப்போது வந்து போனாலும் அட்டகாசமான கேரக்டர் அது. அதைப் பார்த்துதான் பாலுவை தன் திரைப்படத்தில் நாயகனாக ஆக்கும் ஆர்வம் வசந்திற்குள் முளைத்தது.

தொழிற்முறையில் பாலு ஒரு அற்புதமான பாடகராக இருந்தாலும் அவருக்குள் ஓர் இயல்பான நடிகனும் ஒளிந்திருந்தார். அவருடைய உடல்மொழி உற்சாகத்தில் இதைக் கவனிக்கலாம். “நடிகர்களுக்காக பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பாடும் போது ஒலிப்பதிவுக் கூடத்தில் என்னை நடிகனாகத்தான் உணர்வேன்’ என்று ஒரு நேர்காணலில் கூறுகிறார் பாலு.

எஸ்.பி.பி
எஸ்.பி.பி
Photo: Vikatan

பாலுவின் இயல்பான நடிப்பிற்கு ‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் இருந்து ஓர் உதாரணம் சொல்ல முடியும். கமலின் மகளிற்கு சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு விட அதற்கு சிகிச்சை செய்யும் மருத்துவராக பாலு வருவார். அந்தச் சிறிய காட்சியை விதம் விதமான மத்தாப்புகள் எரிவது போல படு உற்சாமாக்கி விடுவார் பாலு. ஒவ்வொருவரையும் அவர் விசாரிக்கும் விதம், அப்போது அவர் செய்யும் குறும்பு, அவரின் உடல்மொழி, வசன உச்சரிப்பு அத்தனையையும் கவனித்தால் ஓர் உற்சாகமான ஆறு மனித வடிவில் ஓடிக் கொண்டிருப்பது போலவே தோன்றும்.

அது நடிகர் ‘பாலு’ அல்ல. பாலுவின் அடிப்படையான குணாதிசயமே அப்படித்தான் இருந்தது.

‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் மையப்பாத்திரத்திற்காக வசந்த் அழைத்த போது பாலுவிற்கே உள்ளூற தயக்கம் வந்திருக்கிறது. “எனக்காவது பாடும் தொழில் இருக்கு. பிரச்னையில்ல. ஆனா இது நீ இயக்கற முதல் படம்... பார்த்துக்க" என்று செல்லமாக எச்சரித்திருக்கிறார். ஆனால் வசந்த் தன் உறுதியை வெளிப்படுத்தியவுடன் ஏ.ஆர்.ஆர் என்கிற பாத்திரமாகவே பிறகு மாறி விட்டார். ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் பல காட்சிகள் இதற்கு சாட்சியங்களாக நிற்கின்றன.

பாலுவின் கதாபாத்திரப் பெயர் கூட சுவாரஸ்யமானது.1992-ல் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இசைக்கலைஞன் வரவிருக்கிறார். அவர் பிறகு ARR என்று சுருக்கமாக ரசிகர்களால் குறிப்பிடப்பட்டார். இப்படியொரு அடையாளத்தை தன் கதாபாத்திரத்தின் பெயருக்கு ரஹ்மானின் வருகைக்கு முன்பே வசந்த் சூட்டியது ஒரு தற்செயல் சுவாரஸ்யம்.

கேளடி கண்மணி
கேளடி கண்மணி

இயக்குநர் வசந்த் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர்; எழுத்தாளர்; நல்ல வாசிப்பாளர். பாலசந்தரின் முதன்மையான சீடர்களில் ஒருவர். அந்தக் கூடத்தில் நன்கு பட்டை தீட்டப்பட்டவர். “நான் எப்பவுமே என் வயதுக்கு மீறி மெச்சூர்டான விஷயங்களை யோசிப்பேன். அதனாலதான் ‘கேளடி கண்மணி’ போன்ற ஒரு படத்தை என்னால் முதல் படமா சிந்திக்க முடிஞ்சது" என்கிறார் வசந்த்.

பாலசந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்த சமயம் அது. ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வசந்திற்கு தானாக வந்தது. விவேக்சித்ரா சினிமா நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தரம் ஒரு ரசனையுள்ள தயாரிப்பாளர். திறமையுள்ள இளம் இயக்குநர்களைத் தேடி அடையாளம் கண்டு வாய்ப்பு தருபவர். அவர்களின் மூலம் நல்ல திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்று விரும்புபவர். இவரின் தயாரிப்பில் பார்த்திபனின் இயக்கத்தில் ‘புதிய பாதை’ திரைப்படம் கூட அப்போது உருவாகிக் கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட சுந்தரம்தான் ஒரு திரைப்படத்தை இயக்க வசந்த்தை அழைக்கிறார். ஆனால், ‘தான் அதற்கு தயாராகி விட்டோமா’ என்கிற சந்தேகம் வசந்திற்கு வந்திருக்கிறது. “அவனவன் தயாரிப்பாளர் கிடைப்பாங்களான்னு லோ.. லோ.. ன்னு அலையறான்... ஒரு தயாரிப்பாளரே உன்னைத் தேடி வந்தா... உனக்கு கசக்குதா” என்று வசந்த்தின் நலம்விரும்பிகள் அவருக்கு உரிமையுடன் அறிவுரை கூற படத்தை இயக்க ஒப்புக் கொள்கிறார் வசந்த்.

என்றாலும் தன் குருநாதர் பாலசந்தரிடம் இதைச் சொல்லி முறையாக அனுமதியும் ஆசியும் பெறுகிறார். உடனே விலக விரும்பும் முடிவை இயக்குநரிடம் சொல்லத் துணிச்சல் இல்லாமல் ‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தின் பணி நிறைவு பெறும் வரை உதவியாளராக இருந்து விட்டு பிறகே ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் வேலைக்குள் வருகிறார் வசந்த்.

இயக்குநர் வசந்த்
இயக்குநர் வசந்த்

ஓர் இளம் காதலர்கள். ஆரம்பக்கட்டத்தில் ஏற்படும் சிறிய மோதலுக்குப் பிறகு ஒருவரையொருவர் புரிந்து கொண்டு தீவிரமாக காதலிக்கத் துவங்குகிறார்கள். அவர்கள் திருமணம் என்னும் அத்தியாயத்திற்குள் நுழைவதற்கு முன்பாக ஒரு சிக்கல் வருகிறது. காதலிக்கு ஒரு தீவிரமான நோய். சிறிது காலம்தான் அவள் உயிரோடு இருப்பாள்.

‘தன் காதலனோடு சந்தோஷமாக வாழ முடியாதே’ என்று ஆழமான துயரத்தை அடைகிறாள். அப்போதுதான் ஒரு விஷயம் அவளுக்குள் பயங்கரமாக உறைக்கிறது. அவளுடைய இளம் வயதில் நிகழ்ந்த சம்பவங்கள் அவை.

மனைவியை இழந்த அவளுடைய அப்பாவிற்கு இன்னொரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. ஆனால் புது அம்மாவை ஏற்க விரும்பாத இவள் அடம்பிடித்து அந்தத் திருமணத்தை நிறுத்தி விடுகிறாள். பிறகு அப்பாவுடன் மட்டும் வாழ்கிறாள். அப்பா மணம் செய்யவிருந்த பெண் வேறு எங்கோ சென்று விடுகிறார்.

அறியாத இளம் வயதில் தான் செய்த பாவத்தின் விபரீதம் இப்போதுதான் அந்தப் பெண்ணுக்கு உறைக்கிறது. தன் காதல் பொய்க்கும் போதுதான் இன்னொரு காதலின் பிரிவு ஆழமாக அவளை வதைக்கிறது. அப்பாவின் காதலியை எப்படியாவது தேடிப் பிடித்து அவருடன் இணைத்து வைப்பதை தன் இறுதி லட்சியமாகவும் விருப்பமாகவும் கொள்கிறாள்.

அந்த லட்சியம் நிறைவேறியதா... என்பதுதான் “கேளடி கண்மணியின்’ கிளைமாக்ஸ்.

இயக்குநர் வசந்த், பல வருடங்கள் பாலசந்தரிடம் உதவியாளராக பணிபுரிந்ததால் அதன் சாயல் 'கேளடி கண்மணி’ திரைப்படத்தின் பல இடங்களில் தெரிவது இயல்புதான். அதையும் தாண்டி வசந்தின் தனித்தன்மையும் பல இடங்களில் அபாரமாக பளிச்சிடுகிறது. “படவா.. இந்த ஐடியாவையெல்லாம் இத்தனை நாளா எங்கே ஒளிச்சு வெச்சிருந்தே?” என்று ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தைப் பார்த்து விட்டு வசந்த்தை பாலசந்தர் செல்லமாக கடிந்து கொண்டதை எங்கோ வாசித்த நினைவிருக்கிறது.

கேளடி கண்மணி
கேளடி கண்மணி

படத்தின் துவக்கத்தில் இளம் காதலர்களைப் பற்றிய காட்சிகள் முடிந்ததும்... பாலு – ராதிகா தொடர்பான பிளாஷ்பேக் காட்சிகள் துவங்கும். உண்மையில் படம் அப்போதுதான் துவங்குகிறது எனலாம். ஒவ்வொரு காட்சிக் கோர்வையையும் அப்படி ரசித்து ரசித்து உருவாக்கியிருப்பார் வசந்த்.

வெங்காயம் வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்கிறவராக, பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுபவராக, திருமண மண்டபத்தின் சமையல் கூடத்தில் ஜாங்கிரி பிழிபவராக... என்று விதம் விதமான பணிகளின் மூலம் ஏ.ஆர்.ஆர்... என்னும் பாத்திரம், சாரதா டீச்சருக்கு அறிமுகம் ஆகும் விதமே அத்தனை சுவாரஸ்யம்.

சாரதா டீச்சர் என்கிற பாத்திரத்தில் அத்தனை பாந்தமாகப் பொருந்தியிருப்பார் ராதிகா. முதலில் இந்தப் பாத்திரத்திற்கு சுஹாசினியைத்தான் நடிக்க வைக்க வசந்த் முடிவு செய்திருந்தாராம். ஆனால், சுஹாசினி அப்போது தெலுங்கு திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அது சாத்தியமாகவில்லை.

ஆனால் படத்தைப் பல்வேறு முறை பார்த்த பிறகு சுஹாசினியை விடவும் ராதிகா அமைந்ததுதான் இந்தப் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தம் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு ‘சாரதா டீச்சர்’ பாத்திரத்தில் ஐக்கியமாகியிருப்பார் ராதிகா.

துவக்கத்தில் ராதிகாவிற்கு கூட இந்தப் பாத்திரத்தில் நடிக்க தயக்கம் இருந்திருக்கிறது. "நாற்பது வயசு கடந்த ஓர் ஆசாமியை நான் ஏன் சார்.. காதலிக்கணும்..? எனக்கு பதில் சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணுங்க. அப்புறம்தான் ஷூட்டிங் துவங்கணும்” என்று மெலிதாக அடம்பிடித்திருக்கிறார் ராதிகா. பாத்திரங்களின் தன்மைகளைப் பற்றி வசந்த் விளக்கிச் சொல்லியவுடன் ராதிகாவிடம் மறுபேச்சில்லை. ‘சாரதா டீச்சர்’ தயாராகி விட்டார்.

கேளடி கண்மணி
கேளடி கண்மணி

சற்று வயதான பாத்திரம், திருமண வயதைத் தாண்டிய இளம் பாத்திரம் ஆகிய இரண்டு ‘சாரதா டீச்சரிலும்’ பேரழகியாகத் தெரிவார் ராதிகா. தலையைப் படிய வாரி, நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் புடவையுடன் அவர் தோன்றுகின்ற அத்தனை காட்சிகளிலும் நமக்கு மரியாதை பிறக்கும். அதன் கூடவே காதலும் பிறக்கும். அப்படியொரு ரகளையான பாத்திர வடிவமைப்பு.

காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் உள்ள பெற்றோரைக் கொண்டவர் ராதிகா. எனவே அவர்களிடம் பேசும் சைகை மொழியிலேயே பாலுவின் உடல்நலத்தை விசாரிக்கும் ஒரு காட்சி சுவாரஸ்யமானது. போலவே தன் திருமணத்தில் ஏற்படும் இடையூறை எண்ணி கோயிலில் வேதனையுடன் சாமியிடம் முறையிடும் காட்சி உருக்கமானது.

ஒரு குறிப்பிட்ட காட்சிக் கோர்வையில் ராதிகாவின் நடிப்பு பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும். அவரின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் திகைத்து நின்று விடுவார். சூழ்நிலையின் விபரீதம் தெரியாமல் அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் வீட்டினுள் நுழைந்து கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும். பக்கத்து வீட்டுப் பெண்மணி உள்ளே நுழைந்து நிலைமையை உணர்ந்து ராதிகாவைத் தேற்ற முயல்வார். அதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை துயரத்தையும் உரத்த குரலில் வாய் விட்டு கதறித் தீர்ப்பார் ராதிகா.

மீண்டும் உள்ளே நுழையும் ஒரு சிறுவன் இந்தக் காட்சியைப் பார்த்து வாய் மூடி திகைத்து நின்று விடுவான். பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக உள்ளே வருவார்கள். இந்தக் காட்சிக் கோர்வையை அத்தனை இயல்பாக உருவாக்கியிருப்பார் வசந்த்.

கேளடி கண்மணி
கேளடி கண்மணி

இளம் காதலர்களாக ரமேஷ் அரவிந்த்தும் அஞ்சுவும் நடித்திருந்தார்கள். ஒரு ‘துறு துறு’ இளம் ஹீரோவிற்கான பணியை ரமேஷ் அரவிந்த் கச்சிதமாக கையாண்டிருந்தார். மகேந்திரன் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ பாடலில் வெள்ளைச் சிரிப்புடன் விதம் விதமாக தோன்றும் அஞ்சுவை எவராலும் மறக்க முடியாது. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த அவர், நாயகியாக நடித்த முதல் திரைப்படம் இது. எஸ்.பி.பியின் மகளாக நடித்திருந்தார்.

தந்தைக்கும் மகளுக்குமான கெமிஸ்ட்ரி இந்தப் படத்தின் பல காட்சிகளில் சிறப்பாக பதிவாகியிருக்கும். ‘Something tells me... என்னவோ கெட்டது நடக்கப் போகுது’ என்று எதையோ நினைத்து பயந்து கொண்டேயிருக்கும் பாத்திரத்தை அஞ்சு சிறப்பாக கையாண்டிருந்தார். இவர் பின்னாளில் அதிபுஷ்டியாகவிருப்பதற்கான அடையாளம் இந்தப் படத்திலேயே தெரிந்து விட்டது.

ஆனால் அஞ்சு பாத்திரத்தை மிக அநாயசமாக ஓவர்டேக் செய்து விட்டார், அவரின் சிறிய வயதுப் பாத்திரமாக நடித்த நீனா. மணிரத்னம் இயக்கிய ஒரு திரைப்படத்தில் இவரின் பங்களிப்பைப் பார்த்த வசந்த், தன் படத்திற்கு நடிக்க அழைத்து வந்து விட்டார். “ஏன் மளிகைக்கு இவ்ளோ செலவாகுது... என்னமோப்பா... பொண்ணை பெத்து வெச்சிருக்கிங்க... பார்த்து செலவு பண்ணுங்க’ என்று தன் தந்தையை செல்லமாக மிரட்டும் முதல் காட்சியிலேயே நம் மனதைக் கொள்ளை கொண்டு விடுவார் நீனா.

தனது செல்லத் தந்தை இன்னொரு திருமணம் செய்வதை ஏற்க முடியாத ‘பொஸஸிவ்னஸ்’ மனநிலையை அழுகை, குரோதம், வெறுப்பு, கெஞ்சல் என்று விதம் விதமான முகபாவங்களில் வெளிப்படுத்தி அசத்தி விட்டார் நீனா. சாரதா டீச்சரை இவருக்கு ஆரம்பத்தில் பிடித்திருந்தாலும், அவர்தான் தன் அம்மாவாக வரப்போகிறார் என்பதை அறிந்தவுடன் இவருடைய முகத்தில் தெரியும் மாற்றங்கள் அத்தனை நுட்பமானது. ஒரு சாக்லேட் இரண்டாக பங்கு போடப்படும் ‘க்ளோசப்’ காட்சியை ஸ்லோ மோஷனில் காட்டிய படி இந்த மாற்றத்தை மிகச் சிறப்பாக பார்வையாளர்களிடம் கடத்தி விடுவார் இயக்குநர் வசந்த்.

கேளடி கண்மணி
கேளடி கண்மணி

இதில் ‘அடைக்கலம் சார்’ என்கிற நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்த ஜனகராஜின் பங்களிப்பும் சுவாரஸ்யமானது. இவர் கனவு காண்பதெல்லாம் நிஜத்தில் பலித்து விடும். இது தொடர்பாக இவர் எதிர்கொள்ளும் அவஸ்தைகள் அத்தனையும் காமெடி கலாட்டா.

ஒரு நகைச்சுவை நடிகரை இன்னொரு பரிமாணத்தில் காட்டி அசத்தி விடுவார் பாலசந்தர். உதாரணம் நாகேஷ். வசந்த்தும் இதைப் பின்பற்றியிருக்கிறார். நகைச்சுவை நடிகர் என்பதைத்தாண்டி ஜனகராஜின் குணச்சித்திரமும் சில இடங்களில் அற்புதமாகப் பதிவாகியிருக்கும்.

சாரதா டீச்சரின் மீது ஜனகராஜிற்கு உள்ளார்ந்த காதல் இருக்கும். அதை நாசூக்காக வெளிப்படுத்துவார். ஆனால் ராதிகா இதைச் சிரிப்புடன் மறுக்கும் போது ஜனகராஜ் வெளிப்படுத்தும் முகமாற்றம் அவரின் திறமையான நடிப்பிற்குச் சான்று.

இது தொடர்பாக எனக்குப் பிடித்தமான காட்சிக் கோர்வை ஒன்றுண்டு. மழை பெய்து கொண்டிருப்பதால் வீட்டிற்குச் செல்ல முடியாமல் ஜனகராஜின் அலுவலகத்தில் காத்திருப்பார் ராதிகா. ஜனகராஜ் குடை கொண்டு வர உள்ளே செல்லும் சமயத்தில், எஸ்.பி.பி குடையுடன் வந்து ராதிகாவை அழைத்துச் சென்று விடுவார். தன் நண்பனைத்தான் ராதிகாவிற்கு பிடித்திருக்கிறது என்பது ஜனகராஜிற்குத் தெரியும். அவர்கள் இருவரும் ஒரு குடையில் இணைந்து நடந்து செல்வதை நிராசையான முகபாவத்துடன் ஜனகராஜ் பார்த்துக் கொண்டிருப்பார். படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்று இது.

பாலசந்தரின் பாணியை வசந்த் பின்பற்றிய காட்சிகளுள் முக்கியமாக இரண்டைச் சொல்லலாம்.

கேளடி கண்மணி
கேளடி கண்மணி

எஸ்.வி.சேகரின் டிராமா ஒன்றில் இதர பார்வையாளர்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருக்க, ராதிகாவும் பாலுவும் அதில் ஈடுபடாமல் இன்னொரு உலகத்தில் இருப்பார்கள். ராதிகாவிடம் தன் காதலை ‘மைண்ட் வாய்ஸில்’ வெட்கத்துடன் பாலு வெளிப்படுத்துவது அத்தனை சுவாரஸ்யமான காட்சி. இது ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை நினைவுப்படுத்தும்.

திருமணம் வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருந்த மகள், அதற்கு சம்மதம் தெரிவித்த செய்தியைக் கேட்டு சந்தோஷம் அடையும் ராதிகாவின் பெற்றோர், வண்ணத்தை எடுத்து ஒருவரையொருவரின் முகங்களில் பூசி துள்ளிக் குதிப்பார்கள். ‘அவள் ஒரு தொடர்கதை’யில் வரும் ஒரு காட்சியை இது நினைவுப்படுத்தும். காது கேட்காத, வாய் பேச முடியாத பெற்றோராக, சிறிது நேரமே வந்தாலும், பூர்ணம் விஸ்வநாதனும் ஸ்ரீவித்யாவும் உருக்கமான நடிப்பைத் தந்திருப்பார்கள்.

ஒரு சிறந்த திரைப்படத்தில் இளையராஜாவின் இசை இருக்கிறதா அல்லது இளையராஜா இருப்பதால் ஒரு திரைப்படம் சிறந்ததாகிறதா என்பது பெரிய ஆராய்ச்சிக்குரியது. அந்த அளவிற்கு தன் இசை மேதைமையால் ஒரு திரைப்படத்தின் தரத்தை அடுத்த தளத்திற்கு உயர்த்திச் செல்பவர் ராஜா.

‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் இசை அனுபவங்களும் சுவாரஸ்யமானவை. ‘மண்ணில் இந்தக் காதல் அன்றி’ பாடலைத் தவிர இதர பாடல்களுக்கான மெட்டுக்களை தன் வழக்கமான பாணியில் அரை மணி நேரத்திற்குள் போட்டுத்தந்து விட்டார் ராஜா. இதில் சுசிலா பாடிய ‘கற்பூர பொம்மை ஒன்று’ என்கிற பாடல், இன்றைக்கு கேட்டாலும் கண்கலங்க வைக்கிற அற்புதமான மெலடி.

பொதுவாக பாலசந்தரின் படங்களில் செய்யப்படும் ‘கிம்மிக்ஸ்கள்’, பார்வையாளர்களுக்கு படத்தின் மீது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துபவை. அதே பாணியில் வசந்த்தும் சிந்தித்திருப்பார் என்று யூகிக்கத் தோன்றுகிறது. இந்தப் படத்தில் பாலுவை ஒரு ‘பாடகராக’ சித்திரிக்கும் உத்தேசம் வசந்த்திற்கு துவக்கத்தில் இருக்கவில்லை. அது கேரக்டரின் மீதான திணிப்பாக, பொருந்தாததாக அமைந்துவிடும் என்று சரியாகவே யோசித்திருக்கிறார்.

ஆனால் பாலு என்னும் சிறந்த பாடகர் ஹீரோவாக நடிக்கும் போது அதில் அவர் பாடிய பாடல் இல்லாமல் இருந்தால் எப்படி என்று பிறர் வற்புறுத்த, அதற்காக வசந்த் யோசித்ததுதான் ‘மண்ணில் இந்தக் காதல் அன்றி’.

‘மூச்சு விடாமல் இதைப் பாட வேண்டும்’ என்ற ஐடியாவை வசந்த், பாலுவிடம் தெரிவிக்க ‘சரி... நான் பாடிடறேன்... அதற்கப்புறம் யாரை வெச்சு படத்தை முடிப்பீங்க... ஐந்து நிமிஷத்திற்கு மேல மூச்சு விடாம பாடினா ஒருத்தன் செத்துடுவான்யா’ என்று தன் பாணியில் செல்லமாக கேட்டிருக்கிறார் பாலு. என்றாலும் அந்தப் பாடலை மிகுந்த அர்ப்பணிப்புடன் பாடி முடித்து விட்டார். இன்றைக்கும் இனிமையாக ஒலிக்கிற மெலடி அது.

இதன் கிளைமாக்ஸ் காட்சிக்கு ராஜா இசையமைத்ததிலும் ஒரு சுவாரஸ்யமான பின்னணி இருந்தது. ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் திருவண்ணாமலைக்குச் செல்வது ராஜாவின் வழக்கம். கிளைமாக்ஸ் காட்சியின் பகுதி மட்டும் பின்னணி இசைக்காக காத்துக் கொண்டிருந்தது.

தயாரிப்பாளர் வேண்டிக் கொண்டதின்படி ராஜாவிடம் சென்ற வசந்த், “சார்.. இந்தப் பெளர்ணமிக்கு நீங்க போகாம இந்த கிளைமாக்ஸ் போர்ஷனை முடிச்சுக் கொடுத்துட்டா... நல்லாயிருக்கும். ரிலீஸ் தேதி வேற அறிவிப்பு செஞ்சிட்டோம். நீங்கதான் அரை நாள்லயே முடிசு்சுடுவீங்களே" என்று வசந்த் தயங்கியபடியே கேட்க.. ‘இதுக்கு அரை நாள் போதும்-னு யார் சொன்னது?” என்று சிரித்தபடியே பதிலளித்த ராஜா “கிளைமாக்ஸ் அருமையா வந்திருக்கு... அதுக்கு ரீரெக்கார்டிங் செய்ய மூணு நாள் தேவைப்படும். அப்படித்தான் தேவைப்படும்… போய் தயாரிப்பாளர் கிட்ட சொல்லுங்க" என்றிருக்கிறார் ராஜா.

இளையராஜா
இளையராஜா
ராஜாவின் வேகத்திற்கு அந்தக் காட்சியை அரை நாளிலேயே கூட முடித்து விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் அது உருவாக்கப்பட்டிருந்த விதம், அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை நன்கு உணர்ந்திருந்த ராஜா, அதற்காக போதிய அவகாசம் எடுத்துக் கொண்டு மெனக்கிட்டது அவரின் அசாதாரணமான அர்ப்பணிப்பு உழைப்பைக் காட்டுகிறது. அதனால்தான் அவர் ‘ராஜா’.

பாலசந்தரின் பாணியில் பாடல்கள் அனைத்தையும் சுவாரஸ்யமாக படமாக்கியிருப்பார் வசந்த். மாண்டேஜ் உத்தியில் வெவ்வேறு சிறிய காட்சிகளை இணைத்து அதனை புதிய நிறமாக மாற்றியிருப்பார். பல சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் பாடல் காட்சிகளில் இடம் பெற்றிருக்கும்.

உதாரணமாக, ‘மண்ணில் இந்தக் காதலன்றி’ பாடலில், கடற்கரை மணலில் ராதிகா சறுக்கி விழும் இடமும், அதைக் கண்டு பாலு சற்று கிண்டலுடன் சிரிக்கும் இடமும் அத்தனை சுவாரஸ்யமாக எடிட் செய்யப்பட்டிருக்கும். அந்தப் பாடலை காணும் போதெல்லாம் நான் ரசிக்கும் விஷயம் இது.

இதைப் போலவே ராதிகாவின் திருமணம் நிகழாமல் போவதை, அவரின் கழுத்தில் முன்பு போடப்படும் மாலைகள் கழன்று போவது போல ‘ரிவர்ஸ் ஷாட்டில்’ காண்பித்திருப்பார் வசந்த்.

‘இந்தப் படைப்பு மட்டுமல்ல... இனி வரும் என் எல்லாப் படைப்புகளுமே பாலசந்தருக்கு சமர்ப்பணம்’ என்பதுதான் ‘கேளடி கண்மணி’யின் முதல் காட்சியே. தன் குருநாதரின் மீது வசந்த் வைத்திருக்கும் பக்தியும் பாசமும் வெளிப்படும் விதம் இது.

ராஜா மூன்று நாள்கள் செலவு செய்து பின்னணி இசை அமைத்திருக்கும் ‘கேளடி கண்மணி’யின் கிளைமாக்ஸ் காட்சியை இன்றைக்கு கண்டாலும் கண்கலங்கும். சாரதா டீச்சரை ரமேஷ் அரவிந்த் தேடும் போது பரபரப்பான பின்னணி இசை ஒருபக்கம் ஒலிக்க, இன்னொரு பக்கம் மருத்துவமனையில் அஞ்சுவின் அறுவைச் சிகிச்சை தொடர்பான காட்சிகளில் நெகிழ வைக்கும் பின்னணி இசையும் மெளனமும் ஒலிக்கும்.

‘கேளடி கண்மணி’ திரைப்படம் வெளியாகி முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றளவும் இந்தப் படத்தின் இளமையும் புத்துணர்ச்சியும் நெகிழ்வும் குறையவில்லை. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் எனக்கு தாமாகவே கண்ணீர் வந்தது. வசந்த்தின் டைரக்ஷன் திறமைக்கான சான்று அது.

இந்தப் படத்தில் வரும் எஸ்.பி.பி எனும் நடிகனில் நீங்கள் பார்த்து வியந்த விஷயம் என்ன? கமென்ட்டில் தெரிவியுங்கள்.