Published:Updated:

``அம்மனாக நயன்தாரா நடிக்கிறதுல என்னதான் பிரச்னை... அவங்க நடிச்சா ஓகேவா?'' - ஆர்ஜே பாலாஜி

RJ Balaji and Nayanthara
RJ Balaji and Nayanthara ( Mookuthi Amman Movie )

ஆர்ஜே, காமெடியன், ஹீரோ என உயரும் பாலாஜியின் கரியர் கிராஃபில் அடுத்த அவதாரம், இயக்குநர். `மூக்குத்தி அம்மன்’ பட நயன்தாரா தரிசனத்தை விரைவில் திரையில் காட்ட இருக்கிறார். படத்துக்கான ஷூட்டிங் முடிவடைந்துவிட்ட நிலையில் அவரிடம் பேசினோம்.

``கோயம்புத்தூர்ல மட்டும் ஆர்.ஜே.வா தெரிஞ்ச ஒருத்தனை 2009-ல `சிறந்த பண்பலை தொகுப்பாளர்’னு விருது கொடுத்து கோவை தாண்டி இன்னும் பல ஊர்களுக்கு எடுத்துட்டு போனது விகடன்தான். என் வாழ்க்கையில் ரொம்ப எமோஷனல் மொமன்ட் அது. அந்த விருது தந்த தைரியத்துலதான், `உனக்கில்லைன்னா வேற யாருக்குடா’னு வேலை தேடி சென்னை வந்தேன். அதுக்குப் பிறகு நிறைய விகடன் விருதுகள்... கடந்த 10 வருஷத்துல வாங்கியாச்சு. 30 வருஷத்துக்கு முன்னாடி ஒரு வாசகனா எப்படி விகடன்கூட ஒரு ஒட்டுதல் வந்ததோ, அது இப்போ வரைக்கும் தொடருது” என தனக்கும் விகடனுக்குமான நினைவுகளுடன் ஆரம்பித்தார் ஆர்ஜே பாலாஜி.

``ஆர்ஜே டு இயக்குநர்... இந்தப் பயணம் எப்படி இருக்கு?''

``ஆர்ஜே-வா என்னுடைய கரியரை ஆரம்பிச்சபோதும் சரி, இப்ப பண்ணிட்டு இருக்க வேலைகளும் சரி, செய்யற வேலையை திருப்தியா, நல்லா செய்யணும்கிற விஷயம் எப்பவுமே எனக்குள்ள ஓடிட்டே இருக்கும். அதேமாதிரி சின்ன வேலை, பெரிய வேலைனு எந்தப் பாகுபாடும் பார்க்க மாட்டேன். என்டர்டெயின்மென்ட் மீடியத்துல இருக்கோம். மக்களுக்கு பிடிச்சதை செய்யறோங்கறதுல ஒரு தனி சந்தோஷம்.”

RJ Balaji
RJ Balaji

``அடுத்தடுத்த நிலைக்குப் போகும்போது இதுக்கு முன்னாடி கிடைச்ச இடத்தை தக்க வைக்கிறதுக்கான நம்பிக்கை எங்க இருந்து கிடைச்சது?''

``ஆரம்பத்துல எனக்கும் அந்த பயம் இருந்தது. ஆர்ஜே-லருந்து அடுத்த வேலைக்குப் போகும்போது, இனிமே ஆர்ஜே வேலையை ஒழுங்கா பண்ண மாட்டோமோன்னு ஒரு தயக்கம் இருந்தது. ஆனா, ஒரு வேலை உங்களுக்குப் பழகிடுச்சுனா, அது சிரமமாவே தெரியாது. உங்களுக்கான இடம் எப்பவுமே இருக்கும். அந்த நம்பிக்கைலதான் அடுத்தடுத்து ஓடிட்டு இருக்கேன்.

நான் பயங்கர கஷ்டப்பட்டு வேலை செய்யற ஆள் எல்லாம் கிடையாது. ஜாலியா வேலை செய்யணும்னு நினைக்கிற ஒருத்தன். அப்படி இருக்கும்போது, அடுத்தடுத்து வேலைகள் செஞ்சுட்டே இருக்குறது எப்ப ஒரு கட்டத்துல சலிப்பாவோ, சோர்வாவோ இருக்கோ, அப்போ இந்த மொபைலை எல்லாம் ஒரு ஓரமா வச்சிட்டு ஒரு சின்ன பிரேக் எடுத்துப்பேன். இப்படி ரிலாக்ஸா இருக்கும்போதுதான் நிறைய ஐடியாஸ் எனக்கு வரும்.”

``ஆர்ஜே, நடிகர், இயக்குநர்... எதை நோக்கி உங்க பயணம் இனி இருக்கப்போகுது?''

``அந்த மாதிரி எந்த ஒரு திட்டமும் என்கிட்ட இல்லை. ஆர்ஜே-வா வரணும்னு எந்த ஒரு நோக்கமும் இல்லாமதான் வந்தேன். அதுக்குப் பிறகு, `நானும் ரெளடிதான்’ பண்ணினப்போதான் எனக்கும் நடிக்க வருதேன்னு தோணுச்சு. எனக்குனு யாரும் கதை எழுத மாட்டாங்க, எனக்கு நானே பண்ணினாதான் உண்டுன்னு எழுதின கதைதான் `எல்கேஜி’. அதுக்குப் பிறகு, இயக்கம் கத்துக்கிட்டு பண்ணினது `மூக்குத்தி அம்மன்’. இந்த மாதிரி என்னுடைய ஒவ்வொரு கட்டத்துலயும் பண்ற முயற்சிகளை மக்கள் ஏத்துக்கறதுனாலதான் என்னால தொடர்ந்து இயங்கிட்டே இருக்க முடியுது.”

``கே.ஆர்.விஜயாவில் இருந்து ரம்யாகிருஷ்ணன் வரைக்கும் அம்மனா நடிச்சிருக்காங்க. நயன்தாராவை அம்மனா மக்கள் ஏத்துப்பாங்களா?"

``இந்த கேள்வியில் எனக்கு உடன்பாடு இல்லை. நீங்க கேட்குறீங்களேனு பதில் சொல்றேன். அம்மனா நயன்தாரா நடிக்கிறதுல என்னதான் பிரச்னை? அப்ப த்ரிஷா நடிச்சா ஏத்துப்பாங்களா? சினேகா, தமன்னா, அனுஷ்கா, மஞ்சுவாரியர்... எதுக்கு இந்த கேள்வினு புரியலை. மக்கள் நயன்தாராவை ஏத்துக்கிட்டதால்தான் 16 வருஷமா டாப் மோஸ்ட் ஸ்டாரா இருக்காங்க. பெரிய ஃபேன் ஃபாலோயர்ஸ் இருக்காங்க. அவங்க நடிச்சா மக்கள் நிச்சயம் ஏத்துப்பாங்க."

நயன்தாரா
நயன்தாரா
Mookuthi Amman Movie

``அம்மன் படங்கள்னாலே பாடல்களும் பயங்கர ஹிட் ஆகுமே. `மூக்குத்தி அம்மன்' படத்துல பாடல்கள் எப்படி வந்துருக்கு?''

``தமிழ் சினிமால சாமி படங்களுக்கு பாடல்னாலே அது எல். ஆர். ஈஸ்வரி அம்மாதான். முதல்முறையா ஈஸ்வரி அம்மா `மூக்குத்தி அம்மனுக்கு பொங்கல் வைப்போம்’ங்கற பாடலை பாடி, இதுல நடிக்கவும் செஞ்சிருக்காங்க. ஆடி மாச ஸ்பெஷலா இந்தப் பாடல் இருக்கும். சீக்கிரமே இந்தப் பாட்டை ரிலீஸ் பண்ண ப்ளான் பண்ணியிருக்கோம். `மெரீனா,' `இருட்டு,' `நிசப்தம்'னு பல படங்களுக்கு இசையமைச்சிருக்க கிரிஷ்தான் மியூசிக். எல்லா பாடல்களும் பா. விஜய் எழுதியிருக்கார். நட்புக்காக, விக்னேஷ் சிவனும் ஒரு பாடல் எழுதியிருக்கார்.”

RJ Balaji
RJ Balaji
Mookuthi Amman Movie

``விக்னேஷ் சிவன் படம் பார்த்துட்டு என்ன சொன்னார்?''

``ரொம்பப் பாராட்டினார். விக்னேஷ் சிவன்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்க இருக்கு. இந்தப் படம் எனக்கும் நயன்தாராவுக்கும் கரியர்ல முக்கியமானதா இருக்கும் என்பது அவரோட எண்ணம்.”

``இனி எந்த மாதிரியான படங்கள் எடுக்க ஆசை?''

``இப்ப வர்ற எல்லாப் படங்களும் நல்லாதான் இருக்கு. ஆனா, நாம சின்ன வயசுல பார்த்து ரசிச்ச, `வானத்தைபோல’, `முத்து’ மாதிரியான படங்கள் எனக்கு இப்பவும் பிடிக்கும். அந்தப் படங்களை எப்போ பார்த்தாலும் ஒரு திருப்தி கிடைக்குமே அப்படியான படங்கள் பண்ண ஆசை இருக்கு. அதுமட்டுமில்லாம இயக்குநர் ஷங்கர், ராஜ்குமார் ஹிரானி பண்ணின படங்கள் மாதிரி ஒரு சதவிகிதம் பண்ணாலே போதும்.”

RJ Balaji
RJ Balaji
Mookuthi Amman Movie

``கொரோனா காலத்துல உங்களை எப்படி பாசிட்டிவ்வா வெச்சிருக்கீங்க?"

``கொரோனாவுக்கு முன், பின்-னு எல்லோரின் வாழ்க்கையும் புரட்டிப்போட்ட மாதிரிதான் இருக்குது. 21 நாட்கள் வீட்டில் இருந்தால் சரியாகும்னுதான் எல்லோரும் நினைச்சோம். ஆனா, ரெண்டு மாசம் ஆகியும் நிலைமை சரியாகலைனு நினைச்சா பயமாதான் இருக்கு.

இதுக்கு முன்னாடி இயற்கை சீற்றம், அழிவின்போது மனிதம் மேலோங்கும். ஆனா, இந்த முறை மனிதம் எங்க போய்டுச்சு என்பதுதான் பெரிய கேள்வி. ஒரு குழந்தை அம்மா இறந்தது தெரியாம அவங்ககூட விளையாடும் வீடியோ பார்த்துட்டு அவ்வளவு வருத்தமா இருந்தது. அந்த மாதிரி நூற்றுக்கணக்கான வீடியோக்களை தினமும் பார்க்கிறோம். அதை எல்லாம் பார்த்து பரிதாபப்படுவதைத் தாண்டி வேற ஒண்ணும் செய்ய முடியலைன்ற நிலையில்தான் பலரும் இருக்காங்க. இங்க எல்லோரின் வாழ்வாதாரமும், வாழ்க்கையும் கேள்விகுறியாகியிருக்கு.

என்னை நம்பி 200 பேருக்கும் மேல ஒரு படத்துல வேலை செஞ்சு இருக்காங்க. டீம்ல நேரடியாவே 15 பேர் வேலைபார்க்கிறாங்க. அதுபோக வீட்டுல வேலை செய்யறவங்க, குழந்தைகளை ஸ்கூலுக்கு ஆட்டோவில் விடும் அண்ணா, பக்கத்துல இருக்கும் அயர்ன் கடைக்காரர்னு இப்படி என்கூட நேரடி தொடர்புல இருக்கிறவங்களுக்கு என்னாலான சிறு உதவிகளைச் செய்றேன். பலரும் இப்படி செஞ்சுட்டு இருக்காங்க. அது ஒரு சின்ன மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருது. நிச்சயம் இதிலிருந்தும் மீள்வோம்."

அடுத்த கட்டுரைக்கு