Published:Updated:

‘’நான் தேச விரோதி அல்ல’’ - உயர் நீதிமன்றத்தில் விஜய்யின் வாதமும், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியும்?

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

''என் மீதான தனிப்பட்ட விமர்சனங்களை நீக்க வேண்டும். தனி நீதிபதி என்னை தேசவிரோதியாக முத்திரை குத்தியுள்ளார். நான் தேச விரோதி அல்ல'' - நடிகர் விஜய் தரப்பு

நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரித்தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விஜய் தன் மீதான நீதிபதியின் விமர்சனத்தை நீக்க வேண்டும், 1 லட்சம் ரூபாய் அபராதத்துக்கு தடை விதிக்கவேண்டும் என இவ்வழக்கில் மேல்முறையீடு செய்திருந்தார்.

மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் ஹேமலதா மற்றும் துரைசாமி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

விஜய் தரப்பில் தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜரானார். '’ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். முழுமையான நுழைவு வரியை செலுத்தவும் தயார். ஆனால், தனி நீதிபதி விதித்த 1 லட்சம் ரூபாய் அபராதத்தையும், நடிகர் ஜோசப் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களையும் நீக்க வேண்டும். தனி நீதிபதி நடிகர் விஜய்யை தேசவிரோதியாக முத்திரை குத்தியுள்ளார். அவர் தேச விரோதி அல்ல’’ என நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடினார்.

''நுழைவு வரி தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கும்போது இந்தவழக்கில் மட்டும் நீதிபதி இப்படி ஒரு அபராதத்தையும், விமர்சனத்தையும் முன்வைத்திருப்பது தவறான முன்னுதாரணமாகும். 9 ஆண்டுகளாக இவ்வழக்கை நிலுவையில் வைத்துக்கொண்டிருந்தது நடிகர் விஜய்யின் தவறல்ல'' என்றும் விஜய் நாராயணன் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முன் எடுத்துரைத்தார்.

விஜய்
விஜய்

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை கடந்த 2012-ம் ஆண்டு சென்னையில் உள்ள பிஎம்டபிள்யு கார் ஷோரூம் மூலம் வாங்கியிருந்தார் நடிகர் விஜய். இறக்குமதி வரி, சாலை வரிகளைக் கட்டி 6.5 கோடி ரூபாய்க்கு இந்தக் காரை அவர் வாங்கினார். ஆனால், Entry tax எனப்படும் நுழைவு வரி மட்டும் இறக்குமதி கார்களுக்குப் பொருந்துமா இல்லையா என்கிற வழக்குபோய்க்கொண்டிருந்ததால் 20 சதவிகிதம் மட்டும் கட்டி காரைப் பதிவு செய்திருந்தார் விஜய்.

அப்போது பதிவுசெய்யப்பட்ட நுழைவு வரி தேவையா, இல்லையா என்கிற வழக்கில்தான் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனி நீதிபதி 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், நடிகர்களை விமர்சித்தும் தீர்ப்பு வெளியிட்டிருந்தார். அந்த தீர்ப்புக்கு தடைகேட்ட வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு வெளியாகியிருக்கிறது.

இதன்படி விஜய் மீதம் கட்டவேண்டியிருக்கும் 80 சதவிகித நுழைவு வரிக்கான செலானை வருமான வரித்துறை பிறப்பிக்கவேண்டும் என்றும், அதை 10 நாட்களுக்குள் விஜய் தரப்பு கட்ட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

கார்களுக்கான நுழைவு வரி என்பது அப்போது 12.5 சதவிகிதம். அதன்படி விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய். விஜய் ஏற்கெனவே இதில் சுமார் 15 லட்சம் ரூபாயை கட்டியிருக்கும் நிலையில் இப்போது விஜய் நிலுவைத்தொகையாக கிட்டத்தட்ட 65 லட்சம் ரூபாய் கட்டவேண்டியிருக்கும். இந்தத்தொகையை அதிகாரப்பூர்வமாக வரிமானவரித்துறை தெரிவித்ததும் அதை விஜய் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் மீதான விமர்சனங்கள் குறித்து நான்கு வாரங்களுக்குப் பிறகு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு