Published:Updated:

`சிவாஜி வசித்த வீடுங்கிறதுக்காகவாவது வெச்சிருக்கலாம்!'- ஆதங்கப்படும் பிரபலங்கள்

ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் இந்தப் பகுதியில் வசித்ததாலோ என்னவோ சிவாஜியும் இங்கு குடிவந்தார். கவிஞர் கண்ணதாசன், அவருடைய அண்ணன் ஏ.எல்.எஸ் வீட்டுல தங்கியிருந்துதான் பாடல்கள் எழுதினார்.

சிவாஜி
சிவாஜி

எண் 7, பெசன்ட் சாலை, ராயப்பேட்டை. சென்னையில் நடிகர் சிவாஜி கணேசன் ஆரம்பத்தில் வசித்த வீட்டின் முகவரி இது. ராம்குமார், சாந்தி, பிரபு ஆகியோர் பிறந்ததும் இந்த வீட்டில்தான். பிள்ளைகள் வளர்ந்த பிறகே, தி.நகரில் இருக்கும் தற்போதைய அன்னை இல்லத்துக்கு குடிபெயர்ந்தது சிவாஜி குடும்பம்.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

சில ஆண்டுகளாக 'சிவாஜி புரொடக்‌ஷன்' அலுவலகமாகச் செயல்பட்டு வந்த இந்த வீடு தற்போது சிவாஜி குடும்பத்திடமிருந்து கை மாறியிருக்கிறது.

``யாரையும் `ஒழிக' கோஷம் போட்டுத் திட்டாதீங்கப்பா!" - புதுக் கட்சி தொடங்கிய சிவாஜி! #VikatanVintage

இதுகுறித்து மேற்கொண்டு விசாரித்தோம். ``கோடம்பாக்கம் எப்படி சினிமாவுடன் தொடர்புடைய ஏரியாவோ, அதேபோல அந்தக் காலகட்டத்துல சென்னையில் ராயப்பேட்டையும் அப்படித்தான் இருந்தது. டி.கே.சண்முகம், ரெட் ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நாடகக் கம்பெனிகள் இதே ஏரியாவில்தான் இருந்தன.

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், எம்.என்.ராஜம், எம்.என்.நம்பியார், ஜி.ராமநாதன், பி.புல்லையான்னு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் இந்தப் பகுதியில் வசித்ததாலோ என்னவோ, சிவாஜியும் இங்கு குடிவந்தார். இன்றைக்கும் மீனாட்சி சேஷாத்ரியின் பூர்வீக வீடு இங்குதான் இருக்கிறது. கவிஞர் கண்ணதாசன் அவருடைய அண்ணன் ஏ.எல்.எஸ் வீட்டில் தங்கியிருந்துதான் பாடல்களை எழுதினார்.

ராம்குமார், பிரபு
ராம்குமார், பிரபு

சிவாஜியின் மகள் சாந்தி பிறந்து தொட்டில் போட்ட வீடுங்க இது. 'புதிய பறவை' படத்துலகூட இந்த வீடு வந்திருக்கும். சிவாஜி குடும்பம் தி.நகர்ல 'அன்னை இல்ல'த்துக்குக் குடிபெயர்ந்ததும், வீட்டை அப்படியே சினிமா தயாரிப்பு நிறுவன அலுவலகமா மாத்திட்டாங்க. 'சந்திரமுகி' படம் எடுத்தபோதெல்லாம் இங்கதான் எல்லா வேலைகளும் நடந்தன. பிறகு சிவாஜி புரொடக்‌ஷன் படங்கள் தயாரிக்கறதை நிறுத்தின சூழல்லதான் இப்போ இந்தச் சொத்தை வித்திருக்காங்க.

'சிவாஜி வசித்த வீடு'ங்கிறதுக்காகவாவது இதை அப்படியே பராமரிச்சிருக்கலாம். புதுசா வாங்கியவங்க இடிச்சு ஃபிளாட் கட்டிட்டா, அந்த மகா நடிகர் வசித்த அடையாளமே இல்லாமல் போயிடும்'' என ஆதங்கப்படுகின்றனர், தற்போது அதே பகுதியில் வசிக்கும் சினிமா தொடர்புடைய பிரபலங்கள் சிலர்.