சினிமா
Published:Updated:

RRR - பிரமாண்டத்தின் பரவசம்!

RRR படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
RRR படத்தில்...

அல்லூரி சீதாராம ராஜுவாக ராம்சரண், கொமாரம் பீமாக ஜூனியர் என்.டி.ஆர் எனத் தெலுங்கின் இரண்டு முன்னணி நடிகர்களுக்கு சமபலம் கொண்ட பாத்திரங்கள்

இரத்தம், ரணம், ரௌத்திரம் (RRR) - ராஜமௌலி - ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணி கொடுத்திருக்கும் இந்தப் படத்தின் மீதுதான் தற்போது இந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்தக் கவனமும் குவிந்திருக்கிறது. முதல் நாளிலேயே ரூ.220 கோடிக்கும் அதிகமான வசூல் என்ற இமாலய எண்ணிக்கையுடன் தொடங்கியிருக்கும் இதன் பயணம், இந்தக் கட்டுரை எழுதப்படும்போது சுமார் ரூ.500 கோடியைத் தொட்டிருக்கிறது.

RRR - பிரமாண்டத்தின் பரவசம்!

படத்தில் வரும் பல காட்சிகள் பெரிய திரையில், அதுவும் 3டி-யில் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றன. அதிலும் கிராபிக்ஸுக்குக் காட்டியிருக்கும் மெனக்கெடல் இதுவரை இந்திய சினிமாவில் நாம் பார்த்திராதது. இந்த ஓ.டி.டி யுகத்தில் மக்களைத் திரையரங்குகளுக்கு வரவைக்கப் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் முயன்றுவருகிறார்கள். அதில் முதன்மையானவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தெலுங்கு சினிமா என்ற வரையறைக்குள்ளாக மட்டும் அவரைச் சுருக்கிவிட முடியாது. இப்போதிருக்கும் பான் இந்தியா என்னும் வியாபார யுக்தியைப் பெயர் எதுவும் வைக்காமலே செய்தவர். அதிக வெற்றி சதவிகிதத்தை வைத்திருக்கும் பிரமாண்ட இயக்குநர். அவர் இயக்கிய படங்கள் மட்டுமல்ல, அதன் ரீமேக்குகளுமே பல மொழிகளில் வசூல் சாதனைகள் படைத்திருக்கின்றன.

ஆர்.ஆர்.ஆர் என்ற இந்தப் படத்தின் கதை 1920-களில் வெள்ளையர்களை எதிர்த்து நின்ற அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமாரம் பீம் ஆகிய இருவரின் பெயர்களையும் பின்னணியையும் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. இருவரும் சமகாலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள் என்பதைத் தாண்டி, இருவருக்கும் இடையேயான நட்பு குறித்துப் பெரிதாகக் குறிப்புகள் எதுவும் இல்லை. அவர்கள் போராட்டங்களின் சாராம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இருவரையும் நண்பர்களாக்கி ஒரு வரலாற்றுப் புனைவுக் கதையை உருவாக்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத். அதற்குத் திரைக்கதை அமைத்து பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார் ராஜமௌலி.

RRR - பிரமாண்டத்தின் பரவசம்!
RRR - பிரமாண்டத்தின் பரவசம்!

அல்லூரி சீதாராம ராஜுவாக ராம்சரண், கொமாரம் பீமாக ஜூனியர் என்.டி.ஆர் எனத் தெலுங்கின் இரண்டு முன்னணி நடிகர்களுக்கு சமபலம் கொண்ட பாத்திரங்கள். ஒரு கமர்ஷியல் பட இயக்குநராக ராஜமௌலி இருவரின் கதாபாத்திரங்களையும் அணுகிய விதம் அசாத்தியமானது. ஆக்‌ஷன் காட்சிகள், வசனங்கள், பாடல்கள், நடனம் என எல்லாமுமே சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் இந்த ரேசில் தன் இயல்பான நடிப்பால் ஒரு மார்க் கூடுதலாகப் பெறுகிறார் ஜூனியர் என்.டி.ஆர். 'நாட்டுக்கூத்து' பாடலின் நடன அமைப்பும், அதற்குத் திரையரங்கில் பறந்த விசில்களும் சமீபகாலமாக தியேட்டர் ரசிகர்கள் மிஸ் செய்த ஒன்று.

பான் இந்தியா படம் என்பதாலோ என்னவோ அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா எனப் பலரையும் நடிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பலம் அதன் டெக்னிக்கல் அம்சங்கள்தான். கதை வழக்கமான மசாலாதான் என்றாலும் அதைத் திரையில் வியக்கும்படி காட்சிப்படுத்துவதும், அது அசல் தன்மையுடன் இருக்க மெனக்கெடுவதும்தான் ராஜமௌலியின் வெற்றிக்குக் காரணமாக இருக்கின்றன. இங்கே டெக்னிக்கல் என்பது கே.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவோ, ஸ்ரீனிவாஸ் மோகனின் விஷுவல் எஃபக்ட்ஸோ, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்போ, சாலமன் மற்றும் நிக் பவலின் ஸ்டன்ட் இயக்கமோ மட்டுமல்ல. கதையின் உணர்வை ரசிகனுக்குக் கடத்த பின்னணி இசையும் முக்கியமானது. அந்த வகையில் கீரவாணி என்னும் மரகதமணியின் இசையைப் படத்தின் ஆன்மா எனலாம்.

RRR - பிரமாண்டத்தின் பரவசம்!
RRR - பிரமாண்டத்தின் பரவசம்!

இவை அனைத்தையும்விட, காலங்காலமாக மக்கள் படம் பார்ப்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்ற எண்ணத்தை ஓரமாக வைத்துவிட்டு யோசிக்கும் இயக்குநர்கள்தான் இங்கே மக்களை அதிகம் திருப்திப்படுத்துகிறார்கள். அந்த வகையில் ராஜமௌலி, திரைப்படத்தைத் திரையரங்கில் பார்ப்பது என்பதை ஓர் அனுபவமாகப் பார்க்கிறார். அது ரசிகர்களுக்குப் பரவச அனுபவத்தைத் தரவேண்டும் என்றே விரும்புகிறார். அதனால்தான் அவரின் படங்கள் சாதனை படைக்கின்றன. பின் அந்தச் சாதனைகளை அவரே தன் அடுத்தடுத்த படங்களின் மூலம் முறியடிக்கிறார். இதைவிடுத்து, வாரத்துக்கு நான்கு படங்கள் வெளியாகும் இந்தச் சூழலில் ஒரு படத்துக்கு புரமோஷன் என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்ந்திருக்கிறது `ஆர்.ஆர்.ஆர்' டீம். அதனால்தான் படம் பலமுறை தள்ளிப்போனாலும் அத்தனை முறையும் சலிக்காமல் விளம்பர நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக நடத்தியிருக்கிறார்கள்.

அதேபோல் சென்டிமென்ட் காட்சிகளில் உள்ள செயற்கைத்தனம், வரலாற்றுத் திரிபுகள், குறிப்பிட்ட மதம் மற்றும் கடவுளர்கள் சார்ந்த குறிப்புகளின் திணிப்புகள் எனப் படத்தின் குறைகளுமே விவாதப்பொருள் ஆகியிருக்கின்றன. ஆனால், வெளிப்படையாக குறிப்பிட்ட மதத்தினரை இழிவுபடுத்தி வெறுப்பரசியல் பேசும் மத்திய அரசின் ஆதரவு பெற்ற பிரசாரப் படங்களுக்கு மத்தியில் `ஆர்.ஆர்.ஆர்' படத்தைப் பார்க்கும்போது குறையொன்றும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.