சினிமா
Published:Updated:

ருத்ர தாண்டவம் - சினிமா விமர்சனம்

ருத்ர தாண்டவம்
பிரீமியம் ஸ்டோரி
News
ருத்ர தாண்டவம்

சுமாரான பாடல்கள், இரையும் பின்னணி இசை என ஏமாற்றுகிறார் ஜூபின்.

சமூகத்தில் சாதிப் பிரச்னை யில்லை, சாதி வன் கொடுமையை எதிர்க்கும் அரசியல்தான் பிரச்னை என்ற ‘தப்பான ஆட்டமே’ இந்தத் தாண்டவம்.

காவல்துறை அதிகாரி ருத்ர பிரபாகரன், போதைப்பொருள் விற்பனை குறித்து இரு சிறுவர்களை விசாரிக்கையில் ஒரு அசம்பாவிதம் நேர்கிறது. அதன் காரணமாக ருத்ர பிரபாகரன் சிறை செல்கிறார். இதற்குக் காரணம் வன்கொடுமை தடுப்புச் சட்டமும் மதமாற்றமும்தான் என்று அரைவேக்காட்டுக் காட்சிகளால் பிரசங்கம் செய்யும் அபத்தமே படத்தின் கதை.

ருத்ர பிரபாகரனாக நடித்திருக்கும் ரிச்சர்ட் தேவைக்கும் குறைவாகவே நடிப்பைக் கொடுக்க, அவருக்கும் சேர்த்து நடிப்பை மிகையாக அள்ளிக் கொட்டுகிறார் ஹீரோயின் தர்ஷா. செயற்கையான உடல்மொழியுடன் பாத்திரப்படைப்பு குறித்த தெளிவின்மையும் சேர்ந்துகொள்ள கௌதம் மேனன் பார்வையாளர்களை ரொம்பவே சோதிக்கிறார்.

ருத்ர தாண்டவம் - சினிமா விமர்சனம்

சுமாரான பாடல்கள், இரையும் பின்னணி இசை என ஏமாற்றுகிறார் ஜூபின். படத்தில் மிஞ்சுவது பரூக் பாஷாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு மட்டுமே.

விசாரணையில் இருப்பவரைச் சுடுவது, குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி, குழந்தைகளைக் கடத்தி மிரட்டுவது போன்ற காவல்துறையின் அத்துமீறல்களையெல்லாம் ‘ஹீரோயிசமாக’ அடையாளப்படுத்தும் இயக்குநர், ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு அரணாக நிற்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீது போலி பிம்பம் கட்டமைக்கும்போதுதான் சட்டம் மீதான அவரின் அக்கறையிலுள்ள உள்நோக்கம் வெட்டவெளிச்சமாகிறது.

சுயமாய் முடிவுகள் எடுக்கும் பெண்களால் பிற்போக்குவாதிகள் எவ்வளவு தூரம் தாழ்வு மனப்பான்மைக்கும் அச்சுறுத்தலுக்கும் பதற்றத்திற்கும் உள்ளாகிறார்கள் என்பதற்கு படத்தில் இயக்குநர் வைத்திருக்கும் பப், மீசை, காதல் தொடர்பான காட்சிகளே சாட்சி.

ஆதிக்கச் சாதியினரின் அடக்குமுறைக்கு இன்றளவும் ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளாகும் நிலையில், ‘சகோதர சண்டை’ என சாதிய வன்முறைக்குப் போலிச்சாயம் பூசி அடுத்தடுத்த தலைமுறையை திசைதிருப்புவது ஆபத்தான அரசியல். அதற்கேற்றாற்போல் சம்பந்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளாக சில செயற்கையான பாத்திரங்களை உருவாக்கி, தன் வன்மத்தையே வசனங்களாகப் பேசவைப்பது கலைநேர்மையற்ற செயல். அதிலும் சே குவேரா முதல் செங்கொடி வரை புகைப்படங்கள் மாட்டிய ஒரு கட்சியின் தலைவர் போதைப்பொருள் கடத்துபவர், அரசு வழக்கறிஞரையே நியமிக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்டவர் என்று சித்திரிப்பது, சாதிச்சான்றிதழையெல்லாம் சாட்சியமாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது போன்ற காட்சிகள் எதார்த்தத்தை மீறிய இயக்குநரின் கற்பனைகளே. ருத்ர பிரபாகரனுக்கு ஆதரவாக இருக்கும் காவல்துறை, வழக்கில் துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாமல் இருப்பதும் நீதிமன்றக்காட்சிகளும் அபத்தத்தின் உச்சம்.

ருத்ர தாண்டவம் - சினிமா விமர்சனம்

கலைநேர்த்தியையும் சமூகப்புரிதலையும் காலில் போட்டு மிதித்து வக்கிர தாண்டவமாடியிருக்கிறது படம்.