Published:Updated:

சபாபதி - சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா விமர்சனம்

பேச்சுத்திறன் குறைபாடுடையவராக நாயகன் நடிப்பதும், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்பதும் நியாயமானதுதான்.

சபாபதி - சினிமா விமர்சனம்

பேச்சுத்திறன் குறைபாடுடையவராக நாயகன் நடிப்பதும், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்பதும் நியாயமானதுதான்.

Published:Updated:
சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா விமர்சனம்

விதி தன் இஷ்டத்திற்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்து சகட்டுமேனிக்கு அவர் வாழ்க்கையில் விளையாடினால் அதுதான் ‘சபாபதி.’

ஸ்ரீரங்கத்தின் வெட்டி ஆபீஸர்களில் ஒருவர் சந்தானம். சிறுவயதிலிருந்தே எதிர்வீட்டில் இருக்கும் நாயகிமீது காதல். கண்டிப்பான தமிழ் வாத்தியார் மகனான சந்தானத்திற்கு வேலை கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் செலவுகளுக்காக உள்ளூர் அரசியல்வாதிக்குக் கோடிகளில் பணம் இறங்க, அதில் ஒரு பெட்டி சந்தானம் குடும்பத்தாரிடம் மாட்டிக்கொள்கிறது. ஒருபக்கம் பெட்டியைத் தேடும் அரசியல்வாதி, மற்றொருபக்கம் வம்பில் மாட்டிவிடும் விதி, இதற்கு நடுவே நசுங்கும் தன் காதல் என சந்தானம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமே மிச்சக்கதை.

சந்தானம் - ஒன்லைனர்களை விடுத்து நடிப்பின்வழி காமெடி செய்ய முயன்று அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெறுகிறார். முழுக்க முழுக்க உடல்மொழியை வைத்தே சிரிக்க வைக்கும் சந்தானத்தைப் பார்த்தே பல ஆண்டுகளாகிவிட்டன. இவருக்கு ஈடு கொடுத்து சில காட்சிகளில் குபீர் கிளப்புகிறார் எம்.எஸ்.பாஸ்கர். சந்தானம் தொடாத பன்ச் லைன்களைக் கையிலெடுத்து ஏமாற்றுகிறார் ‘குக்கு வித் கோமாளி’ புகழ். சந்தானம் படத்தில் எல்லாம் மாறினாலும் ஹீரோயின்களின் கதாபாத்திரம் மாறாதுபோல. பாவம், ப்ரீத்தி வர்மா.

சபாபதி - சினிமா விமர்சனம்

சாம் சி.எஸ்ஸின் இசை, பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு, லியோ ஜான் பாலின் படக்கோவை எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் வழக்கமாக ஒரு காமெடிப் படத்திற்கு மெனக்கெடும் அளவிற்கே மெனக்கெட்டிருப்பதால் எதுவும் கவனத்தில் நிற்கவில்லை.

அப்பாவியின் வாழ்க்கையில் விளையாடும் விதி - கேட்பதற்கு சுவாரஸ்யமான ஒன்லைனாக இருந்தாலும் முதல் பாதியில் புதிதான காட்சியமைப்புகளோ காமெடியோ கொஞ்சமும் இல்லை. தட்டுத் தடுமாறி இடைவேளையில் கதை ஒரு ட்ராக்கிற்குள் வருவதற்குள் நமக்குப் பொறுமை போய்விடுகிறது.

பேச்சுத்திறன் குறைபாடுடையவராக நாயகன் நடிப்பதும், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்பதும் நியாயமானதுதான். ஆனால் அடுத்த காட்சியிலேயே தலையில் முடி கொட்டியவரைப் பார்த்து உருவ கேலி செய்யும்போது அந்த நியாயம் அடிபட்டுப்போகிறது.

சந்தானம் மேல் இரக்கம் வரவேண்டும் என எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் பின்னணி இசை மட்டுமே வலிய நம்மை இரக்கப்பட வற்புறுத்துகிறதே தவிர, காட்சியமைப்புகளில் போதிய கனம் இல்லை. அதனாலேயே கதை நம்மை எந்தவிதத்திலும் பாதிக்க மறுக்கிறது.

சபாபதி - சினிமா விமர்சனம்

காமெடியில் கொஞ்சமும் கதையில் கொஞ்சமும் இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் கவனம் செலுத்தியிருந்தால், சபாபதி நம்மை மகிழ்வித்திருப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism