Published:Updated:

துணை நடிகர்களுக்கான சம்பளம் மட்டும் 8 கோடி ரூபாய்... `பிகில்’ ரகசியங்கள்!

பிகில்
பிகில்

`பிகில்' படத்தின் பட்ஜெட், கணக்கு வழக்குகள், விஜய்க்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குப் பணம் வந்த வழி என இதில் சில இடங்களில் சிக்கல் இருந்ததுதான் ரெய்டுக்கான ஆரம்பம்.

மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்றொரு பழமொழி உண்டு. அதுபோல `பிகில்' ரிலீஸாகி 100 நாள்களுக்கு மேலாகியும் `பிகில்' பேச்சுகள் ஓயவில்லை. ஐடி ரெய்டுக்குப் பிறகு மீண்டும் தீவிரமாகியிருக்கிறது `பிகில்' பேச்சு. விஜய் வீட்டில் ரெய்டு ஆரம்பிப்பதற்கு முன்பு `பிகில்' தயாரிப்பாளர்களான ஏஜிஎஸ் நிறுவன அலுவலகத்திலும் சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் அலுவலகங்களிலும்தான் ரெய்டு நடத்தப்பட்டது. `பிகில்' படத்தின் பட்ஜெட், கணக்கு வழக்குகள், விஜய்க்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குப் பணம் வந்த வழி என இதில் சில இடங்களில் சிக்கல் இருந்ததுதான் ரெய்டுக்கான ஆரம்பம்.

இதில் ஐடி ரெய்டில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதில் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாரா, அட்லி சம்பளங்களைவிட அதிரவைத்தது துணை நடிகர்களுக்கான சம்பளம்தானாம். அதாவது ஜூனியர் ஆர்ட்டிஸ்களுக்கான சம்பளம் மட்டும் 8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாக கணக்கு எழுதப்பட்டிருக்கிறதாம்.

பிகில் படத்தில் ரஹ்மான்
பிகில் படத்தில் ரஹ்மான்
Youtube Screenshot

அட்லியின் பட்ஜெட்!

`ராஜா ராணி', `தெறி', `மெர்சல்', `பிகில்' என நான்கு படங்களை இயக்கியிருக்கிறார் அட்லி. இதில் முதல் இரண்டு படங்கள் மட்டுமே கிட்டத்தட்ட சொன்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை. மற்ற இரண்டும் சொன்ன பட்ஜெட்டைவிட பல மடங்கு அதிகமாகி முடிக்கப்பட்ட படங்கள்தானாம். 'மெர்சல்' படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி தயாரித்தார். படம் ஆரம்பிக்கும் முன் இதன் பட்ஜெட் 90 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்டு பட வேலைகள் ஆரம்பமாகியிருக்கின்றன. ஆனால், முடிக்கும்போது இதன் பட்ஜெட் 125 கோடி ரூபாயாக உயர்ந்தது. 35 கோடிகள் எக்ஸ்ட்ரா. காரணமாகக் கைகாட்டப்பட்டவர் அட்லி.

'மெர்சல்' பாதிப்பால், 'பிகில்' படம் ஆரம்பிப்பதற்கு முன்பே மிகத் தெளிவாக அட்லியுடன் இயங்க வேண்டும் என முடிவெடுத்திருந்தது ஏஜிஎஸ். விஜய் உள்ளிட்ட முக்கிய கலைஞர்களின் சம்பளம், செட், காஸ்ட்யூம்ஸ் என எல்லாம் சேர்த்து 145 கோடி ரூபாய் பட்ஜெட் என முடிவாகியிருக்கிறது. 140 நாள்களில் ஷூட்டை முடித்துக்கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார் அட்லி. இதில் 100 நாள்கள் விஜய் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆனால், படம் 140 நாள்களில் முடியவில்லை என்பதோடு பட்ஜெட்டும் எகிற ஆரம்பித்திருக்கிறது. இரண்டே கால் மணி நேரப் படத்துக்குக் கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கும் மேலாக கன்டென்ட் இருந்திருக்கிறது. இதில் விஜய் நடித்த காட்சிகளே பலவும் இருந்திருக்கின்றன. ஆனால் இறுதியாக விஜய் நடித்த சில காட்சிகளே வெட்டப்பட, இரண்டரை மணி நேரத்துக்கு மேல் வேண்டாம் எனத் தயாரிப்பு தரப்பு சொன்னாலும், இறுதியாக 3 மணி நேர சினிமாவாக வெளியாகத் தயாரானது 'பிகில்'.

விஜய் - அட்லி
விஜய் - அட்லி

அதிக முக்கியத்துவம் மிக்க ரோல் என்று சொல்லித்தான் ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பல நடிகர்கள் படத்தில் நடிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நடித்த காட்சிகளும் அதிகமாக ஷூட் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் படத்தில் எல்லாமே மிஸ்ஸிங். இதுபோல் படத்துக்குத் தேவையா, இல்லையா என்ற தெளிவில்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகளால் பட்ஜெட்டும் எகிறியிருக்கிறது. இதனால் முதலில் சொன்ன 145 கோடி, 170 கோடியாக வந்து நின்றிருக்கிறது. இதில்தான் துணை நடிகர்களுக்கான சம்பளம் மட்டும் 8 கோடி ரூபாயாக குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்குக் கொடுக்கப்பட்ட 8 கோடி ரூபாய் பணத்துக்கான ஆவணங்களைத் தயாரிப்பு தரப்பிடம் வருமானவரித்துறையினர் கேட்க, ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளின் ஏஜென்ட்டான பிரபல ரெட்டியைக் கைகாட்டியிருக்கிறது தயாரிப்பு தரப்பு. ஆனால், ரெட்டியோ சரியான ஆதாரங்கள் இல்லாமல் தவிக்க, அவருக்கு அபராதம் விதித்திருக்கிறது ஐடி.

இந்தக் களேபரங்கள் ஒருபக்கம் இருக்க, மும்பையில் ஷாருக் கான் படவேலைகளுக்கான டிஸ்கஷனில் பிஸியாக இருக்கிறார் அட்லி!

ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல்... விஜய் சேதுபதிக்கு வரிசைகட்டி நிற்கும் படங்கள் என்னென்ன தெரியுமா?
பின் செல்ல