நடிகை சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்த பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என நிறையப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டானார். ஆனால் திடீரென இடையில் காணாமல் போனார்.
சமீபத்தில்தான் அவர் அமெரிக்காவிற்குச் சென்றிருப்பது தெரிய வந்தது. தனது தோல் பிரச்னைக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்கா சென்றதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது புதுப்பொலிவோடு மும்பைக்குத் திரும்பியிருக்கிறார் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது. ஆனால், அவருக்குத் தோலில் எந்த மாதிரியான பிரச்னை என்பது குறித்துத் தெரியவில்லை. ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்பு, சருமப் பிரச்னை காரணமாக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ, தற்போது அப்பிரச்னையிலிருந்து அவர் முழுவதுமாகக் குணமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மும்பைத் திரும்பியிருக்கும் சமந்தா விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளத் தயாராகி வருகிறார். வருண் தவானுடன் புதிதாக ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்திலிருந்து தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளில் சமந்தா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு விஜய் தேவரகொண்டாவுடன் அவர் முன்னர் நடித்து வந்த 'குஷி' படத்தின் சில பகுதிகள் முடிக்கப்படவேண்டியிருக்கின்றன. அதனையும் முடித்துக்கொடுக்க சமந்தா முடிவு செய்துள்ளார். புதிய படத்தில் நடிக்கத் தேவையான உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலும் சமந்தா உறுதியாக இருக்கிறார். இதற்காக இப்போதே உடற்பயிற்சிக்கும் செல்ல ஆரம்பித்துள்ளார்.

சமந்தா நடிப்பில் இரண்டு படங்கள் திரைக்கு வரத் தயாராக இருக்கின்றன. 'யசோதா' என்ற படம் ஆகஸ்ட் 12ம் தேதியே வெளியாவதாக இருந்தது. ஆனால் பணிகள் இன்னும் முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று 'சாகுந்தலம்' என்ற படம் நவம்பர் 4-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
சமந்தா இஸ் பேக்!