Published:Updated:

"ஜோதிகாவின் 'ராட்சசி' டீஸர் 'சாட்டை'யை ஞாபகப்படுத்துதா?!" - 'அடுத்த சாட்டை' அன்பழகன்

'சாட்டை', 'ரூபாய்' படங்களுக்குப் பிறகு, 'அடுத்த சாட்டை' படத்தை இயக்கியிருக்கிறார், எம்.அன்பழகன். படம் குறித்து அவரிடம் பேசினோம்.

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

'' 'மாணவர்கள் மாதிரி பாராளுமன்றம்’னு ஒரு விஷயம் நிறைய இடங்களில் நடக்குது. ஆனால், வெளியில பலருக்குத் தெரியாது. கல்லூரிக்குள்ளேயே தேர்தல் வெச்சு பிரதமர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர்னு துறைகள் பிரிச்சு, பாராளுமன்றம் மாதிரி மாணவர்கள் செயல்படுறதை 'அடுத்த சாட்டை' படத்தில் காட்டியிருக்கோம். இதை ரொம்ப அவசியமான விஷயமா நான் பார்க்கிறேன்.

அடுத்த சாட்டை
அடுத்த சாட்டை

மாணவர்கள்தான் சமுதாயத்தின் நாளைய தூண்கள்னு சொல்றோம். ஆனால், அவங்களுக்கு அரசியலை சொல்லிக்கொடுக்கிறதே இல்லை. பின்னே எப்படி அவங்க ஆளுமைத் திறமையை வளர்த்துப்பாங்க. மாணவர்களுக்கு அரசியல் முக்கியம். அதைச் சொல்லிக்கொடுக்கிற முயற்சியா இதைப் பண்ணியிருக்கேன்." எனப் பெருமிதத்தோடு பேச ஆரம்பித்தார், 'அடுத்த சாட்டை' படத்தின் இயக்குநர் அன்பழகன்.

" 'சாட்டை', 'அடுத்த சாட்டை' படங்களுக்கான கதையை உங்க வாழ்க்கையில நடந்த விஷயங்களை வெச்சு எழுதுனீங்களா?"

" 'சாட்டை' படம் பண்றதுக்கு முன்னாடி ரெகுலரா பேப்பரில் அரசுப் பள்ளிகள் சார்ந்த செய்திகளைப் பார்த்தேன். 'அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார்; மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அரசு பள்ளியை மூடினார்கள்'னு பல செய்திகள் தொடர்ந்து கண்ணில் பட்டுச்சு. நான் அரசுப் பள்ளியில் படிச்சவன். பி.எட் முடிச்சிட்டு ஆசிரியர் பயிற்சிக்கும் போயிருக்கேன். எனக்கு அரசுப் பள்ளிகள் சார்ந்த அனுபவங்கள் இருந்ததனால, இதை ஒரு படமா எடுக்கலாம்னு தோணுச்சு. அப்படி ஒரு கதையை எழுதி, பிரபு சாலமன் சார்கிட்ட சொன்னப்போ, அவரே அந்தப் படத்தை தயாரிக்க முன்வந்து, எனக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்துப் படத்தை எடுக்க வெச்சார். அதுக்கப்பறம் 'அடுத்த சாட்டை' படத்தோட ஐடியா மட்டும்தான் என்கிட்ட இருந்துச்சு. சமுத்திரக்கனி சார்தான் இதைப் பண்ணலாம்னு உறுதியா சொல்லி, திலகவதி ஐ.பி.எஸ் மேடமோட பையன் பிரபு திலக்கோடு இணைந்து, இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்கார். அதுக்கப்பறம் நான் நிறைய கல்லூரிகளுக்குப் போய் மாணவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கு, அதை சரி பண்றதுக்கு என்ன வழினு கள ஆய்வு பண்ணி இந்தக் கதையை எழுதினேன்."

அடுத்த சாட்டை
அடுத்த சாட்டை

" 'சாட்டை' படத்திலிருந்து 'அடுத்த சாட்டை' படத்தை எந்தளவுக்கு வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கீங்க?"

" 'அடுத்த சாட்டை' படத்தை 'சாட்டை' படத்திலிருந்து மட்டுமல்ல, 'அப்பா' படத்திலிருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டிய வேலை இருந்தது. 'அப்பா' படத்திலும் தயாளன் என்கிற கேரக்டரில்தான் கனி சார் நடிச்சிருப்பார். 'அப்பா' படத்தை நான்தான் இயக்க வேண்டியதா இருந்தது. 'ரூபாய்' பட வேலைகள் அதிகம் இருந்ததால, என்னால் அந்தப் படத்தை இயக்க முடியாம போச்சு. இந்த இரண்டு படங்களில் இருந்தும் 'அடுத்த சாட்டை' கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும். 'சாட்டை' படத்தில் அரசுப் பள்ளியில் நடக்கிற பிரச்னைகளைச் சொன்ன மாதிரி, இந்தப் படத்தில் தனியார் கல்லூரியில் நடக்கும் பல பிரச்னைகளைச் சொல்லியிருக்கேன்."

அடுத்த சாட்டை
அடுத்த சாட்டை

"ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'ராட்சசி' படத்தின் டீஸர், 'சாட்டை' படத்தை ஞாபகப்படுத்தியதே?"

"அரசுப் பள்ளியை மையமாக வைத்து ஆயிரம் படம் எடுக்கலாம். அவ்வளவு பிரச்னைகள் இருக்கு. அப்படி ’சாட்டை’ படத்தில் சில விஷயங்களை மட்டும்தான் நான் சொல்லியிருந்தேன். நான் சொல்லாத வேறு சில விஷயங்களை வைத்து அவர்கள் படம் எடுத்திருக்கலாம்."

அடுத்த சாட்டை
அடுத்த சாட்டை