Published:Updated:

``நேர்கொண்ட பார்வை'ல அஜித் சொன்னது சரியா... தப்பா?' - சமுத்திரக்கனி பதில்

உ. சுதர்சன் காந்தி.

இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி பேட்டி!

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி ( பா.காளிமுத்து )

தன்னுடைய இயக்கத்தில் `நாடோடிகள் 2', நடிப்பில் `அடுத்த சாட்டை', `வெள்ளை யானை', `காப்பான்' ராஜமெளலி இயக்கத்தில் `RRR' உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருக்கும் சமுத்திரக்கனி, அந்தப் படங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

'நேர்கொண்ட பார்வையில் இடம்பெறும் 'பைபோலார் டிஸ்ஆர்டர்'... குணப்படுத்த முடியாத நோயா?

`நாடோடிகள் 2' படத்தில் சாதியற்றவர்களைப் பற்றிப் பேசியிருப்பதாக பல இடங்களில் சொல்லியிருக்கீங்க; சாதி கொடுமைகள் அதிகமாகி வரும் இந்தச் சூழல்ல இந்தப் படம் எந்தளவுக்கு மாற்றத்தை உண்டாக்கும்னு நினைக்கிறீங்க?

"இந்தப் படத்தைப் பார்த்துட்டு நாளைக்கே மாற்றம் வரும்னு நினைக்கிறதும் சொல்றதும் பேராசை. ஆனா, இது மாற்றத்துக்கான முதற்படியா இருக்கும்னு நம்புறேன். இதே ஆசையோடு இருக்கிற அடுத்த தலைமுறைகள் அந்த மாற்றத்தைத் தேடும்போது அது பக்கத்துல இருக்கணும். அதுக்கான படம்தான் இது."

`நாடோடிகள்' படத்துக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பே இருக்காதுனு சொல்றீங்க. அப்புறம் ஏன் `நாடோடிகள் 2' தலைப்பு வெச்சீங்க?

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

"ரெண்டு கதைக்கும் சம்பந்தமே இல்லைதான். ஆனா, அந்த கேரக்டர்கள் அப்படி ஆக்கப்படும். சமூகம் சார்ந்து குரல் கொடுக்கும்போது எல்லோரும் பார்த்துட்டு கடந்து போய்க்கிட்டே இருப்பாங்க. முதல் காட்சியே அதுதான். `இவங்களுக்காகத்தானே இப்படி கத்துறோம். ஆனா, ஒருத்தரும் திரும்பி பார்க்கமாட்டிக்கிறாங்களே'னு பரணி சொல்லுவான். 'திரும்பி பார்க்கும்வரை கத்துவோம்டா'னு சசி சொல்லுவார். நம்ம பிரச்னைக்காகத்தான் இவன் பேசுறான்னு அதை கடந்து போறவங்களுக்கும் தெரியும். ஆனா, அவங்களுக்கு இவங்கக்கூட நிற்க நேரமுமில்லை; மனசுமில்லை. அப்படி குரல் கொடுக்கிறவன் தனிச்சு நாடோடியாத்தான் பார்க்கப்படுறான். அதனாலதான் 'நாடோடிகள் 2'. அடுத்து வயதானவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்னு ஒரு கதை இருக்கு, அது 'நாடோடிகள் 3'னு வெக்கப்போறோம்."

பல படங்கள் இயக்கி நடித்திருந்தாலும் `சாட்டை' உங்களுக்குக் கொடுத்த வரவேற்பையும் `அடுத்த சாட்டை' படத்துக்கான எதிர்பார்ப்பையும் எப்படிப் பார்க்குறீங்க?

"மாணவர்கள் மத்தியில் எனக்கு இவ்வளவு அன்பு கிடைக்குதுனா அதுக்கு காரணம் 'சாட்டை'யும் இயக்குநர் அன்பழகனும்தான். பேராசிரியர் மாடசாமி ஐயாதான் 'அடுத்த சாட்டை'க்கான விதை. வகுப்பறை மாணவனுக்கானதா ஆசிரியருக்கானதா? 'வகுப்பறையில மாணவனுக்கான உரிமை தரப்படுகிறதா இல்லை, ஆசிரியரே ஆக்கிரமிக்கிறாரா?' - இதைதான் `அடுத்த சாட்டை' பேசும். மாணவனை எதிர்கொள்ள முடியலை; அவன் கேட்குற கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியலை; இந்த மாதிரியான சூழல் வந்தவுடன் ஆசிரியர்கிட்ட இருந்து வர்ற முதல் வார்த்தை 'கெட் அவுட்'. இந்தப் படம் வந்தால் பள்ளி, கல்லூரிகளிலிருந்து 'கெட் அவுட்'ங்கிற வார்த்தை ஒழிக்கப்படும்னு நம்புறேன்."

பள்ளியில இருந்த தயாளன் சாரை பார்த்துட்டோம். கல்லூரியில இருக்கும் தயாளன் சார் என்ன சொல்ல வர்றார்?

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி
க.பாலாஜி

"மாணவனுக்கும் ஆசிரியருக்குமான இடைவெளி அதிகமாகிக்கிட்டே வருது. எந்த ஆசிரியரும் மாணவனுடைய தோள்ல கைப்போட்டு பேசுறதே இல்லை. குறிப்பா, தனியார் கல்லூரிகள் நம்பர் ஒன் வரணும்கிற பந்தயத்துலதான் ஓடிக்கிட்டு இருக்காங்க. ஆசிரியர் - மாணவன் அப்படிங்கிறதைத் தாண்டி அவங்களுக்குள்ள ஒரு உறவு இருக்கணும். படத்துல ஒரு காட்சி இருக்கு, 'ஒருத்தன் திடீர்னு நண்பானு கூப்பிடுவான், ஒருத்தனுக்கு ஆசிரியரை அண்ணன்னு கூப்பிட ஆசையா இருக்கும், ஒரு பொண்ணு 'தயாளா'னு கூப்பிடுவாள். திரும்பிப் பார்த்தவுடன், 'சாரி சார்'னு சொல்லுவாள். 'என்ன சொல்லு'னு கேட்டா, 'தயாளா சாப்பிட்டியா யா?'னு கேட்பாள். தன் அம்மா இறந்த பிறகு, யாரும் தன்னை இப்படிக் கூப்பிட்டதில்லை'னு தயாளனை ஃபீல் பண்ண வெச்சிடுவாள். இப்படியான உறவு அவங்களுடைய பிரச்னைகளை எளிமையா ஆசிரியர்கிட்ட சொல்ல வைக்கும். இதைதான் 'அடுத்த சாட்டை' பேசும். தவிர, மாணவப் பாராளுமன்றம்னு ஒரு விஷயத்தை பேசியிருக்கோம். அதை உருவாக்கக்கூடிய கேரக்டரா தயாளன் வருவார்."

சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை பத்தி என்ன நினைக்கிறீங்க?

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

"எல்லோருக்கும் ஒரே கல்வி கொடுக்கணும்; ஒரே பரீட்சை வைக்கணும் அவ்ளோதான். 'காப்பான்' ஸ்பாட்ல ஒரு வீடியோ காட்டி 'இந்தப் பையன் நம்ம அகரத்துல படிச்சான் சார். இப்போ அமெரிக்காவுல இருக்கான்னு தன்னுடைய பையன் சாதிச்ச மாதிரி பெருமையா சொல்றார். அவருடைய கனவுகள் எல்லாமே இளைஞர்கள் மாணவர்களை சார்ந்துதான் இருக்கும். முறையான கல்வி இருந்திருந்தால் இன்னைக்கு நான் ஆங்கில வசனம் பேச பயந்திருக்கமாட்டேன். கிராமங்களில் இருக்க பசங்களுக்கு இது வேற ஒரு உலகமா இருக்கு. அவங்களுடைய பயத்தை போக்கணும்னா புதிய கல்விக்கொள்கை வேணும்."

'வெள்ளை யானை' பட அனுபவம்?

" 'திருடா திருடி' மாதிரியான கமர்ஷியல் படத்தைக் கொடுத்த சுப்ரமணிய சிவா, திடீர்னு இந்த ஸ்கிரிப்டை கொண்டு வந்தார். உண்மை சம்பவத்தை வெச்சு எழுதியிருக்கார். படம் முழுக்க அரை டவுசர்லதான் வருவேன். அந்தக் காட்டுக்குள்ள இருக்கிற விவசாயியாவே இருந்தேன். நிறைய கேள்விகளையும், விவாதங்களையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தும் படமா 'வெள்ளை யானை' நிச்சயம் இருக்கும்."

வெவ்வேற கதாபாத்திரங்கள்ல நடிக்கிறீங்க. அந்த கேரக்டருக்குள்ள உங்களை எப்படித் தக்கவெச்சுக்கிறீங்க?

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி
பா.காளிமுத்து

"அதுக்கு முழுக் காரணம் இயக்குநர்கள்தான். அவங்களோட ஒண்ணா நம்ம கலந்திடணும். அப்போ அவங்க நமக்குள்ள இறங்கி ஒரு விஷயத்தை நம்மகிட்ட இருந்து எடுத்துக்குவாங்க. உதாரணத்துக்கு, 'வடசென்னை' படத்துல நான் பண்ண குணா கேரக்டருக்கும் எனக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது. இன்னும் சொல்லப்போனால், அந்த வட்டார மொழிவழக்கு எனக்கு வரவே வராது. அதே இயக்குநர் `விசாரணை' படத்துல என்னை வேற மாதிரி காட்டியிருப்பார். 'காப்பான்' படத்துல என்னை கோட் சூட்ல நிக்க வெச்சிருக்கார், கே.வி.ஆனந்த் சார். இயக்குநர்கள் சொல்றதை உள்வாங்கினாலே போதும். மத்ததை அவங்க பார்த்துக்குவாங்க."

நேர்கொண்ட பார்வையும் `காவலனுக்கான' தேவையும்! - அஜித்தை பாராட்டிய காவல் துணை ஆணையர்

அஜித் மாதிரியான மாஸ் ஹீரோ 'நேர்கொண்ட பார்வை' மாதிரியான படத்துல நடிக்கிறதை எப்படிப் பார்க்கிறீங்க?

"முதல்ல அஜித் சாருக்கு என் ராயல் சல்யூட். ஒரு மாஸ் ஹீரோ தன் படத்துல அவருக்கான ஸ்கோப் இப்படிதான் இருக்கணும்னு நினைக்கிற இந்தச் சூழல்ல, இப்படி ஒரு ஸ்கிரிப்ட்ல அஜித் சார் நடிச்சது சூப்பர். என்னை மாதிரியான ஆட்கள் வருடம் முழுக்கச் சொல்றதை அஜித் சார் ஒரே ஷோவுல சொல்லிட்டார். அவர் மாதிரியான நபர்கள்கிட்ட இருந்து சமூகத்துக்குத் தேவையான விஷயங்கள் வரும்போது அதற்கான வீச்சு அதிகமா இருக்கு. தம்பி வினோத்துக்கு என் வாழ்த்துகள்!"