சினிமா
தொடர்கள்
Published:Updated:

“நம் மண்ணோட கதையை மக்கள் ரசிப்பாங்க!”

ரிஷப் ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஷப் ஷெட்டி

நானே இயக்கி நானே நடிக்கிறது சவால்தான். எனக்குக் கொஞ்சம் எனர்ஜி குறைஞ்சாலும் மொத்த டீமும் சோர்ந்துபோயிடும். அதனால, என்னையே மறந்துட்டேன்.

`காந்தாரா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக என்ட்ரி கொடுத்திருக்கிறார் இயக்குநரும் கன்னட நடிகருமான ரிஷப் ஷெட்டி. தமிழில் வெளியாவதற்கு முன்பே தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற ‘காந்தாரா’, தற்போது தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் சென்னை வந்திருந்த ரிஷப் ஷெட்டியைச் சந்தித்துப் பேசினேன். சரளமாக தமிழில் பேசுகிறார் ரிஷப்.

“படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?''

“உண்மையைச் சொல்லணும்னா இந்த சந்தோஷத்தைக் கொண்டாட எனக்கு நேரமே கிடைக்கல. படம் வெளியான ஒரு வாரத்துல, எல்லா மொழிகளிலும் டப்பிங் பண்ணச் சொல்லிட்டாங்க. முழுக்க முழுக்க அந்தப் பணியில இருந்தேன். நம்ம மண்ணோட கதையை எப்போ சொன்னாலும் மக்கள் ரசிப்பாங்க. எப்பவும் அது ஃப்ரெஷ்ஷா இருக்கும்ங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு. பிராந்திய மொழிப் படங்கள்தான் உலகத்தரமானவை. நம்ம ஊர், நம்ம மொழி, நம்ம பண்பாட்டைக் காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு சந்தோஷம் கிடைக்குது. அதுதான் நம்ம பலம்னு நம்புறேன்.”

“நம் மண்ணோட கதையை மக்கள் ரசிப்பாங்க!”

“இயக்குநராகவும் நடிகராகவும் ‘காந்தாரா’வில் எப்படி பேலன்ஸ் செய்தீர்கள்?”

“சின்ன வயசிலிருந்து பார்த்த விஷயங்களை வைத்து ஒருநாள் இப்படியொரு படம் எடுக்கணும்னு தீர்மானமா இருந்தேன். அப்படி உருவானதுதான் ‘காந்தாரா.’ நான்கே மாதங்களில் படத்தை எடுத்து முடித்துவிட்டேன். இந்தப் படம் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதுன்னுதான் சொல்லணும். வேறு எதைப்பற்றியுமே யோசிக்கல. அப்படி யோசிச்சிருந்தா படத்தை முடிக்க ஒரு வருஷம் ஆகியிருக்கும். எல்லாம் கடவுள் ஆசீர்வாதம்.

நானே இயக்கி நானே நடிக்கிறது சவால்தான். எனக்குக் கொஞ்சம் எனர்ஜி குறைஞ்சாலும் மொத்த டீமும் சோர்ந்துபோயிடும். அதனால, என்னையே மறந்துட்டேன். ஒவ்வொரு காட்சி எடுக்கும்போதும் மொத்த டீமும் பயந்தாங்க. குறிப்பா, க்ளைமாக்ஸ் காட்சியில மிரண்டுபோய் பார்த்துக்கிட்டிருந்தாங்க. என்னையும் மீறின ஏதோ ஒரு ஆக்ரோஷமும் எனர்ஜியும் வந்துடுச்சு. உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு நிஜமாவே சாமி வந்துடுச்சுன்னு ஷூட்டிங் ஸ்பாட்டுல பலரும் நினைச்சுட்டாங்க. இதுல நானும் ஹீரோ இல்ல, கிஷோரும் ஹீரோ இல்ல. கடவுள்தான் ஹீரோ. இயற்கையையும் மனுஷனையும் இணைக்கறது அந்த தெய்வ சக்திதான்.”

“நம் மண்ணோட கதையை மக்கள் ரசிப்பாங்க!”

‘‘படம் தீண்டாமைக்கு எதிராகப் பேசுகிறதே… சாதிய வேறுபாடுகள் குறித்து உங்களது பார்வை?”

‘‘இந்தப் படத்தில் காண்பித்த தீண்டாமைக் கொடுமைகள் எல்லாம் எங்கேயோ நடக்குதுன்னு யாரோ சொல்லிக் கேட்டு நான் எழுதல. கண்ணால பார்த்துட்டு நான் ஃபீல் பண்ணி எழுதினது. இந்தக் கதை 90களில் நடப்பதுபோல் எடுத்திருக்கேன். அப்போ, இருந்த சாதிய ஆதிக்கத்தையெல்லாம் காண்பிச்சிருக்கேன்.’’

‘‘கம்பளா ரேஸில் எருமை மாட்டை விரட்டிக்கொண்டு வருவது, ‘பூத கோல’ நடனம் எல்லாம் பார்க்கப் புதிதாக இருக்கின்றன?”

‘‘இந்தக் கம்பளா ரேஸ் எங்க ஊர்லயும் பக்கத்து ஊர்கள்லயும் நடக்குறதுதான். சின்ன வயசிலிருந்து பார்த்துக்கிட்டு வர்றேன். எருமை மாட்டு மேல நின்னு விரட்டிக்கிட்டு வர்றது ரொம்ப கஷ்டம். உடல்திடமும் மன திடமும் அதிகமா தேவைப்படும். அந்த மக்கள்கிட்ட போய், படத்துக்காக எருமை மாட்டைப் பிடித்துப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அதனாலதான், ரியலா வந்திருக்கு. அதேமாதிரி, தெய்வ ஆராதனையா நடக்கற ‘பூத கோல’ நடனத்தை சின்ன வயசிலேர்ந்தே பார்த்திருக்கேன். எப்படி நடனமாடுறாங்கன்னு கிட்டத்தட்ட ஆயிரம் வீடியோக்கள் பார்த்தேன். தர்மஸ்தலா அன்னப்ப சாமியை வேண்டிக்கிட்டு ஆடப் பழகினேன். படத்துக்காக, ‘பூத கோல’ நடனம் ஆடுற அண்ணன்கள் ரெண்டு பேரு வந்து எனக்கு மேக்கப் போட்டு அந்த வேஷத்தைக் கட்டினாங்க. கடவுள் முன்னாடி அந்த வேஷத்தைக் கட்டி ஆடும்போது, எங்க மொத்த யூனிட்டும் காலில் செருப்பு போடல. க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கும்போது இரவு முழுக்க நான் எதுவுமே சாப்பிடல. அந்த அளவுக்கு பய பக்தியோடு, அந்தக் காட்சியை எடுத்து முடித்தோம். ‘ஓவ்வ்வ்’ என்ற அந்தக் குரல் என்னோட ரியல் எனர்ஜி. குலிகா தெய்வத்துக்கும் பஞ்சுர்லி தெய்வத்துக்கும் என்னை ஒப்புக் கொடுத்துட்டேன்.”

“நம் மண்ணோட கதையை மக்கள் ரசிப்பாங்க!”

‘‘ரிஷப் ஷெட்டி, ரக்‌ஷித் ஷெட்டி, ராஜ். பி. ஷெட்டி இந்த மூன்று ஷெட்டிகளுமே கன்னட சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள் என்று பேசப்படுகிறதே?”

‘‘ஒருவேளை, ‘777 சார்லி’, ‘கருட காமனா ரிஷப வாகனா’, ‘காந்தாரா’ எல்லாம் வெற்றியடைந்ததால் அன்பால அப்படிச் சொல்றாங்க. அப்படியெல்லாம் நினைச்சா, அது தப்புன்னுதான் சொல்வேன். புனித் சார், சுதீப், யஷ் என நிறைய நடிகர்கள் பெரிய பெரிய ஹிட் கொடுத்திருக்காங்க. நாங்க எல்லாம் சின்னப் பசங்க. இப்போதான், எங்களுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. புனித் சார் உயிரோட இருந்திருந்தா இதையெல்லாம் கொண்டாடியிருப்பாரு. அவர் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்பு.”

“படம் பார்த்துவிட்டு தமிழ்நாட்டிலிருந்து பேசினாங்களா?''

‘‘கார்த்திக் சுப்பராஜ்தான் முதலில் பாராட்டினார். பாபி சிம்ஹா, கருணாகரன் உள்ளிட்ட அந்த கேங்கே பாராட்டியது. பெங்களூரு வந்தா எல்லோருமே மீட் பண்ணிக்குவோம். கார்த்தி சார், தனுஷ் சார், ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல்னு பலர் பாராட்டினார்கள். தமிழக மக்கள் கொண்டாடுவது எனக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இங்க பாலசந்தர் சார், மணிரத்னம் சார், கமல் சார், வெற்றிமாறன் சார் எல்லோரையும் பிடிக்கும். வெற்றிமாறன் சார் இயக்கத்துல நடிக்கணும்னு ஆசையா இருக்கு.”

“நம் மண்ணோட கதையை மக்கள் ரசிப்பாங்க!”

‘‘ ‘பொன்னியின் செல்வன்’ பிரமாண்ட வெற்றிக்கு இடையே உங்கள் படமும் பேசப்படுகிறதே?”

‘‘மணிரத்னம் சார் என்னோட ஃபேவரைட் இயக்குநர். ‘பொன்னியின் செல்வன்’ வெற்றிக்கு முக்கிய காரணம் அது மண் சார்ந்த கதை. காந்தாராவும் மண் சார்ந்த கதை. நம் மண்ணோட கதைகளை மக்கள் எப்பவும் ரசிப்பாங்க.”

“நடிக்கணும்ங்குற ஆர்வம் எப்படி வந்தது?”

‘‘எங்கம்மா ராஜ்குமார் சாரோட பயங்கர ஃபேன். வீட்டுல அவரோட பாடல்கள்தான் ஓடிக்கிட்டிருக்கும். அவர் படத்துல வண்டி ஓட்டிக்கிட்டு வருவார். இப்படி வண்டி ஓட்டினா நானும் ஹீரோ ஆகிடலாம்னு நினைப்பேன். சின்ன வயசுல மிமிக்ரி, நாடகம்னு செய்திருக்கேன். அதுக்கு, நிறைய கைத்தட்டல்கள் கிடைச்சிருக்கு. பெங்களூர்ல காலேஜ் படிச்சேன். பெங்களூர்ல எல்லா மொழிப் படங்களும் ரிலீஸ் ஆகும். தியேட்டர்லதான் சுத்திக்கிட்டிருப்போம். நிறைய சினிமாக்கள் பார்ப்போம். அப்படியே ஹீரோ ஆசையும் வந்துடுச்சு. ரஜினி சாருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் உடனே கிடைக்கல. விக்ரம் சாருக்கு ‘சேது'தான் பெரிய பிரேக்கா அமைஞ்சது. அப்படிப்பட்ட ஹிட் நமக்கு வயசான காலத்துலதான் கிடைக்கும்னு நினைச்சுட்டிருந்தேன். இப்பவே கிடைக்கும்னு எதிர்பார்க்கல.”