Published:Updated:

என் கணவர் எனக்கு அப்பா; என் அம்மாவுக்கு மகன்! - ஆனந்தம் பகிரும் சாண்டி மாஸ்டர் மனைவி

டாரதி - சாண்டி
பிரீமியம் ஸ்டோரி
டாரதி - சாண்டி

சில வருஷங்களுக்கு முன்னாடி என் அப்பா தவறிட்டார். அதுக்கப்புறமா எனக்கும், எங்க குடும்பத்துக்கும் இவர்தான் எல்லாமுமா இருக்கார்.

என் கணவர் எனக்கு அப்பா; என் அம்மாவுக்கு மகன்! - ஆனந்தம் பகிரும் சாண்டி மாஸ்டர் மனைவி

சில வருஷங்களுக்கு முன்னாடி என் அப்பா தவறிட்டார். அதுக்கப்புறமா எனக்கும், எங்க குடும்பத்துக்கும் இவர்தான் எல்லாமுமா இருக்கார்.

Published:Updated:
டாரதி - சாண்டி
பிரீமியம் ஸ்டோரி
டாரதி - சாண்டி

“சில வருஷங்களுக்கு முன்பு சரியான பட வாய்ப்புகள் அமையல. சினிமாவை விட்டுட்டு வெளியூருக்குப் போய் பிசினஸ் பண்ணலாம்னு முடிவெடுத்தோம். திடீர் திருப்பமா ‘காலா’ படத்துல வாய்ப்பு கொடுத்தார் பா.இரஞ்சித் சார். ‘இதுக்கப்புறமா உங்களுக்கு வளர்ச்சிதான்’னு டாரதி உறுதியா சொன்னாங்க. அது இப்போ உண்மையாகிடுச்சு. எனக்கான எல்லாத் தேவைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்யுற இவங்கதான் என்னோட மென்டார்” - தன் வளர்ச்சிக்கு ஊக்கமாக இருக்கும் மனைவி டாரதி சில்வியா குறித்து நெகிழ்ச்சி அறிமுகம் கொடுக்கிறார் நடன இயக்குநர் சாண்டி.

கமலின் ‘விக்ரம்’ பட வேலையில் பிஸியாகியிருக்கிறார் சாண்டி. சென்னை, வளசரவாக்கத்தில் அவரது வீட்டில் குழந்தைகள் இருவரின் சேட்டைகளால் மகிழ்ச்சி ஆர்ப்பரிக்கிறது. முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றும் சாண்டி, நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார். ‘கதைப்போமா’ என்று அவர்களின் மாடித் தோட்டத்தில் ஆஜரானோம்.

சாண்டி குடும்பத்தினர்...
சாண்டி குடும்பத்தினர்...

“இவங்க என்னோட ஸ்டூடன்ட்டுனு ஒரு பேச்சு இருக்கு. ஆனா, அது உண்மையில்லை” என்று தங்களின் காதல் அத்தியாயத்துடன் ஆரம்பிக்கிறார் சாண்டி. “இவங்க தங்கச்சிதான் என்னோட ஸ்டூடன்ட். ஃபேமிலி ஃபிரெண்டா இவங்க வீட்டுக்குப் போவேன். டாரதி படிப்ஸ் கேங். எம்.இ கோல்டு மெடலிஸ்ட். சின்னச் சின்ன மோதலுக்குப் பிறகுதான் ஃபிரெண்ட்ஸ் ஆனோம். உரிமையா இவங்க வீட்டுல பொண்ணு கேட்டேன். நிச்சயதார்த்தம் முடிஞ்சதுக்குப் பிறகு தான் காதலிக்க ஆரம்பிச்சோம்” என்பவரை, வெட்கச் சிரிப்புடன் இடைமறிக்கிறார் டாரதி.

“சில வருஷங்களுக்கு முன்னாடி என் அப்பா தவறிட்டார். அதுக்கப்புறமா எனக்கும், எங்க குடும்பத்துக்கும் இவர்தான் எல்லாமுமா இருக்கார். முதல் டெலிவரி நேரம். 30 கிலோவரை வெயிட் கூடியிருந்தேன். பிரசவத்துலயும் சிக்கலாச்சு. பொண்ணு பிறந்த கொஞ்சநாள்லயே வேலைக்கு ட்ரை பண்ணேன். அப்போ இவர் ஓரளவுக்குப் பிரபலமாகிட்டார். வேலை கேட்ட இடத்துல யெல்லாம் ஏதேதோ கேள்விகள் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்தினாங்க. போதாக்குறைக்கு பிரசவத்துக்குப் பிறகான போஸ்ட்பார்டம் டிப்ரெஷனும் ஏற்படவே, மனரீதியா ரொம்பவே சிரமப்பட்டேன். ‘நீ கொஞ்ச நேரமாச்சும் தூங்கு’ன்னு சொல்லிட்டு, நடுராத்திரியில குழந்தையை இவர் கவனிச்சுப்பார். அவர்கூட என்னை டான்ஸ் ஆட வைப்பார். எக்ஸர்சைஸ் பண்ண வெச்சு, படிப்படியா எடையைக் குறைக்க உதவினார். இவரோட அக்கறை கூடிட்டே போகுது” என்று சிரிக்கிறார் டாரதி.

17 வயதில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் மூலம் மீடியா பயணத்தைத் தொடங்கிய சாண்டிக்கு, ‘வாலு’ படத்தில் நடன இயக்கு நராக வாய்ப்பு கொடுத்தார் சிம்பு. அதன்பிறகு ‘காலா’ படத்தில் ‘செம வெயிட்டு’ பாடல் திருப்புமுனையாக அமைந்து, ‘புளி மாங்கா புளிப்’, ‘குட்டி பட்டாசு’ ஆல்பம், ‘கர்ணன்’ பட பாடல்கள் உட்பட ஹிட் புராஜெக்ட் பலவற்றிலும் பணியாற்றியிருப்பவர், `3.33’ படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். படம் ரிலீஸ் தேதிக்காகக் காத்திருக்கிறது.

“ஆரம்பகாலத்துல பெரிசா இலக்கு இல்லாமதான் சுத்திட்டிருந்தேன். நீ சினிமாவுல கொரியோகிராபரா வரணும்னு தட்டிக் கொடுத்தவங்க என் குரு கலா மாஸ்டர்தான். சில குழப்பங்களால என்னோட பாதை திசைமாறிப்போகவிருந்த நேரத்துலதான், டாரதியோட குடும்பம் எனக்கு அரணா கிடைச்சது. மனைவி, குழந்தைகள், மாமியார்னு என்னை நம்பி ஒரு குடும்பம் உருவானதும் பொறுப்புணர்வு கூடவே, புதுப்புது வாய்ப்புகளுக்காக மெனக்கெட ஆரம்பிச்சேன். டான்ஸ் தவிர பெரிசா வெளியுலகம் எனக்குத் தெரியாது. என் சோஷியல் மீடியா பக்கங்களை டாரதிதான் கவனிச்சுக்குறாங்க. நான் அடுத்த கட்டத்துக்குப் போகணும்னு, இங்கிலீஷ், தெலுங்கு, கன்னடம், இந்தினு பல மொழிகளை எனக்குச் சொல்லிக் கொடுக்குறாங்க. ‘இதை இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்; இது ரொம்பவே மொக்க’ன்னு பாரபட்சம் பார்க்காம வெளிப்படையா கமென்ட் பண்ணு வாங்க” - சாண்டி, மனைவியின் புகழ்பாட வெட்கத்தை கைகளால் மறைக்கிறார் டாரதி.

“‘சார்பட்டா பரம்பரை’யில ‘வானம் விடிஞ்சிருச்சு’ பாட்டுக்காக வீட்டுல பல நாள்கள் ரிஹர்சல் பண்ணி மெனக்கெட்டார். அந்தப் பாட்டு சூப்பரா வந்ததுல நான் செம ஹேப்பி. இவர் வீட்டுல இருக்கும்போதெல்லாம் எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பார். தூக்கத்துல ஏதாச்சும் டான்ஸ் மூவ்மென்ட் பத்தின கனவு வந்தா, திடுக்குனு எழுந்திருச்சு அதை இன்னும் எப்படி டெவலப் பண்ண லாம்னு நடுராத்திரியில யோசிச்சுகிட்டிருப்பார். இப்போ ஒரு கன்னடப் படத்துல கொரியோ கிராபியுடன், கேரக்டர் ரோலும் பண்ணுறார். இவரோட சிரிப்புக்குப் பின்னாடி நிறைய ஏமாற்றங்கள் இருக்கு. அதனால, இவருக்குத் தனிப்பட்ட முறையில ஃபிரெண்ட்ஸ் யாருமில்ல” என்கிறார்.

என் கணவர் எனக்கு அப்பா;  என் அம்மாவுக்கு மகன்! - ஆனந்தம் பகிரும் சாண்டி மாஸ்டர் மனைவி

“அதுக்கெல்லாம் சேர்த்துதான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே” என்னும் சாண்டி, மகள் சுஜானாவைக் கட்டியணைக்கிறார். ‘`என்னோட நைனா ஷான் மைக்கேல் பிறந்து மூணு மாசம்தான் ஆகுது. அவர் தூங்கிட்டி ருக்கார்” என்று கலகலப்பைக் கூட்டுகிறார்.

“இவர்கிட்ட எனக்குப் பிடிச்ச குணம் ஒன்றைச் சொல்லணும். சின்ன வயசுலேயே தனிமை வாழ்க்கையில அன்புக்காக ஏங்கி யிருக்கார். துறை சார்ந்த ஒரு பெண்ணோடு ஏற்பட்ட அந்த ரிலேஷன்ஷிப், சில காரணங் களால கொஞ்ச நாள்லயே முடிஞ்சுபோச்சு. அந்த பந்தம் இவர் வாழ்க்கையில பெரிய காயத்துடன், கறுப்பு அத்தியாயமாவும் மாறிடுச்சு. இப்போ வரைக்கும் அந்தப் பெண்ணைப் பத்தி ஒரு வார்த்தைகூட தப்பா பேச மாட்டார். அவங்களும் எங்க எல்லார் கூடவும் தன்னோட லிமிட்டை உணர்ந்து நடந்துப்பாங்க. இவரோட திறமைக்குப் பெரிய உயரத்துக்கு வருவார்னு உறுதியா நம்புறேன்” என்று கணவரின் கைகளைப் பற்றிக் கொள்கிறார்.

ஆனந்தம் விளையாடும் வீடு!