Published:Updated:

சினிமா விமர்சனம் - சங்கத்தமிழன்

 Vijay Sethupathi, Nivetha Pethuraj
பிரீமியம் ஸ்டோரி
News
Vijay Sethupathi, Nivetha Pethuraj

சினிமாக்களைத் தொடர்ந்து பார்க்கும் சங்கத் தமிழர்கள் அப்டேட் ஆகிவிட்டார்கள் என்பதை இயக்குநர்கள் புரிந்துகொள்ளுதல் நலம்!

ரின் நலனுக்காகத் தீயவர்களைத் தீர்த்துக்கட்டும் `சங்க கால’க் கதையை, சங்கக்குவளையிலேயே தந்திருக்கிறான் ‘சங்கத் தமிழன்.’

சினிமாவில் காமெடி நடிகனாக முயற்சி செய்கிறார் ‘முருகன்’ என்கிற விஜய் சேதுபதி. அவரைப் பார்த்ததும் காதல் ராஷி கண்ணாவுக்கு! காதலோடு வில்லங்கமும் வருகிறது. ஆமாம்... அதேதான்! ஹீரோயினின் அப்பாதான் வில்லன். இன்னொரு புறம் காப்பர் தொழிற்சாலைக்கு எதிராகப் போராடுகிறது ஒரு கிராமம். அந்த கிராமத்தலைவரின் மகன் `சங்கத்தமிழன்’ என்கிற விஜய் சேதுபதி. கிராமத்தலைவரின் குடும்பம் அரசியல்வாதியின் சூழ்ச்சியால் கொல்லப்பட, காமெடியன் வேடத்துக்காகக் காத்திருக்கும் முருகனுக்கு சங்கத்தமிழன் எனும் நிஜ ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஹீரோவாக கிராமத்துக்குள் நுழையும் விஜய் சேதுபதி, வில்லன்களை எப்படி ஒழித்துக்கட்டுகிறார் என்பதுதான் மீதிக்கதை!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மீசை முறுக்கினால் முருகன், குங்குமம் வைத்தால் சங்கத்தமிழன். இட்ஸ் ஸோ சிம்பிள்! கேமராவைப் பார்த்து சிலபல பன்ச்கள், சிலபல அறிவுரைகள், சிலபல சண்டைகள்... ‘மாஸ் படம்னா இதானே’ என நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. கூடுதலாகச் சில எம்.ஜி.ஆர் ரெஃபரன்ஸுகளும் சேர்ந்திருக்கின்றன.

சங்கத் தமிழன்
சங்கத் தமிழன்

முதல் பாதிக்கு ராஷி கண்ணா, இரண்டாம் பாதிக்கு நிவேதா பெத்துராஜ். சோம்பல் முறிக்கச் செய்கின்றன இவர்களுக்கான காதல் அத்தியாயங்கள். ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்காகவே அளவெடுத்ததுபோல் வந்துசெல்கிறார் நாசர். பன்ச் வசனங்கள், பறக்கும் கார்களுக்கிடையில் சூரியின் காமெடியே கொஞ்சம் ஆறுதல். ரவி கிஷன், அஷுதோஷ் ராணா, மைம் கோபி, ஸ்ரீமன் என வில்லன்களின் லிஸ்ட் கொஞ்சம் நீளம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவேக் மெர்வின் இசையில் ‘கமலா கலாஸா’ அட்டகாச டிஸ்கோ பூஸ்டர். ஒரு மாஸ் படத்துக்கான ஒன்லைனை சரியாகப் பிடித்திருக்கிறார் விஜய் சந்தர். ஆனால், அடுத்தடுத்த வரிகள்தான் அர்த்தமற்றுப் போகின்றன. ‘`எப்படி மேல வந்தேன்னு மேல வந்தவன்கிட்ட கேட்குற... கீழ இருக்கறவன்கிட்ட கேளுடா’’ எனச் சில வசனங்கள் ஷார்ப். ஆனால், காட்சி அமைப்புகளிலும், திரைக்கதையிலும் சோதிக்கிறார் இயக்குநர். அனல் அரசுவின் சண்டைக்காட்சிகள் ஆக்‌ஷன் படத்துக்கான பில்டப்பைக் கூட்டுகின்றன. 150 நிமிடங்களுக்கு நீளும் படத்துக்குக் கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம் எடிட்டர் பிரவீன்.

விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ்
விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ்

சினிமாக்களைத் தொடர்ந்து பார்க்கும் சங்கத் தமிழர்கள் அப்டேட் ஆகிவிட்டார்கள் என்பதை இயக்குநர்கள் புரிந்துகொள்ளுதல் நலம்!