Published:Updated:

நம்பிக்கையோட வேண்டிக்கிட்டா, எந்த தெய்வமும் கை கொடுக்கும்!''- இயக்குநர் சந்தானபாரதி

இயக்குநர் சந்தானபாரதி ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான ஆன்மிக ஆர்வலர். அவர் தன் ஆன்மிக அனுபவங்களை இங்கே விவரிக்கிறார்.

சந்தானபாரதி
சந்தானபாரதி

80-களில் வெளிவந்திருந்தாலும் இன்றும் சினிமா ஆர்வலர்களால் பாராட்டப்படும் திரைப்படம் 'பன்னீர் புஷ்பங்கள்'. இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் இயக்கம் 'பாரதி வாசு' என்றிருக்கும். அதிலிருக்கும் பாரதிதான் சந்தானபாரதி, வாசு என்பது இயக்குநர் பி.வாசு. பின்னர் இவர்கள் தனித்தனியாகப் பிரிந்து பல வெற்றிப்படங்களை இயக்கினர். சந்தானபாரதி, 'கடமை, கண்ணியம் கட்டுப்பாடு', 'குணா', 'மகாநதி', 'சின்ன மாப்ளே' ஆகிய படங்களை இயக்கினார். கரகாட்டக்காரன், மைக்கேல் மதன காமராஜன், அன்பேசிவம் ஆகிய படங்களில் நடிகராகவும் புகழ்பெற்றார். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான ஆன்மிக ஆர்வலர். அவர் தன் ஆன்மிக அனுபவங்களை இங்கே விவரிக்கிறார்.

சந்தானபாரதி
சந்தானபாரதி

''நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மயிலாப்பூர்தான். வீட்டுக்குப் பக்கத்திலயே இருந்ததால சாய் பாபா கோயிலுக்கு அடிக்கடி போவேன். படிச்சதெல்லாம் மயிலாப்பூர் பி.எஸ்.ஸ்கூல்லதான். அப்புறம், பிரசிடென்சி காலேஜ்ல பி.ஏ படிச்சேன். படிக்கிற காலத்துலயே நெத்தியில விபூதி பட்டை, குங்குமம் வெச்சிக்கிட்டுத்தான் கிளாஸுக்குப்போவேன். இன்னிவரைக்கும் நெத்தியில விபூதி, குங்குமம் வைக்காம இருக்க மாட்டேன்.

காலேஜ்ல படிக்கிற காலத்துல நான், ராதாரவி, ஜூனியர் பாலையா எல்லோரும் ஒரு செட்டா சுத்துவோம். என்கூட இருந்த நண்பர்களெல்லாம் சபரிமலைக்கு அடிக்கடி மாலை போட்டுப் போவாங்க. எனக்கும் மாலை போட்டுக்கிட்டு சபரிமலைக்குப் போகணும்னு ஆசை. வீட்டுல சொன்னப்போ எங்க அண்ணன், 'அதெல்லாம் வேணாம்டா'னு சொன்னார். அதுக்குக் காரணமும் இருந்துச்சு. எங்க அப்பா ஒருமுறை சபரிமலைக்குப் போனப்போ, அவர் மலையில இருந்த சமயத்துல எங்க அம்மா இறந்துட்டாங்க. அதனால, 'சபரிமலைக்கு மாலை போடலாம்'னு சொன்னாலே 'வேணாம்'னு சொல்லிடுவாங்க. நானும் 'சரி'ன்னு விட்டுடுவேன்.

சந்தானபாரதி
சந்தானபாரதி

ஒவ்வொரு வருஷமும் ஃப்ரெண்ட்ஸ்ங்க மாலை போடுவாங்க. ஒவ்வொரு சாமி வீட்டுலயும் தினம் ஒருவரோட வீட்டுல மண்டல பூஜையும் அன்னதான விருந்தும் நடக்கும். நான் மாலை போடலைன்னாகூட ஃப்ரெண்ட்ஸ்ங்ககூட போவேன். சாமி கும்பிடுவேன். அவங்ககூடவே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு பேசிட்டு இருந்துட்டு வருவேன்.

ஒரு தடவை யாரோ ஒருவர், 'இவர் என்ன மாலை போடாமலே சாமிங்ககூட உட்கார்ந்து சாப்பிடுறார்'னு சொல்லிட்டார். அது என் காதுல விழவும் ஒரு மாதிரி ஆகிடுச்சு. மறுநாள் அதை ஒரு ஃப்ரெண்ட் ஒருத்தன்கிட்ட சொன்னேன். 'நீயும் வாடா போலாம், ப்ளீஸ்டா'னு சொல்லி லஸ் கார்னர்ல இருக்கிற நவசக்தி விநாயகர் கோயில்ல வெச்சி மாலை போட்டுவிட்டுட்டான். நானும் விரதமிருந்தேன். காலையிலயே குளிக்கணும் பஜனைகள்ல கலந்துக்கணும். சாயங்காலம் ஐயப்பன் பாட்டு, சரண கோஷம், அன்னதானம்னு நாள்கள் ஓடிக்கிட்டே இருந்துச்சு.

சந்தானபாரதி
சந்தானபாரதி

சரியா இருமுடிகட்டி மலைக்குப் போறன்னிக்குப் பார்த்து, சரியான காய்ச்சல் வந்துடுச்சு. இருமுடி கட்டும்போதுகூட கண்கள் கலங்க வலியோடயே கட்டிக்கிட்டேன். போற வழியில உள்ள கோயில்களையெல்லாம் கும்பிட்டுகிட்டே போக வசதியா வேன் ஏற்பாடாகியிருந்தது. எனக்கு உடம்பு சரியில்லாம இருந்ததால, நான் கோயில்களுக்குப் போகாம வேன்லயே இருந்துட்டேன்.

குருவாயூருக்கு வேன் வந்துச்சு. டைரக்டர் தசரதன் சாரும் எங்க குரூப்லதான் வந்திருந்தார். 'ஏன் இப்படி இருக்கே?'னு கேட்டுட்டு 'என்கூட வா'னு கூட்டிட்டு, சாமிப் படங்கள் விற்கிற ஒரு கடைக்குப் போனார். அந்தக் கடைக்காரர் எங்களை அவரோட கடைக்குள்ள இருந்த பூஜை அறைக்குக் கூட்டிட்டு போனார். அங்கிருந்த சாமிப் படங்களுக்குத் தீபாராதனை காட்டினதோட நெத்தியில விபூதியைப் பூசிவிட்டார். கொஞ்சம் விபூதியை வாயில போட்டு அப்படியே விழுங்கச் சொன்னார். அங்கிருந்து புறப்பட்டு குருவாயூர் கிருஷ்ணனைக் கும்பிட்டுட்டு வேனுக்குள்ள வந்து உட்கார்ந்தேன். குபீர்னு வியர்த்துக் கொட்டுச்சு. காய்ச்சல், ஜலதோஷம், உடம்பு வலி எல்லாம் என்னை விட்டுப் போயிடுச்சு. அதுக்கு அப்புறமா 5 நாள்கள் யாத்திரை நல்லபடியா நடந்து முடிஞ்சது. அப்போதான் ஐயப்பனோட மகிமையை உணர்ந்தேன். அதுக்குப் பிறகு 18 வருஷம் சபரிமலைக்குப் போனேன். இப்போ உடம்பு வெயிட் போட்டுட்டதால அதிகம் போறதில்ல.

சந்தானபாரதி மகனுடன்
சந்தானபாரதி மகனுடன்
Vikatan

அதேமாதிரி பாண்டிச்சேரி அரவிந்தர் அன்னை ஆசிரமத்துக்கும் அடிக்கடி போவேன். அங்கே போனாலே மனசுல இருக்கிற பாரமெல்லாம் குறைஞ்சிடும். நந்தனம் சி.ஐ.டி நகர்ல 'அன்னை தியான மையம்'னு ஒண்ணு இருக்கு. அங்கயும் அடிக்கடி போவேன். ஒருதடவை 'சின்னமாப்ளே' பட ஷூட்டிங் குன்னூர்ல நடந்துச்சு. 'காட்டுக் குயில் பாட்டு சொல்ல' பாடலை பிரபு, சுகன்யாவை வெச்சு ஷூட் பண்ண ஏற்பாடு. ஆனா, மழை விடவே இல்லை. தொடர்ந்து பெய்தது. யூனிட் மொத்தமும் மழை விடணும்னு காத்துக்கிட்டிருக்கோம். ஆனா, மழை விடற மாதிரி தெரியலை.

சந்தானபாரதி
சந்தானபாரதி

பாண்டிச்சேரி மதர் படத்தை நான் எப்பவும் கையிலயே வெச்சிருப்பேன். அன்னிக்கு ராத்திரி மௌனமா பிரேயர் பண்ணினேன். காலையில மழை நின்னுடுச்சு. தொடர்ந்து நான்கு நாள்கள் ஷூட்டிங். எந்தத் தொல்லையும் இல்லாம நடந்து முடிஞ்சுது. சரியா நாங்க புறப்படுற அன்னிக்குத் திரும்ப மழை பிடிச்சிக்குச்சு. 'அதிலிருந்து ஒரு வாரம் மழை விடவே இல்லை'னு நாங்க தங்கியிருந்த ஹோட்டல் உரிமையாளர் சொன்னார். நம்பிக்கையோட பிரேயர் பண்ணினோம்னா, இந்தத் தெய்வம்னு இல்ல எந்தத் தெய்வமும் கை கொடுக்கும். இப்போதும் திருவான்மியூர்ல என் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற மருந்தீஸ்வரர் கோயிலுக்கு தினம் போவேன். இந்த சாமி... இந்தக் கோயில்தான்னு இல்ல, எல்லா சாமியையும் கும்பிடுவேன். நம்பிக்கையும் முயற்சியும்தானே வாழ்க்கை'' என்கிறார் சந்தானபாரதி எந்தச் சலனமும் இல்லாமல்.