Published:Updated:

சபாபதி விமர்சனம்: சந்தானம் கவுன்ட்டரே கொடுக்காத காமெடி படம்... ஃபீல்குட் டிராமாதான், ஆனாலும்..!

சபாபதி

'அம்பி' விக்ரமாக இருக்கும் சந்தானத்தின் வாழ்வில் 'விதி' நுழைந்துவிட, அதனால் உண்டாகும் பல்வேறு களேபரங்களும், திருப்பங்களும்தான் இந்த 'சபாபதி'.

சபாபதி விமர்சனம்: சந்தானம் கவுன்ட்டரே கொடுக்காத காமெடி படம்... ஃபீல்குட் டிராமாதான், ஆனாலும்..!

'அம்பி' விக்ரமாக இருக்கும் சந்தானத்தின் வாழ்வில் 'விதி' நுழைந்துவிட, அதனால் உண்டாகும் பல்வேறு களேபரங்களும், திருப்பங்களும்தான் இந்த 'சபாபதி'.

Published:Updated:
சபாபதி
அரியர்ஸை லேட்டாக முடித்துவிட்டு அதைவிட லேட்டாக வேலைத் தேட முயன்றுகொண்டிருக்கிறார் 'சபாபதி' சந்தானம். பேசும்போது திக்கும் பிரச்னை, அப்பாவுடன் அக்கப்போர், எதிர்த்த வீட்டு 'சாவி'த்திரியுடன் காதல், அம்மா, தங்கை சென்டிமென்ட் என நகரும் கதையில் திடீரென விதி நுழைந்து பல்வேறு திருப்பங்களை நிகழ்த்தினால்..? அந்த விதி 'சபாபதி'யை என்னவெல்லாம் பாடுபடுத்தியது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

'சபாபதி'யாக சந்தானம், ஆச்சர்யமூட்டும் விதமாக ஓர் இயக்குநரின் நடிகராக வந்திருக்கிறார். கேப்பே விடாத கவுன்ட்டர்கள்தான் அவரின் ஆகச்சிறந்த பலம் எனும்போது, துணிந்து அதைத் தூரவைத்துவிட்டு, திக்குவாய் பிரச்னை கொண்ட மனிதராக வந்துபோகிறார். அதே சமயம், இந்த அப்பாவி சபாபதி, குடித்த பிறகு அப்பாவை வைத்து அடிக்கும் லூட்டிகள் அதிரடி சிரிப்பு வெடி. குறிப்பிட்டுச் சொல்லும்படி, எமோஷன் காட்சிகளிலும் ஒரு நடிகனாக மெருகேறியிருக்கிறார். இப்படியான 'அண்டர்பிளே' ரோல்களை அவ்வப்போது செய்யலாமே சாண்டா?!

சபாபதி
சபாபதி

ஸ்ட்ரிக்ட் தமிழ் வாத்தியார் எம்.எஸ்.பாஸ்கர், அப்பாவாகவும் அதே கண்டிப்புடன் அதகளம் செய்கிறார். ஒரு சில காமெடிகள் எக்ஸ்பைரியானவை என்றாலும் இவரின் நடிப்பு அவற்றையெல்லாம் பாஸ் மார்க் பெற வைக்கிறது. கதாநாயகி ப்ரீத்தி வர்மாவுக்கும் பெரிய வேலையில்லை, பெரிதாக எதிர்பார்த்த 'குக் வித் கோமாளி' புகழுக்கும் வேலையில்லை. டெரர் வில்லனாக மிரட்ட மட்டுமே செய்கிறார் வம்சி. ஏதாவது செயலிலும் இறங்கியிருக்கலாம். இன்னொரு வில்லனாக ஷாயாஜி ஷிண்டே மட்டும் கொஞ்சம் சீரியஸ் முகம் காட்டுகிறார். உமா பத்மநாபன், லொள்ளு சபா சுவாமிநாதன், மாறன் உள்ளிட்ட பலர் அட்டென்டஸ் மட்டுமே போடுகின்றனர். ஆனால், சிரிப்பும் காட்டவில்லை, சென்டிமென்ட்டும் காட்டவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அறிமுக இயக்குநர் ஶ்ரீனிவாச ராவ், தான் எடுத்துக்கொண்ட 'விதி' எனும் பேன்டஸி முடிச்சுக்கு ஏற்ற பலமானதொரு திரைக்கதையை அமைத்திருக்கிறார். 'வழக்கமாக' நகரும் முதல் பாதியின் இறுதியில் காமெடியை அள்ளித் தெளித்து, விட்டதைப் பிடித்திருக்கிறார். கிளைமாக்ஸிலும் ஒரு ஸ்ட்ராங்கான மெசேஜ் சொல்லி சந்தானம் சந்தித்த 'சைடு ஸ்டாண்டு' சர்ச்சைக்கு ஓரளவேனும் பிராயசித்தம் தேடியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய மைனஸ், ஒரு சில காமெடி காட்சிகள் எல்லையை மீறியதுதான். சந்தானம் பெரிதாக கவுன்ட்டரே கொடுக்காததாலோ என்னவோ பெரிதாகப் பாடி ஷேமிங் காட்சிகளோ, பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளோ இடம்பெறவில்லை. ஆனால், முதல் பாதியில் முடிந்த காமெடிக்குத் திருவிழா எடுக்கிறேன் என இரண்டாம் பாதியில் ஆபாசத்தைத் தொட்டிருப்பது நெருடல். அதிலும் இளவயது மனைவியைச் சந்தேகிக்கும் வயதான கணவன் எனும் அபத்தமான கான்செப்டை எல்லாம் இன்னமும் எத்தனை நாள்களுக்கு காமெடி என விற்பார்கள் என்றே தெரியவில்லை. போதும் பாஸு!

சபாபதி
சபாபதி

திக்கும் பிரச்னை இருப்பவர்கள் சந்திக்கும் அவமானங்களைத் தெளிவாகக் காட்சிப்படுத்தி எமோஷனல் மைலேஜ் எடுத்திருந்தாலும், ஒருவர் இத்தனை அப்பாவியாகவா இருப்பார்?! வெகுளித்தனம் நிறைந்த 'சபாபதி'யின் முதிர்ச்சியற்ற தன்மைதான் படத்தின் மிகப்பெரிய மைனஸ். திக்கும் பிரச்னையுள்ள சாதாரணமான, தெளிவான மனிதராகவே கதையைக் கொண்டு சென்றிருக்கலாமே!

சாம் சி.எஸ்-ஸின் பாடல்கள் பெரிதாகத் தாளம்போட வைக்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார். பல காட்சிகளை அவரின் இசைதான் தாங்கி நிற்கிறது, மெருகும் ஏற்றியிருக்கிறது. லியோ ஜான் பால் தேவையற்ற சில 'காமெடி' காட்சிகளுக்கு இன்னும் தயங்காமல் கத்திரி போட்டிருக்கலாம்.

சபாபதி
சபாபதி
மொத்தத்தில், சந்தானம் தன் வழக்கமான டெம்ப்ளேட்டிலிருந்து வெளியே வந்து, ஒரு ஃபீல்குட் என்டெர்டெயினர் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார். அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டிருக்கிறார். ஆஹா, ஓஹோ சிரிப்பு சரவெடியாகப் படம் இல்லாவிட்டாலும், தன்னளவில் ஒரு நிறைவான பொழுதுபோக்கு படமாக பாஸாகிறான் இந்த 'சபாபதி'.