Published:Updated:

``விஜயகாந்த் சொன்னார்... `அப்படியா சொன்னார்'னு ஆச்சர்யப்பட்டார் வடிவேலு!" -`சாரைப்பாம்பு' சுப்புராஜ்

`சாரைப்பாம்பு' சுப்புராஜ்
`சாரைப்பாம்பு' சுப்புராஜ்

``இதுவரை 18 இயக்குநர்களிடம் 49 படங்களுக்கு இணை இயக்குநராக வேலை பார்த்திருக்கேன். சென்னை வந்ததுல இருந்து எனக்குத் தினமும் மதிய சாப்பாடு போட்டவர், விஜயகாந்த்."

வடிவேலு கூட்டணியில் முக்கியமான காமெடி நடிகர், 'சாரைப்பாம்பு' சுப்புராஜ். சினிமாவில் பேசும் வசனம், மாடுலேஷனில் அசால்டாக அப்ளாஸ் வாங்கிச் செல்லும் சுப்புராஜ், சினிமாவுக்கு வந்து 43 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ்த் திரைப்படங்களில் உதவி இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர், காமெடி நடிகர் என்று பன்முகம் கொண்ட சுப்புராஜிடம் பேசினோம்.

''முதன்முதலாக 'கிழக்கே போகும் ரயில்' படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். என்னை சென்னைக்கு வரவழைத்து சினிமாவில் பாரதிராஜாவிடம் கொண்டு வந்து சேர்த்தவர், கவியரசு கண்ணதாசன்.

`சாரைப்பாம்பு' சுப்புராஜ்
`சாரைப்பாம்பு' சுப்புராஜ்

இதுவரை 18 இயக்குநர்களிடம் 49 படங்களுக்கு உதவி, இணை இயக்குநராக வேலை பார்த்திருக்கேன். சென்னை வந்ததுல இருந்து எனக்குத் தினமும் மதிய சாப்பாடு போட்டவர், விஜயகாந்த். எனக்கு மட்டுமல்ல, என்னைப்போல ஏராளமான உதவி இயக்குநர்கள் அவரைப் பெற்ற அம்மா, அப்பாவைவிட உயர்ந்த இடத்துல உட்காரவெச்சு அழகு பார்த்தோம். ராஜ்கிரண் ஆபீஸில் 15 வருடங்கள் வேலை செய்தேன். ராஜ்கிரண், மீனா நடித்த 'என் ராசாவின் மனசுல' படத்துல நான் இணை இயக்குநர். அந்தப் படத்துல வடிவேலு பேசவேண்டிய வசனத்தை நான்தான் அவருக்குச் சொல்லிக்கொடுத்து நடிக்க வெச்சேன்.

``என்ன செய்வேன்... என் அடுத்த படத்துல கிருஷ்ணமூர்த்தி இருந்தாரே!'' - வடிவேலு

சினிமாவில் பல வருடப் போராட்டத்துக்குப் பிறகு, 'புண்ணிய விதி' என்ற படத்தை இயக்க ஒப்பந்தமானேன். அந்தப் படத்தோட படப்பிடிப்பு முடிந்து ரீ-ரெக்கார்டிங் நடந்துகிட்டிருந்தப்போ, திடீர்னு அதில் ஹீரோவா நடிச்சவரை யாரோ கொலை பண்ணிட்டாங்க. அதோடு, அந்தப் படம் நின்னுபோயிடுச்சு. 1998-ம் வருடம் அந்தக் கொலைக்குப் பிறகு, போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம்னு 2005 வரை யாரோ செய்த கொலைக்கு நான் நாயாக அலைந்தேன். கடைசியில அந்தப்படத்தின் ஹீரோவைக் கொலை செய்தது, அவரோட உடன் பிறந்த தம்பிதான்னு கண்டுபிடிச்சிட்டாங்க." என்றவர், தொடர்ந்தார்.

"சினிமாவுல ஏழு வருடம் என்னோட வாழ்க்கை வீணாப் போயிடுச்சு. பிறகு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கிய 'ராஜஸ்தான்' படத்துக்கு வடிவேலு நடிக்கும் காமெடிப் பகுதிக்கு வசனம் எழுதுறதுக்கும், வடிவேலுகூட நடிக்கிறதுக்கும் என்னை அழைச்சார். 'என் ராசாவின் மனசுல' படத்துக்குப் பிறகு 'ராஜஸ்தான்' படத்துல இருந்து வடிவேலுவோடு நானும் கூட்டணி சேர்ந்து நடிச்சுக்கிட்டிருக்கேன். சினிமாவுல உதவி இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர்னு எல்லாத்திலேயும் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு உழைச்சுப் பார்த்துட்டேன். ஒரு விடியலும் கிடைக்கல. வடிவேலுகூட சேர்ந்து நாலு படத்துல நடிச்சதாலதான், மக்களுக்கு என்னுடைய முகம் தெரியுது. அதுக்குக் காரணமான வடிவேலுவை வாழ்நாள் பூராவும் மறக்கமாட்டேன்.

`சாரைப்பாம்பு' சுப்புராஜ்
`சாரைப்பாம்பு' சுப்புராஜ்

ஜெயலலிதா 2013-ல் ஆட்சியில் இருந்தப்போ, கேப்டன் எதிர்க்கட்சித் தலைவரா இருந்தார். ஒருநாள் சாலிக்கிராமம் கண்ணம்மாள் தெருவுல அவர் வீட்டைத் தாண்டி இருக்கிற நடிகர் விஜய் வீட்டுகிட்ட நடந்து போயிக்கிட்டிருந்தேன். அப்போ, எனக்குப் பின்னால பயங்கர வேகமா என்னை மோதுற மாதிரி ஒரு கார் வந்து நின்னுச்சு. 'ஏய்... யார்யா அறிவு இல்லையா'னு நான் கோபமா கத்துறேன். அந்த கார் கண்ணாடியை லேசா இறக்கி என்னைப் பார்த்துச் சிரிச்சார், கேப்டன் விஜயகாந்த்.

'டேய் சுப்புராஜ். சினிமாவுல எவன் நடிச்சாலும் சிரிப்பே வரமாட்டேங்குது. காமெடியில நடிக்கிறதுக்கு ஆளே இல்லாம போரடிக்குது. பேசாம வடிவேலுவை சினிமாவுல நடிக்கச் சொல்லுடா'ன்னு சொன்னார். 'ஏன் அவரை ஆளைவெச்சு அடிக்கிறதுக்கா'னு நான் பதில் சொன்னேன். 'டேய் வடிவேலு நல்ல நடிகன்டா. அவரை நான் ஒண்ணும் செய்யமாட்டேன்டா. நான் சொன்னேன்னு வடிவேலுகிட்ட சொல்லு'னு பேசிட்டுப் போயிட்டார். இதுபோல பெரியமனசு கேப்டனைத் தவிர வேற யாருக்கும் வராது. உடனே வடிவேலு ஆபீஸுக்குப் போனேன்.

Vadivelu - Vijayakanth
Vadivelu - Vijayakanth

ரொம்பநாள் கழிச்சு என்னைப் பார்த்ததுல வடிவேலுவுக்கு சந்தோஷம். விஜயகாந்த் என்கிட்ட சொன்னதை அப்படியே வடிவேலுகிட்டே சொன்னேன். 'என்னடா சொல்ற, சும்மா அடிச்சு விடுறியா... நெசமாதான் சொல்றியா. உண்மையிலேயே கேப்டன் என்னை நடிக்கச் சொன்னாரா'ன்னு ஆச்சர்யமா கேட்டார். ரெண்டுமாசம் கழித்து கேப்டன் பிறந்தநாள் அன்னைக்கு அவரைச் சந்திச்சேன். அப்போகூட, 'ஏன்டா சுப்புராஜ் நான் சொன்னதை வடிவேலுகிட்டே சொல்லலையா..'ன்னு மறுபடியும் அன்பாகச் சொன்னார்'' என்று நெகிழ்ந்தார், சுப்புராஜ்.

அடுத்த கட்டுரைக்கு