Published:Updated:

"ஸ்டூடியோக்கள் இல்லைன்னா இளையராஜாவே இல்லை!" - சாரதா ஸ்டூடியோ ஜெயந்தி கண்ணப்பன்

இளையராஜா
இளையராஜா

திறப்பு விழாவின் போது பத்திரிகையாளர்களிடம் இளையராஜா பேசிய சில வார்த்தைகள் ஸ்டூடியோ உரிமையாளர்களின் குடும்பத்தினர் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரசாத் ஸ்டூடியோவுடன் பிரச்னை உருவானதைத் தொடர்ந்து, சென்னையில் சில தினங்களுக்கு முன் தனக்காகத் தன் பெயரிலேயே தனியாக ஒரு ஸ்டூடியோவை அமைத்து அதில் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.

திறப்பு விழாவின்போது பத்திரிகையாளர்களிடம் இளையராஜா பேசிய சில வார்த்தைகள் ஸ்டூடியோ உரிமையாளர்களின் குடும்பத்தினர் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசினார் 'சாரதா' ஸ்டூடியோ நிறுவனரான ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி ஏ.எல்.எஸ் கண்ணப்பன்.

" 'சென்னையிலிருந்த எத்தனையோ ஸ்டூடியோக்கள் இன்னைக்குக் காணாமப் போயிடுச்சு. அந்த வரிசையில் பிரசாத் ஸ்டூடியோவும் காணாமப் போகணும்னுதான் நான் அங்க இருந்து வெளியில வந்திருக்கேன்'னு பேசியிருக்கார் அன்புச் சகோதரர் இளையராஜா. பிரசாத் ஸ்டூடியோவுக்கும் அவருக்குமான பிரச்னை குறித்து நாங்கள் எதையும் பேச விரும்பலை. ஆனா 'அந்தக் காலத்துல ஓஹோனு இருந்த ஸ்டூடியோக்களின் பெயரைக் குறிப்பிட்டு, எல்லாம் இன்னைக்கு இல்லாமப் போச்சு'ங்கிறார்.

சாரதா ஸ்டூடியோ ஜெயந்தி கண்ணப்பன்
சாரதா ஸ்டூடியோ ஜெயந்தி கண்ணப்பன்

பரபரப்பா இருந்த ஸ்டூடியோக்கள் இன்னைக்கு இல்லைன்னா அது காலத்தின் கட்டாயம். தொழிலாளர்கள் பிரச்னை, நவீன கேமராக்களின் வருகையால் திரைப்படங்கள் வெளிப்புறங்களுக்குச் சென்றது எனப் பல காரணங்களைச் சொல்லலாம். அதற்காக ஸ்டூடியோ உரிமையாளர்கள் நலிஞ்சு, நொடிச்சுப் போய் பரிதாபமான நிலையில் எல்லாம் இன்னைக்கு யாரும் இல்லை.

மாடர்ன் தியேட்டர்ஸ், ஏவிஎம், விஜயவாஹினுன்னு பார்க்கிறதுக்கே ஒருவித கம்பீரமான தோற்றத்துடன், வாசல்ல வந்து நிக்கிறதுக்கே தயங்கின‌ ஸ்டூடியோக்கள்லாம் இன்னைக்கு முன்னேமாதிரி முழுவீச்சுல இல்லாமப் போயிருக்கலாம். ஆனால் அந்த ஸ்டூடியோக்கள்ல நிகழ்த்தப்பட்ட சாதனைகள் ஒருநாளும் மறக்க முடியாதவை. எங்களுடைய சாரதா 11 ஏக்கர் பரப்புல பரந்து விரிந்திருந்த ஸ்டூடியோ. சாரதா படம் ஜனாதிபதி பதக்கம் வாங்கினதால என்னுடைய மாமனார் வீட்டுக்கும் அலுவலகத்துக்குமே கூட 'சாரதா'ங்கிற பெயரையே வச்சார். ஆனாலும் நாங்களே 'திருடாதே'ங்கிற படத்தை பரணி ஸ்டூடியோவுலயும் எடுத்திருக்கோம். அரசியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த படம் அது.

இளையராஜா ஸ்டூடியோ
இளையராஜா ஸ்டூடியோ

ஏன், டிவியை முதன்முதலாக் காட்டிய 'பட்டணத்தில் பூதம்' படம் ஸ்டூடியோவுல எடுக்கப்பட்ட படம்தான். ஸ்டூடியோக்களின் சாதனைகளுக்கு இப்படி நிறையச் சொல்லிட்டே போகலாம். சினிமாக் கனவுகளுடன் சென்னைக்குப் படையெடுத்த எவ்வளவோ திறமையான இளைஞர்களின் வாழ்க்கை இந்த ஸ்டூடியோக்களுக்கு வந்தவுடன் மாறியிருக்கு. இதெல்லாம்தான் வரலாறு. இந்த சரித்திரத்தைக் கொச்சைப்படுத்திப் பேசறது அப்படிப்பட்ட ஸ்டூடியோக்களை நிறுவியவர்களின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவது போலத்தான். இதை எங்களால ஏத்துக்க முடியாது. ஸ்டூடியோக்கள் இல்லைன்னா இளையராஜாவே இல்லை!

`எப்படி எப்படியோ இருந்தவங்கல்லாம் இன்னைக்கு காணாமப் போயிட்டாங்க'னு சொல்றப்ப அந்த வார்த்தைகள், இன்னைக்கும் அந்த பசுமையான நினைவுகளைச் சுமந்துகிட்டிருக்கிற அந்த ஸ்டூடியோக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவங்களை ரொம்பவே காயப்படுத்தும்னு இளையராஜா அவர்கள் யோசிச்சுப் பேசியிருக்கணும்.'' என்றார் ஜெயந்தி கண்ணப்பன்.

அடுத்த கட்டுரைக்கு