சினிமா
தொடர்கள்
Published:Updated:

சர்தார் - சினிமா விமர்சனம்

சர்தார் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்தார் - சினிமா விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஏறுமயிலேறி' பாடல் மட்டுமே ரசிக்க வைக்கிறது. பாடல்களில் ஜி.வி.பி தவற விட்டாலும் பின்னணி இசை விறுவிறுப்புக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதைச் சொல்லும் படம்.

‘சர்தார்' என்னும் ரகசியப்பெயர் கொண்ட போஸ் (அப்பா கார்த்தி), தேசியப் பாதுகாப்பு ஆலோசகரைக் கொலை செய்து தேசத்துரோகி ஆகிறார். அந்தக் களங்கத்தைச் சுமந்து மருகும் காவல்துறை அதிகாரி விஜய்பிரகாஷ் (மகன் கார்த்தி), பரபரப்பு பப்ளிசிட்டி மூலம் அந்தப் பிம்பத்தை மாற்ற முயல்கிறார். ஒருகட்டத்தில் சதிச்செயலை முறியடித்துத் தன் வாழ்நாள் களங்கத்தைத் துடைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. ஆனால் அதன் பகீர் பின்னணிகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது நீளும் கதை.

எப்போதும் விளம்பர வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் காவல்துறை அதிகாரி, சாகசங்களில் ஈடுபட்டு செயற்கரிய செயல்களைச் செய்தாலும் தன் அடையாளங்களை அழித்துக்கொள்ளும் உளவாளி என்று இருவேடங்களில் கார்த்தி. காவல்துறை அதிகாரி விஜய்பிரகாஷாக வழக்கம்போல் கலகலப்புக் கார்த்தி. ஆனாலும் அதிகம் கவர்வது என்னவோ ‘சர்தார்' கார்த்திதான். இறுக்கமான முகத்துடன் உலா வருவது, வயதானாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அனலைக் கிளப்புவது என்று ஒட்டுமொத்தப் படத்தைத் தூக்கிச் சுமக்கிறார்.

சர்தார் - சினிமா விமர்சனம்

ராஷிகண்ணாவுக்குப் பெரிதாக நடிப்பதற்கும் வாய்ப்பில்லை; பாத்திரப்படைப்பும் முழுமையாக இல்லை. ரெஜிஷா விஜயன் பிளாஷ்பேக் காட்சிகளில் தன்னைச் சிறிதளவிலேனும் பதிய வைத்துக்கொள்கிறார். லைலா நம் மனதுக்குள் அழுத்தமாகப் பதிவதற்கு முன்பே கொல்லப்பட்டுவிடுகிறார். வில்லனாக வரும் சங்கி பாண்டே, பல காட்சிகளில் ரகுவரனின் சாயல். இதுபோக இளவரசு, யூகிசேது முதல் ஏராளமான நடிகப்பட்டாளம் இருந்தாலும், லைலாவின் மகனாக வரும் ரித்விக் துடுக்கான பேச்சுகளால் கவர்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஏறுமயிலேறி' பாடல் மட்டுமே ரசிக்க வைக்கிறது. பாடல்களில் ஜி.வி.பி தவற விட்டாலும் பின்னணி இசை விறுவிறுப்புக்குப் பலம் சேர்த்திருக்கிறது. ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு, ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசம். சண்டைக்காட்சிகளில் உண்மையாகவே நெருப்புப்பொறி பறக்கவிட்டிருக்கிறார் திலீப் சுப்பராயன். இரண்டு வெவ்வேறு இடங்களில் நடக்கும் சண்டைகளைக் கோத்து ஒரே காட்சியில் காட்டும் உத்தி கவர்கிறது.

உளவாளிகளின் வாழ்க்கை, எந்தச் சாதனையைச் செய்தாலும் அங்கீகாரமோ அடையாளமோ இல்லாமல் வாழும் தியாகம், எதிரி முகாம்களுக்குள் நுழைந்து செய்யும் சாகசம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு வாழ்த்துகள். ஆனால் சர்வதேச நீதிமன்றத்தில் வாட்டர் கம்பெனி முதலாளி சங்கி பாண்டே இந்தியாவின் சார்பாக வாதாடுவது, அதை நீதிமன்றமும் ஏற்பது, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ரா அலுவலகத்தில் நுழைந்து இஷ்டத்துக்கு உத்தரவுகள் போடுவது, தண்ணீர் தனிமார்மயத்துக்கு சீனச்சதி சாயம் பூசுவது என்று ஏகப்பட்ட அபத்தங்கள் அணிவகுக்கின்றன.

இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மையைக் கூட்டியிருந்தால் சந்தோஷமாக சர்தாருக்கு சல்யூட் செய்திருக்கலாம்.