Published:Updated:

“எந்த உயரத்துக்குப் போனாலும் எங்களைப் பாக்குற பார்வை மாறாது!”

மனைவியுடன் தமிழ்
பிரீமியம் ஸ்டோரி
மனைவியுடன் தமிழ்

வடசென்னைப் பூர்வகுடின்னாலும் ஓரளவுக்கு வசதியான குடும்பம் தாண்ணா. தாத்தா, அப்பால்லாம் கப்பல்ல சீமேனா இருந்தாங்க.

“எந்த உயரத்துக்குப் போனாலும் எங்களைப் பாக்குற பார்வை மாறாது!”

வடசென்னைப் பூர்வகுடின்னாலும் ஓரளவுக்கு வசதியான குடும்பம் தாண்ணா. தாத்தா, அப்பால்லாம் கப்பல்ல சீமேனா இருந்தாங்க.

Published:Updated:
மனைவியுடன் தமிழ்
பிரீமியம் ஸ்டோரி
மனைவியுடன் தமிழ்

`` ‘மாமன்னன்’ ஷூட்டிங்ல வடிவேலு அண்ணன்கிட்ட போய் ‘உங்களை நான் அடிச்சிருக்கேண்ணே'ன்னு சொன்னேன். ‘எப்பய்யா'ன்னு கேட்டுட்டு `மருதமலை’ ஏட்டு ஏகாம்பரம் மாதிரியே யோசிச்சார். ‘வக்கீல் வண்டுமுருகனை அஞ்சுபேர் தூக்கிட்டுப் போய் அடிச்சோமே... அதுல நானும் ஒரு ஆள்'னு சொன்னேன்... கட்டிப்பிடிச்சு சிரிச்சுட்டார் அண்ணன்.’’

சிலிர்ப்பாகப் பேசுகிறார் தமிழ். தமிழ்வாணன் என்ற பெயரே அவருக்கு மறந்துபோய்விட்டது. நண்பர்களேகூட ‘மீரான்’ என்றே அழைக்கிறார்கள். ‘‘பெரிய கொடுப்பினைண்ணா அது. எல்லாரும் என்னை அடியாளாதான் பாத்துக்கிட்டிருந்தாங்க. ரஞ்சித் அண்ணாதான் என்னை முதன்முதல்ல நடிகனாப் பாத்தார். ‘உனக்கு என்ன வருதோ அதைச் செய்... அதுதான் எனக்கு வேணும்'னு சொன்னார். அவரு கொடுத்த வாழ்க்கைண்ணா இது...’’ நெகிழ்கிறார் தமிழ்.

“எந்த உயரத்துக்குப் போனாலும் எங்களைப் பாக்குற பார்வை மாறாது!”

தமிழ் ஒரு பாடி பில்டர். செலிபிரிட்டிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஜிம் பாயாகவும் இருந்திருக்கிறார். சினிமா மீதிருந்த ஈர்ப்பில், கூட்டத்தில் நிற்கும் துணை நடிகராக, அடியாளாகச் சென்று கொண்டிருந்தவரை ‘பூலோகம்’ கல்யாணகிருஷ்ணன் அடையாளம் கண்டு உதவி இயக்குநராகச் சேர்த்துக்கொண்டார். ஜனநாதன் தன் கதைவிவாதக் குழுவில் வைத்துக்கொண்டார். ரஞ்சித், ‘சார்பட்டா பரம்பரை’யில் மீரான் ஆக்க, வாழ்க்கையில் வெளிச்சம் பிறந்தது. அடுத்தடுத்து விஜய்சேதுபதி, ஜெயம் ரவிக்கெல்லாம் வில்லனாகும் அளவுக்கு பிஸியாகிவிட்டார் மனிதர்.

‘‘யாரையெல்லாம் பார்த்து வியந்தேனோ, அவங்ககூடல்லாம் நடிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது சாதாரணம் இல்லண்ணா. சினிமாவை உண்மையா நம்புறவனை அது கைவிடுறதில்லை...’’ பிளாஸ்க்கில் இருக்கும் டீயை ஊற்றியபடி முகம் பார்த்துச் சிரிக்கிறார்.

‘‘வடசென்னைப் பூர்வகுடின்னாலும் ஓரளவுக்கு வசதியான குடும்பம் தாண்ணா. தாத்தா, அப்பால்லாம் கப்பல்ல சீமேனா இருந்தாங்க. அப்போ இங்க வீதிக்கு வீதி குத்துச்சண்டை கிளப் இருக்கும். சார்பட்டா பரம்பரைக்கும் இடியாப்ப நாயக்கர் பரம்பரைக்கும் போட்டி நடக்கும். அப்பா போட்டிகளுக்கு ஸ்பான்சர் பண்ணுவார். அதனால ரெண்டு தரப்பும் நம்மகிட்ட அன்பா இருப்பாங்க. எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் வி.எஸ்.மணி வீடு. இடியாப்ப நாயக்கர் பரம்பரையில பெரிய வாத்தியார். சின்ன வயசுல அவர் வீட்டுலதான் கிடப்பேன். அடுத்த தெருவுல வாசு வாத்தியார். அவரு சார்பட்டா பரம்பரை. நான் மணி, வாசு, ரெண்டு பேர்கிட்டயும் குத்துச்சண்டை கத்துக்கிட்டேன்’’ என்கிற தமிழ், சினிமாவுக்கு வந்தது ஒரு சுவாரஸ்ய எபிசோடு.

மனைவியுடன் தமிழ்
மனைவியுடன் தமிழ்

‘‘அன்புன்னு ஒரு நண்பர். அவர்தான் சினிமாவுல நடிக்க வர்றியான்னு முதன்முதல்ல கூப்பிட்டார். ஆசை ஆசையாப் போனேன். 100வது ஆளோட 101வது ஆளா நிறுத்திட்டாங்க. 80 ரூபா சம்பளம். ஷூட்டிங் பாக்குறதே அப்பல்லாம் பெரிய விஷயம். காசும் தந்து, கேமராவும் எடுக்கிறாங்களேன்னு அதுல கவனம் போயிருச்சு. அதுல யாருக்கும் அடிக்காத அதிர்ஷ்டம் எனக்கு அடிச்சுச்சு. ‘புதுப்பேட்டை’ படத்துக்கு ஆள்களைத் தேர்வு பண்ணிக்கிட்டிருந்தாங்க. அதுக்கு அடியாளா பத்துப்பேரு தேர்வாயிருந்தோம். அப்போ ‘சந்திரமுகி’ ஷூட்டிங்கும் நடந்துக்கிட்டிருந்துச்சு. எங்க குரூப்ல இருக்கிற ஒருத்தர் ரஜினி சாரோட பாதுகாப்புக்கு ஜிம் பாயா போகணும். ஆனா அவரையும் புதுப்பேட்டையில நடிக்க அழைச்சுட்டாங்க. அவர் நடிக்கிற ஆசையில ஜிம்பாயா போகமாட்டேன்னு சொல்லிட்டார். ரஜினி சாருக்கு ஆள் அனுப்பணுமே? ரஜினி சாரோட ஜிம்பாயா தேர்வாகியிருந்தவரோட சபாரி டிரஸ் அளவு எனக்கு மட்டும்தான் பொருந்துச்சு. அதனால எனக்கு மாட்டி அனுப்பிட்டாங்க.

லால்பாக் அரண்மனையில ஷூட்டிங். ரஜினி சாருக்கு முன்னால நடக்கப்போறோம்னு ஆசை ஆசையாப் போனேன். ஆனா அரண்மனை வாசல்ல நிக்க வச்சுட்டாங்க. ஷூட்டிங் எந்த திசையில நடக்குதுன்னுகூட தெரியலே. ரஜினி சாரோட காரை மட்டும்தான் பாக்க முடிஞ்சது. ஒருநாள் சிவாஜி புரொடக்‌ஷன் மேலாளர் ஹரி சார், ‘நீ யாருப்பா'ன்னு கேட்டார். நான் ‘ரஜினி சாருக்கு ஜிம் பாயா வந்தேன்'னு சொன்னவுடனே ‘ஏன்யா இங்கே நிக்குறே'ன்னு அவர்தான் சாருக்குப் பக்கத்துல கூட்டிக்கிட்டுப் போய் விட்டார். பெரிய கனவு மாதிரி இருந்துச்சு.

அதுக்குப் பிறகு நிறைய படங்கள்ல நடிச்சேன். அடியாள் அல்லது இன்ஸ்பெக்டருக்குப் பின்னாடி நிக்குற போலீஸ் கேரக்டர்தான். இருந்தாலும் சினிமாவுல இருக்கோம்... பெரிய ஸ்டார்ஸ்கூட நிக்குறோம்ங்கிற திருப்தி மட்டும் இருந்துச்சு’’ - உற்சாகமாகப் பேசுகிறார் தமிழ்.

“எந்த உயரத்துக்குப் போனாலும் எங்களைப் பாக்குற பார்வை மாறாது!”

தமிழின் வாழ்க்கை நகர்வுகள் ஒவ்வொன்றுமே ஒரு திரைப்படத்தின் ஸ்கிரிப்டாக இருக்கின்றன. அவரது காதலும் அப்படித்தான். ஊருக்குள் தொலைபேசி இருந்தது சாந்தி வீட்டிலும் தமிழ் வீட்டிலும்தான். எதிர்பாராமல் ஒரு தொலைபேசி அழைப்பில் இருவரும் இணைய, காதல் பூத்தது.

‘‘சாந்தி வந்தபிறகுதான் வாழ்க்கை மாறுச்சு. ஆரம்பத்துல காட்டுமாடு மாதிரி ஓடிக்கிட்டிருந்தேன். கடமைன்னு எதுவும் இல்லை. வீட்ல யாரும் என்னைப் பெரிசா கேள்வி கேட்க மாட்டாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் அவளுக்குன்னு எதிர்பார்ப்புகள், தேவைகள். சினிமா வாய்ப்புகள் நிரந்தரமா கிடைக்கிறதில்லை. பணமும் நிறைவா கிடைக்காது. சாந்தி கருவுற்றிருந்தபோது மருந்துகளுக்குக்கூட மத்தவங்களை எதிர்பார்க்குற நிலை. இப்படியே ஓடிக்கிட்டிருந்தா சரியா வராதுன்னு கிரேன், போர்க்லிப்ட் ஆபரேட் பண்ணக் கத்துக்கிட்டு துறைமுகத்துக்கு வேலைக்குப் போயிட்டேன். ஓரளவுக்கு சம்பளம் கிடைச்சுச்சு. ஆனாலும் மனசுக்குள்ள சினிமாதான் இருந்துச்சு. சாந்தி, ‘மனசுல கனவை வச்சுக்கிட்டு கஷ்டப்படாதே. நான் குடும்பத்தைப் பாத்துக்கிறேன்... நீ வாய்ப்புகளைப் போய்த் தேடு'ன்னு அனுப்பினா.

‘பூலோகம்' கல்யாணகிருஷ்ணன் அண்ணனைச் சந்திச்சபிறகு வாழ்க்கையில நம்பிக்கை வந்துச்சு. ‘குத்துச்சண்டையை வச்சு ஒரு படம் எடுக்கிறாங்க... அதுக்கு நடிகர்கள் தேவை'ன்னு கேள்விப்பட்டு ஆடிஷன் போனேன். முதல்நாள் ஷூட்ல, ‘பாக்ஸிங் பத்தி யாருக்கு என்ன தெரிஞ்சாலும் எனக்குச் சொல்லலாம்'னு அண்ணன் அவரோட போன் நம்பர் கொடுத்தார். வாத்தியார் இறக்குற சீன் எடுத்துக்கிட்டிருந்தாங்க. அப்போ அண்ணன்கிட்ட போய் அதுல சில விஷயங்களைச் சேக்கணும்னு சொன்னேன். மறுநாள் என்னை அழைச்சு, ‘நீ உதவி இயக்குநரா ஒர்க் பண்றியா'ன்னு கேட்டார். 11வது அசிஸ்டென்டா சேர்ந்த நான், ஒரே வாரத்துல முதல் உதவியாளரா ஆகிட்டேன். அந்தப் படத்துல ஒரு பாட்டு எழுதவும் பாடவும்கூட வாய்ப்பு தந்தார் அண்ணன்.

ஒருநாள் ஜனா சார் ஷூட்டிங் வந்திருந்தார். அவர்கிட்ட ‘இவனுக்கு நல்ல கதை ஞானம் இருக்கு'ன்னு அண்ணன் அறிமுகம் செஞ்சு வச்சார். ‘அப்போ என்கூட வா’ன்னு சொல்லிட்டார் ஜனா சார். ‘லாபம்’ல அவருக்கு அசிஸ்டென்டா வேலை செஞ்சேன்.

“எந்த உயரத்துக்குப் போனாலும் எங்களைப் பாக்குற பார்வை மாறாது!”

சார்பட்டா பரம்பரைக்கான ஆடிஷன் பத்திக் கேள்விப்பட்டுப் போனேன். ரஞ்சித் அண்ணன் சில விஷயங்கள் செஞ்சுகாட்டச் சொன்னார். அப்பவே ‘மீரான் இவன்தான்'னு சொல்லிட்டார். இப்போ வரைக்கும் அந்தத் தருணத்தை நினைச்சாலே சிலிர்ப்பா இருக்கு. நிறைய ஒர்க்‌ஷாப் நடந்துச்சு. இந்தப்பக்கம் ஆர்யா சார், அந்தப்பக்கம் பசுபதி அண்ணன்னு பிரமாண்ட நடிகர்கள்கூட நடிச்சது அவ்வளவு ஆச்சரியம். குரலை மாத்துறது, உடல்மொழியை மாத்துறதுன்னு ரஞ்சித் அண்ணன் மேஜிக் பண்ணிட்டார். கத்தியையும் கட்டைகளையும் வச்சுக்கிட்டு நடிகர்களுக்குப் பின்னாடி நின்ன ஆளு நானு. மீரான் கேரக்டருக்கு 50 அடியில கட் அவுட் வச்சு ஷூட் பண்ணினாங்க. கண்ணெல்லாம் கலங்கிருச்சு...’’ பனிக்கும் கண்களைத் துடைத்துக்கொள்கிறார் தமிழ்.

சினிமா பற்றி, சென்னைப் பூர்வகுடிகளின் நிலை பற்றி, அரசியல் சூழல் பற்றி நிறைய பேசினார் தமிழ். விடைபெறும் முன்பு அவர் சொன்ன ஒரு செய்தி இப்போது வரைக்கும் நெஞ்சை அழுத்துகிறது.

‘‘எந்த உயரத்துக்குப் போனாலும் என்னை மாதிரி ஆட்களை இந்தச் சமுதாயமும் அரசும் பாக்குற பார்வை மாறாது. கல்யாணகிருஷ்ணன் அண்ணன் ‘வெளிநாடு ஷூட் போக வேண்டியிருக்கும். பாஸ்போர்ட் எடுத்திரு’ன்னு சொன்னார். அப்ளை பண்ணினேன். ஒரு போலீஸ்காரர் வெரிபிகேஷனுக்கு வீட்டுக்கு வந்தார். அவர் என்னைக் கேட்ட கேள்வி, நடத்துன விதம் ரொம்பவே அவமானமா இருந்துச்சு. ‘இது மோசமான ஏரியாவாச்சே... நீ எதுக்குடா பாஸ்போர்ட் கேட்குறே'ன்னு ஆரம்பிச்சு, ‘பக்கத்து வீட்டுக்காரங்களை உன்னைப் பத்தி எழுதித்தரச் சொல்லு'ன்னு எல்லார்கிட்டயும் போய் ‘இவன் எப்படி'ன்னு விசாரிச்சு அசிங்கப்படுத்திட்டார். பாஸ்போர்ட்டே வேணாம்டா சாமின்னு ஆகிப்போச்சு!”