Published:Updated:

கோலிவுட்டைக் கலக்கும் `சார்பட்டா’ மாடல்… ஆச்சர்யத்தில் முன்னணி தயாரிப்பாளர்கள்!

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை

நெட்ஃபிளிக்ஸ், சோனி, ஜீ5, ஹாட்ஸ்டார் என எல்லா ஓடிடி தளங்களுமே படத்தை வாங்க முயற்சிகள் எடுக்க, இறுதியாக அமேஸான் ப்ரைம் மிகப்பெரிய தொகைக்கு ‘சார்பட்டா’வை வாங்கியிருக்கிறது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் ‘சார்பட்டா’ படம் ஜூலை 22-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகயிருக்கிறது. பட ரிலீஸுக்கு ஒருவாரமே இருக்கும் நிலையில் படத்துக்கான பரபரப்பு எகிற ஆரம்பித்திருக்கிறது.

தென் தமிழகத்தில், ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டாக இருந்ததைப் போல, சென்னை போன்ற பெரு நகரத்தில் குத்துச்சண்டை என்பது எளிய மக்களின் விளையாட்டாக, அவர்களின் கலாசாரமாக, அவர்களின் வாழ்வியல் அடையாளமாக இருந்திருக்கிறது. அதை தன் கலையின் வழியே ‘சார்பட்டா’ படம் மூலம் பதிவு செய்ய முயன்றிருக்கிறார் பா.இரஞ்சித்.

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை

தியேட்டர் ரிலீஸை மனதில் நிறுத்தி எடுக்கப்பட்ட இப்படம் பூந்தமல்லி அருகே மிகப்பெரிய பொருட்செலவில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டது. ஆனால், கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாகி, தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தின் அடுத்த கட்டம் என்ன என்பது கேள்வியாக இருந்தது.

கொரோனா லாக்டெளனுக்கு முன்பே படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டதால் படத்தை ஓடிடி தளங்கள் வாங்க போட்டிபோட்டன. நெட்ஃபிளிக்ஸ், சோனி, ஜீ5, ஹாட்ஸ்டார் என எல்லா ஓடிடி தளங்களுமே படத்தை வாங்க முயற்சிகள் எடுக்க, இறுதியாக அமேஸான் ப்ரைம் மிகப்பெரிய தொகைக்கு ‘சார்பட்டா’வை வாங்கியிருக்கிறது. அத்தோடு படத்தை முழுவதுமாக பார்த்து, இதை தாமதம் இல்லாமல் எதுவும் கட் இல்லாமல் உடனடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதிலும் அதீத ஆர்வம் காட்டியிருக்கிறது.

சார்பட்டா பரம்பரை: வடசென்னை குத்துச்சண்டை வரலாறு! - விரிவான தகவல்கள்

"சூப்பர் ஸ்டார் ரஜினியோடு தொடர்ந்து இரண்டு படங்கள் இயக்கியவர் அடுத்து ஆர்யாவோடு இணைந்தபோது நாங்கள் எல்லாம் கொஞ்சம் யோசித்தோம். ஆர்யாவுக்கான மார்க்கெட் குறைவாக இருக்கும்போது, இந்தப் படத்தின் வியாபாரம் எப்படியிருக்கும் என்பதில் சந்தேகங்கள் இருந்தது. ஆனால், பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து, பெரிய தொகைக்கும் ஓடிடியில் வியாபாரம் செய்திருக்கிறார்கள். ரிலீஸுக்கு முன்பே பல கோடி லாபம் என்பது ஒடிடி பிசினஸ் மீது நம்பிக்கைத் தருவதாக இருக்கிறது. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம்தான் நேரடி ஓடிடி ரிலீஸைப் பொருத்தவரை அதிக லாபத்துக்கு விலைபோன படம். ஆனால், லாபக் கணக்கில் பார்க்கும்போது ‘சார்பட்டா’ அதை முந்தியிருக்கிறது. கிட்டதட்ட படத்தின் பட்ஜெட்டைவிட இருமடங்கு அதிக விலைக்கு விற்பனையாகி இருக்கிறது. இதனால் ‘சார்பட்டா’ மாடலில் இனி பல படங்கள் தமிழில் தயாராகலாம்.

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை

ஓடிடி மார்க்கெட்டைப் பொருத்தவரை நடிகர் யார் என்பதைவிட, கதை என்ன, இயக்குநர் யார் என்பதுதான் அதிகம் கவனிக்கப்படுகிறது. அந்த வகையில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை எடுத்தால் ஓடிடியில் நல்ல விலைக்கு விற்பனை செய்து, அதை உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்க்கலாம்’’ என்கிறார் ஓடிடி தள வியாபாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.

ஓடிடி வியாபாரம் தமிழ் சினிமாவில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு