Published:Updated:

சத்யஜித் ரே-யின் இந்தப் படம், கொரோனா காலத்தில் மிஸ் செய்யக்கூடாதது! ஏனென்றால்... #HBDSatyajithRay

சத்யஜித் ரே

1921-ம் ஆண்டு மே 2-ம் தேதி, வங்காளத்தில் பிறந்தவர் சத்யஜித் ரே. அவரைப் பற்றிய சிறப்புப் பகிர்வு இங்கே.

சத்யஜித் ரே-யின் இந்தப் படம், கொரோனா காலத்தில் மிஸ் செய்யக்கூடாதது! ஏனென்றால்... #HBDSatyajithRay

1921-ம் ஆண்டு மே 2-ம் தேதி, வங்காளத்தில் பிறந்தவர் சத்யஜித் ரே. அவரைப் பற்றிய சிறப்புப் பகிர்வு இங்கே.

Published:Updated:
சத்யஜித் ரே

உலகத்திரைப்பட மேதை, இந்திய சினிமாவின் தந்தை சத்யஜித் ரே -யின் நூற்றாண்டு இன்று பிறக்கிறது. 1921-ம் ஆண்டு மே 2-ம் தேதி, வங்காளத்தில் பிறந்தவர் சத்யஜித் ரே. அவரைப் பற்றிய சிறப்புப் பகிர்வு இங்கே.

Pratidwandi - 1970 (விரோதி) படத்தில் சுவாரஸ்யமான‌தொரு‌ இன்டர்வியூ காட்சி வரும். இன்டர்வியூ எடுப்பவர், நாயகனிடம் ஒரு கேள்வி கேட்பார் : கடந்த பத்தாண்டில், உலகில் நடந்த மிக முக்கியமான நிகழ்வாக நீங்கள் எதைச் சொல்வீர்கள் என்றதற்கு, வியட்நாம் போரில் சாதாரண மக்கள், விவசாயிகள், அமெரிக்க வல்லரசை துணிவுடன் எதிர்த்தது, தனக்கு மிக முக்கியமான நிகழ்வாகப்பட்டது என‌ ஆச்சர்யத்தோடு சொல்வான்.

சத்யஜித் ரே
சத்யஜித் ரே

கேள்வி கேட்டவர், இப்படியொரு பதிலை இவன் சொல்வான் என எதிர்பார்த்திருக்கவேமாட்டார். அவர் எதிர்பார்த்ததெல்லாம், மனிதன் முதன்முதலில் நிலவில் கால் வைத்தது என்ற பதிலைத்தான். எனவே, நாயகனின் பதிலால் ஏமாற்றமடைந்து, 'நீ என்ன கம்யூனிஸ்டா?' என்று எதிர்க்கேள்வி கேட்டு, நாயகனை அதோடு வெளியே அனுப்பிவிடுவார். 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் வரும் இன்டர்வியூ காட்சிகூட இந்தக் காட்சியின் பாதிப்பில்தான் வந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சத்யஜித் ரே-யின் அரசியலைப் புரிந்துகொள்ள இந்தக் காட்சி போதும். ரே, ஒரு முழு நீள அரசியல் படம் எடுத்ததில்லை; வலுதுசாரி, இடதுசாரி என்று எந்த கோட்பாட்டிற்குள்ளும் தன்னை சிக்க வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், கடைசிவரை அவர் படங்களில் அரசியல் வெளிப்பட்டது. கதாபாத்திரங்கள் மூலமாகவும், கதைக்களம் மூலமாகவும். ரே-யின் அரசியல், அக்கறை, பிடிப்பு எல்லாம் ஒன்றே ஒன்றுதான்... மனிதம். மானுடத்தின் மீதிருந்த அன்பு, கரிசனம். இதற்கு எதிராக இருந்த மதவாதம், மூட நம்பிக்கைகள், சாதி வேற்றுமை, ஏகாதிபத்தியம் என அனைத்தையும் அவர் படங்களின் வழியே எதிர்த்தார்.

1964-ம் ஆண்டு வந்த‌, 'இரண்டு' என்ற 12 நிமிட குறும்படத்தைப் பாருங்கள். முதல் ஷாட்டில் வெள்ளை மாளிகை போல் இருக்கும் ஓர் உயர்தர கட்டடம் கொண்ட பங்களா காட்டப்படும். சில நொடிகளில், அந்த பங்களாவின் பால்கனிக்கு வருகிறான் அங்கு வசிக்கும் பணக்காரச் சிறுவன். தலையில் மிக்கி மவுஸ் தொப்பி அணிந்து பருமனான உடலோடு இருக்கிறான்; கோலா பானத்தை குடித்துக்கொண்டே காரில் செல்லும் தன் பெற்றோர்களுக்கு டாட்டா காட்டுகிறான். பின், வீட்டிற்குள் போகிறான். அவன் மட்டுமே தனியாக இருக்கிறான். அவனது ஒவ்வொரு நடத்தையிலும் அலட்சியம், பணக்காரத் திமிர் வெளிப்படுகிறது. பலூனை தீக்குச்சியால் சுட்டு, அது வெடிப்பதை ரசிக்கிறான். அப்போது, புல்லாங்குழல் போன்ற‌ ஓசை கேட்க, ஜன்னலில் போய் எட்டிப்பார்க்கிறான். கீழே, குடிசையில் வசிக்கும் அவன் வயதை ஒத்த சிறுவன் ஊதுகுழல் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கிறான். இவனும் பதிலுக்கு கிளாரினெட் போன்ற வாத்தியத்தைக் கொண்டு சத்தமாக வாசித்து, அவனைப் போட்டிக்கு அழைக்கிறான். இப்படியே, அந்த ஏழைச் சிறுவன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், இவனும் தன் மேட்டிமைத்தனத்தைக் காட்டும் விதமாக பதிலுக்கு ஒன்றைச் செய்துகொண்டேயிருப்பான். முடிவாக, அவனை வென்றுவிட்டதாக நினைத்துகொண்டு களிப்புடன் வீட்டுக்குள் வருகிறான். கீழே, புல்லாங்குழல் ஓசை மீண்டும் கேட்கத் தொடங்குகிறது. அவன் கட்டிவைத்த விளையாட்டுக் கோபுரமும் பொம்மை ரோபோ மோதிச் சரிகிற‌து.

மேலோட்டமாக, இரண்டு சிறுவர்களுக்குள் நடக்கும் போட்டி போலத் தோன்றினாலும் ரே-யின் நுட்பான அரசியல், எள்ளல் எல்லாம் ஒளிந்திருக்கும். இதில் வரும் பணக்காரச் சிறுவனை அமெரிக்காவின் அடையாளமாகக் கொள்ளலாம்; எழைச் சிறுவனை வியட்நாமின் பிரதிநிதியாகவோ அல்லது மூன்றாம் உலக நாடுகளின் குறியீடாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். ஆச்சர்யப்படும் விதமாக, இந்தக் குறும்படத்தில் ஒரு வரி வசனம்கூட கிடையாது.

பொதுவாக, சத்யஜித் ரே-யின் ஆரம்பகால கறுப்பு வெள்ளைப் படங்கள் கொண்டாடப்பட்ட அளவுக்கு அவரின் பிந்தைய கால படங்கள் கொண்டாடப்படவில்லை. இதற்கொரு முக்கியக் காரணம்,'பதேர் பாஞ்சாலி', 'சாருலதா', ' அபராஜிதா,'நாயக்', 'மஹா நகர்', 'அபூர் சன்ஸார்', 'ஜல்சாகர்' ஆகிய படங்களைத்தாண்டி, 80 மற்றும் 90'களில் அவர் இயக்கிய படங்களைப் பலர் பார்க்காதது. இன்னுமொரு காரணம், 1983ல் ரே-க்கு மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக, எண்பதுகளுக்குப் பிறகு அவர் படங்கள் செய்வதை குறைத்துக்கொண்டது.

ஒரு வகையில் சரிதான். ரே, தன் திறமையின் உச்சியில் செய்த படங்களைத் தொகுத்தால், முதல் ஐந்து இடங்களை மேற்கொண்டு சொன்ன படங்கள் பிடிக்கும். அதற்காக, அவரின் கடைசிக் கால படங்கள் முக்கியம் இல்லாமல் போய்விடவில்லை. அதிலும் சில குறிப்பிடத்தகுந்த படங்கள் இருக்கின்றன. அவற்றுள் வெளிப்படும் அரசியல் முக்கியமானது; இன்றைய காலகட்டத்திற்கும் ரொம்பவே தேவையும்கூட‌.

Ganashatru - 1989 (ஜனங்களின் எதிரி) :

நார்வே நாடக ஆசிரியரான ஹென்ரிக் இப்ஸனின் நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான், 'ஜனசத்ரூ'. இந்தக் கதை உலகத்தன்மை கொண்டது. 'தூள்' படம்கூட இந்தக் கதையின் மசாலா வடிவம்தான். ரே-யின் உடல்நிலை காரணமாக முழுக்க முழுக்க உள்புற செட்டமைப்புகளிலேயே படமாக்கப்பட்டது. இருந்தும் சுவாரஸ்யமான திரைக்கதை, சவ்மித்ரா சாட்டர்ஜியின் பக்குவப்பட்ட நடிப்பு, அந்தக் குறைபாடுகளை மறைத்துவிடும். சந்திப்பூர் ஓர் வளரும் நகரம், சுற்றுலாத் தலம். அந்த ஊரின் முக்கிய ஈர்ப்பே திருபுரேஷ்வர் கோயில். சந்திப்பூரின் சுற்றுலா வருமானமே அந்தக் கோயிலை நம்பித்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அஷோக் குப்தே எனும் நேர்மையான மருத்துவர் தன்னிடம் நிறைய மஞ்சள் காமாலை நோயாளிகள் வருவதைப் பார்க்கிறார். என்ன காரணம் என்று குடிநீரை எடுத்து ஆராயும்போது, சந்திப்பூர் மக்கள் குடிக்கும் நீர் வெகுவாக மாசுபட்டிருப்பதாக லேப் முடிவுகள் தெரிவிக்கின்றன. சோதனையாக, கோயிலிலும் இதே நீரை பக்தர்களுக்கு தீர்த்தமாக கொடுக்கின்றனர். பதறிப்போன மருத்துவர், அவரது தம்பியை அழைத்து விஷயத்தைச் சொல்கிறார். உடனடியாக கோயிலில் தீர்த்தம் கொடுப்பதை நிறுத்தவில்லையென்றால், பெரும் தொற்று நோய்க்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார். அவரது தம்பி நகரசபை சேர்மேன்.

தம்பிக்கு தன் டாக்டர் அண்ணன் சொல்வதில் உடன்பாடில்லை. தன் அண்ணன் பேச்சைக்கேட்டால், மக்கள் பயந்து கோயிலுக்கு வரத் தயங்குவார்கள் என்று நினைக்கிறார். அதிலும், திருவிழா நெருங்கும் இந்நேரத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்து, வருமானத்தையும் பாதித்துவிடும் என்று மறுக்கிறார். இது, சகோதரர்களுக்குள் பிரிவை உண்டாக்குகிறது. எப்படியாவது மக்களை எச்சரிக்க வேண்டும் என்று உள்ளூர் பத்திரிகைக்கு கட்டுரை எழுதி அனுப்புகிறார். தம்பிக்குப் பயந்து அதைப் பிரசுரிக்க மறுக்கிறார்கள். வேறு வழியில்லாமல், ஒரு பொது அரங்கைப் பிடித்து, மக்கள் முன் குடிநீர் மாசு குறித்தும், தொற்று நோய் அபாயம் குறித்தும் சொல்ல‌லாம் என முடிவெடுத்து ஊர் முழுக்க போஸ்டர் அடிக்கிறார். கூட்டம் நடத்தும் நாளன்று மக்கள் வருகிறார்கள். அங்கு, தம்பியும் பத்திரிகைக்காரர்களும் வருகிறார்கள். கலகத்தை உண்டுபண்ணுகிறார்கள். படத்தில் இந்தக் காட்சி வரும்போது, நாமே ஒரு கொதிநிலைக்கு வந்துவிடுவோம். எப்படியாவது டாக்டர் மக்களிடம் சொல்லிவிட வேண்டும் என்று நகத்தைக் கடிப்போம். திரைக்கதையின் உச்ச நிகழ்வாக இக்காட்சியைச் சொல்லலாம். கடைசியில், அந்த மருத்துவர் மக்களிடம் சொன்னாரா இல்லையா என்பதே க்ளைமேக்ஸ்.

கொரோனா சமயத்தில் மூட நம்பிக்கைகளும், போலி மருத்துவமும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், விஞ்ஞானத்தைத் தீவிரமாக நம்பும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் 'ஜனசத்ரு'.

Agantuk - 1991 (அந்நியன்)... சத்யஜித் ரே-யின் கடைசிப் படம். எண்பதுகளுக்குப் பிறகு ரேயின் மிகச் சிறந்த படம் என்றால், 'அகன்டக்' படத்தை தயக்கமின்றிச் சொல்லலாம். 'அதிதீ' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. பிரமாதமான திரைக்கதை, உத்பல் தத்தின் அற்புத நடிப்பு அகன்டக்கில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. சில காட்சிகள்தவிர, முழுக்க முழுக்க ஒரே வீட்டினுள் எடுக்கப்பட்ட படம். இருந்தும், கதாபாத்திரங்களின் தேர்ந்த நடிப்பால், ரே-யின் இயக்கத்தால் ஒரு காட்சியிலும் நாடகம் பார்க்கும் உணர்வு வராது. இது சாதாரண விஷயமல்ல.

அனிலா போஸுக்கு, கல்லூரி படிப்போடு வீட்டை விட்டு வெளியேறிய அவளது தாய்மாமா எழுதிய கடிதம் ஒன்று வருகிறது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருப்பதாகவும், அவளது குடும்பத்தோடு சிறிது காலம் தங்க பிரியப்படுவதாகவும் எழுதியிருப்பார். இந்த விசித்திர கடிதம் அனிலாவின் கணவனை கலக்கமடையவைக்கிறது. உண்மையிலேயே... எழுதியது தன் மனைவியின் மாமாதானா இல்லை, மாமா போல் வந்து வீட்டை சுருட்டிக்கொண்டு போவதற்கு திட்டமா என்று குழம்புகிறான். எனினும், தன் மனைவியின் கட்டாயத்தால் அவரை, வீட்டில் தங்க வைக்க சம்மதிக்கிறான்.

ஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே பிறந்ததின சிறப்பு பகிர்வு!
ஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே பிறந்ததின சிறப்பு பகிர்வு!

மாமாவின் பின்னணியே படு சுவாரஸ்யம். மாமா, வீட்டுக்கு வருகிறார். அவர் ஒரு மானுடவியலாளர் (Anthropologist). சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வமுடன் இருக்கும் அவர், கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, ஓவியப் பள்ளியில் சேரும் திட்டத்தில் இருக்கிறார். கல்லூரி முதல் ஆண்டில், வெளிநாட்டுப் பத்திரிகை ஒன்றில் ஓர் ஓவியத்தைப் பார்த்து பிரமித்துப் போகிறார். ஓவியன் யார் என்று பார்க்கும்போது, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ஸ்பெய்னின் குகையில் வரைந்த ஓவியம் அது. அந்த நொடியில் அவர் தீர்மானிக்கிறார், எந்த ஓவியக் கல்லூரியும் இதுபோன்ற ஓவியத்தை கற்றுத்தராது, ஓவியன் ஆகக்கூடாதென. ஆனால், இந்த ஓவியம் அவருக்குள் ஒரு கேள்வியை எழுப்புகிறது?

எது நாகரிகம் ? எது காட்டுமிராண்டித்தனம் ?

பழங்குடிகள், காட்டுவாசிகள், குகைமனிதர்கள் இவர்களுக்கு எல்லாம் படிப்பறிவே கிடையாது, காட்டுமிராண்டிகள் எனக் கருதும் இந்த நாகரிகமான சமுதாயத்தால் இதுபோன்ற ஓவியத்தை வரைய முடியுமா? இந்தக் கேள்விக்கு விடைகாண மானுடவியலாளர் ஆகிறார். உலகம் முழுதும் சுற்றி, பழங்குடிகளோடு தங்கி, அவர்களின் வாழ்வுமுறை, கட்டுமான அறிவு, இசை, ஓவியத்திறன் பற்றியெல்லாம் நேரில் பார்த்து, வியந்து, புத்தகங்கள் எழுதுகிறார்.

அனிலாவின் வீட்டில் வந்து தங்கிய சில மணி நேரங்களிலேயே, மாமா, அனிலாவையும் அவளது ஒரே மகனையும் தன் இயல்பான பேச்சால், அறிவுஜீவித்தனத்தால் கவர்ந்துவிடுகிறார். ஆனால், அனிலாவின் கணவனுக்கு சந்தேகங்கள் மேலும் வலுக்கின்றன. அவரின் பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்க்கிறான். அப்படியும் அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. அவனது வக்கீல் நண்பனை வீட்டுக்கு அழைக்கிறான். தேநீர் குடிக்கும் சாக்கில், பேச்சோடு பேச்சாக, மாமாவை குறுக்கு விசாரணை செய்து, அவரது ரகசிய பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறான். இக்காட்சியில், மாமாவுக்கும் வக்கீல் நண்பனுக்கும் கருத்து வேறுபாடுகள் தீவிரமாகிறது.

"பழங்குடிகளைப் பற்றி தரக்குறைவாகப் பேசியதும், மாமா பதிலுக்கு கேட்கிறார்: இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித குலத்திற்கு என்ன பயன்? ஒரே பொத்தானை அழுத்தி ஒட்டுமொத்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களை அழிப்பதுதான் நாகரிகமான சமுதாயமா?"

"விஞ்ஞான அறிவைப் பற்றி பெரிதாகப் பேசுகிறீர்கள். எஸ்கிமோக்கள் கட்டும் வீட்டில் உள்ள விஞ்ஞானம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?"

கடைசியில் பொறுமை இழந்து, நீங்கள் யார் என்று தெளிவாகச் சொல்லுங்கள். இல்லையென்றால், வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கோபத்தோடு சொல்கிறான். யாரிடமும் சொல்லாமல் மாமா வீட்டை விட்டுச் செல்கிறார். கடைசியில், மாமாவோடு சமாதானம் ஆனார்களா இல்லையா என்பதே நெகிழ்வான‌ க்ளைமேக்ஸ்.

ரே, 'அகன்டக்' படம் வாயிலாக, நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தின் போலி மதிப்பீடுகளை, தொழில் நுட்ப வளர்ச்சியின் இன்னொரு பக்கத்தை அழுத்தமாக‌ நமக்கு காட்டுகிறார். படம் வந்த காலத்தைவிட, இன்றைக்கு ரொம்பவே பொருத்தமாகியிருக்கிறது 'அகன்டக்' எழுப்பும் கேள்விகள்.

சத்யஜித் ரே-யின் சினிமாக்கள் கால எல்லைகளைக் கடந்தவை.