
நான் கதாசிரியனாக என்னைக் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை. ஆனால் எதையும் நன்கு கவனிப்பேன்.
புதிய அலை மலையாள சினிமாவின் தேர்ந்த கதை சொல்லி ஷியாம் புஷ்கரன். ‘நவீன எம்டி வாசுதேவன் நாயர்’ என்று திரை விமர்சகர்களால் கொண்டாடப்படுபவர். 40 வயதைக்கூட தொடாத இந்த இளைஞரால் எப்படி இத்தனை விதங்களில் இத்தனை ஆழமான உணர்வோடு கலந்த கதைகளை திரைக்கதையாக எழுத முடிகிறது என வியக்க வைக்கிறார். இன்று தயாராகும் மலையாள சினிமாவில் `ஷியாம் புஷ்கரன் திரைக்கதை’ என்ற அடையாளம், படங்களின் வணிகரீதியான விற்பனைக்கும் துணைபோகிறது. இயக்குநருக்கு சமமாகக் கொண்டாடப்படும் ஷியாம் புஷ்கரனிடம் பேசியபோது...

மலையாள சினிமாவில் 2011-ல் வந்த ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படத்துக்குப் பிறகுதான் புது அலை சினிமாவே உருவானது. அந்தப் படத்தின் கதையை எப்படி எழுதினீர்கள்?
``நான் கதாசிரியனாக என்னைக் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை. ஆனால் எதையும் நன்கு கவனிப்பேன். கவனித்து அதை யாருக்கேனும் சொல்ல நேர்ந்தால் கொஞ்சம் சுவாரஸ் யமாக சொல்வேன். நேர டியாக ஒரு விஷயத்தை சொல்லாமல் ‘இடுக்கியில் இருக்கும் சித்தப்பா வீடு’ என்று சொல்லும் முன்னே ‘இடுக்கி தெரியுமா...? அங்கே காலுக்கடியில் கப்பக் கிழங்கும், அன்ணாந்து பார்த்தால் பலாப்பழமும் நிரம்பிக் கிடக்கும்!’ என இரண்டும் கலந்த ஒரு வாசனையை நுகர்ந்தபடி சொல்ல ஆரம்பிப்பேன். கடைசியாகத்தான் சித்தப்பா வீடு அந்த ஊரின் கடைசித் தெருவில் இருந்தது என்று முடிப்பேன். உதவி இயக்குநராக ஆக வேண்டும், சில படங்கள் இயக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததால்தான் திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் ஃபிலிம் மேக்கிங் படித்தேன். அப்படி வந்தபோது தற்செயலாக இயக்குநர் ஆஷிக் அபுவை சந்தித்தேன். அவரும் என்னைப்போல நல்ல உணவுப் பிரியர். உணவை மையமாக வைத்து ஒரு ஒன்லைன் சொன்னேன். அவரும் ஆர்வமாகிவிட்டார். ஒரே நாளில் காட்சிகளாகச் சொல்ல ஆரம்பிக்க, உடனடியாக இதை கதையாக எழுதச் சொன்னார். எனக்கு கதை எழுத வராது. காட்சிகளாகத்தான் எழுதுவேன். அதையே எழுதிக் கொடுத்தேன். தேவைப்பட்ட இடங்களில் திருப்பங்களை நண்பன் திலீஷ் நாயர் திரைக்கதையில் சேர்த்துக் கொடுக்க, அழகான ரொமாண்டிக் காமெடி படமாக ‘சால்ட் அண்ட் பெப்பர்’ உருவானது. நமக்கு திரைக்கதை நன்றாக வரும் என உணர்ந்து சினிமாவில் அந்த ரூட்டில் பயணிக்க ஆரம்பிக்கக் காரணமே ஒரே இரவில் எழுதிய ‘சால்ட் அண்ட் பெப்பர்’ கதைதான்!’’

கதைகளை நீங்களே உருவாக்குவீர்களா?
‘‘அது சூழலைப் பொறுத்தது. இப்போதெல்லாம் மனதில் ஒரு கதைக்கான கரு வந்தால் இயக்குநர் நண்பர்களிடம் சொல்லிவிடுவேன். எங்களுக்குள் ஈகோ இல்லை. பிடித்திருந்தால் அதை டெவலெப் செய்யச் சொல்வார்கள். சமயங்களில் அவர் களுக்கு பிடித்திருந்தும் சினிமாவாக உருவாக்கு வதில் மாற்று யோசனை இருக்கும். ஆனால், நான் மனதில் தோன்றும் காட்சிகளை அப்படியே எழுதி வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருப்பேன். அவர்களுக்கு பிடித்தி ருந்தால் அப்படியே காட்சிகளை கிளைகளாக விரித்து எழுத ஆரம்பித்து விடுவேன். `மகேஷிண்டே பிரதிகாரம்’ கதை என் ஊரில் நடந்த நிஜ சம்பவம். ஒரு ஆளை ஒரு கும்பல் ஆள் மாற்றி அடித்து விட, சாகும் வரை செருப்பு போடாமல் வைராக்கியமாக இருந்தார். ஃபஹத் பாசிலை அந்த வைராக்கியக்காரனாய் நினைத்தாலே காட்சிகள் மனதில் ஊற ஆரம்பித்தது. கதையாகவும், திரைக்கதையாகவும் உருவாக ஒரு களம் தேவைப்பட்டது. கடற்கரையில் நடந்த கதையை அப்படியே மலைக்குக் கொண்டு போனோம். இடுக்கியைத் தேர்ந்தெடுத்து அங்கே போய் இரண்டு மாதங்கள் தங்கி படத்துக்கான காட்சிகளை நானும் இயக்குநரும் சேர்ந்து எழுதினோம். ஒரு டீக்கடையில் தினமும் போய் உட்கார்ந்து, வருவோர் போவோரிடம் சும்மா பேசுவதுதான் முதல் வேலை. இரவில் நான் உட்கார்ந்து திரைக்கதையில் அந்த பாத்திரங் களைக் கதைக்குள் கொண்டு வருவேன். இயக்குநருக்கு அது பிடித்திருந்தால் அதை மெருகேற்றி எழுதிவிடுவேன். இப்படித்தான் காமெடியாக நாம் கடந்து விடும் ஒரு சம்பவம் ரிவெஞ்ச் டிராமாவாக, காதல் தோல்வியிலிருந்து மீளும் இளைஞனின் வாழ்க்கையாக, உணர்வைக் கொண்டாடும் மனிதர்களின் வாழ்வியலாக, பல பரிமாணங்களில் அந்தப் படம் மாறியது. திரைக் கதைக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது!’’

திரைக்கதை என்பது ஒரு படத்துக்கு எவ்வளவு தூரம் முக்கியம்?
``கதையை சுவாரஸ்யப்படுத்துவதே திரைக்கதைகள் தான். உடலுக்கு எலும்புக்கூடு போல திரைக்கதை. நான் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுத்தைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். எப்படி அவரால் ஒரு கதையை அத்தனை உணர்ச்சி ததும்ப திரையில் கொண்டு சேர்க்க முடிகிறது என வியந்து பார்த்திருக் கிறேன். அவர் ஒரு பல்கலைக்கழகம். அவர் பணியாற்றிய படங்களைப் பார்த்தால் அந்தக் கலை உங்களுக்கும்கூட வசப்படக்கூடும்! நான் பணியாற்றிய ‘தொண்டிமுதலும் திருசாக்ஷியுமும்’ படம் ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் கதை. அதை சுவாரஸ்யமாக்கியதே திரைக்கதை தான்!’’
கும்பளாங்கி நைட்ஸ் முழுக்க முழுக்க உங்கள் கதை, திரைக்கதை... படமே வித்தியாசமாக இருந்தது. கூடவே அந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்தீர்கள். எப்படி அந்த ஆர்வம் வந்தது?
``அந்தப் படம் இப்படிக் கொண்டாடப்படும் என நினைக்கவில்லை. ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்தின் கதையை 5 வருடங்களாக வெவ்வேறு விதமாக எழுதினேன். செர்தலா பக்கத்தில் கும்பளாங்கி போகும்போதெல்லாம் வெவ்வேறுவிதமான வடிவம் கிடைக்கும். உயிர்ப்பான கதை எழுத வேண்டும். இதுவரை காட்டப்படாத சகோதரர்களுக்கிடையேயான ஒரு முரட்டுத்தனமான அன்பை திரையில் அப்படியே பூச்சில்லாமல் காட்ட நினைத்தேன். ‘ஒரே நாளில் அவர்கள் கஷ்டங்கள் ஒழிந்தது’ என்ற மெஸேஜ் சொல்வதோ, அல்லது’ நல்லவன் வாழ்வான்- கெட்டவன் அழிவான்’ போன்ற திரைக்கதை க்ளிஷேக்கள் இருக்கவோ கூடாது என நினைத்து அதை எழுதினேன். நம்ப மாட்டீர்கள் அந்தப் படத்தில் வில்லன் கேரக்டர் உண்மையில் ‘எ கம்ப்ளீட் மேன்!’. அவனைப்போல நேர்த்தியாக ஆடை அணிய முடியாது, சிரிக்க முடியாது, ரொம்ப நல்லவனாகவே இருப்பான். நாட்டில் நடக்கிற குற்றங் களில் 80 சதவிகிதம் ஆண்கள் செய்வதுதான். ஆண்கள் எல்லோருக் குள்ளும் இருக்கும் கெட்ட குணத்தை அந்த கம்ப்ளீட் மேனாக்கிவிட்டேன். அந்த கம்ப்ளீட் மேன் ஷம்மி கேரக்டரில் நடிக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும். ஃபஹத்திடம் ஷம்மி கேரக்டர் பற்றிச் சொல்லி, ‘இப்படி ஒரு கேரக்டர். அத்தனை பேரின் கோபத்தையும் சம்பாதிக்கும் கேரக்டர். நடிக்க சம்மதமா’ என சந்தேகத்தோடு கேட்டேன். ‘இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு!’ என அப்படியே கொடூர வில்லனாக மாறிவிட்டார்!’’

உங்கள் கதைகளில் வரும் கேரக்டர்கள் போகிற போக்கில் நெகிழ வைத்து விடுகிறார்கள். அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள். எப்படி அந்த கேரக்டர்களை உருவாக்குகிறீர்கள்?
‘‘எனக்கு இன்ஸ்பிரேஷனே நான் சந்திக்கும் மனிதர்கள்தான். எங்கோ நாம் கண்ணீர் சிந்தி அழுதிருப்போம். அல்லது பார்த்திருப்போம். ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்தில் வரும் ஷாஜி கேரக்டரைப் போல சின்ன வயதில் அடிக்கடி தற்கொலை முயற்சி செய்யும் ஒருவரை குடும்பத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன் அவ்வளவுதான். என் அம்மாவை சின்ன வயதில் கட்டியணைக்கும் போதெல்லாம் விக்ஸ் வாசனையைத்தான் உணர்ந்திருக்கிறேன். அதைப் படத்தில் ஷாஜி கேரக்டர் செய்வது, பேசுவது போல காட்டியிருப்பேன். கதைகள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நாம் அதை சரியான இடத்தில் கொண்டு வர வேண்டும். அதுதான் திரைக்கதையின் சவால். ‘22 ஃபீமேல் கோட்டயம்’, தினமும் செய்தித்தாள் படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை நாம் எல்லோரும் நேரில் சந்தித்திருப்போமா தெரியாது. ஆனால், பெண்ணை போகப்பொருளாக நினைக்கும் யாருக்கும் கொடுக்கும் தண்டனை எதுவாக இருக்கும் என யோசித்தபோது உருவான கதைதான்! ‘மாயாநதி’ படத்தில் நாயகனோடு உறவு வைத்துக் கொள்ளும் நாயகி உறவுக்குப் பிறகு, ‘செக்ஸ் இஸ் நாட் எ பிராமிஸ்’ என சொல்லு மிடம் பல தளங்களில் விவாதிக் கப்பட வேண்டிய விஷயம். ஆண் பேசும் ஒரு வார்த்தை யை ஒரு பெண் பேசுவதாக இப்போதுதான் நாம் படங்களில் வைக்க ஆரம்பித்திருக்கிறோம். இனி இதுபோன்ற கேரக்டர்கள் நிறைய வரும். இந்த நெகிழ்ச்சி, அதிர்ச்சியெல்லாம் பழகிவிடும்!’’
அடுத்து இயக்கம் எப்போது?
‘‘திரைக்கதையில் இன்னும் நிகழ்த்த ஆயிரம் விஷயங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இயக்கம் என்ற கனவும் உள்ளூர இருக்கிறது. மனதில் ஒரு காமெடி கலந்த பொலிட்டிக்கல் ஆக்ஷன் கதை இருக்கிறது. மம்மூட்டி, மோகன்லால் இருவரில் ஒருவர் நடிக்கலாம்!’’