
- நாராயணி சுப்ரமணியன்
’சீஸ்பிரஸி’ (Seaspiracy)... சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உலகெங்கும் பரவலாக விவாதிக்கப்படும் ஆவணப்படம். வெளிவந்து சில நாள்களிலேயே அதிகம் விவாதிக்கப்பட்ட ஆவணப்படங்களில் ஒன்றாகிவிட்டது. சீஸ்பிரஸி என்ற தலைப்பு ‘கடலில் நடக்கும் சதி’ என்ற சொல்லாக்கத்தில் உருவானது. ஆவணப்படத்தின் மையப்புள்ளியே அதுதான்.
கடலின்மீது பெருங்காதல் கொண்டவரான இயக்குநர் அலி தப்ரீஸி, ‘இப்போது கடல் சூழலுக்கு ஏற்பட்டுவரும் எல்லா பாதிப்புகளுக்கும் மீன்பிடித் தொழில் மட்டுமே காரணம்’ என்ற மறைக்கப்பட்ட உண்மையைக் கண்டுபிடிக்கிறார். இதைக் கண்டுபிடிக்கவிடாமல் அவரைப் பலர் தடுக்கிறார்கள். ‘`உயிர்மேல் ஆசை இருந்தால் இதைத் தொடரவேண்டாம்’’ என்று ஒருவர் எச்சரிக்கிறார். போலீஸ் சைரன்கள் துரத்துகின்றன. ஒரு கட்டத்தில், உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பட்டன் கேமராக்கள் மூலம் படமெடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார் தப்ரீஸி.

ஒரு த்ரில்லர் படம்போல எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தின் வெற்றிக்குத் திரைமொழி ஒரு முக்கியமான காரணம். மறைத்துவைக்கப்பட்ட ஒரு மாபெரும் உண்மையைக் கண்டறிவதாகப் பார்வையாளர்களை நம்பவைப்பதில் நிச்சயம் சீஸ்பிரஸி வெற்றி பெற்றிருக்கிறது. பால் பொருள்கள்கூட சாப்பிடாத தீவிர சைவர்களான வீகன்களும் இன்னும் பலரும், ‘`இந்த ஆவணப்படம் என் கண்களைத் திறந்துவிட்டது, இனி நான் ஏமாற மாட்டேன்’’ என்று சமூக வலை தளங்களில் சிலாகித்துக் கொண்டிருக்க, களத்தில் இயங்கிவரும் சூழலிய லாளர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.
சீஸ்பிரஸியின் அடிப்படை நோக்கம் என்ன என்பது ஆழமாகப் பார்த்தாலே தெரிந்துவிடும். பல்வேறு கோணங்களிலிருந்து பரபரப்பும் நெகிழ்ச்சியுமான கதைகளைப் பின்னி, ‘`மீன்பிடித் தொழில்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். கடலைக் காப்பாற்ற வேண்டுமானால், மீன் சாப்பிடாதீர்கள்’’ என்று சொல்லி முடிக்கிறார் தப்ரீஸி.

கடலில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் பிரச்னை, டால்பின்கள் கொல்லப் படுவது, மீன் பண்ணைகளில் இருக்கும் நிர்வாகச் சிக்கல்கள், சுறா மீன் வர்த்தகம், மீன் காட்சியகங்கள் என்று எல்லாவற்றையும் அரைகுறையாக விவரித்துவிட்டு, மீன்பிடித் தொழிலை மட்டும் குற்றவாளியாக்கியிருக்கிறது இந்த ஆவணப்படம். இதற்காக இவர் முன்வைக்கும் பல புள்ளிவிவரங்கள் பிழையானவை. ‘ஆவணப்படம்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு படைப்பில் தகவல் பிழைகள் இருக்கும்போது, அதன் அடிப்படைக் கட்டமைப்பே குலைந்துவிடுகிறது. உதாரணமாக, ‘`கடலில் இருக்கும் மொத்த பிளாஸ்டிக்கில் 46%க்கு மேல் மீன்பிடித் தொழிலால் வருபவைதான்’’ என்று ஒரு பொய்யைச் சொல்கிறார். ஓரளவு சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள்கூட, மீன் சாப்பிடுவதைக் கைவிடும் எண்ணத்துக்கு வந்துசேர்வது இந்தப் புள்ளியில்தான். ‘`மீன் பண்ணைகளும் சுற்றுச்சூழலுக்கு எதிரானவை’’ என்று சொல்லும் ஆவணப்படம், ‘தாவர உணவுகளிலிருந்தே நமக்கான ஊட்டச்சத்தைப் பெறமுடியும்’ என்றும் தெரிவிக்கிறது.
மீன்பிடித் தொழில் பற்றி அறியாதவர்களுக்கு, இந்த ஆவணப்படத்தின்மூலம் அதைப் பற்றிய தவறான தோற்றத்தை முன்வைத்திருக்கிறார் தப்ரீஸி. சென்னையை எடுத்துக்கொண்டாலே, காசிமேட்டில் இருக்கும் விசைப்படகுகள், ஊரூர்க் குப்பத்திலிருந்து இயங்கும் மோட்டார் படகுகள், ஆங்காங்கே காணப்படும் கட்டுமரங்கள் என்று மீன்பிடித்தொழிலில் பலவிதமான அடுக்குகளைப் பார்க்க முடியும். ஆனால், உள்நாட்டு எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நடுக்கடலில் இயங்கும் ராட்சத மீன்பிடிக் கலங்களை மட்டுமே வைத்து, ‘மீன்பிடித் தொழில் என்பதே இயற்கைக்கு எதிரானது’ என்று நிறுவுவது மோசமான அணுகுமுறை.

‘Zero Hunger’ என்பது ஒரு சர்வதேச இலக்கு. தொழில்நுட்ப உச்சம் தொட்ட இந்த 2021லும் பசியற்ற உலகை சாத்தியமாக்க முடியவில்லை. உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவருக்குக் கடல் உணவு மட்டுமே புரதச் சத்துக்கான ஆதாரமாக இருக்கிறது. உலக அளவில் குறைந்தது 12 கோடிப் பேருக்கு மீன்பிடித் தொழிலே வாழ்வாதாரம். அதில் 90% பேர் சிறு/குறு மீனவர்கள், பெரும் பான்மையானவர்கள் வறிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் 3,200க்கும் அதிகமான மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த 40 லட்சம் பேர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். மீன் உணவை உலகம் கைவிட்டால், மாற்று உணவு என்ன? இவர்களுக்கான மாற்று வாழ்வாதாரம் எது?
தவிர, ‘சுற்றுச்சூழலை பாதிக்காத, நீடிக்கக்கூடிய ஒரு மீன்பிடித்தொழில் (Sustainable fisheries) சாத்தியமே இல்லை’ என்கிற ஆவணப்படத்தின் கூற்று கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. சிறு/குறு மீனவர்கள் எல்லாரும் இப்படிப்பட்ட மீன்பிடித்தலில்தான் ஈடுபட்டுவருகிறார்கள். காலத்துக்கும் கடல் சூழலுக்கும் ஏற்ற வலைகள் அவர்களுடையவை. மீன்பிடித் தொழில் மற்றும் கடல் சார்ந்த பல தொல் நம்பிக்கைகளை அவர்கள் இன்னமும் அதே கவனத்துடன் பின்பற்றிவருகிறார்கள். கடலுக்கு அருகில் ஒரு கழிவுநீர்க் குழாய் இறக்கப்படும்போது, முதலில் எதிர்ப்பவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள். சர்வதேச அளவில் தொழில்முறை மீன்பிடிப் பகுதிகளாக இருந்தவற்றை, நீடிக்கக்கூடிய மீன்பிடி முறைக்கு மாற்றிய சில வருடங்களிலேயே மீன்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.
பிரிட்டனில் இருந்தபடி, ஒரு மேலைநாட்டு மத்தியதர வர்க்க வெள்ளை நிற ஆணின் பார்வையில் இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் தப்ரீஸி. ‘`படத்தில் கெட்டவர்களாக வருபவர்கள் எல்லாரும் ஆசியர்கள், பாதிக்கப்படுபவர்கள் எல்லாரும் ஆப்பிரிக்கர்கள், நல்லவர்கள் எல்லாரும் வெள்ளையர்கள், இது எப்படி நிதர்சனத்தைப் படம் பிடிப்பதாகும்?’’ என்று கேள்வி எழுப்புகிறார் சூழலியல் எழுத்தாளர் ஃப்ரான்ஸிஸ்கோ ப்ளாகா.

திமிங்கில வேட்டையில் முதல் இடத்தில் இருப்பது நார்வே. ஆனால், திமிங்கில வேட்டையின் குரூரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு தப்ரீஸி ஜப்பானுக்குத்தான் செல்கிறார். உலகிலேயே ஜப்பானியர்கள் மட்டுமே சூரை (Tuna) மீன்கள் சாப்பிடுவது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கு கிறார். ‘சுறாக்களைப் பாதுகாத்தல்’ என்ற பேச்சு வரும்போது உடனே சீனாவுக்குச் சென்றுவிடுகிறார்.
இந்த ஆவணப்படத்தில் சரியான தகவல்களே இல்லை என்று சொல்லிவிடமுடியாது. இழுவை வலைகளால் ஏற்படும் சூழல் பாதிப்பு, பிளாஸ்டிக் பிரச்னை என்று சமகாலத்தில் கடல் சூழலுக்கு இருக்கும் முக்கியமான அச்சுறுத்தல் களை ஆவணப்படம் தொட்டி ருக்கிறது. ஆனால் பிரச்னை களை அணுகிய விதமும் ஆவணப் படம் முன்வைக்கும் தீர்வும் மிகவும் பாரபட்சமானதாக இருக்கிறது.
ஒரு சில மீன்களை மட்டுமே தொடர்ந்து சாப்பிடாமல் கடலுணவில் பல்வகைமையை ஊக்குவிப்பது (Diversification of seafood), சிறு/குறு மீனவர்களை ஊக்குவிக்கும்விதமாக அவர்களிடமிருந்து நேரடியாக மீன்களை வாங்குவது, கடல்சார் பிரச்னைகளில் விழிப்புணர்வுடன் இருப்பது, மீனவர்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது அவர்களுக்காகக் குரல் கொடுப்பது என்று எவ்வளவோ செய்யலாம்.
பொறுப்பான நுகர்வுதான் தீர்வே தவிர, மேட்டிமைவாதமும் வீகனிசமும் அல்ல.