செப்டம்பர் மாதத்தைக் குறிவைக்கும் முன்னணிப் படங்கள்!
வாரவாரம் பல்வேறு படங்கள் ரிலீஸாவதால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ரிலீஸ் தேதியில் அதிக கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக, விடுமுறை தினங்களோடு சேர்த்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படத்தை வெளியிட்டால்தான் படத்தின் கலெக்ஷன் ஓரளவு வெற்றிபெறும்.

செப்டம்பர் மாதத்தை பல படங்கள் லாக் செய்திருப்பதாகத் தெரிகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம், `காப்பான்'. `என்.ஜி.கே' படம் முடிந்தபின் `காப்பான்' படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தது படக்குழு. இதையடுத்து பல ரிலீஸ் தேதியை அறிவித்த பிறகு இன்னும் படம் வெளிவரவில்லை. இந்நிலையில் எப்படியாவது படத்தை வெளிட வேண்டுமென திட்டமிட்ட படக்குழு, செப்டம்பர் 20-ம் தேதியை லாக் செய்து வெளியிடுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் `நம்ம வீட்டுப் பிள்ளை' படமும் செப்டம்பர் மாதத்தை டார்கெட் செய்துள்ளது.

மேலும், விக்ரம் மகனான துருவ் விக்ரம் நடிக்கும் `ஆதித்யா வர்மா' படமும் செப்டம்பர் மாதம் வெளிவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல், கார்த்தி நடிக்கும் `கைதி', ஆர்யா நடிக்கும் `மகாமுனி' எனப் பல படங்கள் செப்டம்பரைக் குறிவைத்து ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஆக, செப்டம்பர் மாதத்தில் ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் வெளியாக இருக்கின்றன. இதுதவிர, ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் பிரபாஸ் நடிக்கும் `சாஹோ' படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.