Published:Updated:

பாட்டி - பேத்தி சென்டிமென்ட், எதார்த்தமான ட்ரீட்மென்ட்! - எப்படி இருக்கிறது `செத்தும் ஆயிரம் பொன்'?

செத்தும் ஆயிரம் பொன்
செத்தும் ஆயிரம் பொன்

இந்த எளிமையான படம், நம் மனத்தில் சிறிதேனும் ஒரு அதிர்வை உண்டாக்கிவிட்டுச் செல்லும். அந்த அதிர்வு, அவரவரைப் பொறுத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்...

இயற்கையின் அமைப்பில் இறப்பின் முக்கியத்துவமும், மனித வாழ்வில் அதன் மகத்துவமும் பற்றி பேசுகிறது, `செத்தும் ஆயிரம் பொன்'.
செத்தும் ஆயிரம் பொன்
செத்தும் ஆயிரம் பொன்

பகலில் விழுங்கிய வெக்கையை இரவெல்லாம் உமிழும் பாலை நிலத்து கிராமம், ஆப்பனூர். அங்கும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் இறப்பவர்கள் இல்லம் சென்று, ஒப்பாரி பாடும் கிழவி கிருஷ்ணவேணி. `ஒப்பாரி கிழவி' என்றால் நன்கு பரிச்சயம். ஒப்பாரிக் கிழவியின் மகன்வழிப் பேத்தி குஞ்சம்மா (எ) மீரா. இன்று, சினிமாவில் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றும் மீராவுக்கு, அவள் குஞ்சம்மாவாக இருந்த காலத்திலிருந்தே பாட்டியின் மீது ஆற்றாத கோவம். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு குடும்பச்சண்டையில், கிழவியின் மகன் குடும்பம் கிராமத்தை விட்டே வெளியேற, அத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் கிராமத்திற்கு வருகிறாள் மீரா. அதுவும் மனம் முழுக்க வேண்டா வெறுப்போடு.

கிழவியின் மீதான வெறுப்பு, அந்தக் கிராமத்தில் எதிர்ப்படும் ஆட்கள் மீதெல்லாம் வெடித்துச் சிதறுகிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த மீராவின் அத்தை மகன் குபேரன். இறப்பவர்களுக்கு இறுதி ஒப்பனையிடும் கலைஞன். இறந்தவர் வீட்டில் ஒப்பாரி பாடும் கிருஷ்ணவேணிக்கும், அங்கு ஒப்பனையிடும் குபேரனுக்கும் வயது வித்தியாசமின்றி வாய்ச்சண்டை நடக்கும். குபேரன் தந்தையின் இறப்புக்குக்கூட, கிராமத்துப் பக்கம் எட்டிப்பார்க்காத மீராவின் குடும்பத்தின்மீது குபேரனுக்கு வெறுப்பு. தன் தந்தையின் இறுதிச்சடங்குக்கு வராத பாட்டி கிருஷ்ணவேணியின் மீது பேத்தி மீராவுக்கு வெறுப்பு. `இறப்பு' என்பதைக் கொண்டு மூவருக்கும் இடையே மூண்ட இந்த வெறுப்பு, அதே இறப்பினால் வேறொன்றாக மாறுகிறது. அது என்னவாக, எப்படியாக, எதற்காக மாறுகிறது என்பதே `செத்தும் ஆயிரம் பொன்' சொல்லும் கதை.

செத்தும் ஆயிரம் பொன்
செத்தும் ஆயிரம் பொன்

இறப்பைச் சுற்றி நடக்கும் இந்தக் கதைக்குள், அத்தனை கொண்டாட்டம் இருக்கிறது. கிராமங்களின் அழகியல் இருக்கிறது, அதன் வாழ்வியல் இருக்கிறது. கொட்டித்தீர்க்கும் கெட்ட வார்த்தைகளும், கொட்ட முடியாமல் கட்டி நிற்கும் கண்ணீரும் என இன்னும் எத்தனையோ இருக்கின்றன. முன்முடிவுகளோடு எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை, கணித்துவிடக்கூடிய திரைக்கதையின் ஓட்டம் என்பதெல்லாம் சிறு குறைகளாக இருந்தாலும், திரைமொழியில் இருக்கும் யதார்த்தமும் வட்டாரமொழியில் உள்ள கச்சிதமும், நடிகர்களின் நடிப்பிலுள்ள நேர்த்தியும், சின்னச்சின்ன சுவாரஸ்யங்களும் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. பின்னணியில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பாரிப் பாடல், ஒருவர் நெஞ்சுவலி வந்து இறந்துபோகும் இடத்தில் குபீர் சிரிப்பை வரவைக்கிறது. ஒரு கூத்துக்கலைஞனின் இறப்பில் ஆச்சர்யத்தை உண்டு பண்ணுகிறது. இறுதியாக ஓர் இடத்தில் நெஞ்சையே கணமாக்குகிறது. ஒப்பாரி, வெறும் அழுவதற்கு மட்டுமன்று என்பதையும், அதன் வழியாக இறப்பும் அப்படித்தான் என்பதையும் எளிமையாகச் சொல்லியிருக்கிறார், அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன்.

கிருஷ்ணவேணியாக நடித்திருக்கிறார் ஶ்ரீலேகா ராஜேந்திரன். அவரது குரல், ஒப்பாரிப் பாடலுக்கும் வட்டார மொழிக்கும் கொஞ்சம் ஒத்துழைக்கவில்லை. ஆனால், நடிப்பில் நிறைவாகச் செய்திருக்கிறார். மீரா (எ) குஞ்சம்மாவாக நிவேதிதா சதீஷ். மையக் கதாபாத்திரத்தின் சுமையைத் தாங்க முடியாமல் தடுமாறியிருப்பது தெரிகிறது. ஆனாலும், அலட்டல் இல்லாத அளவான நடிப்பு. குபேரனாக நடித்திருக்கும் அவினாஷ் ரகுதேவன், ஆப்பனூர்வாசியாகவே வாழ்ந்திருக்கிறார். அமுதாவாக வரும் கேப்ரியலா, தனித்துத் தெரிகிறார். அவருடைய நடிப்பும் மொழியும் அவ்வளவு ஈர்க்கிறது. கிடைக்கும் இடத்திலெல்லாம், தன்னை நிரூபித்துவிடுகிறார். குபேரனின் நண்பர்களாக வரும் சங்குதேவனும், பாகுபலியும் இன்னபிற கதாபாத்திரங்களும் நடிகர்களா அல்லது அந்தக் கிராமத்தின் நிஜ மனிதர்களா என சந்தேகம் கிளப்பும் அளவிற்கு அத்தனை இயல்பாக நடித்துள்ளனர்.

செத்தும் ஆயிரம் பொன்
செத்தும் ஆயிரம் பொன்

சாம்நாத்தின் பின்னணி இசை சிறப்பு. பாடல், பெரிதாய் ஈர்க்கவில்லை. மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் ஒளிப்பதிவு, அழகு. பிரகாஷ் கருணாநிதியின் படத்தொகுப்பும் பக்கா. மொத்தத்தில் இந்த எளிமையான படம், நம் மனத்தில் சிறிதேனும் ஒரு அதிர்வை உண்டாக்கிவிட்டுச் செல்லும். அந்த அதிர்வு, அவரவரைப் பொறுத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்...

அடுத்த கட்டுரைக்கு