Election bannerElection banner
Published:Updated:

``கடற்கரை காதலி, அமெரிக்காவுக்கு ஓர் இந்தியப் பிரதமர்!" - ஷாரூக் கான் பேட்டியின் ஹைலைட்ஸ்

Shah Rukh Khan's interview for Netflix
Shah Rukh Khan's interview for Netflix

``இன்ஜினீயர் ஆகவேண்டும் என்று நினைத்து, பின்பு பொருளியல் படித்து, அதைத் தொடர்ந்து மாஸ் கம்யூனிகேஷன் படித்து, பத்திரிகையாளனாக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட இவரை... காலம், உலகம் புகழும் நடிகனாக்கியுள்ளது!"

ஷாரூக் கான்! ஒட்டுமொத்த இந்தியாவின் இதயத்திலும் இடம் பிடித்திருக்கும் ஒரு நடிகர். சமீபத்தில் டேவ் லெட்டர்மேன், ஷாரூக் கானைத் தன்னுடைய நிகழ்ச்சிக்கு (my next guest) அழைத்து நடத்திய ஓர் உரையாடலை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து, மேன்மேலும் அவரை ரசிக்க வைக்கிறார், ஷாரூக் கான்.

Shah Rukh Khan's interview for Netflix
Shah Rukh Khan's interview for Netflix

ஆரம்பத்தில் தனக்கு முதன் முதலாக மேடையேறும் வாய்ப்பு எங்கே கிடைத்தது என்று கேட்டதற்கு ஷாரூக் கூறியது, `சிறுவனாக இருந்தபோது, `ராமாயண' நாடகத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு குரங்காக நடித்ததுதான்' என்றார். மேலும் இந்த உரையாடலில், பள்ளி முடித்திருக்கும் மாணவர்கள்போல தனக்கும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் குழப்பம் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார், ஷாரூக்.

இப்படியாக உரையாடல் போய்க்கொண்டிருக்கும் நிலையில், பேச்சு ஷாரூக்கின் பெற்றோர் இழப்பு குறித்து நகர, அவர் கூறிய பதிலில் அவ்வளவு கனம்.

Shah Rukh Khan's interview for Netflix
Shah Rukh Khan's interview for Netflix

`சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு. ஒருவகையில் நான் என் பெற்றோரை சிறு வயதிலே இழந்தது நல்லதுதான் என்று. ஏனென்றால், சிறுவயதிலேயே நான் அதைக் கடந்து சென்று என் வாழ்க்கையைத் தொடங்கினேன். அவர்கள் என்னுடன் பல காலம் இருந்துவிட்டுச் சென்றிருந்தால், என்னால் நிச்சயம் அதைத் தாங்கியிருக்க முடியாது' என்பதுதான், அவர் கூறிய பதில். தன் பெற்றோர் தன்னுடன் வெகுகாலம் கூட இல்லாததனால், தன் பிள்ளைகள் ஒரு நொடியும் அப்படி உணரக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார். அவர் கூறியதைப் பார்த்தால், நமக்கும் இதுபோல ஒரு தந்தை வேண்டும் என்று நினைக்கத் தூண்டுகிறது. பிள்ளைகளுக்குப் பல வகையான சாப்பாடு சமைத்து தருவதிலிருந்து, வாழ்க்கை தரும் பாடங்களின்போது, அவர்களுக்கெல்லாம் பக்க துணையாக இருப்பது என ஷாரூக் சொல்வதைக் கேட்டால், `அசத்தல் டாடி'யாகத் தெரிகிறார்.

இந்த நேர்காணலில் தன்னுடைய காதல் கதையைப் பற்றியும் மனம் திறந்திருக்கிறார், ஷாரூக். இவர் நடிக்கும் படத்தைப்போலவே இவர் காதல் கதையும் சுவாரஸ்யமாக இருக்கிறது. டெல்லியிலிருந்து இவரிடம் சண்டை போட்டுப் பிரிந்து மும்பைக்குச் சென்றிருந்த கௌரியைத் தன் நண்பர்களுடன் தேடச் சென்றிருக்கிறார், ஷாரூக்.

முன் பின் தெரியாத ஊரில் ஒரு கார் பிடித்து, கௌரிக்கு நீச்சல் ரொம்பப் பிடிக்கும் என்பதால் எல்லாக் கடற்கரைக்கும் சென்று தேடியிருக்கிறார். எல்லாம் முடிந்துவிட்டது, கடைசியாக ஒரே ஒரு கடற்கரை! நண்பர்கள் அனைவரும் அங்கேயும் போகலாம் என்று கூற, ஷாரூக் சென்றிருக்கிறார். அங்கே காத்திருந்தது ஓர் ஆச்சர்யம். கௌரி அங்கே இருந்தார்! அன்று ஒன்று சேர்ந்த இந்த ஜோடி, திருமணமாகி 27 வருடங்களைக் கடந்து காதல் குறையாமல் பயணிக்கிறார்கள்.

Shah Rukh Khan's interview for Netflix
Shah Rukh Khan's interview for Netflix

இன்ஜினீயர் ஆகவேண்டும் என்று நினைத்து, பின்பு பொருளியல் படித்து, அதைத் தொடர்ந்து மாஸ் கம்யூனிகேஷன் படித்து பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட இவரை... காலம், உலகம் புகழும் நடிகனாக்கியுள்ளது. தன் நடிப்புப் பயணத்தினிடையே, தான் அவ்வளவு நடிப்புத் திறன் கொண்டவன் அல்ல என்று உணர்ந்த ஷாரூக், அடுத்த வழியாக மக்கள் மனதை அடைவது எப்படி என்று யோசித்து, அதை நோக்கிப் பயணித்து சாதித்துவிட்டார்.

Shah Rukh Khan's interview for Netflix
Shah Rukh Khan's interview for Netflix

இந்தியர்களைப் பற்றிப் பேசும்போது, `இன்னும் ஓர் ஐந்தாறு ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் ஓர் இந்தியப் பிரதமர் கிடைக்கலாம்! நான் இந்தியர்களின் திறனை அதிகம் மதிக்கிறேன்' எனக் கூறி, பெருமைப்பட்டுக்கொள்கிறார். இறுதியாக, ``ஷாரூக் மகனுக்கு நடிப்பில் ஆர்வம் உண்டா?" என்ற கேள்வியைக் கேட்க, அதற்கு மிகத் தெளிவான பதிலைச் சொன்னார், ஷாரூக்.

`என்னதான் என் மகன் நன்றாக நடித்தாலும், அதை எப்போதும் தன் நடிப்புடன் ஒப்பிடப்படும் என்பதால், அவனால் தனித்துத் தெரியமுடியாது. அதை உணர்ந்து, என் மகனே நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறான்' என்று கூறினார். ஷாரூக் ரசிகர்களுக்கு இது சோகம்தான் என்றாலும், எழுத்தில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்கிறார், ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான்.

Shah Rukh Khan's interview for Netflix
Shah Rukh Khan's interview for Netflix

அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தான் நடத்தும் ஓர் அமைப்பு பற்றிக் கூற, ஷாரூக்கைத் திரையில் பிடிக்காதவர்களுக்குக்கூட அவர் மீது மரியாதை கூடுகிறது. பேட்டியை முடித்த அவர், இறுதியாக தன் சிக்னேச்சர் டான்ஸ் ஸ்டெப்பைப் போட்டு மனதைக் கொள்ளையடித்துவிட்டார்!

``தேவதைக் கதைகளை இப்போது நம்புகிறேன்!''- மனைவிக்குத் திருமண வாழ்த்து சொன்ன ஷாரூக்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு