Published:Updated:

`மினி, மோகனா, சக்தி, நித்தி...' - `லவ்அண்ட் லவ் ஒன்லி' ஷாலினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

ஷாலினி அஜித்குமார்
ஷாலினி அஜித்குமார்

ஷாலினி ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் சென்ற தலைமுறையின் நினைவடுக்குகளில் நிரம்பிக்கிடக்கும் காதலிகளின் சாயல்களை நினைவூட்டும். திரையில் கண்டு உருகி, நிஜத்திலும் ஒரு மினிக்காக, சக்திக்காக, நித்திக்காகக் காத்திருந்தவர்கள் இங்கு ஏராளம். ஷாலினி என்றால்,`லவ் அண்ட் லவ் ஒன்லி!'

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாகத் தன் பயணத்தைத் தொடங்கிய கதாநாயகர்கள், நாயகிகளாகப் பிரகாசித்த நட்சத்திரங்கள் சொற்பமே! அந்த அசாத்தியத்தை அநாயாசமாக செய்துகாட்டியவர்களில் ஒருவர், ஷாலினி. தன் பெயரில் இருந்த `பேபி'யை மக்கள் மறந்துபோகச் செய்ய திரையில், நடிப்பில் அவர் காட்டிய முதிர்ச்சி அபாரமானது. இன்றும் மனதில் நிற்கும் அவரின் சில கதாநாயகி கதாபாத்திரங்களைப் பற்றிய மினி ரீவைண்டு...

ஷாலினி
ஷாலினி
அலைபாயுதே

தமிழில் ஐந்தே படங்களில்தான் நாயகியாக நடித்திருக்கிறார். இல்லை, வாழ்ந்திருக்கிறார். அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் சென்ற தலைமுறையின் நினைவடுக்குகளில் நிரம்பிக்கிடக்கும் காதலிகளின் சாயல்களை நினைவூட்டுகின்றன. திரையில் கண்டு உருகி, நிஜத்திலும் ஒரு மினிக்காக, சக்திக்காக, நித்திக்காக காத்திருந்தவர்கள் ஏராளம். ஷாலினி என்றால், `லவ் அண்ட் லவ் ஒன்லி!'

காதலுக்கு மரியாதை-மினி:

ஷாலினி
ஷாலினி
காதலுக்கு மரியாதை

தன் ஒற்றை இதயத்தை, உறவுகளின் பாசத்திற்கும் காதலனின் காதலுக்கும் பறிகொடுத்துவிட்டு, இரண்டையும் விட்டுத்தர முடியாமல், விட்டுவர முடியாமல் உள்ளூர கலங்கிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மனத்துக்கு தன் மென்சோக நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருப்பார், ஷாலினி. ஜீவாவுக்கும் மினிக்கும் இடையேயான காதல், வெறும் கண்கள் பட்டு வளர்வது போன்றே படமாக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சிகளில் எல்லாம் தன் படபடக்கும் குண்டுக் கண்களால் காதலை கொட்டித் தீர்த்திருப்பார். தாவணி, திருவிழா, குங்குமம் என 80'ஸ் காதல் அத்தியாயம் முடிவடைந்து சல்வார், பேருந்து, ஸ்டிக்கர்பொட்டு என 90'ஸ் காதலின் ஆரம்பகால அத்தியாத்தில் வந்த தேவதைகளுக்கு வடிவம் கொடுத்ததில் மேக்ஸிமம் பங்கு மினிக்கு உண்டு.

அமர்க்களம்-மோகனா:

ஷாலினி - அஜித்
ஷாலினி - அஜித்
அமர்களம்

`அமர்க்களம்', ஷாலினியின் சினிமா வாழ்க்கையையும், நிஜ வாழ்க்கையையும் அமர்க்களமாக்கிய படம். அஜித்துக்கும் ஷாலினிக்கும் திரையில் மட்டுமல்லாது திரைக்குப் பின்னாலும் காதல் மலர்ந்தது இப்படத்தில்தான். அம்மா, அப்பா, அண்ணன்கள், அண்ணிகள் என்றொரு அழகான கூட்டுக்குடும்பத்தின் கடைக்குட்டி, மோகனா. அப்பாவுக்கு செல்ல மகளாகவும் அண்ணக்களுக்கு குறும்புக்கார தங்கையாகவும் துறுதுறுவென நடித்திருப்பார். அந்தத் துறுதுறு மோகனாவைத் திரையில் கண்ட அத்தனை குடும்பங்களும் தங்கள் வீட்டு கடைக்குட்டியாக நினைத்துக்கொண்டன. `அமர்க்களம்' போன்ற ஒரு ஆக்‌ஷன் படத்தில், காதல் காட்சிகளையும் கசிந்துருகச் செய்தது ஷாலினியின் இயல்பான நடிப்புதான். மோதல்-காதல் -பாசம் என விரியும் கதையில், நாயகி மோகனாவுக்கு அப்போது மட்டுமல்ல எப்போதும் ஹார்ட்ஸ் உண்டு.

அலைபாயுதே-சக்தி:

ஷாலினி
ஷாலினி
அலைபாயுதே

காதலை ஆயிரமாயிரம் கவிஞர்களும், கலைஞர்களும் கொண்டாடித் தீர்த்தாலும் தீராத அதன் பக்கங்கள், காற்றில் படபடத்தபடியேதான் இருக்கின்றன. அக்காதல் பக்கங்களில் சக்தியைப் பற்றிய நெடுங்கவிதை ஒன்றுக்கு நிச்சயம் இடமுண்டு. மில்லினியம் காலத்து காதலையும் ஊடலையும் பதிவு செய்தது, `அலைபாயுதே'. பறக்கும் ரயிலில் சக்தியைப் போன்றொரு தேவதையைத் தாமும் கண்டுவிட மாட்டோமா என எத்தனையோ கண்கள் ஏங்கிக்கிடந்தன. ரயிலின் வேகம் எரிச்சலூட்டின, தண்டவாளங்களில் பல மனங்கள் தடம் புரண்டன. பெண்களுக்குள் எப்போதுமிருக்கும் ஒருவித குழந்தைத்தனத்தை நடிப்பில் கொண்டுவந்திருப்பார். அந்த குழந்தைத்தனம், `பேபி' ஷாலினியின் மழலைத்தனமாக அல்லாது, சக்தி எனும் பெண்ணுக்குள் இருக்கும் குழந்தைத்தனமாக வெளிப்பட்டதில் அளவிடலாம் ஷாலினியின் திறனை.

பிரியாத வரம் வேண்டும் - நித்தி:

ஷாலினி
ஷாலினி
பிரியாத வரம் வேண்டும்

ஆண்- பெண் நட்பு காதலாக மாறும்போது, அந்த உணர்வுகளை நட்பு எப்படி எதிர்கொள்ளும் என்பதை அழகாகப் பதிவுசெய்த படம், `பிரியாத வரம் வேண்டும்'. குழந்தைப் பருவத்திலிருந்து சஞ்சய்க்கும் நித்திக்கும் இடையே வளர்ந்த நட்பு, ஒரு புள்ளியில் காதலாக மாறத் தொடங்கியிருக்கும். இருவரும் வெவ்வேறு நபருடன் காதல் பயணத்தைத் தொடங்கியிருந்தாலும், அந்தக் காதலால் தங்கள் நட்புக்குள் இடைவெளி வருகையில், ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழ முடியாது என்பதை உணர்வார்கள். காதலை சஞ்சய் வெளிப்படுத்தும் தருணம், காதலுக்கும் நட்புக்கும் இடையில் உடைந்து, தன் உணர்வுகளைக் கண்ணீரில் கடத்தியிருப்பார் ஷாலினி. டாப் க்ளாஸ்!

ஏனோ, ஷாலினி கதாநாயகியாக நடித்த அத்தனை படங்களிலும் காதலுக்கும் குடும்ப உறவுகளுக்கும் முக்கியத்துவம் தரும் பாத்திரங்களாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனாலும் அவரின் நடிப்புத் திறனாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டார். ஷாலினிக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் காலகாலத்துக்கும் பிரியாத வரம் உண்டு... பிறந்தநாள் வாழ்த்துகள் ஷாலினி!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு