Published:Updated:

ஹை ஸ்பீடில் கமல்... வெளியேறிய ஏ.எம்.ரத்னம்! - `இந்தியன் 2' அப்டேட்ஸ்!

இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் தடைபட்டிருந்த `இந்தியன் -2' படத்தின் ஷூட்டிங் இப்போது செம வேகத்தில் நடந்துவருகிறது.  

indian 2
indian 2

`இந்தியன்-2' படப்பிடிப்புக்கு லொகேஷன் பார்ப்பதற்காக ஹாலந்து, போலந்து, உக்ரைன் எனப் பல்வேறு நாடுகளுக்குப் பறந்தார் ஷங்கர். உலகம் முழுவதும் சுற்றிவந்து ஷூட்டிங் நடத்தும் இடங்களைத் தேர்வு செய்து, அந்தந்த அரசாங்கத்திடம் அனுமதியும் பெற்று சென்னை திரும்பினார். ஆனால், அரசியல் பணிகளில் கமல் செம பிஸியாக இருந்தார். சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டுக் கமல் நடிக்கத் தயாராகும்போது விஜயா புரொடக்‌ஷன்ஸ், லைக்கா, ஷங்கர் என மூவருக்கும் இடையே மனக்கசப்பு. இதனால் படத்தின் பணிகள் நின்றுபோனது.

indian 2
indian 2

இதற்கிடையே `காப்பான்' இசை விழாவுக்கு ஷங்கரும் `லைக்கா' சுபாஷ்கரனும் கைகோத்துவர உற்சாகமானது `இந்தியன் -2' டீம். தற்போது, சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவிலும், பிரசாத் லேப்பில் போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டிலும் `இந்தியன் 2' படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்துவருகிறது. முதலில் பிக்பாஸ், அடுத்து சினிமா ஷூட்டிங், அதன்பின் அரசியல் மீட்டிங் என மின்னல் வேகத்தில் தன்னுடைய பணிகளைச் செய்துவருகிறார் கமல். `இந்தியன் 2' டைட்டில் கொடுத்த காரணத்தால், `இந்தியன்' படத்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னத்தையே எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராக நியமித்தது லைக்கா.

ஏற்கெனவே தயாரிப்பு நிர்வாகியாக இருந்த அனுபவம் ஏ.எம்.ரத்னத்துக்கு அதிகம் இருந்ததால் `இந்தியன் 2' படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளைப் பரபரப்பாகச் செய்தார். இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால், திடீரென ஏ.எம்.ரத்னத்துக்கு தடா போட்டது தயாரிப்பு நிர்வாகம். இதனால் `வேதாளம்' இந்தி ரீ-மேக்கில் இறங்கிவிட்டார் ஏ.எம்.ரத்னம்.