Published:Updated:

கொஞ்சம் நடிங்களேன் சிபி... கபடதாரி - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

40 வருடங்களுக்கு முன் புதைந்துபோன ஒரு கொலை வழக்கைத் தூசி தட்டி 'கபடதாரி'க்கு தண்டனை வழங்கும் காவல் அதிகாரியின் கதை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டிராஃபிக் எஸ்.ஐ சிபிராஜுக்குக் காக்கி சட்டை அணிந்து க்ரைம் குற்றங்களைத் துப்பு துலக்க வேண்டும் என்பது கனவு. அதற்கான வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அவருக்கு மெட்ரோ பணிக்காகக் குழி தோண்டும் போது கிடைக்கும் மூன்று எலும்புக்கூடுகள் புதையலாக அமைகின்றன. 40 வருடங்களுக்கு முன் கைவிடப்பட்ட வழக்கை மீண்டும் கையிலெடுக்கும் சிபிக்குக் குற்றவாளி யாரென்பது பேரதிர்ச்சியை உண்டாக்க, தடைகளை உடைத்து நீதியை (?!) நிலைநாட்டினாரா என்பதே கதை.

கபடதாரி
கபடதாரி

கன்னடத்தில் 2019-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'காவலுதாரி' (நாற்சந்தி) படத்தை அப்படியே தமிழில் ரீமேக்கியிருக்கிறார்கள். டிராஃபிக் போலீஸாகத் தோரணையில் நியாயம் சேர்த்தாலும், உணர்ச்சிகளைக் கொட்டி அழுவது, செய்வதறியாது தடுமாறுவது போன்ற இடங்களில் அப்பட்டமாகத் தெரியும் சிபியின் செயற்கைத்தனம் பெரிய மைனஸ். உடல்மொழி, வசன உச்சரிப்பு என இன்னும் ஏற வேண்டிய படிகள் எக்கச்சக்கம் இருக்கின்றன தோழர் சிபி!

ஜெயப்பிரகாஷ், நாசர், நந்திதா ஸ்வேதா எனத் தெரிந்த நடிகர்களுக்கு முக்கிய கதாபாத்திரங்கள் என்றாலும் நாசரைத் தவிர வேறு யாரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மற்றவர்கள் சரியாக நடிக்கவில்லை என ஜெயப்பிரகாஷ் நினைத்துவிட்டாரோ என்னவோ... எல்லோருக்கும் சேர்த்து அவரே ஓவராக நடித்துத் தள்ளியிருக்கிறார். அதிலும் ஒரு தனிநபராக அவரே நியூஸ் பேப்பர் அலுவலகம் நடத்துவதெல்லாம் 'அடேங்கப்பா' ரகம்! முக்கியமாக வில்லன் நடிகராக வரும் சம்பத்... ப்ச்ச்! அத்தனை கனமான பாத்திரத்தைக் கன்னடத்தில் சமாளித்தவர், தமிழில் தடுமாறியிருக்கிறார். போட்டிருக்கும் வயதான மேக்அப்பும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

கபடதாரி
கபடதாரி

கன்னட வெர்ஷனில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளைக் காட்டும் வித்தியாச யுத்தி, தமிழுக்கும் நன்றாக வொர்க்அவுட் ஆகியிருக்கிறது. சுலபத்தில் யூகிக்க முடியாத திரைக்கதை முடிச்சுதான் படத்தின் பலம். யார் குற்றவாளி என்று தெரிந்தால் கதை முடிந்தது என்ற வழக்கமான பாணியைத் தவிர்த்து, கதையில் கூடுதலாக ஒரு பிரச்னையை வைத்து 'மாத்தி யோசி'த்திருக்கிறார்கள். ஆனால், சஸ்பென்ஸ் உடைந்த பின்னர், கதையை நகர்த்தத் தேவையான பலமான காட்சியமைப்புகள் எதுவும் படத்தில் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல், என்னதான் நூல் பிடித்து துப்புத்துலக்குதல்தான் என்றாலும், இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. திரைக்கதையைத் தமிழுக்குத் தழுவி, படத்தையும் தயாரித்த தனஞ்செயன் கொஞ்சம் நறுக் சுருக்காகவும் யோசித்திருக்கலாம். ஆரம்பத்தில் வரும் சிப்பாய் ராஜாவையே வெட்டும் வசனம்தான் கதையின் சாராம்சம் என்ற குறியீடு ஈர்த்தாலும், அதன் பிறகு வசனங்கள் எதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை. ராசாமதியில் ஒளிப்பதிவு ஓகே! படத்தொகுப்பில் பிரவீன் கே.எல் இன்னமும் கொஞ்சம் தாராளமாக தன் கத்திரியைப் பயன்படுத்தியிருக்கலாம். கதையை ஒட்டியே பாடல்கள் வந்தாலும் எதுவும் பெரிதாக அழுத்தம் சேர்க்கவில்லை. பின்னணி இசையில் மட்டும் சைமன் ஸ்கோர் செய்திருக்கிறார்.

கபடதாரி
கபடதாரி

தேவையில்லாமல் ரொமான்ஸ் ட்ராக் வைக்கிறேன் என நேரத்தை வீணடிக்காமல் ஒரிஜினல் கதையை அப்படியே சொல்ல முயன்றதற்காக மட்டும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியைப் பாராட்டலாம். சிபியை வைத்து ஏற்கெனவே 'சத்யா' படத்தை ரீமேக் செய்தவர்தான் இவர் என்றாலும் அதிலிருந்த நம்பகத்தன்மை இதில் மொத்தமாக மிஸ்ஸிங்!

செயற்கைத் தனத்தைக் குறைத்து நல்லதொரு முடிச்சுகள் நிறைந்த கதைக்கு ஏற்றவாறு கொஞ்சம் சீரியஸான நடிப்பையும் கறாராக வாங்கியிருந்தால் இந்த சிப்பாய் ராஜாவாகி இருப்பான்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு