புதுச்சேரியில் ஷூட்டிங், மூலிகை கஷாயம், ஆவி பிடித்தல்... சிம்புவின் `மாநாடு' அப்டேட்ஸ்!

மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்களுக்கு சித்த மருத்துவத்தின் நோய் தடுப்பு மருந்துகள், கஷாயம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு வருகின்றன.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் `மாநாடு' திரைப்படம் கோவிட்-19 லாக்டௌன் காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. `மாநாடு' அரசியல் ஆக்ஷன் திரில்லர் படம் என்பதாலும் நடிகர் சிம்பு நடிக்கும் முதல் அரசியல் திரைப்படம் என்பதாலும் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லாக்டௌன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், `நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது' என்று அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் தகவல் வெளியிட்டார்.

இதற்கு முன்பாகவே டயட், வெயிட்லெஸ் என்று படப்பிடிப்புக்கு ஃபிட்டாக ரெடியானார் சிம்பு. இந்நிலையில் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியிருக்கிறது. அரசியல் சார்ந்த படம் என்பதால் கட்சிக்கூட்டம், தொண்டர்கள் என்று அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதைப் போன்ற காட்சிகள் படமாக்கப்பட வேண்டும். இதற்காக அதிக எண்ணிக்கையில் துணை நடிகர்கள் புதுச்சேரிக்குச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கோவிட்-19 பெருந்தொற்று பரவும் சூழலில் ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதால் நோய் பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்களுக்கு சித்த மருத்துவத்தின் நோய் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் வீரபாபுவின் தலைமையிலான குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் தங்கியிருந்து மூலிகை மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

இதுபற்றிக் கூடுதல் விவரங்களைப் பெற சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம். இவர் சென்னை சாலிகிராமத்தில் அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட சித்த மருத்துவப் பராமரிப்பு மையத்தில் சிகிச்சையளித்து, பிறகு அதிலிருந்து விலகினார்.
``படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என் நண்பர். அவர் பரிந்துரைத்த திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் நான் சிகிச்சையளித்திருக்கிறேன்.
அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் `மாநாடு' படப்பிடிப்பு தளத்தில் மூலிகை மருந்துகளை வழங்கி வருகிறோம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், சித்த மருத்துவ தடுப்பு மருந்துகள், சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ள தகவல்கள் அனைத்தையும் புதுச்சேரி அரசிடம் தெரிவித்த பிறகுதான், படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அரசின் பராமரிப்பு மையத்திலிருந்து விலகியதற்குப் பிறகு காடுகளுக்குச் சென்று பசுமையான மூலிகைகள் சிலவற்றைச் சேகரித்து வந்தேன். அவற்றில் தயாரிக்கப்பட்ட மூலிகை கஷாயத்தைதான் படப்பிடிப்பு குழுவினருக்கு வழங்கி வருகிறோம்.
தினமும் காலை, மாலை இரண்டு வேளை கஷாயம் வழங்கப்படுகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து கிளம்பும் நேரத்தில் அனைவருக்கும் ஆவிபிடித்தல் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தற்போது சுமார் 300 பேர் படப்பிடிப்பு பகுதியில் உள்ளனர்.

மாநாடு கூடுவதைப் போன்ற காட்சி எடுக்கும்போது 400-க்கும் மேற்பட்டவர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தனர். அவர்களுக்கும் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். இதனால் தொற்றுப் பரவல் ஏற்படாமல் பாதுகாப்பாகப் படப்பிடிப்பு நடைபெறும்.
என்னுடைய ஊழியர்கள் மூன்று பேர் படப்பிடிப்பு தளத்தில் தங்கி, இந்தப் பணிகளைக் கவனித்து வருகின்றனர். சுமார் 2 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. படப்பிடிப்பு நிறைவடையும்வரை மருந்துகள் நாள்தோறும் வழங்கப்படும்.
நடிகர் சிம்பு இதுவரை சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு பகுதிக்கு நேரில் செல்லவிருக்கிறேன். அப்போது அவரைச் சந்தித்து சிகிச்சையின் பலன்கள் குறித்து எடுத்துக்கூறி, அவரையும் மருந்துகளை எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும்" என்றார்.

தடுப்பு மருந்தாக என்ன கஷாயம் வழங்கப்படுகிறது, அரசு பரிந்துரைத்துள்ள கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறதா என்று கேட்டதற்கு, ``கபசுரக் குடிநீர் வழங்கப்படவில்லை. பசுமையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட வேறு கஷாயம்தான் வழங்கப்படுகிறது. அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலிகைகள் குறித்து தற்போது தெரிவிக்க முடியாது." என்றார்.