Published:Updated:

``வில்லன்களை வேரோடு அழிக்கிறதுதான் `முடக்கருத்தான்'" - ஹீரோவாக அறிமுகமாகும் சித்த மருத்துவர் வீரபாபு

சித்த மருத்துவர் வீரபாபு
சித்த மருத்துவர் வீரபாபு

``கொரோனா காலத்தில் நடிகராகியிருக்கீங்க, உங்க பணி பாதிக்கப்படாதா?" என்ற கேள்வியுடன் சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம்.

தமிழகத்தில் கோவிட்-19 முதல் அலையின்போது அதிகம் பிரபலமானவர் சித்த மருத்துவர் வீரபாபு. கோவிட் தொற்றுக்கு அலோபதி மருத்துவம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நேரத்தில் சித்த மருந்துகளின் மூலமும் அதற்குத் தீர்வு காண முடியும் என்ற கருத்தை முன்வைத்தார்.

covid
covid

மிதமான பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சையளித்து அதன் ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டார். இதனையடுத்து தமிழகத்திலேயே முதன்முறையாக தமிழக அரசின் சார்பில் சித்த மருத்துவ பராமரிப்பு மையம் சென்னை சாலிகிராமத்தில் தொடங்கப்பட்டது.

அந்த மையத்தில் வீரபாபு சுமார் மூன்று மாதங்கள் சிகிச்சையளித்து வந்தார். இந்நிலையில் அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அவரும் தனக்கு ஓய்வு தேவைப்படுவதாகக் கூறி அந்த மையத்திலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்து வந்தார்.

சித்த மருத்துவர் வீரபாபு
சித்த மருத்துவர் வீரபாபு

இந்நிலையில் அவர் திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரே எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்தப் படத்துக்கு `முடக்கருத்தான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. ``கொரோனா காலத்தில் நடிகராகியிருக்கீங்க, உங்க பணி பாதிக்கப்படாதா?" என்ற கேள்வியுடன் சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம்.

``கொரோனாதான் 2 மாசம் லீவ் கொடுத்திருக்கில்ல. அதான் இந்தப் பக்கம் வந்துட்டேன்" என்றவர், தன் படம் பற்றிய அப்டேட்டுகளை பகிர்ந்துகொண்டார். ``சினிமா துறைக்குள்ளே போகணும்னு மனசுல ஆசை இருந்துச்சு. நம்மள வெச்சு யாரு படம் பண்ணுவாங்கன்னு நினைச்சு விட்டுட்டேன்.

திரைப்பட போஸ்டர்
திரைப்பட போஸ்டர்

அதுக்கப்புறம் சில சினிமாத் துறை நண்பர்கள் படம் பண்ணுங்கன்னு சொன்னாங்க. அதை நானே எழுதி இயக்கிடலாம்னு முடிவு பண்ணினேன். படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே நான்தான்.

பாடல் காட்சிகள் ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு. மக்களுக்கு நகைச்சுவை, ஆக்ஷனோடு சேர்ந்து ஒரு நல்ல மெசேஜ் சொல்ற மாதிரி கதை. கோவிட் இரண்டாம் அலை சமயத்துல என்னோட மருத்துவமனையில வேல பாத்துட்டு இருக்கும்போதே, ராத்திரி வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் எழுத்து வேலைகள் பாப்பேன். எழுத்து வேலை முடிஞ்சதும் படப்பிடிப்பு தொடங்கியிருக்கோம்.

Cinema. (Representational Image)
Cinema. (Representational Image)

அதென்ன முடக்கருத்தான்?

வயசானவங்க மட்டுமல்ல பலருக்கு ஏற்படுற மூட்டுவலியைப் போக்குற மூலிகைதான் முடக்கத்தான். அதே போல சில வில்லன்களால் நல்ல மனிதர்கள் வளர முடியாம முடங்கிப் போயிடுறாங்க. நல்லவங்களை முடக்குறவங்களை வேரறுக்கிறார் கதாநாயகன். ரொம்ப யோசிச்சு படத்தோட டைட்டில `முடக்கருத்தான்'னு வெச்சிருக்கோம்.

கே.ஆர் விஜயா எனக்கு அம்மா கேரக்டர் பண்ணிருக்காங்க. மயில்சாமி காமெடி ரோல் பண்ணிருக்காரு. ரேவதி என்ற புதுமுகம் கதாநாயகியா நடிக்கிறாங்க. செங்கல்பட்டைச் சுற்றியுள்ள கிராமங்கள், ஏரி, குளம்னு பல இடங்கள்ல ஷூட் பண்ணுறோம். சுமார் 40 நாள்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கோம். சின்ன பட்ஜெட் படம்தான். பழநிபாரதி பாடல்கள் எழுதி சிற்பி இசையமைச்சிருக்காரு. மொத்தம் 4 பாடல்கள். பாடல்கள் எல்லாமே நல்லா ரீச் ஆகியிருக்கு. பாடல்களைக் கேட்ட கலைப்புலி தாணு, அவரே படத்தை வெளியிடுறேன்னு சொல்லிட்டாரு" என்றார்.

கே.ஆர் விஜயா
கே.ஆர் விஜயா
கோவிட்-19 மையத்தை காலி செய்யும் சித்த மருத்துவர் வீரபாபு... பின்னணியில் நடந்தது என்ன?

`படம் எப்போ ரிலீஸ்?' ன்றதற்கு, ``அதை கொரோனாகிட்டதான் கேக்கணும். 3-வது அலை தொடங்குச்சுன்னா லேட்டாயிடும். அதனால ரீலிஸ் தேதியை இப்போ முடிவு பண்ண முடியாது" என்றார். இறுதியாக ஒன்றைச் சொல்லி நிறைவு செய்தார். ``மருத்துவம் பார்த்து மக்களுடன் தொடர்பில் இருக்கத்தான் எப்பவும் முக்கியத்துவம் கொடுப்பேன். அதே சமயம் வருஷத்துக்கு ஒரு படம் நடிக்கவும் திட்டமிருக்கு".

அடுத்த கட்டுரைக்கு