Published:Updated:

சில நேரங்களில் சில மனிதர்கள் - சினிமா விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சில நேரங்களில் சில மனிதர்கள் - சினிமா விமர்சனம்

ஏராளமான நடிகர்கள். அவர்களுள் வெகு இயல்பாய்ப் பொருந்திப்போவது மணிகண்டன் தான்.

சில நேரங்களில் சில மனிதர்கள் - சினிமா விமர்சனம்

ஏராளமான நடிகர்கள். அவர்களுள் வெகு இயல்பாய்ப் பொருந்திப்போவது மணிகண்டன் தான்.

Published:Updated:
சில நேரங்களில் சில மனிதர்கள் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சில நேரங்களில் சில மனிதர்கள் - சினிமா விமர்சனம்

யாரோ ஒருவர் எங்கோ ஆற்றும் எதிர்வினை எப்படி சங்கிலித்தொடராய் மாறி, துளியும் தொடர்பில்லாத இன்னொருவரை பாதிக்கிறது என்பதே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்.’

பாசத்தை அதீதமாய் வெளிப்படுத்தும் அப்பா, உள்ளுக்குள் அதே பாசமிருந்தாலும் அவர்மேல் எரிந்து எரிந்து விழும் மகன் - தன் தவறுகளை மறைக்க பிறரைக் குற்றம் சொல்லியே முன்னேறாமல் தேங்கிப்போயிருக்கும் ஒரு இளைஞன் - தமிழ்சினிமாவையே மாற்றிக் காட்டுகிறேன் என்கிற தலைக்கனத்தோடு உலாவும் ஒரு அறிமுக நாயகன் - பகட்டை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு போலி வாழ்க்கை வாழும் ஒரு கணவன்... இவர்கள் நால்வரின் போக்கையும் தீர்மானிக்கிறது ஒரு விபத்து. அதிலிருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன என்பதே படத்தின் கதை.

ஏராளமான நடிகர்கள். அவர்களுள் வெகு இயல்பாய்ப் பொருந்திப்போவது மணிகண்டன் தான். இதற்கு முன்னர் பார்த்த அதே வடசென்னை இளைஞர் கதாபாத்திரம்தான் என்றாலும் ஒவ்வொருமுறையும் நடிப்பில் மெருகேறிச் செல்வது அவரின் பலம். தோன்றும் சில நிமிட காட்சியமைப்புகளில் தன் அனுபவத்தால் முத்திரை பதிக்கிறார் நாசர். அசோக் செல்வன் ஒரு சில இடங்களில் மிகைநடிப்பை வெளிக்காட்ட யதார்த்தம் சட்டென விலகிப்போகிறது. நண்பராய் வரும் ரிஷிகாந்த் கவனம் ஈர்க்கிறார். அபி ஹசனும் பிரவீன் ராஜாவும் ஓரளவிற்குத் தங்கள் கதாபாத்திரங்களின் கனத்தைத் தாங்குகிறார்கள்.

பிரதான நாயகிக்கென இங்கே வகுக்கப்பட்டிருக்கும் வரைமுறைக்கு உட்படாத தேர்வாக ரேயா இருப்பது வரவேற்புக்குரிய விஷயம். அளவாக, அழகாக உணர்ச்சிகளை வெளிக்காட்டிச் செல்கிறார். ரித்விகா, கே.எஸ்.ரவிக்குமார், பானுப்ரியா, இளவரசு ஆகியோரும் தங்கள் பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். காமெடியோ சென்டிமென்ட்டோ, அதற்காகத் துளியும் மெனக்கெடாமல் அபிஷேக் திரையில் திரிவது எரிச்சலூட்டுகிறது.

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலம். ரதன் இசையில் ‘யார் வழியில்’ பாடல் நன்று. வெவ்வேறு தளங்களில், திசைகளில் பயணிக்கும் கதையை ஒன்றாய்க் கோத்த வகையில் ஜி.கே.பிரசன்னாவின் எடிட்டிங்கும் சிறப்பு.

சில நேரங்களில் சில மனிதர்கள் - சினிமா விமர்சனம்

விரக்தி, குற்றவுணர்வு, எரிச்சல், பயம், திமிர் என நம் ஒவ்வொருவருக்குள்ளும் பிரதானமாய் அலைபாயும் உணர்வுகளுக்கு உயிர்கொடுக்க முயன்று அதில் வெற்றியையும் நெருங்குகிறார், இயக்குநர் விஷால் வெங்கட். வலிந்து கோக்கப்பட்ட உணர்வைத் தராத திரைக்கதையும் இதில் முக்கியப் பங்காற்றுகிறது.

ஆனால் தொடக்கம் முதல் இறுதிக்காட்சிக்கு முன்புவரை படத்தில் நிறைந்திருக்கும் எதிர்மறை உணர்வுகள் ஒருகட்டத்தில் அயர்ச்சி ஏற்படுத்துகின்றன. இறுதியாய் ‘இனி எல்லாம் சுபம்’ எனச் சொல்வதும் செயற்கையாய்த் தொனிப்பதுதான் சிக்கல்.

குறைகள் தவிர்த்து, சில நேரங்களில் சில படங்கள் நமக்கு நடப்பதை, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நடப்பதைத் திரையில் பேசும். அப்படியான ஒரு முயற்சி இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism