Published:Updated:

`இதுதான் அவர் எனக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்!' - நடிகர் ஸ்ரீராமின் நினைவுகள் பகிரும் ஹலிதா ஷமீம்

சில்லுக்கருப்பட்டி
சில்லுக்கருப்பட்டி

`சில்லுக்கருப்பட்டி' படத்தைத் தொடர்ந்து, அஜித் நடித்து வெளிவர உள்ள `வலிமை', சூர்யா, விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ள படங்கள் எனப் பல படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீராம்.

`சில்லுக்கருப்பட்டி' படத்தில் பலரையும் `யார் இவர்..?!' என்று கவனிக்க வைத்தவர் நடிகர் ஶ்ரீராம். இந்த ஆந்தாலஜி படத்தில் `டர்டில்ஸ்' அத்தியாயத்தில் நரைத்த முடியும், ரசிக்க வைக்கும் எனர்ஜியுமாக நடித்தவர். 60+ காதலைச் சொல்லும் இந்தக் கதைக்கு, ஶ்ரீராமும் தோற்றமும் நடிப்பும் மிகப் பொருத்தம்.

சமீபத்தில், மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஶ்ரீராம் உயிரிழந்தது, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. `சில்லுக்கருப்பட்டி' இயக்குநர் ஹலிதா ஷமீம், ``மனசு நொறுங்கிப் போயிருக்கு'' என்கிறார் பேச வார்த்தைகளைத் தேடியபடி.

ஶ்ரீராம் மற்றும் ஹலிதா ஷமீம்
ஶ்ரீராம் மற்றும் ஹலிதா ஷமீம்

``இந்த இழப்பை என்னால கொஞ்சம்கூட ஏத்துக்க முடியலை. 60 வயசிலும் அவ்ளோ சுறுசுறுப்பா இருக்கிற மனுஷன் அவர். `சில்லுக்கருப்பட்டி' படத்துல அந்த வயசான கேரக்டரில் நடிக்க ஆள்களைத் தேடிட்டு இருந்தேன். நண்பர் ஒருவர் சொல்லி, ஶ்ரீராம் சாரின் முகநூல் பக்கத்தைப் பார்த்தேன். விசாரிச்சப்போ, இவர் இஸ்ரேல் தற்காப்புக் கலையான `கிராவ்மகா' பயிற்சியாளர்னு தெரிய வந்தது. நடிக்க சம்மதிப்பாரானு, அவர்கிட்ட அதைப் பத்தி பேசத் தயங்கினேன்.

பின்னர் ஸ்ரீராம் சாரை சந்திச்சு, என் கதை பத்தி சொன்னேன். உடனே சம்மதிச்சார். ``எங்கப்பா சினிமா துறையில பணியாற்றி வந்தார். எனக்கும், என் நண்பன் ஒருத்தனுக்கும் சின்ன வயசுலயிருந்தே சினிமாவில் நடிக்க ஆசை. நண்பனுக்கு அந்த வாய்ப்புக் கிடைச்சது. ஆனா, எனக்குக் கிடைக்கல. இப்போ எனக்கு 60 வயசாகுது. அதனால என்ன... நான் நடிக்கத் தயார்"னு ஆர்வமா சொன்னார்.

`சில்லுக்கருப்பட்டி' படம் வெளியாகி சமீபத்தில் ஒரு வருஷம் நிறைவடைந்தது. இந்தப் படத்தின் வெற்றியை சிறப்பா கொண்டாட ஸ்ரீராம் சார் சமீபத்தில் படக் குழுவினரை அழைத்து விருந்து வெச்சார். அப்போ, எனக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். அந்தத் தருணத்தை என்னால மறக்க முடியாது'' என்பவருக்கு, அந்த நினைவுகள் மேலெழும்ப குரல் மெலிகிறது.

சில்லுக்கருப்பட்டி
சில்லுக்கருப்பட்டி

`சில்லுக்கருப்பட்டி' படத்தைத் தொடர்ந்து, அஜித் நடித்து வெளிவர உள்ள `வலிமை', சூர்யா, விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ள படங்கள் எனப் பல படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீராம். ஹலிதா தொடர்ந்து பேசுகையில், ``ஸ்ரீராம் 60 வயசு மனுஷன் மாதிரியே இருக்க மாட்டார். ரொம்ப சுறுசுறுப்பா, துறுதுறுனு இருப்பார். அவர் உருவமும் நடவடிக்கைகளும் ரொம்ப கம்பீரமா இருக்கும். சொல்லப்போனா, படத்துல அந்த 60 வயசுக்கான சோர்வை வெளிப்படுத்தும் காட்சிகளில் எல்லாம், `சார், இவ்ளோ எனர்ஜி வேணாம்... கேரக்டருக்காக, இந்த சீனுக்காக உங்க எனர்ஜி லெவலை கொஞ்சம் குறைஞ்சுக்கோங்க'னு சொன்னோம்'' என்கிறார்.

``ஸ்ரீராம் சார் தற்காப்புக்கலை பயிற்சியாளர் மட்டுமல்ல; நல்ல ஓவியரும்கூட. அஞ்சு மாசத்துக்கு முன்னாடிதான் புது வீட்ல குடியேறினார். `வீட்ல மாடியில் சில பகுதிகளை சரிசெய்யணும்'னு சொல்லிட்டிருந்தார். மாடியிலயிருந்து தவறி விழுந்து அவர் இறந்துட்டார் என்பதை என் மனசால இன்னும் ஏத்துக்க முடியலை. எவ்ளோ சந்தோஷமா வாழ்ந்துட்டு வந்தீங்க ஸ்ரீராம் சார்... உங்க முடிவு இப்படி ஒரு விபத்தா இருந்திருக்கக் கூடாது'' என்று ஆற்றாமையுடன் சொல்லும் ஷலிதா ஹமீம், ஸ்ரீராம் தனக்கு அனுப்பிய கடைசி மெசேஜ் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

`` `நீங்க என் வாழ்க்கையில் ஒளியேத்தி வெச்சுட்டீங்க' - இதுதான் ஸ்ரீராம் சார் எனக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்!"

``முதுமையின் தனிமைக்கு சிநேகிதம் அவசியம்!" - `சில்லுக்கருப்பட்டி'யின் 60+ காதலுக்கு வெல்கம்

ஹலிதாவுக்கு மட்டுமல்ல, பல சினிமா ரசிகர்களுக்கும், சினிமா, தற்காப்புக் கலை, ஓவியம் என ஸ்ரீராம் செயலாற்றி வந்த தளங்களில் உள்ள பலருக்கும் அவரின் இழப்பு அதிர்ச்சியையும் ஆற்ற முடியாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

- ஆனந்தி ஜெயராமன்
அடுத்த கட்டுரைக்கு