Published:Updated:

சினிமா விமர்சனம்: சில்லுக் கருப்பட்டி

சில்லுக் கருப்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
சில்லுக் கருப்பட்டி

`சில்லுக்கருப்பட்டி’ இனிப்பாய் நம் இதயத்தில்...

சினிமா விமர்சனம்: சில்லுக் கருப்பட்டி

`சில்லுக்கருப்பட்டி’ இனிப்பாய் நம் இதயத்தில்...

Published:Updated:
சில்லுக் கருப்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
சில்லுக் கருப்பட்டி

வெவ்வேறு வயது, வெவ்வேறு வர்க்கங்கள், வெவ்வேறு வாழ்க்கைப்பின்னணியைச் சேர்ந் தவர்களின் நான்கு கதைகளை முன்வைத்து, ‘அன்புதான் மானுடத்தின் ஆதாரம்’ என அழகியலுடன் அழுத்தமாய்ச் சொல்கிறது இந்த `சில்லுக் கருப்பட்டி.’

சென்னை மாநகரத்தின் நடுத்தர, உயர் நடுத்தர, உயர் வகுப்பு மனிதர்கள் வசிக்கு மிடத்தின் குப்பைகள் பிரமாண்டமாய்க் குவிந்துகிடக்கும் பகுதியில் குப்பை பொறுக்கும் சிறுவன் மாஞ்சா. ஒருநாள் தேவதையின் இறகு பூமியில் உதிர்ந்து விழுந்ததைப்போல ஒரு பிங்க் நிறக் குப்பை கவர் கிடைக்கிறது. அதில் ஒரு சிறுமியின் புகைப்படம். அடுத்தடுத்த நாள்களில் சிறுமியின் வீட்டிலிருந்து வெவ்வேறு குப்பைகள் வந்துவிழ, அதில் அந்தச் சிறுமி உயிராய் நேசிக்கும் மதிப்புக்குரிய பொருளும் வந்து விழுகிறது. அந்தப் பொருளைச் சிறுமியிடம் சேர்ப்பதற்காக மாஞ்சா மேற்கொள்ளும் எத்தனங்களும் அதனூடாகப் பூக்கும் அழகிய தருணங்களும் ‘பிங்க் பேக்.’

சில்லுக் கருப்பட்டி
சில்லுக் கருப்பட்டி

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தபடியே மீம்ஸ், யூடியூப் நிகழ்ச்சி என வாழும் இளைஞனின் நோய்மைக் கணங்களை, பயணத்தில் சந்திக்கும் பெண்ணொருத்தி அன்பால் ஆற்றும் கதை ‘காக்கா கடி.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதிர்பருவத்தின் விளிம்பில் நிற்கும் இருவர். துணையற்று வாழ்ந்து வாழ்க்கையின் சின்னச்சின்ன நொடிகளை ரசித்து வாழும் மூதாட்டி, தன் பேரனுக்காக பைனாகுலர் சரிபார்த்துத் தரும் நேரத்தில், தன் எஞ்சிய வாழ்க்கைக்கான இணையைக் கண்டுபிடிக்கும் ஒரு முதியவர் - இவர்களுக்குள் நிகழும் மாயத்தருணங்களை விவரிக்கிறது ‘டர்ட்டிள்ஸ் வாக்.’

நடுத்தர வர்க்க வாழ்க்கையில் மனைவியின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத கணவன், குடும்பத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, கணவனுக்குத் தன் ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் புரிய வைக்க முயலும் மனைவி, இவர்களுக்கு இடையிலான உறவையும் முரணையும் இயல்பாய்ச் சொல்லும் `ஹே அம்மு.’

குப்பையிலிருந்து ஒவ்வொரு பொருளாய்ச் சேகரித்து, அதன்வழியாகவே தன் உறவை வளர்க்கும் மாஞ்சா (ராகுல்), ‘`எவ்ளோ பெரிய கையா இருந்தாலும் அக்குள் இருக்கும்ல’’ எனப் போகிற போக்கில் நக்கலடிக்கும் சிறுவன் வெங்கடேஷ், கதையின் இறுதியில் குப்பையுடன் அன்பையும் பொட்டலமாக்கி அனுப்பும் மிட்டி (பேபி சாரா), `பிளேபாய்’ புத்தகம் நீட்டும் செவிலியரிடம் “வை-ஃபை இல்லையா?” என அத்தனை சோகத்திலும் சிரிப்பை வரவழைக்கும் முகில் (மணிகண்டன்), காக்காவைத் தன் செல்லப்பிராணியாக மாற்றிய மது (நிவேதிதா), “இஞ்சி டீ வித் ஆடெட் டிக்னிட்டி’’ என மன்னிப்புத் தேநீர் கையளிக்கும் நவநீதன், ஆமை முட்டைகளைத் தேடிச் சேகரிப்பதன் மூலம் தன் வாழ்க்கையின் அர்த்தங்கள் கூட்டும் யசோதா (லீலா சாம்சன்), “எதுக்கு கொலுசு வாங்கித் தந்தோம்னுகூடக் கண்டுபிடிச்சிட்டா’’ என உஷாராகும் தனபால் (சமுத்திரக்கனி), குடும்ப அமைப்பு என்னும் தங்கச்சிறைக்குள் தனக்கு நேரிடும் வதைகளை, பொசுங்கிப் புலம்பும் அமுதினி (சுனைனா) என அத்தனைபேரும் நம் வாழ்க்கையில் காணும், கடக்கும், உறவாடும் அசல் மனிதர்கள். கொஞ்சம்கூட மிகையில்லாமல் நடித்த அத்தனைபேரும் நல்நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

குறிப்பாக வசனங்கள், பாத்திரங்களின் மன உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி, படத்துக்கு பலம் சேர்க்கின்றன. கதாநாயகர்களை/நாயகிகளை மையப்படுத்திய கதைக்களம், பார்வையாளர்களுக்குப் பழகிப்போன பாடல்கள், கதைக்கு வெளியிலிருந்து திணிக்கப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் - இவற்றுக்கு அப்பால் தமிழ் சினிமாவை நகர்த்த முடியும் என்று நம்பிக்கையை விதைத்திருக்கிறார் இயக்குநர் ஹலீத்தா சமீம். இயக்கம், வசனம், எடிட்டிங் என எல்லாமே அவர்தான். கவித்துவத் தருணங்களைக் காட்சிப்படுத்தி, கலைநேர்த்தியுடன் கதை சொல்லியிருக்கும் ஹலீத்தா சமீமுக்குப் பாராட்டுகள்.

சினிமா விமர்சனம்: சில்லுக் கருப்பட்டி

காருக்குள் கதை சொல்லியதில் விஜய் கார்த்திக் கண்ணனும், குப்பை கூடாரங்களையும் சேரி வாழ்க்கையையும் படம்பிடித்ததில் அபிநந்தனும், இரவுநேரக் கடற்கரையின் எழிலையும் ஏகாந்தத்தையும் காட்சிப்படுத்தியதில் மனோஜ் பரமஹம்சாவும், ஒரே ஒரு ஃபிளாட்டில் நடுத்தரவர்க்கத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையைப் படம்பிடித்ததில் யாமினியும் ஒளிப்பதிவாளர்களாய் ஈர்க்கிறார்கள். படம் நெடுக ஒரே தீம் பின்னணி இசைதான். ஆனால், அது வெவ்வேறு சூழலுக்கு, வெவ்வேறு அனுபவங்களை நமக்களிக்கிறது. பாடகர் பிரதீப்குமார் இசையமைப்பாளராய் பின்னணி இசையில் கவர்கிறார்.

ஓலா கார் புக் செய்தால் ஒரே டிரைவர் எப்படி மீண்டும் மீண்டும் அதே வழித்தடத்தில் பயணிப்பார், பேபி சாராவின் குப்பைகள் எப்படி சரியாக சிறுவன் ராகுல் கைகளில் சேர்கின்றன, மீம்ஸ் போடுவதையே `அலுவலகம் அனுமதிக்காது’ என்று ரகசியமாய் மீம்ஸ் போடும் மணிகண்டன் எப்படி யூடியூப் சேனலில் நிகழ்ச்சி நடத்துகிறார் என்று சின்னச் சின்ன தர்க்கமீறல்கள்.

ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி, கருத்தியல், அழகியலில் கவனம் ஈர்த்து, 2019-ன் இறுதியில் இந்த `சில்லுக்கருப்பட்டி’ இனிப்பாய் நம் இதயத்தில் தங்குகிறது.