லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

சில்லுக் கருப்பட்டி... மிட்டி மது யசோதா அமுதினி

சில்லுக் கருப்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
சில்லுக் கருப்பட்டி

அவள் சினிமா

வ்வொருவருக்கும் இங்கு வாழ்வதற்கான தேவைகள் வெவ்வேறுதான். ஆனால், வேறுபாடுகள் கடந்து அனைவரும் தொடர்ந்து இயங்க சக உயிர்கள் மீது நாம் செலுத்தும் அன்புதானே அடிப்படை. அது கிடைக்கும்போது என்னவெல்லாம் நேரும் என்பதைத் தித்திப்பாகச் சொல்லி 2019-ம் ஆண்டின் இறுதியில் ஒரு ஃபீல் குட் படமாகத் திரைக்கு வந்திருக்கிறது `சில்லுக் கருப்பட்டி’. `பிங்க் பேக்’, ‘காக்கா கடி’, ‘டர்ட்டில்’, ‘ஹே அம்மு’ ஆகிய நான்கு குறும்படங்களின் தொகுப்பே இந்தப் படம்.

பிங்க் பேக்

பணக்காரப் பெண் மிட்டியின் வீட்டிலிருந்து ஒரு பிங்க் பேக் மூலம் சேகரமாகும் குப்பை, ஏழைச் சிறுவன் மாஞ்சாவின் இடத்துக்கு வருகிறது. அந்த பேக்கிலிருந்து மிட்டியின் புகைப் படத்தைப் பார்த்து, அவள் பாடிய பாட்டுகளைக் கேட்டு சிநேகம் வளர்க்கும் சிறுவனுக்கு அதே பேக்கில் இருந்து வைர மோதிரம் கிடைக்கிறது. அதை மிட்டியிடம் சேர்க்க, இருவருக்கும் இடையே நட்பு மலர்கிறது.

சில்லுக் கருப்பட்டி... மிட்டி மது யசோதா அமுதினி

குறைவான வசனங்களிலும் நிறைவான காட்சிகளிலும் முதல் அரைமணி நேரத்துக்கு ரசிகர்களை தனக்குள் ஈர்க்கிறது ‘பிங்க் பேக்’. `எவ்ளோ பெரிய கைன்னாலும் அக்குள் இருக்கும்ல’, ‘வீட்டை விட்டு வெளிய வர்ற புள்ளைங்கள விரட்டி விடவே செக்யூரிட்டி போல’ போன்ற வசனங்களுக்கு தியேட்டர் அதிர்ந்து சிரிக்கிறது. செயற்கைத்தனத்துக்குள்ளும் சினிமாத்தனத்துக்குள்ளும் சிக்காமல் இயல்பாக எண்டு கார்டு போட்டிருக்கிறார்கள்.

காக்கா கடி

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு கேன்சர் என்று தெரியவர, வாழ்க்கையே மாறுகிறது ஐ.டி இளைஞனான முகிலனுக்கு. தன் நோயுடன் தனியாகப் போராடும் அவனுக்கு ஆறுதலாக வருகிறது ஒரு காதல். அந்தக் காதலே எப்படி அவனை நோயிலிருந்து மீட்கிறது என்பதுதான் காக்கா கடி.

சில்லுக் கருப்பட்டி
சில்லுக் கருப்பட்டி

மதுவின் காதல் மற்றும் கேன்சரை முகிலன் அணுகும் விதம், இன்டர்நெட் பக்கங்கள், இன்ஸ்டன்ட் பிரேக் அப், அதையும் எளிதில் கடக்கும் மனம்... இவற்றையெல்லாம் தாண்டி இக்கட்டான கட்டத்தில் தேவைப்படும் அன்பு, ஆறுதல் என இப்போதைய மில்லினியல் தலைமுறையின் பக்கங்களை எந்த ஒரு மிகைப்படுத்தலும் இல்லாமல் அதன் போக்கிலேயே கலகலப்பாக எடுத்துச்செல்கிறது ‘காக்கா கடி’.

டர்ட்டில்

மனைவியை இழந்த கணவனும், காதலை இழந்த காதலியும் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் காமம் கடந்து காதலைப் பகிர்ந்துகொள்வது தான் `டர்ட்டில்’. பேரனுடன் வாழ்ந்து வரும் ஸ்ரீராம், தன் வீட்டுக்கு அருகிலுள்ள பூங்காவுக்கு வரும் யசோதாவைப் பார்க்க... ஆரம்பிக்கிறது ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’. அதன்பின் அவ்வப்போது பார்த்துப்பேசி, `டர்ட்டில் வாக்'கில் வளர்ந்து கைகோக்கிறது இருவருக்குமான நேசம்.

‘50-க்கு மேலதான் டர்ட்டில்ஸுக்கு வாழ்க்கையே’ என்கிற ஒற்றை வசனம்தான் இதன் மொத்தக் கதையும். ‘இஞ்சி டீ வித் எக்ஸ்ட்ரா டிகினிட்டி’ என யசோதாவிடம் குறும்பு செய்வதும், பின் அவரைப் பார்க்க முடியாமல் தவித்துப்போவதும், ‘என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போயிரு’ என ஸ்ரீராமிடம் சொல்லி கைகோப்பதும் என ரசிகர்களின் ஆனந்தக் கண்ணீருடன் நெகிழ்ச்சியாக நிறைகிறது இந்த டர்ட்டில்.

ஹே அம்மு

12 வருட திருமண வாழ்க்கை, மூன்று குழந்தைகள் இருந்தும் தன் மீதும் குடும்பத்தின் மீதும் அக்கறை செலுத்தாமல் இருக்கும் கணவன் தனபால் மீதான வருத்தத்தை ஒரு கட்டத்தில் அமுதினி வெளிப்படுத்த தன் தவற்றை உணர்ந்து தனபால் மாறுவதுதான் ‘ஹே அம்மு’. அடிப்படைத் தேவைகளுக்காக இயந்திரத்தனமாக மாறிப்போன வாழ்வில், இருவரையும் இணைக்கும் கம்யூனிகேஷன் டூலாக ‘அலெக்சா’ எப்படி மாறுகிறது என்பதை சூழலுக்கேற்ப அழகாகப் பொருத்திச் சொல்கிறது இந்தப் படம். மூன்று குழந்தைகளுடனான க்யூட் மொமன்ட்ஸ், ‘தேவைன்னு அவசரமா வாங்கி வைக்கிற பொருளை அப்புறம் மறந்தே போய்டுவோம்’, ‘எனக்கு செக்ஸ் வேணும். ஆனா, அது மீனிங்ஃபுல்லா இருக்கணும்’ போன்ற வசனங்கள் நீட் ப்ளஸ் ஷார்ப்.

சண்டைக் காட்சிகள், பாடல்கள் என சினிமாவின் வழக்கமான க்ளிஷேக்களை தவிர்த்திருப்பது, உறுத்தாது தொடரும் பின்னணி இசை, ‘இன்னும் ரெண்டு கதை சேர்த்துச் சொல்லியிருக்கலாமே’ எனக் கேட்க வைக்கும் கதைத் தேர்வு, காட்சிப்படுத்திய விதம், `குப்பை மேடு, கேன்சர், முதுமையில் தனிமை' என சீரியஸ் நோட் தர ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் அவற்றையெல்லாம் தவிர்த்து, சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொன்னதற்கே இயக்குநர் ஹலீதா ஷமீமுக்கும் `சில்லுக் கருப்பட்டி’ டீமுக்கும் ஹார்ட்டின்ஸ்!