Published:Updated:

ரஜினியிடம் பேசியது என்ன? - சிம்பு சொல்லும் சீக்ரெட்!

சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
சிம்பு

படங்கள்: கிரண்சா

ரஜினியிடம் பேசியது என்ன? - சிம்பு சொல்லும் சீக்ரெட்!

படங்கள்: கிரண்சா

Published:Updated:
சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
சிம்பு

இப்போது பார்ப்பது புது சிம்பு. ‘மாநாடு' படம் அவரை அடியோடு மாற்றியிருக்கிறது. காலம் கற்றுத்தரும் பாடங்கள் அபூர்வமானவை. நல்ல படங்களைத் தேர்ந்தெடுக்கவும் நடிக்கவும் குறைகளைத் தவிர்க்கவும் அவரால் முடிந்திருக்கிறது.

‘‘அண்ணே... நல்ல மாற்றத்தை ‘மாநாடு' தந்திருக்கு. இதிலிருந்து சுதாரிக்கணும்னு மனசு சொல்லுது. மனசு சொன்னதைக் கேட்டபொழுதெல்லாம் நான் திரும்பி வந்திருக் கேன். யதார்த்தமாக எப்படி இருக்கணும்னு இப்ப நல்லாப் புரிஞ்சுபோச்சு. இந்தப் படம் நல்ல கவனம் பெற்றது எனக்கான திருப்பமாவே நினைக்கிறேன். இந்த சந்தோஷத்தை அப்படியே வச்சுக்கணும்னு தோணுது. பிராக்டிகலா இப்ப காரியங்கள் செய்யவேண்டியிருக்கு. அடுத்தடுத்து நல்ல படங்கள் செய்வோம், பாருங்க...'' உற்சாகத்தில் இருக்கிறார் சிம்பு.

ரஜினியிடம் பேசியது என்ன? - சிம்பு சொல்லும் சீக்ரெட்!

``ரஜினி ‘மாநாடு' பார்த்துட்டு உங்ககிட்ட என்ன பேசினார்?’’

‘‘நானே எதிர்பார்க்கலே. அவர்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு. ‘சார், ரஜினி சார் பேசுறார்'னு உதவியாளர் அலறிக்கிட்டே வந்து போனைக் கொடுத்தார். அமைதியா அவர் குரல். ‘மாநாடு பார்த்தேன் சிம்பு. நல்ல ஸ்பீடு... உங்க கரிஷ்மா பின்னி எடுக்குது... பயங்கரமா மாறிட்டீங்க. உங்க அனுபவமும்கூட சேர்ந்து பேசுது. அப்படியே புடிச்சுக்கோங்க. விட்றாதீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு... செம... செம... உங்க மொத்த நடிப்பும் அமர்க்களமா இருந்துச்சு. கீப் இட் அப்'னு சொன்னார். அந்தக் குரல், அதிலிருந்த உண்மை, என்மேல் வச்சிருக்கிற கனிவு எல்லாம் அதுல தெரிஞ்சுது.''

``அதென்ன பெயருக்கு முன்னால் ‘ஆத்மன்’?’’

‘‘நான் படத்துல என் பேருக்கு முன்னாடி டைட்டில் எதுவும் போடுறதில்லை. முன்னாடி ‘லிட்டில் சூப்பர்ஸ்டார்'னு போட்டுக்கிட்டு இருந்தவன்தான். அப்பறம் அதைக்கூட எடுக்கச் சொல்லிட்டேன். ‘ஆத்மன்' என்பது டைட்டில் இல்லை. அது ஒரு வே ஆஃப் லிவிங். எப்படி வாழணும் என்கிற ஒருமுறை. தன்னைத்தானே ஒழுங்குபடுத்திருக்கிறது. அதாவது தன்வயப்படுவது. வெங்கட்பிரபு, ‘இது பாசிட்டிவா இருக்கு... போட்டுக்கிறேன்'னு சொன்னார். சரின்னு சொன்னேன்.''

``37 வயசுல இத்தனை அனுபவங்கள் அதிகம் இல்லையா?’’

“25 வயதுக்குள்ளேயே எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு. யாருக்கும் இவ்வளவு ஏற்ற இறக்கம், சந்தோஷம், மகிழ்ச்சி, புகழ், பணம் பார்க்க முடியுமான்னு தெரியல. இன்னும் வயசு இருக்கு. காலம் தந்த படிப்பினை இருக்கு. இனிமேல் நல்லதை நோக்கிப் பயணிக்கலாம்னு வெச்சிருக்கேன். இப்ப நல்ல வைப்ரேஷன்ல இருக்கேன். தவறுகளைச் சரிபண்ணிக்கலாம். இந்த வயசிலேயே காதல் பிரேக்கப்னு நல்லது, கெட்டது எல்லாம் பார்த்ததால், ஒரு நிறைவுக்கு வந்து, தேடல் முடிஞ்சு நிதானமான நிலைக்கு வந்திருக்கேன். இப்போது ஒரு கனிவான மனநிலையை அடைஞ்சிருக்கேன்.”

ரஜினியிடம் பேசியது என்ன? - சிம்பு சொல்லும் சீக்ரெட்!

``உங்க மேல ஒரு இமேஜ் இருக்கு. ‘அடடா, செம டேலன்ட்... ஆனால் கொஞ்சம் டைம் கீப்பப் பண்ண மாட்டாரு’ன்னு. அப்படி ஒரு வளையத்தை ஏன் போட்டுக்கிட்டீங்க?’’

“கொஞ்சம் லேட்டா போனேன், உண்மைதான். ஆனால் எல்லாத்தையும் ஒரே டேக்கில் முடிச்சுக் கொடுத்தேன். அதை யாரும் சொல்லவே இல்லை. நல்லா ஸ்டெப் வச்சு ஆடினேன், பிரமாதமா ஃபைட் பண்ணினேன், பக்குவமா நடிச்சேன்னு யாரும் சொல்ல மறந்துட்டாங்களே. எல்லாத்தையும் மீறி லேட்டா வந்தது மட்டும்தான் நின்னுச்சு. ‘சரி, இனிமேல் அதையும் சரி பண்ணிருவோம்'னு இப்ப முதல் ஆளாகப் போயிட்டு, கடைசி ஆளாகத் திரும்புறேன். இப்ப யாரும் தாமதமாக வர்றேன்னு ஒரு வார்த்தை சொல்றதில்லையே.”

``உங்களோட வந்தவங்க எல்லாம் முன்னாடி ஓடுறாங்க... இவ்வளவு மன வலிமை உள்ள நீங்கள் இன்னும் உச்சம் தொடறதுதானே நியாயம்?’’

“இந்த ரெண்டு மூணு வருஷத்துல எவ்வளவோ நடந்திருக்கு. நிறைய மாறியிருக்கேன். அப்படியே குண்டாகியிருந்தேன். என்னங்க ஆச்சுன்னு கேட்கும்போதே அதை அப்படியே குறைச்சு உங்க முன்னாடி ஸ்லிம்மா உட்கார்ந்திருக்கேன். என்னால எதுவும் முடியும். அதுக்கு நான் மனசு வைக்கணும். முதலில் மற்ற நடிகர்களோடு என்னைச் சேர்த்துவச்சுக் கேட்காதீங்க. அதுக்காக நான் ரொம்பப் பெரிய ஆளுன்னு சொல்ல வரலை. மத்த நடிகர்கள் 25 வயசுல நடிக்க வந்திருப்பாங்க. நான் ஒன்பது மாதக் குழந்தையாய் இருக்கும்போதே நடிக்க வந்துட்டேன். மத்த நடிகர்கள் ஸ்கூலுக்குப் போயிட்டிருக்கும்போது நான் பரீட்சைக்கும் படிச்சேன்; அப்பா எழுதிக் கொடுத்த டயலாக்கையும் படிச்சேன். ஆறு வயசுல ‘I am a little star'னு ஆட்டம் போட்டேன். கட்அவுட் வச்சாங்க. நானே ஸ்கூலுக்குப் போகும்போது பார்த்திருக்கேன். 16 வயதிலேயே ஹீரோ. முப்பது வருஷத்துக்கு மேலே முகத்துல லைட் விழுந்துகிட்டிருக்கு. அவ்வளவு சீக்கிரம் மக்கள் மனதிலிருந்து என்னை எடுக்கவே முடியாது.

என்னை இவ்வளவு நம்புகிற ரசிகர்களை ஏமாத்த முடியாது. எல்லாம் என்கிட்ட இருக்கு. இல்லாததை அப்பா கொடுப்பார். ரீல் லைஃப்ல மக்களைத் தொடர்ந்து மகிழ்ச்சிப்படுத்துறததான் இனிமேல் கடமையா வச்சிருக்கேன். எப்படி விழுந்தாலும் எனக்கு ஏறத் தெரியும். இனிமேல் ஒரு தெளிவான பயணம்தான்... பாருங்க பிரதர்! அடுத்து கௌதம் மேனன் படம் பண்றேன். கௌதம் படத்தில் என்னை நீங்க இப்படிப் பார்த்திருக்கவே முடியாது. வித்தியாசப் படுத்தினால்தான், புதுசா கொடுத்தால்தான் இனிமேல் நமக்கு வேலை. இனிமேல் படங்கள் எல்லாமே சரியா வரும். நல்லா வரும். என் பக்கம் குறையே இருக்காது.”

ரஜினியிடம் பேசியது என்ன? - சிம்பு சொல்லும் சீக்ரெட்!

``ஆன்மிகத்தில் வந்த பிறகு உங்களுக்குள் நிகழ்ந்த மாற்றம் என்ன?’’

“வேடிக்கை மாதிரிதான் இமயமலைக்கு ட்ரிப் போனேன். அங்கதான் எனக்கு அமைதி கிடைச்சது. ‘நாம யாரு... எதுக்காக இங்க வந்தோம்'னு ஒரே கேள்வி. நான் சிம்புதானான்னு தோணுது. புள்ளியாகி அடையாளமே இல்லாம நிக்கிறேன். அப்போகூட பிரமிப்புதான். சாதாரண விஷயங்களைக்கூட இழந்திருக்கிறேன். கடைவீதிக்கு சின்னப் பையனா போனதில்லை. ஒரு சிறுவனாக இருந்த ஞாபகமே இல்ல. பத்துப் பேராக இருந்தாலும் தனிமையாய் இருப்பேன். எல்லாமே என்கிட்ட இருந்தது; ஆனா இல்லை. காதலிச்சேன். வெளியே வந்தேன். மெல்ல ஆன்மிகத்தில் வந்தேன். பைபிள், குரான், கீதைன்னு படிக்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு சமயம் எட்டு மணி நேரம் தியானத்தில இருந்தேன். அம்மா பயந்துட்டாங்க. என் கடவுளுக்கு முகமே கிடையாது. பிரெண்ட்ஸ் கிட்டே தோளில் கைபோட்டுப் பேசுற மாதிரி சாமிகிட்ட பேசுவேன். அப்புறம்தான் கொஞ்சம் புரிதல் வந்து சரியாகியிருக்கேன்.''

``கல்யாணம் உங்களை இன்னும் மாத்துமோ? இல்லை... சல்மான் கான் மாதிரி...’’

“என் பக்கம் எந்தத் தடையுமில்லை. எனக்கு அந்தப் பெண் பிடிக்கிற மாதிரி அவங்களுக்கும் பிடிக்கணும். பிராக்டிகலும் ஃபீலிங்கும் 20-20ன்னு இருக்கிற இந்தக் கால இளைஞர்களின் ஆள்தான் நானு. என் ஆளை நான் பார்க்கணும். பார்த்துப் பேசினாலே லைட் எரிஞ்சிடும். என் அப்பா அம்மா மாதிரி ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து வாழணும்னு ஆசை. கல்யாணம் பண்ணிட்டா எங்கேயும் வெளியே போய் தனியாக சுத்தணும்னு ஆசைப்பட மாட்டேன். அம்மாவைக் கேட்காமல் அப்பா எப்பவும் ஒரு விஷயத்தை முடிவு பண்ணினது இல்லை. எப்பவும் ஃபேமிலிகூட இருக்கணும்னுதான் பிரியப்படுவார். அம்மா நினைக்கிறதை அப்பா கண்டுபிடிப்பார். எனக்கெல்லாம் சின்ன வயதில் இதைப் பார்க்கும்போது ஆச்சரியம் தாங்க முடியாது. அதே மாதிரி இருக்க ஆசைப்படுறேன். சல்மான் கான் மாதிரி எல்லாம் இருக்க உத்தேசமில்லை. நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன். அப்பா அம்மாகிட்டே ஒரு சமநிலை இருக்கு. மனசு நெருங்கி அழகு கூடியிருக்கு. அப்படி ஒரு பெண்ணைத் தேடுறேன். எங்கே போயிடப் போறாங்க. கிடைச்சுடும். அப்புறம் உடனே கல்யாணம்தான்.”

ரஜினியிடம் பேசியது என்ன? - சிம்பு சொல்லும் சீக்ரெட்!

``பழைய காதல்கள் உங்களைத் தொந்தரவு செய்யுமா..?’’

“என் மேல் அன்பில் இருந்தவர்கள் நிறைய. நான் அன்பில் இருந்தவர்களும் அதே மடங்கு... நினைவுகளைத் துரத்திக்கிட்டுப் போகவே கூடாது. எல்லாம் மறந்தாச்சுன்னு சொன்னால் பொய். அதிலிருந்து வெகுதூரம் வந்துட்டேன். அதுதான் இமயமலைக்குப் போயிட்டு வந்ததும் தொடச்சுவிட்ட மாதிரி ஆகிடுச்சு. சின்ன சைக்கிள் ஓட்டியிருப்போம், டவுசரைப் போட்டுட்டு ஆடியிருப்போம். அதெல்லாம் இப்ப நினைவுகள்தானே! அப்படிப் போயிடணும். அதுதான் நியாயம். இனி வருகிற துணைக்கு ஆறுதலா, உதவியா, துணையா இருக்கணும். நினைச்ச மாதிரி சின்னதாக சண்டை போட்டுக்கலாம். நினைச்ச மாதிரி எந்த ஈகோவும் இல்லாமல் சேர்ந்துக்கலாம். சிம்பு இனி அப்படித்தான் இருக்கப்போறான்.”

``அப்பா, அம்மாவும் உங்க பஞ்சாயத்திற்கு வந்து நிக்கிறாங்களே?’’

“நான் வேண்டாம்னு சொல்றேன், மாட்டேங்கிறாங்க. அவர்களைத் தடுக்க முடியலை. அம்மா என்மேல் அப்படி பிரியம் வச்சிருக்காங்க. எம்மதமும் சம்மதம்னு எல்லோரும் சும்மா பேச்சுக்குச் சொல்வாங்க. எங்க வீட்டுல தம்பி முஸ்லிமாக, தங்கச்சி கிறிஸ்துவராக, நான் இந்துவாக வாழ்க்கையை நடத்துறோம். எனக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு அவங்களுக்கு ஆசையா இருக்கு. எனக்காக சர்ச், கோயில், தர்ஹான்னு போறாங்க. நானே இந்தக் கொரானாவில் 100 கோயில்களுக்கு மேலே போய் சாமி கும்பிட்டுவிட்டு வந்துட்டேன். வெள்ளிக் கிழமை தர்ஹா, ஞாயிறுன்னா சர்ச், மத்த நாள்களிலும் கோயிலுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். இனிமேல் அம்மா அப்பாவைப் பஞ்சாயத்துக்குக் கொண்டு போய் விடாமல் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.”