Published:Updated:

`உங்களால கஷ்டம் மட்டும்தான் இருக்கு..!' - `மாநாடு' சர்ச்சையும் சிம்பு ரசிகரின் வீடியோ பதிவும்

மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பு அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Simbu
Simbu

செக்கச்சிவந்த வானம் படத்துக்குப் பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதிலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் அரசியலைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்ட `மாநாடு' படம் எதிர்பார்ப்பை எகிறவைத்தது. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் ஷூட்டிங் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்தநிலையில், மாநாடு படம் கைவிடப்படுவதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி
வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி

இதுகுறித்து பேசிய சுரேஷ் காமாட்சி, ``மாநாடு படம் தற்போது கைவிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் காலதாமதம் தவிர வேறு எதுவும் இல்லை. சிம்புவுடன் எனக்கு தனிப்பட்ட பிரச்னை எதுவும் கிடையாது. அவருடன் பேசி ஒருமனதாகத்தான் இந்த முடிவை எடுத்தோம். இதனால் யாருக்கும் மனக்கசப்பு கிடையாது. `மாநாடு' படத்தின் ஷூட்டிங் வேறொரு ஹீரோவை வைத்து விரைவில் ஆரம்பிக்கப்படும். சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதையும் வெங்கட் பிரபுதான் இயக்குவார்'' என்று கூறியிருந்தார். அதேநேரம், கொடுத்த கால்ஷீட்டை தயாரிப்பாளர் தரப்பு பயன்படுத்தாமல் விரயம் செய்ததாகவும் அதற்காக ரெக்கார்டுகள் தங்களிடம் இருப்பதாகவும் சிம்பு தரப்பில் கூறப்பட்டது.

`மாநாடு' படத்திலிருந்து சிம்பு நீக்கம் ஏன்?- காரணம் சொல்லும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவில்லை என்று வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிம்புவின் ரசிகர் ஒருவர் உருக்கமாகப் பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ``மாநாடு படம் கைவிடப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதைக் கேட்கவே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் சிம்பு ரசிகர்.

மாநாடு போஸ்டர்
மாநாடு போஸ்டர்

எனக்கு என்ன கஷ்டமா இருக்குன்னா... அவர் என்ன மனசுல நினைச்சுட்டு இருக்காருனு தெரியல. எங்களுக்கு கஷ்டம் மட்டும்தான் இருக்கு. இதை நிறைய பேரு மனசுல நினைச்சுட்டு இருப்பாங்க. சரியாக ஷூட்டிங் வரலை... அவர் படம் ரிலீஸே ஆகாது. இப்படி நிறைய விமர்சனங்கள் அவர்மேல் வைக்குறாங்க. அதையெல்லாம் தாங்கியாச்சு. போட்டி போட்டு தோற்றுப் போனாலும், எங்கள் தலைவர் போட்டிபோட்டார்னு சொல்லிக்கலாம். ஆனால், நீங்க போட்டியே போடமாட்டேங்கிறீங்க என்பதுதான் பிரச்னை. கெஸ்ட் ரோல் உங்ககிட்ட யாரும் கேக்கல தலைவா...'' என்று ரசிகர் ஒருவர் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.