Published:Updated:

சிம்புதான் எல்லா பிரச்னைக்கும் காரணமா... தயாரிப்பாளர் - பெப்சி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

"சிம்பு நிறைய பேருக்கு பணம் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கு. அதுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைச்சதுக்கு பின் நீங்க ஷூட்டிங்கிற்கு ஆள் அனுப்பிக்கலாம்."

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் - பெப்சி இடையே மீண்டும் பிரச்னை வெடித்துள்ளது. இம்முறை பிரச்னைக்கு காரணம் சிம்பு என கோலிவுட்டில் பேச்சு கிளம்பியிருக்கிறது. சிம்புவைத் தவிர மற்ற இரு தரப்பிலும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டும் உள்ளனர். உண்மையில் என்னதான் பிரச்னை எனத் தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் விசாரித்தேன்.

ஆஃப் த ரெக்கார்டு என்ன சொன்னபடியே பேச ஆரம்பித்தார்கள்.

"சிம்பு விவகாரத்துல நிறைய லேயர்கள் இருக்கு. கிளறுனா பத்து வருஷ பழைய பஞ்சாயத்தெல்லாம் வரும். பத்து வருஷத்துக்கு முன்னாடி இயக்குநர் லிங்குசாமியோட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்கிட்ட படம் பண்றேன்னு ஒரு கோடி ரூபாய் பணம் வாங்கியிருக்கிறார் சிம்பு. லிங்குசாமி பணத்தை பலமுறை சிம்புகிட்ட கேட்டும், 'தர்றேன் தர்றேன்' என போக்குக் காட்டியிருக்கிறார். இதனால் பணத்தை வாங்கிக் கொடுக்கும்படி தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டார் லிங்குசாமி.

சிம்பு - கெளதம் மேனன் -  ஏ.ஆர்.ரஹ்மான்
சிம்பு - கெளதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான்

இன்னொரு பிரச்னை உலகறிந்தது. மைக்கேல் ராயப்பன் தயாரித்த 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் தொடர்பானது. அந்தப் பட ஷூட்டிங்கிற்கு தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே நடித்துக் கொடுத்திருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு பின் படப்பிடிப்பு ஸ்பாட்டை விட்டு கிளம்பிப் போயிருக்கிறார். இதனால் பாதிப்படைந்த தயாரிப்பாளர் பயங்கர நஷ்டம் வந்துவிடும் எனப் பயந்திருக்கிறார். அவரிடம் சிம்பு, 'பயப்படாதீங்க... என்னால நஷ்டம் வந்தா, உங்களுக்கு இன்னொரு படம் நடிக்கறேன்' என உறுதிகொடுத்திருக்கிறார். ஆனால், படம் பெரிய நஷ்டம். அதன்பிறகு மைக்கேல் ராயப்பனிடம் 'அந்தப் படம் ஓடல. இப்ப நான் ஏன் உங்களுக்கு நடிக்கணும். அது உங்க பிரச்னை!' என்று சொல்லியிருக்கிறார்.

மூன்றாவது விவகாரம், ஆல்வின் விஜய் என்கிற தயாரிப்பாளருக்கு ஒரு கதை ஓகே ஆகி, கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறதா இருந்தது. இப்போது அதே கதையை அதே காம்பினேஷனை வைத்து ஐசரி கணேஷ் தயாரிக்கப்போறதா சொல்றாங்க.

அதோட படப்பிடிப்பை தொடங்க அவங்க ரெடியாகிட்டு இருக்கும் போதுதான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து ஆர்.கே.செல்வமணியிடம் பேசியிருக்காங்க. 'சிம்பு நிறைய பேருக்கு பணம் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கு. அதுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைச்சதுக்கு பின் நீங்க ஷூட்டிங்கிற்கு ஆள் அனுப்பிக்கலாம். தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீங்க ஒத்துழைக்கவும். கொஞ்சம் உதவுங்க' என செல்வமணியிடம் வேண்டுகோளாகவே சொல்லியிருக்கிறார்கள்.

வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு

இதற்கு செல்வமணியும் சம்மதம் தெரிவித்து, ஒத்துழைப்பு தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், இடையில் என்ன நடந்ததோ ஐசரி கணேஷ், கௌதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு நடத்த பெப்சி தொழிலாளர்களை அனுப்பி வைத்திருக்கிறார். உடனே தயாரிப்பாளர் சங்கத்தினர் செல்வமணியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் 'பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்குதில்லையா' எனச் சொன்னதாகத் தெரிகிறது.

இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. 'தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஹீரோகிட்ட இருந்து வரவேண்டிய பணம் வராவிட்டாலும் பரவாயில்ல. அவருடைய தொழிலாளர்களுக்கு நூறு ரூபாய் பணம் வர்றதை பெருசா நினைக்கிறார். அவரோட பக்கம் அவர் ஃபோகஸ் பண்றார்னா... அப்புறம் நம்ம பக்கம் நாம ஃபோகஸ் பண்ணுவோம்'னு நினைக்க வச்சிட்டார். அதனாலதான் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் இனி படப்பிடிப்பு நடக்கும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

நவரசா : திறமையான நடிகர்கள், புகழ்பெற்ற இயக்குநர்கள், அசத்தும் டெக்னீஷியன்கள்… ஆனால், ரசம்?!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தன் தரப்பை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ நேற்று அவசர செயற்குழு கூட்டி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்‌ சம்மேளனத்துடன்‌ உள்ள ஒப்பந்தம்‌ அவர்களைக் கட்டுப்படுத்தாது எனத் தீர்மானம்‌ எடுத்ததாக பத்திரிகைகளில்‌ அறிவித்துள்ளார்கள்‌. இதுவரை எங்களுக்கு எந்தக் கடிதமும்‌ முறைப்படி அனுப்பவில்லை. சம்மேளனத்தின்‌ தலைவராகிய நான்‌ தயாரிப்பாளர்களின்‌ நலனைச் சீர்குலைக்கும்‌ வகையில்‌ தன்னிச்சையாக செயல்படுவதாகத் தவறான குற்றச்சாட்டை முன்‌ வைத்துள்ளார்கள்‌. இது முற்றிலும்‌ தவறான தகவலாகும்‌. தற்போது தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தில்‌ நிர்வாகிகளாக உள்ள அனைவரையும்‌ விட தயாரிப்பாளர்‌ நலனுக்காக நாங்கள்‌ பல விஷயங்களை செய்து தந்துள்ளோம்‌. இது படமெடுக்கின்ற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும்‌ நன்கு தெரியும்‌.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

நடிகர்‌ சிம்பு சம்பந்தப்பட்டு நான்கு தயாரிப்பாளர்களுக்கு பிரச்னை இருப்பதால்‌ சிம்பு நடிக்கும்‌ திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ சம்மேளனத்தை கேட்டுகொண்டது. சம்மேளனமும்‌ அதன்‌படியே நடந்து வந்தது. இதற்கிடையே தயாரிப்பாளர்‌ ஐசரி கணேசன்‌ தயாரிக்கும்‌ புதிய படத்திற்கு ‘நான்கு நாள்கள்‌ மட்டும்‌ வெளியூரில்‌ படப்பிடிப்பு நடத்தி கொள்கிறோம்‌ என்றும்‌, சென்னையில்‌ படப்பிடிப்பு நடைபெறுவதற்குள்‌ அனைத்து பிரச்னைகளையும்‌ பேசி சரி செய்த பிறகே சென்னையில்‌ படப்பிடிப்பை தொடங்குவோம்‌ என்றும் சம்மேளனத்திற்கு கோரிக்கை வைக்க, அதன்‌ படி தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திடம்‌ ஐசரி கணேசனின்‌ கோரிக்கையை சம்மேளனம்‌ தெரிவித்தது. தயாரிப்பாளர்கள்‌ சங்கமும்‌ தயாரிப்பாளர்‌ ஐசரி கணேசனுக்கு படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி தந்த பிறகே நாங்களும்‌ அப்படப்பிடிப்பில்‌ கலந்துகொண்டோம்‌. இதில்‌ சம்மேளனத்தின்‌ தவறு எதுவும்‌ இல்லை.

தொழிலாளர்களுக்கும்‌ தயாரிப்பாளர்களுக்கும்‌ எந்தப் பாதிப்பும்‌ இல்லாமல் சுமூகமான தீர்வு கிடைக்கப்பெறுவோம்‌ என்பதை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்‌ சம்மேளனம்‌ சார்பில்‌ தெரிவித்து கொள்கிறோம்‌" என செல்மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மௌனம் காத்து வருகிறார் சிம்பு. பெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் சிக்கல் விழுந்துள்ளது குறித்து கோலிவுட்டே `அடுத்து என்ன?' எனப் பரபரப்பில் இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு