Published:Updated:

``டென் டூ சிக்ஸ்... `மாநாடு’ ஷூட்டிங் சிம்பு வருவார்... கன்ஃபர்ம்!’’ - சொல்வது யார்?

'இனிமேல் சிம்புவை நான் 'மாநாடு' ஷூட்டிங்குக்கு அனுப்புறேன். காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தொடர்ந்து சிம்பு படப்பிடிப்பில் கலந்துகொள்வார்'

சிம்பு
சிம்பு

ஒருமுறை சென்னை ஐ.ஐ.டி-யில் நடந்த கலைநிகழ்ச்சி ஒன்றில் சிம்பு நடனமாட விரும்பியபோது, அங்குள்ளவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர். மீசை முளைப்பதற்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தை சிம்பு மறக்கவில்லை. அந்தத் தருணத்தில், 'உலகம் அறிந்த டி.ராஜேந்தர் மகனான எனக்கே இந்த நிலையா' என தன்னைத் தானே நொந்துகொண்டார். இப்போது, தமிழ் சினிமாவில் சிம்புவுக்கென்று தனி மார்க்கெட் இருக்கிறது. சிம்பு இதைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே தயாரிப்பாளர்களின் எண்ணம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் சிம்பு. இடையில் என்ன பிரச்னை நடந்ததெனத் தெரியவில்லை. "இனி 'மாநாடு' படத்தில் சிம்பு நடிக்க மாட்டார்" என்ற திடீர் அறிவிப்பு வந்தது.

'மஃப்டி', 'மகா' ஆகிய படங்களில் சிம்பு கெளரவத் தோற்றத்தில் நடித்துவரும் வேளையில் 'மாநாடு' பிரச்னை பூதாகரமாக வெடித்தது. 'மாநாடு' படத்தின் விவகாரம் குறித்து, கடந்த 15-ம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து நடந்தது.

தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், சிவசக்தி பாண்டியன், கே.ராஜன், கே.பாலு, ஜே.எஸ்.கே சதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், சிம்புவின் தாயார் உஷாவும் கலந்துகொண்டனர். படம் குறித்த விவாதம், சண்டையாக உருவெடுத்து, ஆளாளுக்கு மாறிமாறி திட்டிக்கொண்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் பஞ்சாயத்தில் என்னதான் நடந்தது? கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜனிடம் பேசினோம்.

''சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த 'மாநாடு' படத்தில் நடிப்பதற்காக சிம்பு 2 கோடி ரூபாய் முன்பணமாக வாங்கியிருந்தார். ஆனால், ஒதுக்கிய தேதிகளில் சிம்பு நடித்துக்கொடுக்காததால், ` 'மாநாடு' படத்தில் இனி சிம்பு நடிக்க மாட்டார்’ என்று அறிவித்தார் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக ஒப்பந்தமான வெங்கட் பிரபுவும், ` படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போவதால், நான் வேறு படத்தை இயக்கும் வேலைகளில் கவனம் செலுத்தவிருக்கிறேன். எனவே, 'மாநாடு' படத்திலிருந்து விலகுகிறேன்!’ என்றார்.

மாநாடு போஸ்டர்
மாநாடு போஸ்டர்

'மாநாடு' பட விவகாரம் குறித்தும், சிம்புவுக்குக் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் குறித்தும் பேசுவதற்காக, சிம்புவின் தாயார் உஷாவை நேற்று கவுன்சிலுக்கு வரவழைத்தோம். அப்போது, சிம்பு 'மாநாடு' ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் தவிர்த்ததுக்கான விளக்கத்தை அவரிடம் கேட்டோம்.

'என் மகன் சிம்பு ஏற்கெனவே கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகளைத் தயாரிப்பாளர்தான் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. சிம்பு கால்ஷீட் கொடுத்த நேரத்துக்குத் தவறாமல் போய் நடிச்சிட்டு வருவார்' என்று சொன்னார். ஆனால், இதற்குமுன் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' பட விவாகாரம் கவுன்சிலுக்கு வந்தபோது, அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு நேர்ந்த சம்பவங்களை எல்லாம் நான் எடுத்துச் சொன்னேன்.

அதன் பிறகு, 'இனிமேல் சிம்புவை நான் 'மாநாடு' ஷூட்டிங்குக்கு அனுப்புறேன். காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தொடர்ந்து சிம்பு படப்பிடிப்பில் கலந்துகொள்வார்' என்று உறுதியளித்தார் உஷா ராஜேந்தர்.

தவிர, 'மாநாடு' படத்தில் சிம்பு நடிப்பதை உறுதி செய்து, சக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனிடம் புது ஒப்பந்தம் தயாரிக்கச் சொல்லி, சிம்புவிடம் கையெழுத்து வாங்க இருக்கிறோம். இந்த விஷயம் குறித்து சத்யஜோதி தியாகராஜன் நேற்றே இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் போனில் பேசிவிட்டார்.

'சார், குறிப்பிட்ட நாள்களுக்கு சிம்பு தவறாம படப்பிடிப்பில் கலந்துக்கிட்டா, நான் படத்தை இயக்கித் தர தயாரா இருக்கேன்!' என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு'' என்று விளக்கம் சொன்னார் கே.ராஜன்.

சிம்புவின் 'மாநாடு' விரைவில் தொடங்கும்!

`` `மாநாடு'ம் வரும்; `மஹாமாநாடு'ம் வரும்னு சிரிச்சார் சிம்பு..!'' - மஹத்