'மாநாடு' இல்லேன்னா 'மகா மாநாடு!' - சிம்பு அதிரடி
சிம்பு என்று ஓர் செய்தியைத் தொடங்கினால், 'ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவார்' என்பதில்லாமல் முற்றுப்பெறாது. ஏனென்றால், பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவர்மீது வைக்கும் பிரதான குற்றச்சாட்டு இது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிக்க இருந்த படம்,`மாநாடு'. இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. அரசியல் சார்ந்த கதை எனக் கூறிவந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் நடைபெற இருந்தது. காலதாமதம் காரணமாக இப்படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். மேலும், ` வேறொரு ஹீரோவை வைத்து படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும்' என்றும் சொல்லியிருந்தார்.

சிம்பு நடிக்கும் படங்களுக்கு ஏதோவொரு வகையில் பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில், சிம்பு தரப்பிலிருந்து தடாலடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 'மாநாடு' படம் டிராப் ஆனதைத் தொடர்ந்து, 'மகா மாநாடு' என்ற தலைப்பில் புதிய படத்தின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை அவரே இயக்கி, அவரது பேனரிலேயே வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். டைட்டிலைப் பார்க்கும்போதே, மாநாடு படத்துக்குப் போட்டியாகவே இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது தெரிகிறது. படத்தின் வேலைகள் தொடங்கினால், 'மன்மதன்', 'வல்லவன்' படத்துக்குப் பிறகு சிம்பு இயக்கும் படமாக 'மகா மாநாடு' இருக்கும்.