Published:Updated:

``ரகுவரனும், சிம்புவும் அந்த விஷயத்துல ஒரே மாதிரி... ஆனா?!'' - பார்த்திபன் தொடர் - 13

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 13.

``ரகுவரனும், சிம்புவும் அந்த விஷயத்துல ஒரே மாதிரி... ஆனா?!'' - பார்த்திபன் தொடர் - 13

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 13.

Published:Updated:
பார்த்திபன்

"கடந்த சில வாரங்களுக்கு முன் ராம்க்ருஷ் அவர்களின் கேள்விக்கு, நீங்கள் அளித்திருந்த பதிலில் 'முதல் பார்வை' படத்தின் ஒரு காட்சி பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அதில் முதல் பகுதி, 'கோகுலம்' படத்தில் அர்ஜுன் & ஜெய்சங்கர் நடித்துப் பேசிய காட்சி மாதிரியே இருக்கிறது. அதை நீங்கள் அப்படியே எடுக்கும் பட்சத்தில் சிஷ்யனின் சீனை குரு காப்பியடித்ததாகிவிடாதா? நேர்மையான பதில் பிளீஸ்...''

- ஜேசு ஞானராஜ், ஃப்ராங்க்ஃபர்ட், ஜெர்மனி

''நேர்மையாக பதில் கூறவும் என என்னைக் கூர்மையாகக் குத்தியதால் இந்தப் பதிலைச் சொல்கிறேன். 'முதல் பார்வை' உருவாக இருந்த நேரம் என்பது 1987-88... அதுல ஸ்கிரிப்ட்ல ரெடி பண்ணி வெச்சிருந்த ஒரு காட்சியைத்தான் நான் முந்தைய கேள்வி பதில்ல சொன்னேன். திரு.விக்ரமன் இயக்கிய எந்தப் படத்தையும் அந்த நேரத்துல என்னால பார்க்கமுடியலை என்பது ஒரு கூடுதல் உண்மை. 87-88-ல உருவான ஒரு காட்சி 93-ல வெளிவந்த படத்தோட காப்பியா இருக்கமுடியாது. இருக்காது. அதுமட்டுமல்லாமல் 'முதல் பார்வை' டைம்ல விக்ரமன் அவர்கள் என்னோட உதவி இயக்குநரா மட்டும் இல்லாம, உறுதுணையான இயக்குநராவும் இருந்தார். அதனாலதான் 'புதிய பாதை' படத்துல முதல் பேரா, இணை இயக்குநர்னு அவர் பேர் இருக்கும். ரொம்பத்தகுதியான ஒரு இயக்குநர். விக்ரமனோட பையன் போட்டோஸை சமீபத்துல பார்த்தேன். பிற்காலத்துல பெரிய ஸ்டாரா வருவதற்கான முகம். விஜய் தேவரகொண்டா மாதிரி வருவார்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் தொடர்ச்சியாக படங்கள் இயக்கும்போது க்ளைமாக்ஸை க்ளிஷேக்கள் இன்றிக் காட்சிப்படுத்த இயலாது. ரசிகர்களும் க்ளைமாக்ஸை எளிதில் யூகித்துவிடுவர். ஆனால், 30 ஆண்டுகள் கடந்து இன்றும் உங்கள் படங்களின் க்ளைமாக்ஸை மட்டும் யூகிக்கவே முடியாதபடி படம் இயக்குறீங்களே, அது எப்படி?

- ஜீவகன் மகேந்திரன், நட்டாமங்கலம்

பார்த்திபன்
பார்த்திபன்

''இதை நீண்ட கேள்வியா பார்க்காம, நீண்ட பாராட்டாவே பார்க்குறேன். நிறைய பேர் நீங்க அடையவேண்டிய உயரத்தை அடையலைன்னு சொல்லுவாங்க. ஆனா, இந்தக் கேள்வியால நான் அந்த உயரத்தை அடைஞ்சமாதிரி நினைக்கிறேன். என்னோட உதவியாளர்கள்கிட்ட பாதிவரைக்கும்தான் நான் கதை சொல்லுவேன். இன்டர்வெல் சொல்லி முடிச்சதும் பாப்கார்ன், பஃப்ஸ், காபிலாம் வாங்கிக்கொடுத்துட்டு செகண்ட் ஆஃப் நீங்க சொல்லுங்கன்னு சொல்லிடுவேன். பத்துப் பேர்ல எட்டுப்பேர் நான் யோசிச்ச கதையே இல்லாம வேற விஷயங்கள் சொல்லுவாங்க. நான் யோசிச்ச விஷயத்துக்குப் பக்கத்துல சிலர் சொன்னாங்கன்னா அதை நான் பயன்படுத்தவே மாட்டேன். ஒருவேளை நான் எடுத்திருந்த படங்கள், ஏதாவது ஒரு ஆங்கிலப் படத்தின் சாயல் இருந்திருந்தா நான் அதைப் பார்த்திருக்கவே மாட்டேன்.

இப்பவும் காலைல 4.30 மணிக்குலாம் எழுந்து,கேரளாவுல இருக்கிற என்னோட நண்பர்கிட்ட பேசுவேன். அவர்கிட்ட கதைகள் சொல்லுவேன். அவர் நிறைய படங்கள் பார்ப்பார். அவர் இந்த ட்ராக்லயே எந்தக் கதையும் வரலைன்னு சொல்லுவார். ஆனாலும், நான் தொடர்ந்து தேடிட்டே இருப்பேன். சிலபேர் கதை வந்துட்டா உடனே பணியாரம் பண்ணி வித்துடலாம்னு நினைப்பாங்க. ஆனா, நான் பத்தாது, போதாதுன்னு தேடிட்டே இருப்பேன். இந்த 30 ஆண்டையே நான் 3 ஆண்டாதான் கணக்குல வெச்சிருக்கேன். என்னோட க்ளைமாக்ஸ் மட்டும் இல்லாம கதைகளும் கணிக்கமுடியாதபடி இருக்கணும். இனி என்னோட வெற்றிகளைக் கணிக்கக்கூடிய அளவுக்குப் படங்கள் பண்ணணும்னு விரும்புறேன்.''

''ஜிம்முக்குப் போகணும், சிக்ஸ் பேக் வைக்கணும்னு என்னைக்காவது தோணியிருக்கா? கேரம் விளையாட்டுல வாய்ப்பை உருவாக்கிக்கோன்னு சொல்றதாவும், செஸ்-ல கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கோன்னு அர்த்தம் இருக்கிறதாவும் எனக்கு அடிக்கடி தோணும்... உங்க வாழ்க்கையில நீங்க கேரமா, செஸ்ஸா?''

- கோ.ராஜசேகர், தர்மபுரி

''புத்திசாலித்தனமாகப் புனையப்பட்ட ஒரு கேள்வி. நாலுமுறை படிக்க வைக்கக்கூடிய இன்ட்ரஸ்ட்டிங்கான கேள்வி. இந்தக் கேள்வில இருக்கிற புத்திசாலித்தனத்தை நான் ரசிக்கிறேன். ஆனா, இரண்டு விளையாட்டுலயுமே வாய்ப்புகளை உருவாக்கணும், வாய்ப்பைப் பயன்படுத்திக்கணும். ரெண்டுத்துலயும் அடுத்த மூவ் என்னன்னு பிளான் பண்ணவேண்டியது இருக்கு. செஸ்ல ஒவ்வொரு மூவும் முக்கியம். வாழ்க்கையோட ரொம்ப ஒத்துப்போற விஷயம் செஸ்ஸாதான் இருக்கு. சிப்பாய்தானேன்னு சீப்பா எடுத்துவெச்சிட்டோம்னா அது கிங்கையே காலிபண்ணிடும். அதனால எல்லாத்தையும் கால்குலேட்டடா, சரியா கணிச்சுதான் செய்யணும். இனிமே நான் செஸ்ஸா இருக்கணும்னு நினைக்கிறேன். எந்த விளையாட்டையும் விளையாட்டா எடுத்துக்காம சீரியஸா விளையாடணும்னு நினைக்கிறவன் நான். விளையாட்டுக்குக்கூட சாதாரணமா விளையாடிட மாட்டேன்.''

''சார், துருவ நட்சத்திரம் படத்துல நடிச்ச அனுபவம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க. உங்க கதாபாத்திரம் எப்படிப்பட்டது. பார்த்திபன்னாலே வித்தியாசம்தான். அதுவும் இந்தப் படத்துல உங்க கேரக்டர் பார்க்க நாங்க வெயிட்டிங். கௌதம்மேனன் பத்தி ஒரு சில வார்த்தைகள் சொல்லமுடியுமா?''

யுவராஜ், மறைமலைநகர்

‘துருவ நட்சத்திரம்’ கெளதம் மேனன்
‘துருவ நட்சத்திரம்’ கெளதம் மேனன்

'' 'துருவ நட்சத்திரம்' ரொம்ப தூர நட்சத்திரமா இருக்கிறது வருத்தமா இருக்கு. இந்தப் படத்தை சூர்யா நடிக்க, நானும் நடிப்பதாக பூஜையெல்லாம் போடப்பட்டது. அப்ப எடுத்தபடங்கள் கூட இருக்கு. அடுத்து மறுபடியும் பல வருடங்களுக்குப்பிறகு விக்ரம் நடிக்க அது தொடர்ந்தது மகிழ்ச்சியா இருந்தது. கெளதம் காதலுக்குரிய இயக்குநர். சமீபத்துல ஒரு பேட்டியில் கதாநாயகியோட காலைத் தொடுறதைப் பத்திப் பேசியிருந்தார். அது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். அதுக்குப்பின்னாடி நிறைய கதையிருக்குன்னு சொன்னார்.

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்துல வேலைக்குப்போயிட்டு வர கதாநாயகியோட காலை புருஷன் அமுக்கிவிடுவான். ரிஃப்லெக்ஸாலஜின்னு சொல்லுவாங்க. 'மவனே... இதுலதான்ட நீ என்னைக் கவுக்குற'ன்னு கதாநாயகி சொல்லுவா. இதை களிப்பை அதிகப்படுத்தும் காதல் களிம்புன்னு சொல்லலாம். அவர் இதைச் சொன்னதுக்குப்பிறகு இவரும் நம்ம ஜாதிதான் போலிருக்குன்னு அவருக்குப் போன் பண்ணி இந்த விஷயங்களைச் சொன்னேன்.

'துருவ நட்சத்திரம்' படத்தைப் பொறுத்தவரைக்கும் நான் நடிக்கப்போறதுக்கு முன்னாடியே முதல் டிரெய்லர் வந்துடுச்சு. ஜார்ஜியா போன்ற நாடுகளுக்கெல்லாம் போய் ஷூட்டிங் பண்ணினோம். 'ஹவுஸ்ஃபுல்' படத்துல எனக்கு அடுத்த கேரக்டர்ல அப்ப விக்ரம் நடிச்சிருந்தார். இப்ப அவர் கதாநாயகனா நடிக்கிற 'துருவ நட்சத்திரம்' படத்துல நான் ஒரு கேரக்டர்ல நடிக்கிறேன். ஷூட்டிங் அப்ப டைரக்டர், 'நாளைக்கு இதுதான் காட்சி... சில டயலாக்ஸ் யோசிச்சிட்டு வாங்க'ன்னு சொல்லுவார். படத்துல விக்ரம் பேர் ஜான். அதுக்கு ஏத்தமாதிரி டயலாக்ஸ்லாம் யோசிச்சிட்டுப் போவேன். 'துருவ நட்சத்திரம்' எப்ப வந்தாலும் ஒரு ஆங்கிலப் படம் மாதிரி வரும்.''

''நீங்க நடிச்ச 'அபிமன்யு' திரைப்படம் அருமை. அந்தப் படத்தில் ரகுவரன் சார் மிரட்டியிருப்பார் ‌‌. நீங்களும் அவருக்கு இணையாக நடித்திருப்பீர்கள். அவருடன் பணியாற்றிய அனுபவம் சொல்லுங்க... என்னைப் பொறுத்தவரை 'சாமி' படமும் 'அபிமன்யு'வும் ஒரே கதைக்கருதான். இதன் இயக்குநர் சுபாஷ் பற்றியும் சொல்லுங்க?''

- அருண், வேலூர்

ரகுவரன்
ரகுவரன்

''இவ்வளவு நடிகர்கள் இருந்தப்போவும் தனக்குன்னு ஒரு ஸ்டைல் உருவாக்கிக்கிட்டவர் ரகுவரன். தனக்குன்னு ஒரு ஸ்டாம்ப் பண்ணிக்கிட்டார். நான் நடிக்கிறதுக்கு பயப்படவே மாட்டேன். ஆனா, ரகுவரனுக்கு பயந்தேன். அவர்கூட போட்டிபோட்டு நடிச்சு ஜெயிச்சா போதும்னு நினைச்சேன். 'அபிமன்யு' படத்துல நான் நடிகர் மட்டுமல்ல, அந்தப் படத்தோட தயாரிப்பாளரும் நான்தான். படத்தின் ஷூட்டிங் அப்ப நடந்த ஒரு சம்பவம் சொல்றேன். ஹார்பர்ல ஷூட்டிங் நடக்கும். ஷூட்டிங்குகளுக்குப் பொதுவா கொஞ்சம் தாமதமாதான் ரகுவரன் வருவார். கொஞ்சத்துக்கும், தாமதத்துக்கும் நடுவுல ஒரு டைம்னு வெச்சிக்கோங்க. ஹார்பர்ல ஷூட்டிங் நடத்த அந்தக் காலத்துலயே பெரிய தொகை கொடுக்கணும். எல்லாம் கொடுத்து ஷூட்டிங் நடத்தினா 8 மணில இருந்து ஷூட்டிங் ஸ்பாட்ல ரகுவரனுக்காகக் காத்துட்டு இருப்போம். 11 மணிக்கு வருவார். நேரா கடற்கரை ஓரத்துல சேரைப்போட்டுட்டு, சின்னக்குழந்தை மாதிரி கடலை ரசிப்பார். அப்புறம் யூனிட் பையன்போய் அவர் மடில துண்டைப் போடுவான். அப்புறம்தான் பிரேக்ஃபாஸ்ட்டே சாப்பிடுவார். 'என்ன சார் இப்படிலாம்'னு இயக்குநர் சுபாஷ்கிட்ட புலம்புவேன். ஆனா, மெதுவா வந்து நின்னு நடிக்க ஆரம்பிச்சிட்டார்னா இது எல்லாமே மறந்துடும். நடிப்புல அப்படியே எல்லாத்தையும் மறக்கடிச்சிடுவார்.

லேட்டா வர விஷயத்தை நான் மைனஸா சொல்லலை. காலதாமதமானாலும் ரகுவரன் மாதிரி நடிகர் கிடைக்கிறது கஷ்டம். எல்லோருக்கும் ஒரு இயல்பு இருக்கும். நடிகனுக்குத் தேவை நடிப்புதான். பாரதிராஜா சார், பாக்யராஜ் சார்ன்னு எல்லோருக்கும் வேற வேற ஸ்டைல் இருக்கும். ஒரு மனிதன் இப்படித்தான் நடந்துக்கணும்னு எந்த வரையறையும் இல்ல. நேரத்தைக் கடைப்பிடிக்கிறது நல்ல தன்மை. அது இல்லைன்னாலும் தப்பில்லை.

ரகுவரன் பற்றிச் சொல்லும்போது சிம்புதான் ஞாபகத்துக்கு வரார். சிம்பு மேலயும் லேட்டா வரார்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க. 'சிம்பு ஒரு சுயம்பு'ன்னு சமீபத்துல நான் சொன்ன விஷயத்துக்காக என்கிட்ட சிம்பு பேசினார். 'நான் எதையோ நோக்கி தவம் மாதிரி ஒரு விஷயம் பண்ணிட்டு இருக்கேன். அதுல உங்க வார்த்தைகள் ஒரு அசரீரி மாதிரி இருந்தது'ன்னு சொன்னார். நானும் ரவுடிதான்ல நான்தான் நடிக்கிறதா இருந்தது. உங்களை நடிக்கவைக்கணும்னு நான்தான் சொன்னேன். கடைசில நான் அந்தப் படத்துல நடிக்கல. நீங்க நடிச்சிட்டீங்கன்னு சொன்னார். நாம எப்படிப் படம் பண்ணாம விட்டுப்போச்சுன்னு தெரியலைன்னு சொன்னார். இந்தப் பண்பு எனக்கு ரொம்பப் பிடிச்சது. சிம்புகிட்ட இருந்து பொக்கே வரும்னு எதிர்பார்த்து நான் சொல்லலை. எல்லோருக்கும் குழந்தைப்பருவம், நடக்குற பருவம்னு ஒண்ணு இருக்கும். காலம் நமக்கு நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுக்கும். இருவருமே மிகச்சிறந்த நடிகர்கள். சுபாஷ் அருமையான, திறமையான மனிதர். 'அபிமன்யு' படத்தோட கதையை என்கிட்ட சொல்லிட்டு யார் இயக்குநர்னு கேட்டார். நீங்கதான் இயக்கணும்னு சொல்லிட்டு நானே தயாரிச்சேன். அடுத்து அவர் இயக்குன படத்துல என்னை நடிக்க வெச்சார். மும்பைக்குப் போய் நிறைய படங்களில் வேலை செஞ்சார். ஷாருக்கான் நடிச்ச 'சென்னை எக்ஸ்பிரஸ்' அவரோட கதைதான். 5 நிமிஷம் யோசிச்சாலே அவ்ளோ சிந்தனை இருக்கும். வசனமெல்லாம் ஸ்பாட்ல உட்கார்ந்து எழுதுவார். அவரோட நினைவுகள் மறக்கமுடியாதது.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.