Published:Updated:

``திரும்ப பாடணும்னு ஆசையா இருக்கு!" - `சிக்குபுக்கு ரயிலே’, `பேட்டாராப்’ புகழ் சுரேஷ் பீட்டர்ஸ்

தாட்சாயணி

தொன்னூறுகளில், தனது ஸ்பெஷல் குரலால் ஷாப்பிங் மால்கள் முதல் பட்டி தொட்டிவரை பேசப்பட்டவர், சுரேஷ் பீட்டர்ஸ்.

சுரேஷ் பீட்டர்ஸ்
சுரேஷ் பீட்டர்ஸ்

தொன்னூறுகளில், தனது ஸ்பெஷல் குரலால் ஷாப்பிங் மால்கள் முதல் பட்டிதொட்டிவரை பேசப்பட்டவர், சுரேஷ் பீட்டர்ஸ். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பால்ய காலத்திலிருந்து பழகிவரும் பாடகரும் இசையமைப்பாளருமான சுரேஷ் பீட்டர்ஸ், ‘சிக்குபுக்கு ரயிலே...’ ‘பேட்டராப்’ என அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் மரண மாஸ் ஹிட் ரகம்.

இசை ஆர்வம் எப்போ வந்தது?

’’சொன்னா நம்பமாட்டீங்க, நினைவு தெரிய ஆரம்பிச்சதிலிருந்தே எனக்கு மியூசிக்மேலதான் ஆர்வம். இத்தனைக்கும் எங்க வீட்டுலயோ குடும்பத்துலயோ யாருமே இசைத்துறையில இல்லை. பிறக்கும்போதே இசை எனக்குள்ளே இருந்திருக்கும்னு நினைக்கிறேன். தொடர்ந்து ஸ்கூல், காலேஜ்கள்ல நடந்த எல்லா போட்டிகள்லயும் கலந்துக்கிட்டு ஜெயிக்க ஆரம்பிச்சேன். முதல்ல டிரம்ஸ் வாசிச்சுப் பழகுனேன். அதுக்கப்புறம் கிட்டார், கீபோர்டுனு நானே ஒவ்வொரு இன்ஸ்ட்ரூமென்டா கத்துக்கிட்டு வாசிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் சீக்குவென்ஸிங் & புரோகிராமிங்னு சொல்லப்படுற கம்ப்யூட்டரை அடிப்படையாக்கொண்டு இசையமைக்கும் முறையில ஆர்வம் வந்தது.’’

ஏ.ஆர்.ரஹ்மானை எப்போ சந்திச்சீங்க..?

சுரேஷ் பீட்டர்ஸ்
சுரேஷ் பீட்டர்ஸ்

’’அப்போ நான் காலேஜ் படிச்சிக்கிட்டிருந்தேன். இளையராஜா சார்கிட்ட ரஹ்மான் கீபோர்டு வாசிச்சிட்டிருந்தார். நான் என் நண்பர்களோடு சேர்ந்து ‘நெமஸிஸ் அவென்யூ’ அப்படிங்கிற ஒரு இசைக்குழுவை நடத்திக்கிட்டிருந்தேன். அதுலயும் ரஹ்மான் வாசிச்சிக்கிட்டிருந்தார். அந்தக் குழுவுல நாங்க, ராக் இசைப் பாடல்களுக்கு மட்டும் கவனம் செலுத்தி பாடிக்கிட்டிருந்தோம். காலேஜ் முடிஞ்சு நான் விளம்பரப் படங்களுக்கு மியூசிக் பண்ணிக்கிட்டிருந்தேன். அந்த டைம்லதான் ரஹ்மானுக்கு ‘ரோஜா’ படம் கமிட் ஆச்சு. அந்தப் பட வேலைகள் ஆரம்பிச்சதும் நான் அவர்கிட்ட உதவியாளரா போய்ச் சேர்ந்தேன். அந்தப் படத்திலிருந்து, தொடர்ந்து அவர்கூட வேலை பார்த்துக்கிட்டிருக்கேன்.’’

பாடகரானது எப்போது..?

சுரேஷ் பீட்டர்ஸ்
சுரேஷ் பீட்டர்ஸ்

’’எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பாடுறதுல பெருசா ஆர்வம் இல்லை. எங்க இசைக்குழுவுலகூட நான் டிரம்ஸ் மட்டும்தான் வாசிச்சேன்; பாட்டு பாடலை. ரஹ்மான் சினிமா இசையமைப்பாளராகி, அவர்கூட தொடர்ந்து வேலை பார்த்துக்கிட்டிருந்தப்போ, ‘ஜென்டில்மேன்’ பட வேலைகள் வந்தது. அப்போ திடீர்னு ஒருநாள், ‘சிக்குபுக்கு’ பாட்டை என்னை பாடச் சொன்னார். ‘சரி, நம்ம ஃப்ரெண்டுதான மியூசிக் டைரக்டர்’ அப்படிங்கிற தைரியத்துல நானும் பாடினேன். ஆல்பம் ரிலீஸானதும், அந்தப் பாட்டு ஓவர் நைட்ல தமிழ்நாடு முழுக்க வைரல் ஆச்சு. அதுக்கப்புறம், அதே பாட்டை தெலுங்குல பாடுனேன். தொடர்ந்து ரஹ்மான் இசையில ‘ஊர்வசி ஊர்வசி’, ‘பேட்டராப்’, ‘கொஞ்சம் நிலவு’ போன்ற பாடல்களைப் பாடுனேன். தேவா, வித்யாசாகர், ஆதித்யன், சிற்பி'னு மத்த இசையமைப்பாளர்களோட இசையிலயும் நிறைய பாடுனேன். இந்தி, தெலுங்கு, கன்னடம்னு பல மொழிகள்ல பாடுனேன். தமிழ்ல நான் பாடுன ஒரே ராப் பாட்டு, ‘பேட்டராப்’ மட்டும்தான். ஆனா, என்மேல ராப் சிங்கர்ங்கிற முத்திரை விழுந்துடுச்சு. எனக்கு அது மட்டும்தான் வரும்னு நினைச்சிட்டாங்க. எனக்கு ராப் இசையும் வரும் அவ்வளவுதான். என்னோட ஆல்பங்கள்ல நான் எத்தனையோ மெலடிகளும் பாடியிருக்கேன்.’’

இப்போ, வெஸ்டர்ன் ஸ்டைல் பாடகர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஆனா, அப்போ நீங்க மட்டும்தான். உங்களுக்கு யார் ரோல் மாடல்..?

"யாருமே எனக்கு ரோல் மாடல் இல்லை. எனக்குத் தெரிஞ்சதை மட்டும்தான் பண்னேன். ஆனா அதேசமயம், அப்போ மைக்கேல் ஜாக்சன் ரொம்ப ஃபேமஸா இருந்ததால, அவரோட பாதிப்பு கொஞ்சம் எங்கிட்ட இருந்தது.’’

Vikatan

இசையமைப்பாளரானது எப்படி..?

’’தொன்னூறுகளின் இறுதியில், ‘மின்னல்’ அப்படிங்கிற பெயர்ல ஒரு ஆல்பம் பண்னேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதைத் தொடர்ந்து, பி.வாசு சார் ‘கூலி’ படம் மூலமா என்னை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தினார். சரத்குமார், மீனா நடிச்ச அந்தப் படத்துல, நான் இசையமைச்ச ‘பூ பூவா பூத்திருக்கு’, ‘கட்டுக் கட்டா’ போன்ற பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. தொடர்ந்து நான் மலையாளத்துல ‘பஞ்சாபி ஹவுஸ்’ங்கிற படத்துக்கு மியூசிக் பண்னேன். அது மிகப்பெரிய ஹிட் ஆச்சு. அதுக்கப்பறம் தொடர்ந்து நிறைய மலையாளப் படங்களுக்கு மியூசிக் பண்ண ஆரம்பிச்சேன். அந்தப் படப்பாடல்கள் எல்லாமே நல்ல ஹிட். மோகன்லால் நடிச்ச ‘ராவண பிரபு’ படத்துக்கு எனக்கு ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைச்சது.’’

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பழகிய நாள்கள் எப்படி இருந்தது..?

``திரும்ப பாடணும்னு ஆசையா இருக்கு!" - `சிக்குபுக்கு ரயிலே’, `பேட்டாராப்’ புகழ் சுரேஷ் பீட்டர்ஸ்

’’எந்நேரமும் அவருக்கு மியூசிக் பத்தின நினைப்புதான் இருக்கும். வீடு, வீடு விட்டா ஸ்டூடியோ. இதான் அவருக்குத் தெரியும். வெளியில போய் சுத்தணும், எஞ்சாய் பண்ணணும் அப்படிங்கிற நினைப்புலாம் அவருக்குக் கிடையாது. 10 வார்த்தை பேச வேண்டிய இடத்துல 4 வார்த்தைதான் பேசுவார். ஆனா, அது நம்மளை அவ்வளவு உற்சாகப்படுத்தும். வெளிநாடுகளுக்கு இசைக் கச்சேரி பண்ணப்போறப்போதான் கொஞ்சம் அதிகமா அவர்கூட பேச முடியும். அதுவும் மியூசிக் பத்திதான். தொடர்ந்து அவரோட ஒரு நல்ல நண்பனாகவும் ஒரு தொழிலாளியாகவும் பயணிச்சுக்கிட்டிருக்குறதுல ரொம்ப சந்தோஷம். சமீபத்துலகூட அவரோட இசையில எம்.டிவி-ல வெளியான ‘ஊர்வசி... ஊர்வசி’ பாட்டு ரீமிக்ஸ்ல நான் பாடுனேன். தொடர்ந்து அவ்வப்போது அவரோட கச்சேரிகளுக்கு சவுண்டு இன்ஜினீயராவும் பணிபுரிஞ்சுக்கிட்டிருக்கேன்.’’

சமீபத்தில் அறிமுகமான இளம் பாடகர்களில் உங்களுக்கு பிடிச்சவங்க..?

’’இப்போ நிறைய நல்ல பாடகர்கள் வர்றாங்க. ஆனா, தொடர்ந்து நீடிக்கிறதில்லை. ஒவ்வொருத்தரையும் அடையாளம் கண்டுபிடிக்கிறதுக்கே ரொம்பக் கஷ்டமா இருக்கு. இருந்தாலும் அதுல சித் ஸ்ரீராமோட பாடல்கள், குறிப்பிட்டுச் சொல்றமாதிரி இருக்கு.’’

Vikatan

இப்போ என்ன வேலைகள் போய்க்கிட்டிருக்கு..?

’’தொடர்ந்து நிறைய முன்னணி நிறுவன விளம்பரப் படங்களுக்கு சவுண்டு டிசைன் பண்ணிக்கிட்டிருக்கேன். நிறைய தனி ஆல்பங்களும் லைவ் ஷோக்களும் பண்ணிக்கிட்டிருக்கேன். ஒரு மியூசிக் டைரக்டராகவும் பாடகராகவும் திரும்ப வெளிச்சத்துக்கு வரணும்னு ஆசை இருக்கு. குறிப்பா தமிழ்ல இன்னொரு ரவுண்டு வரணும்னு ஆசைப்படுறேன். கூடிய சீக்கிரமே இதெல்லாம் நடக்கும்னு நம்புறேன்.’’