சினிமா
Published:Updated:

“நான் இப்போ ரொம்ப பிஸி!”

அந்தோணிதாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தோணிதாசன்

2006-ல் சென்னைச் சங்கமம் நடந்தப்பதான் சென்னை வந்தேன். அதுக்கப்புறம் என் வாழ்க்கையில் பல திருப்புமுனைகள்.

கிராமியப் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என அவதாரங்கள் எடுத்த அந்தோணிதாசன் இப்போது ஹீரோ. ‘அம்புநாடு 9 குப்பம்' என்ற படத்தில் கதை நாயகன் ஆகியிருக்கிறார். நடிகராகவும் கைவசம் நாலைந்து படங்கள். தவிர, இயக்குநர் பொன்ராமின் ‘எம்.ஜி.ஆர்' மகன் படத்திற்குப் பிறகு மூன்று படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். தன் காதல் மனைவி ரீத்தாவுக்காக ‘ரீத்தா ஃபோக் மார்லே' என்ற யூடியூப் சேனலை ஆரம்பிக்கிற உற்சாகத்தில் இருந்த அந்தோணிதாசனிடம் பேசினேன்.

“இதை முதன்முறையா விகடன்ல சொல்றதுல பெருமைப்படுறேன். ஏன்னா, என்னை வளர்த்ததுல விகடனுக்கும் முக்கியப் பங்கு இருக்கு. யூடியூப்ல எனக்கு ‘ஃபோக் மார்லி'ன்னு சேனல் இருக்கறது போல என் மனைவியின் பெயரிலும் ஒண்ணு ஆரம்பிச்சுக் கொடுக்கறேன். அவங்களோட திறமைகளையும் வெளியுலகிற்குத் தெரியப்படுத்த விரும்புறேன். என்னை மாதிரியே அவங்ககிட்டேயும் நிறைய திறமைகள் இருக்கு. அவங்க யூடியூப்பிற்கு ‘ரீத்தா ஃபோக் மார்லே'ன்னு பெயர் வச்சிருக்கோம்'' - பூரிக்கிறார்.

“நான் இப்போ ரொம்ப பிஸி!”

`` `திண்டுக்கல் சாரதி'யில் இருந்து லைகா தயாரிக்கும் படத்திற்கு இசையமைக்கறது வரை உங்களின் திரையுலகப் பயணம் பற்றிச் சொல்லுங்க...”

‘‘கலைத்தாய்க்கு நன்றி. கலைத்தாய் ஆசீர்வாதம் இருக்கறதாலதான் இன்னிக்கு நல்ல நிலையில இருக்கேன். சினிமாவுல 400 பாடல்களுக்கு மேல பாடிட்டேன். மலையாளம், கன்னடத்துலேயும் தொடர்ந்து பாடிட்டு இருக்கேன். பத்து வருஷமா சினிமாவுல பயணிக்கறேன். எல்லாருமே நான் ‘திண்டுக்கல் சாரதி'யிலதான் நடிகரா அறிமுகமானதா நினைக்கிறாங்க. ஆனா, அதுக்கு முன்னாடியே நான் நடிகராகிட்டேன். நான் சினிமாவில் அடியெத்து வைக்க காரணம் திருமாறன் அண்ணன்தான். கரகாட்டம் ஆடிட்டு இருந்த நேரத்துல, சென்னையில என் ஆட்டத்தைப் பார்த்த அவர் எனக்குக் கடிதம் எழுதி, சென்னைக்கு வரவச்சார். அவராலதான் சினிமாவிலும் நடிக்கமுடிஞ்சது. ரஞ்சித் சார் நடிச்ச ‘மகளிருக்காக'ல கோவை சரளாவின் தம்பியாக நடிச்சிருப்பேன்.

அதுக்குப்பிறகு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. ஆனா, எங்க அப்பாவால அந்த வாய்ப்பு பறிபோச்சு. இல்லனா, பத்து வருஷத்துக்கு முன்னாடியே சினிமாவுக்கு வந்திருப்பேன். பல வருஷங்களுக்குப் பிறகுதான் அந்தத் திருமாறன் அண்ணனைப் பார்த்தேன். என் டீம்ல அவரும் இப்ப இருக்கார். இசை ஆல்பங்களுக்கு இப்ப அவர்தான் பாடல்கள் எழுதுறார்.

“நான் இப்போ ரொம்ப பிஸி!”

ஒரு இசையமைப்பாளராவும் நிறைவா இருக்கேன். ட்யூன் போடத் தெரியும். ஆனா, கம்ப்யூட்டரெல்லாம் கையாளத் தெரியாது. அதை நோபல் ராஜா பண்ணிட்டிருந்தார். அவர் இப்ப இசையமைப்பாளர் ஆகிட்டார். அதனால நண்பர் அருண் பிரசாத் டெக்னிகல் விஷயங்களைப் பார்த்துக்கறார். இசையில் என்ன வேணுமோ அதை அவர்கிட்ட சொல்வேன். லைகா தயாரிப்பில் விதார்த், யோகிபாபு நடிக்கும் படத்துக்கு இசையமைக்கறேன். இது போக, ரெண்டு படங்களின் இசைப்பணி போயிட்டிருக்கு. நடிகராகவும் பயணம் போயிட்டிருக்கு. காமெடியனாக சீனு ராமசாமியின் `இடிமுழக்கம்', கல்யாணின் `ஷூ', ராமர் ஹீரோவா நடிக்கும் `தல போச்சே'ன்னு ஒரு படம், `கதிர்'னு ஓடிட்டிருக்கேன். அடுத்து `ஸ்டாலின் வராரு-2', `வந்தே மாதரம்'னு தனியிசைப் பாடல்களும் ஒரு பக்கம் ரெடியாகிட்டு இருக்கு. இது தவிர, நிறைய கலைஞர்களை வெளிக்கொண்டுவரணும்னு விரும்பி `போக் மார்லி ரெக்கார்ட்ஸ்'னு ஆடியோ நிறுவனம் ஒண்ணு ஆரம்பிக்கறேன்.''

``இவ்ளோ வேலைகள் இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுட்டு திடீர்னு சின்னத்திரைப் பக்கம் `குக்கு வித் கோமாளி'க்குப் போனது ஏன்..?’’

‘‘என் உழைப்பு எல்லாமே என் குடும்பத்துக்காகத்தானே. அவங்க சந்தோஷம்தான் முக்கியம். மனைவி, குழந்தைகள், அக்கா, பேரக்குழந்தைகள்னு என் குடும்பத்துல உள்ள அத்தனை பேரும் `குக்கு வித் கோமாளி'யில நான் பங்கேற்கணும்னு விரும்பினாங்க. அந்த வாய்ப்பு வந்தபோது தயங்கினேன். அப்புறம் என் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக அந்த நிகழ்ச்சிக்குப் போனேன். வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு. ஆனா, திடீர்னு எலிமினேட் ஆவேன்னு நினைக்கல. சினிமாவுல ஒவ்வொரு நாளும் கத்துக்கிட்டு இருக்கோம். அதைப்போல, அங்கேயும் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.''

“நான் இப்போ ரொம்ப பிஸி!”

`` `ஸ்டாலின்தான் வராரு...' பாடலைப் பாடுனீங்க... ஸ்டாலின் வந்துட்டார். அவரைச் சந்திச்சீங்களா?’’

``2006-ல் சென்னைச் சங்கமம் நடந்தப்பதான் சென்னை வந்தேன். அதுக்கப்புறம் என் வாழ்க்கையில் பல திருப்புமுனைகள். தி.மு.க-வுக்காகத் தேர்தல் பிரசாரப் பாடல்கள் நிறைய பாடிட்டு இருக்கற சமயத்துலதான் `ஸ்டாலின்தான் வராரு' பாடல் வாய்ப்பு கிடைச்சது. மதன்கார்க்கி சாரும், இசையமைப்பாளர் ஜெரால்டு சாரும்தான் பாடவச்சாங்க. `சொடக்கு மேல சொடக்கு' என்னை எந்த அளவுக்கு மக்கள்கிட்ட கொண்டு சேர்த்ததோ... அதைபோல இந்தப் பாடலும் என்னை மக்கள்கிட்ட கொண்டு போச்சு. தேர்தலுக்கு முன் ஒரு விழாவுல ஸ்டாலின் சாரைச் சந்திச்சேன். அவர்கிட்ட இந்தப் பாடலைப் பாடினது பத்திச் சொன்னதும் சந்தோஷப்பட்டார். இப்ப என் இசையில் `ஸ்டாலின் தான் வராரு' பார்ட் 2 பண்ணிட்டிருக்கேன். `முத்துவேல் கருணாநிதி எனும் ஸ்டாலின்' என டைட்டில் வச்சிருக்கேன். தி.மு.க அரசின் ஓராண்டு சாதனையின் போது அதை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்'' என்றவர், உரத்துக் குரலெடுத்துப் பாட ஆரம்பிக்கிறார்...

`முத்துவேல் கருணாநிதி எனும் ஸ்டாலின்
முத்தமிழ் அறிஞரின் பாதி
எத்தனையோ தடைகளைத் தாண்டி
இந்த நாட்டில் ஒளிவிடும் கதிரவன்தாண்டி...'