Published:Updated:

``நான் அடிச்சுக்கிறதும், திட்டிக்கிறதும் அவங்களுக்குலாம் தெரியும்!" - `மடை திறந்து' சின்மயி

சின்மயி
சின்மயி ( Vikatan )

பாடகி சின்மயியுடன் நடந்த சின்ன உரையாடலிலிருந்து...

ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து லைவ் கான்சர்ட் ஒன்றை நடத்தவிருக்கிறார், பாடகி சின்மயி. வருகிற அக்டோபர் 12-ம் தேதி நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்குத் தயாராகிக்கொண்டிருந்த சின்மயியுடன் நடந்த சின்ன உரையாடலிலிருந்து...

"ஆண்ட்ரியாவுடன் கான்சர்ட் பண்ணப்போறிங்க. என்ன திட்டம்?"

"கான்சர்ட் முடிஞ்சு எல்லோரும் செம ஜாலியா வீட்டுக்குப் போகணும். அதுக்குத்தான் பிளான் பண்ணிக்கிட்டிருக்கோம். ஆண்ட்ரியா ஒரு நடிகையாகவும் பாடகியாகவும் சூப்பரா பெர்ஃபார்ம் பண்றவங்க. மேடையில ஏறிட்டாங்கன்னா, அனல் பறக்கும். அமெரிக்காவுல ஒருமுறை நாங்க சேர்ந்து பாடியிருக்கோம். அவங்க வர்றதுக்குக் கொஞ்சம் லேட்டாச்சுனா, கூட்டம் 'ஆண்ட்ரியா ஆண்ட்ரியா'ன்னு கத்த ஆரம்பிச்சிடும். அதனால, அவங்ககூட இந்த நிகழ்ச்சியைப் பண்ணப்போறது செம ஜாலியா, ரொம்ப எனர்ஜியா இருக்கும். ரெண்டு பாடகிகள் சேர்ந்து கான்சர்ட் பண்றது தென்னிந்தியாவுல இதுதான் முதல்முறைன்னு நினைக்கிறேன். அந்தக் கூட்டத்துக்கு மத்தியில, மக்களுடைய பரவசத்துக்கு முன்னிலையில பாட காத்திருக்கேன்!"

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"ரெக்கார்டிங்ல பாடுறதுக்கும், லைவ் கான்சர்ட்ல பாடுறதுக்கும்் உள்ள வித்தியாசம்?"

சின்மயி
சின்மயி

"ரெக்கார்டிங் பண்ணும்போது, அந்தப் படத்துல பாடல் எங்கே வருது, பாட்டுக்கு நாம என்ன எமோஷன் கொடுக்கணும்னு பல விஷயங்கள் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும். அந்த நேரத்துல பாடலை நாம நினைக்கிற மாதிரி வித்தியாசமா பண்ணிப் பார்க்கலாம்னு பாட முடியாது. ஆனா, கான்சர்ட் பண்ணும்போது, 6 நிமிடப் பாடலை 12 நிமிடங்களுக்குக்கூட பாடலாம். அதுக்கு நல்ல உதாரணம் ஹரிஹரன் சாரும், ஷங்கர் மகாதேவன் சாரும். அவங்க பாடிய ஒரிஜினல் வெர்ஷனுக்கும், கான்சர்ட் வெர்ஷனுக்கும் சம்பந்தமே இருக்காது. ரசிகர்களோடு பேசிக்கிட்டே பாடுவாங்க. அது வேறமாதிரியான உணர்வைக் கொடுக்கும். இந்த மாதிரி குட்டிக்குட்டி விஷயங்கள்தான், கான்சர்ட்டுக்கான அழகு.

ரெக்கார்டிங்ல இயக்குநரும், இசையமைப்பாளரும் எங்களை வழிநடத்துவாங்க. அப்போ, அந்தப் படத்துக்குப் பாடல் எப்படி வேணுமோ அப்படிப் பாடுறதுதான் சரி. கான்சர்ட்ல நாம முடிவெடுத்துக்கலாம். மேடையில பாடுறது முழுக்க முழுக்க மேஜிக்தான். என்கூடவே அந்த மொத்தக் கூட்டமும் சேர்ந்து பாடும்போது, பலமுறை சந்தோஷத்துல எனக்கு அழுகையே வந்திருக்கு. அதுதான் எங்களுக்கான எனர்ஜி!"

"ரெக்கார்டிங் பண்ணும்போது, இந்தப் பாட்டுக்கு இதெல்லாம் வேணும்னு இயக்குநர் சொல்வாரா, இசையமைப்பாளர் சொல்வாரா?"

"எங்களுக்கு கதை சொல்ல மாட்டாங்க. எந்தப் படத்துக்கு பாடுறேன்னு தெரியாமலேகூட பாடிட்டு வந்திருக்கேன். சின்ன வயசுல பாடும்போது, 'இது எந்தப் படத்துக்காக'ன்னு கேட்க பயமா இருக்கும். அதனால, கேட்க மாட்டேன். ஒருகட்டத்துல அதுவே பழகிடுச்சு. எந்த இசையமைப்பாளருக்குப் பாடுறோம்ங்கிறதைத் தவிர, மற்ற எதுவும் தெரியாது. ஒருவேளை, ரெக்கார்டிங் பண்ணும்போது இயக்குநர் இருந்தா, அது எந்தப் படம்னு தெரியும். என் கரியர்லேயே நான் கதையைக் கேட்டுப் பாடியது, '96' படத்துக்கு மட்டும்தான். காரணம், த்ரிஷாவுக்கு டப்பிங் கொடுக்கிறதோட, எல்லாப் பாடலையும் நானே பாடுறதால, கதை தெரிஞ்சா நல்லாயிருக்குனு இயக்குநர் பிரேம் சொன்னார். மத்தபடி, நானும் எந்த இயக்குநர்கள்கிட்டயும் கதையைக் கேட்க மாட்டேன். காரணம், நான் நிறைய யோசிக்கிற ஆள். கதையைக் கேட்டு, நான் ஒண்ணு புரிஞ்சுக்கிட்டு, வேற எமோஷனைக் கொண்டுவந்துட்டா, தேவையில்லாம நேரம் வீணாகிடும். அதனால, என்ன எமோஷன்னு மட்டும் இசையமைப்பாளர்கிட்ட கேட்டுக்குவேன்.

தவிர, எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. பாடும்போது ஏதாவது சரியா வரலைன்னா, என்னை நானே திட்டிக்குவேன். நான் 'வாய்ஸ் பூத்'ல நின்னு தலையில அடிச்சுக்கிறதும், திட்டிக்கிறதும் என்னோட எல்லா இசையமைப்பாளர்களுக்கும் தெரியும். புது டீமா இருந்தா, அந்தச் சமயத்துல என்னை ஒருமாதிரி பார்ப்பாங்க."

"கான்சர்ட்ல நடந்த மறக்க முடியாத சம்பவம் ஏதாவது?"

சின்மயி
சின்மயி

"நிறைய இருக்கு. ரெக்கார்டிங்ல சரியா வரலைன்னா, இன்னொரு முறை பாடிக்கலாம். மேடையில அப்படிப் பாடமுடியாது. ஒருமுறை சொதப்பிட்டா அவ்ளோதான்! 'தெய்வம் தந்த பூவே' பாட்டை 16 வருடமா பாடிக்கிட்டிருக்கேன். ஆனா, இன்னும் அந்தக் கூட்டதைப் பார்க்கிற பதட்டத்துல வரிகள் மறக்கும். என்னதான் எனக்கு நல்லா தெரிஞ்ச பாடல்களா இருந்தாலும், கண் முன்னாடி 'லிரிக் பேப்ப'ரை வெச்சுக்குவேன். அது எனக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். நிறைய இடங்கள்ல வரிகள் மறந்துபோய், ஒரே சரணத்தை ரெண்டுமுறை பாடி சமாளிச்சிருக்கேன். ராஜா சாருடைய கான்சர்ட்ல பாடும்போது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். ஒருமுறை பதட்டத்துல சரணத்தை மாத்திப் பாடிட்டேன். மேடையிலேயே அவர் 'தப்பா பாடுற, முதல்ல இருந்து பாடு'ன்னு சொல்லிட்டார். லண்டன்ல ராஜா சார் கான்சர்ட்ல கமல் சார்கூட 'இஞ்சி இடுப்பழகி' பாட்டைப் பாடும்போது, கொஞ்சம் சொதப்பிட்டேன். 'என்ன, கமல் இருக்கார்னு வரிகள் மறக்குதா... ஒழுங்கா பாடு'ன்னு சொல்லி, முதல்ல இருந்து பாடவெச்சார். இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் இருக்கு!"

"எஸ்.பி.பி - ஜானகி, எஸ்.பி.பி - சித்ரானு ஜோடி பாடகர்களுக்கான ரசிகர்கள் இருந்தாங்க. இப்போ அந்த மாதிரி ஜோடி பாடகர்கள் உருவாகாம இருக்கக் காரணம் என்ன?"

"பாடகர்களுக்கான லைம்லைட் காலம் ரொம்பக் குறைஞ்சிடுச்சு. நான் எப்படியோ தட்டுத்தடுமாறி 18 வருடம் கடந்துட்டேன். ஜோடியா நிறைய பாடல்கள் பாடுறது, இந்த நடிகர் - நடிகைகளுக்கு இந்தப் பாடகர்கள்தான் பாடுவாங்கன்னு சொல்றதெல்லாம் அந்தக் காலம். இப்போ ட்ரெண்டு மாறிடுச்சு. அதுக்காக, அந்தக் காலம் சூப்பர். இந்தக் காலம் நல்லா இல்லைனு சொல்லமுடியாது. மாற்றத்தை ஏத்துக்கிட்டு கடக்கணும், அவ்ளோதான்."

"உங்க கணவருக்கு தேசிய விருது கிடைக்கும்போது எப்படி இருந்தது உங்க ஃபீலிங்?"

சின்மயி - ராகுல் ரவீந்திரன்
சின்மயி - ராகுல் ரவீந்திரன்

"சந்தோஷமா இருந்தது. அவருடைய முதல் படமான 'சி லா செள'க்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கிடைச்சது. அந்த அறிவிப்பைக் கேட்கும்போது இருந்த சந்தோஷத்தை வார்த்தையால சொல்லமுடியாது. ரெண்டு கோடி பட்ஜெட்ல எடுத்த சின்னப் படம் அது. இந்தப் படம் வெளியாகுறதுக்கு முன்னாடியே நாகர்ஜுனா சார் கூப்பிட்டு, 'மன்மதுடு 2' பண்ணச் சொன்னார். அவ்ளோ பெரிய நடிகரை இயக்குற வாய்ப்பும், அதுக்கு முன்னாடி எடுத்த படத்துக்கு தேசிய விருதும் கிடைச்சது ரொம்பவே சந்தோஷம். அவர், தமிழ்ல படம் பண்ணணும்னு எனக்கு ஆசை. அவர்கிட்டேயும் இதைச் சொல்லிட்டுதான் இருக்கேன். ஏழெட்டு வருடத்துக்கு முன்னாடி ஹைதராபாத் போய், தெலுங்கு கத்துக்கிட்டு கதை எழுதி, படம் எடுத்து, ரிலீஸ் பண்ணி, அதுக்கு தேசிய விருதே கிடைச்சிடுச்சு. இருந்தாலும், தாய்மொழியான தமிழ்ல படம் பண்றது வேற ஃபீல் இல்லையா?!"

"ஒரு வருடமாகியும் '96' படத்தை மக்கள் கொண்டாடுறதைப் பார்க்கும்போது எப்படி இருக்கு?"

"என் கரியர்ல '96' மாதிரி மறுபடியும் ஒரு படம் அமையுமான்னு தெரியல. எல்லாப் பாடலையும் பாடி, ஹீரோயினுக்கு டப்பிங் பண்றது எனக்குத் தெரிஞ்சு இதுதான் முதல் முறை. இந்த வாய்ப்பு கிடைச்சதே பெரிய விஷயம். கோவிந்த் வசந்தா வேற லெவல். இந்த மாதிரியான படத்துல நானும் இருக்க ஏதாவது புண்ணியம் பண்ணியிருக்கணும்னு நினைக்கிறேன். '96' என் வாழ்க்கையின் கவிதை!"

"சமந்தாவுக்கு நிறைய டப்பிங் பண்ணியிருக்கீங்க. உங்களுக்கும் அவங்களுக்குமான நட்பு பற்றி?"

சின்மயி
சின்மயி

"என் கணவர் ராகுலும், சமந்தாவும் நடிச்ச முதல் படம் 'மாஸ்கோவின் காவேரி'. அப்போ இருந்து அவங்க ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள். அப்புறம் எப்படியோ நானும் சமந்தாவுக்கு வாய்ஸ் கொடுத்து நட்பாகிட்டேன். அதேசமயம், ராகுலை கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். இது ரொம்ப சுவாரஸ்யமா உருவான வட்டம். எனக்கு சினிமாவுல இருக்கிற நல்ல தோழி சமந்தா!"

இளையராஜாவின் கோரஸ் வேதனையும்; ரஜினியின் கில்லர் ஸ்டெப்ஸும்! -`சூப்பருப்பா’ அலெக்ஸு #AlexInWonderland

"இசையமைப்பாளர்களையும், பாடகர்களையும் கலாய்க்கிற 'Alex in wonderland' ஷோ இப்போ ரொம்பப் பிரபலம். அதைப் பார்த்தீங்களா?"

"எனக்கு, அலெக்ஸின் நிகழ்ச்சியைப் பற்றி ரொம்ப வருடமா தெரியும். நான் நேர்லயே பார்திருக்கேன். அவருடைய இங்கிலீஷ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அவர் கலாய்க்கிறார்தான். ஆனா, மத்தவங்களைக் காயப்படுத்துற மாதிரி இல்லாம, ஜாலியா இருக்கு. அவரைப் பார்க்கும்போது, எப்படி ஒரு மனுஷன் தொடர்ந்து பேசிக்கிட்டு, பாடிக்கிட்டு, வாசிச்சுக்கிட்டு இருக்க முடியுதுனு எனக்கு ஆச்சர்யம். தவிர, இப்படி கலாய்க்கிறதுக்கும் அதிக இசை அறிவு வேணும். குறிப்பா, 'நாட்டக்குறிஞ்சி' பற்றிப் பேசும்போதும், கர்நாடக சங்கீதத்தைப் பற்றிப் பேசும்போதும் அவர் பண்ற சின்னச்சின்ன குறும்புகள் ரொம்ப ஸ்வீட். சின்ன வயசுல இருந்து கர்நாடக சங்கீதப் பின்னணியில இருந்து வந்திருந்தா, அந்த ரியாலிட்டியை அவர் எப்படி கவனிச்சுப் பேசுறார்னு புரிஞ்சுக்க முடியும். அவர் இந்த இடத்துக்கு வர்றதுக்குப் பின்னாடி பல வருட உழைப்பு இருக்கு. அலெக்ஸ் இன்னும் நிறைய ஷோ பண்ணணும்."

அடுத்த கட்டுரைக்கு